முற்றும் துறந்த துறவி வேடத்தில் ஹார்லிக்ஸ் ஷியாமளா, ஸ்ரீரங்கம் உஷா என்று பல பெண்களுடன் உல்லாச சல்லாபம் புரிந்து கொண்டு, பக்தர்களுக்கு ஆசீர்வாதமும், பல கருப்புப்பண முதலைகளின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கிக் கொண்டிருந்த மோசடிப் பேர்வழிதான் காஞ்சி சங்கராச்சாரி. சங்கர மடத்தின் முன்னாள் விசுவாசியான சங்கரராமன் எனும் பார்ப்பனர்,
சங்கராச்சாரியின் இந்தக் காமக் களிவெறியாட்டங்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சி, கூலிப்படையை ஏவி அவரைக் கொலை செய்த பயங்கரவாதிதான் இந்த சங்கராச்சாரி. அவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, சில நாட்கள் கம்பி எண்ணிவிட்டு, தற்போது பிணையில் உள்ள இந்த ஆசாமியைத் தமிழகத்தில் சீண்டக் கூட யாருமில்லை. எங்கே தங்கள் வீட்டுப் பெண்களிடமும் இந்தக் கிழட்டு காம கே()டி கைவைத்து விடுவானோ என்ற பீதியில், பார்ப்பனர்களே கூட காஞ்சி சங்கரமடத்துக்குச் செல்லத் தயங்குகிறார்கள். இப்பேர்பட்ட யோக்கிய சிகாமணிக்கு, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, அரசு விருந்தினர் என்ற சிறப்புத் தகுதியளிக்க உத்தரவிட்டு, அதனைச் செயல்படுத்தி இருக்கின்றார்.
இந்துவெறி பாசிஸ்டுகள் ஆளும் குஜராத்தின் முதல்வரோ அல்லது இராஜஸ்தான், ம.பி. மாநில முதல்வர்களோ இதனைச் செய்யவில்லை. இந்துவெறிக்கு எதிராகச் சவடால் அடித்துவரும் "இடதுசாரி' ஜனநாயகக் கூட்டணி ஆளும் கேரளத்தின் முதல்வர் அச்சுதானந்தன்தான் இப்படி உத்தரவிட்டுச் செயல்படுத்தியுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக, சிறீ உத்திராடம் திருநாள் மகாராஜாவுக்கு ஆசி வழங்க திருவனந்தபுரம் சென்ற இந்த "மட' சங்கராச்சாரிக்கு, கேரள அரசின் 15 துறைகளும் அரசு விருந்தினர் என்ற தகுதியளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று அவர் டிசம்பர் 12ஆம் நாளன்றே உத்தரவிட்டு பக்தியோடு செயல்படுத்தியுள்ளார்.
மார்க்சியத்தின் பெயரால் கட்சி நடத்திக் கொண்டு ஆட்சி செய்யும் சி.பி.எம்.இன் முதலமைச்சரான அச்சுதானந்தன், ஒரு மடாதிபதிக்கு மரியாதை செய்வதே மார்க்சியத்துக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். அதிலும் கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச்சதி, பொய்சாட்சிகளை உருவாக்குதல், கொலை செய்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் மடாதிபதிக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்திருக்கிறார் "மார்க்சிஸ்டு' முதல்வர். கூச்ச நாச்சமின்றி, ஒரு இந்துவெறி பயங்கரவாதிக்கு "இடதுசாரி' அரசே மரியாதை செலுத்திச் சிறப்பிக்கும் கீழ்த்தரமான செயலைக் கண்டிக்கக்கூட முன்வராமல், பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது, "இடதுசாரி' கூட்டணியிலுள்ள இன்னுமொரு போலி கம்யூனிஸ்ட் கட்சியான வலது கம்யூனிஸ்ட் கட்சி.
ஆனால், முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளரான குஞ்ஞாலிக் குட்டி, "இடதுசாரி' அரசின் இச்செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். ""தமிழ்நாட்டில் கொலைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு அரசு மரியாதை அளிப்பது முறையல்ல; சங்கப் பரிவாரங்களின் விருப்பங்களுக்கேற்ப அரசின் கொள்கையை மாற்றக் கூடாது'' என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள தலித் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இராமபத்ரன், ""இது இந்துத்துவ ஓட்டு வங்கியை அறுவடை செய்ய முயற்சிக்கும் கீழ்த்தரமான செயல்'' என்றும், ""மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் செயல்'' என்றும் "இடதுசாரி' அரசைச் சாடியுள்ளார். கொல்லத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான டாக்டர் எம்.எஸ். ஜெயபிரகாஷ், ""அனைத்து சட்டங்களுக்கும் மேலானவன் பிராமணன் என்று மனுதர்ம விதியை உயர்த்திப் பிடித்து, கொலைக் குற்றவாளியானாலும் பார்ப்பான் என்பதால் கேரள அரசு காஞ்சி மட சங்கராச்சாரிக்கு மரியாதை செலுத்துகிறது'' என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அக்ரஹார அம்பிகளின் கூடாரமான சென்னைத் தொலைக்காட்சியில், ஆண்டுதோறும் தீபாவளியன்று அதிகாலையில் ""கங்கா ஸ்நானம் ஆச்சோ!'' என்று தனது ஊத்தை வாயை இளித்து ஆசி வழங்கி வந்த இந்த ஓடுகாலி சங்கராச்சாரியை, சங்கரராமன் படுகொலைக்குப் பிறகு அத்தொலைக்காட்சி கூட அழைப்பதை நிறுத்திவிட்டது. தமிழக பார்ப்பன பத்திரிகைகளும் இந்தக் காமகே(õ)டியின் அருளாசியை படத்துடன் வெளியிடுவதை நிறுத்தி விட்டன. அவாள்களே புறக்கணித்துவிட்ட இப்பார்ப்பன பயங்கரவாதியிடம் அப்படி என்ன முற்போக்கைக் கண்டார்களோ இந்த போலி கம்யூனிஸ்டுகள்; அரசு மரியாதை அளித்து சிறப்பித்து ஆராதனை செய்திருக்கிறார்கள்!
இவர்கள் இவ்வாறு பார்ப்பனியத்துடன் கூடிக் குலாவுவதும் பார்ப்பனியத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்வதும் புதிய விவகாரமல்ல. வேத மந்திரங்களிலும் வேள்விச் சடங்குகளிலும் புராதனப் பொதுவுடைமைக் கூறுகள் உள்ளன என்று ஆய்வு செய்து, இந்த அபத்தத்தை ""பண்டைக்கால இந்தியா'' என்ற தனது நூல் மூலம் பறைசாற்றினார் போலி கம்யூனிஸ்டுகளின் அந்நாளையத் தலைவர் எஸ்.ஏ. டாங்கே.
நரகலில் நல்லரிசி பொறுக்கிய கதையாக, கம்பராமாயணத்தில் சோசலிசக் கூறுகளைக் கண்டுபிடித்த ப.ஜீவானந்தம், தமிழக கம்யூனிசத் தலைமையையே கம்பன் கழகமாக மாற்றினார். அவரின் சீடரான பெரியவர் நல்லக்கண்ணு கூட இன்னும் தனக்குப் பிடித்த இலக்கியம் என்று கம்பராமாயணத்தைத்தான் குறிப்பிடுகிறார்.
""வேதங்கள், உபநிடதங்கள் முதலான பாரதீய கலாச்சார பொக்கிஷங்களும் மார்க்சிய லெனினிய புரட் சிகர தத்துவமும் இணைந்ததுதான் நான் உயர்த்திப் பிடிக்கின்ற இந்திய மார்க்சியம்'' என்று அறிவித்து, இந்தியாவை ""வேதங்களின் நாடு'' என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார், "மார்க்சிஸ்டு'களின் ஞானகுருவாகிய ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.
அவரது விசுவாச சீடரும், மறைந்த முன்னாள் கேரள "மார்க்சிஸ்டு' முதல்வருமான ஈ.கே.நாயனார், கிறித்தவர்களின் "லோக குரு'வான போப் இரண்டாம் ஜான்பால். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவருக்கு பக்தியோடு பகவத்கீதை நூலைப் பரிசளித்தார்.
அடக்கருமமே! இராம.கோபாலன் செய்கிற வேலையையா இந்தச் செஞ்சட்டை தோழர் செய்தார் என்று நீங்கள் முகத்தைச் சுளிக்கும்போதே, தனது வீட்டைக் கட்டுகையில் செங்கல் பூசை நடத்திய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் புரட்சிகர போர்த்தந்திரத்தையும், தனது துணைவியார் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த மறுப்பேதும் சொல்லாத அவரது ஜனநாயக மாண்பையும், தனது பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்திய நாடாளுமன்ற "மார்க்கிஸ்டு' அவைத் தலைவர் சோமநாத் சட்டர்ஜியின் முற்போக்கு சிந்தனையையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.
குன்றக்குடி அடிகளாரை ""முற்போக்கானவர்'', ""ஆன்மீக கம்யூனிஸ்ட்'' என்றெல்லாம் பிதற்றித் திரிந்தவர்கள் முந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையினர் என்றால், ""நான் முதலில் பார்ப்பான்; அப்புறம் இந்து; அதன்பிறகுதான் கம்யூனிஸ்ட்'' என்று மே.வங்க "மார்க்சிஸ்டு' அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி வெளிப்படையாக அறிவிப்பதும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகட்டி நிற்பதும் இந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையின் மகிமைகள்!
தமது அதிகாரபூர்வ நாளேடான தீக்கதிரில் நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம் முதலானவற்றுக்குச் சிறப்பு மலர் வெளியிடுவதோடு, தொழிற்சங்க அணிகளோடு சேர்ந்து ஆயுத பூசை விழா கொண்டாடி மகிழும் இப்போலி கம்யூனிஸ்டுகள், இனி வெட்கப்படாமல் பூணூலை மாட்டிக் கொண்டு காஞ்சி சங்கர மடத்தில் சங்கமிக்கலாம்; அடுத்து வரும் தேர்தல்களில் ""காஞ்சிப் பெரியவாளின் ஆசி பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்!'' என்று விளம்பரம் செய்யலாம்; கலை இரவுகள், தொழிற்சங்கக் கூட்டங்களுக்கு ஆசீர்வாதம் வழங்க "காம'ரேடு காமகே(õ)டியையே அழைக் கலாம்; போலி கம்யூனிஸ்டுகள் எதையும் செய்வார்கள்; யார் கண்டது!
இத்தனைக்கும் பிறகும், இந்துமதவெறி பாசிசத்தை சி.பி.எம். தலைமையில் அணிதிரண்டு வீழ்த்திவிட முடியும் என்று "மார்க்சிஸ்டு' கட்சியினர் யாராவது சொன்னால், சிந்திக்கத் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்!
· இரணியன்