பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா அவர்கள் 16.04.2010 அன்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வருவதற்காக சென்னை விமானநிலையத்திற்கு வந்தார். அவரிடம் இந்தியா வருவதற்கு தேவையான குடிவரவு அனுமதி இருந்தது. ஆனால் சென்னை விமான நிலையத்தில் வைத்து இந்திய குடிவரவு அதிகாரிகளால் அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மலேசியாவில் இருந்து வந்ததால் அங்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
ஒரு நோயாளியான வயது முதிர்ந்த பெண்மணியை, மருத்துவ சிகிச்சைக்காக வந்தவரை திருப்பிய அனுப்பியதை எதிர்த்து வழக்கறிஞரான திரு,கருப்பன் என்பவரால் பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்திய மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.ரவீந்திரன் ஒரு வெளிநாட்டவரை இந்தியாவிற்குள் அனுமதிப்பதை இந்திய அரசே முடிவு செய்யும் என்றார். மேலும் பிரபாகரனின் தாய், தந்தையரை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று 2003 ஆம் ஆண்டு இருந்த ஜெயலலிதாவின் தமிழக அரசு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே பார்வதி அம்மாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இப்படி மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரபாகரனின் அம்மாவை திருப்பி அனுப்ப காரணமாக இருந்த ஜெயலலிதாவிற்கு வருத்தம் வந்து அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறாவாம். காசி ஆனந்தன் அண்ணனிற்கு துக்கம் தாங்க முடியவில்லையாம். அம்மா, அம்மா என்று கதறி அழுகிறார். ஜெயலலிதாவின் அ.தி.மு.க அடிமைகள் அம்மா என்று அழுகிறார்கள். அவர்கள் தம் கொள்ளைக் கூட்டத்தின் தலைவிக்கு கட்டும் கப்பம் போக தாம் நக்கும் எலும்புத் துண்டுக்காக அழுகிறார்கள். புலிகள், பிரபாகரன், தமிழ்த்தேசியம், ஈழம் என்று பேசும் இவர் ஒரு மக்கள் விரோதிக்காக ஏன் அழ வேண்டும்?
"ராஜீவ் காந்தியின் கொலைக்காக பிரபாகரனை பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும்" என்றதும் இதே ஜெயலலிதாவின் நாற வாய் தான், வேற வாய் இல்லை என்பதும் அண்ணன் ஆனந்தனிற்கு தெரியாத விடயமில்லை. ஆனாலும் அவர் அழுகிறார்; ஏனென்றால் ஈழப்பிழைப்புவாதிகள் எங்கிருந்தாலும் அங்கிருக்கும் அதிகாரங்களிற்கு சாமரம் வீசி தம் பிழைப்பை நடத்துபவர்கள். அதிலும் இவர் கவிஞராம்; அடுக்கு மொழியில் அழுவதற்கு சொல்லியா தர வேண்டும்.
மகிந்த ராஜபக்ச எம் தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்ற போது "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவின் கொலைகளிற்கு விளக்கம் சொன்ன இரக்கமற்ற பேய் பின்பு தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குப்பிச்சை எடுப்பதற்காகவும், ஊழல்தாய் என்ற உண்மையை மறைப்பதற்காகவும் ஈழத்தாய் என்ற வேடம் போட்டது. நெடுமாறன், வை.கோபாலச்சாமி, சீமான் போன்ற தமிழ்த்தேசிய பிழைப்புவாதிகள் அந்த நாடகத்திற்கு பிற்பாட்டு பாடினார்கள்.
இந்த நாடகமெல்லாம் நானறியேன் என்பது போல "அம்மா ஈழத் தீர்மானம் போட்டா; அம்மா இலங்கையை எதிரி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அம்பு விட்டா; மகிந்த ராஜ பக்சாவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்த வேண்டும் என்று கூந்தலை விரித்துக் கொண்டு சபதம் போட்டா" என்று அண்ணன் புல்லரிக்கிறார். இந்த வெத்து வேட்டு தீர்மானங்களால் இலங்கைத் தமிழ் மக்களின் இன்னல்களிற்கு ஏதாவது ஒரு சிறு தீர்வாவது வந்ததா?
தமிழ் மக்களிற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத நாடுகளில் எல்லாம் அகதிகளாக சென்ற இலங்கைத் தமிழ் மக்களை குற்றவாளிகள் போல முகாம்களில் அடைத்ததில்லை; கொடுமைப்படுத்தியதில்லை. ஆனால் ஒரே மொழி பேசும் இலங்கைத் தமிழ்மக்களை முகாம்களில் குற்றவாளிகள் போல அடைத்து வைத்திருக்கிறார்கள். நன்றாகப் படித்தாலும் இலங்கை அகதிகள் என்ற ஒரே காரணத்திற்காக எம் குழந்தைகளிற்கு உயர் கல்வியை மறுக்கிறார்கள். தம் காலை நக்கும் தமிழ் நாட்டு காவல் துறையையும், அதிகார வர்க்கத்தையும் வைத்துக் கொண்டு இலங்கைத் தமிழ் அகதிகளை கொலை செய்கிறார்கள்; கொடுஞ்சித்திரவதை செய்கிறார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டிலேயே இருக்கும் அண்ணனிற்கு தெரியாதது போல அளந்து கொண்டு போகிறார்.
தமிழ் நாட்டிற்கு வந்த இலங்கைத் தமிழ் மக்களை இப்படி மோசமாக நடத்தும் ஈழப்பேய் கடல் தாண்டி இருக்கும் ஈழ மக்களிற்கு விடுதலை பெற்றுத் தருமாம்; ஈழ மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வார்களாம். தூ, வெட்கமாயில்லை; ஒரு கொள்ளைக்காரியை, ஊழலிற்காக சிறை சென்ற ஒரு குற்றவாளியை பன்னீர்செல்வத்தை விட பல மடங்கு குனிந்து கும்பிட்டுக் கொண்டு இலங்கைத் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வதைப் பற்றி, ஈழ மக்களின் விடுதலையைப் பற்றிக் கதைக்கிறார்.
அம்மாவின் தேக நலன்; ஈழ மக்களின் தேச நலனாம், அண்ணன் கவியரங்க ஞாபகத்தில் இரண்டு தரம் பாடி விட்டு இந்த எழவெடுத்த எதுகை மோனையை எவரும் கனிக்காமல் விட்டு விடாலும் என்று பதறிப் போய் கமராவைக் கடைக்கண்ணால் பார்த்த படி "இதை நான் பதிவு செய்து கொள்கிறேன்" என்று கல்வெட்டு வசனத்தை காற்றிலே மிதக்க விட்டார். தமிழ்நாட்டையே சாராய வெள்ளத்தில் மூழ்க வைத்து ஏழைப் பெண்களின் வாழ்வை அழிக்கும் ஜெயலலிதா என்ற சாராய வியாபாரியின் நலன் தானா, ஈழ மக்களின் தேச நலன். காசி அண்ணே, இதை விடக் கேவலமாக எம்மக்களை எவரும் அவமதிக்க முடியாது.
இயக்கங்களில் இருந்தவர்கள் என்பதற்காக இலங்கைத் தமிழர்கள் பலர் இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். ஈழ விடுதலைக்கு ஆதரவாகப் பேசினார்கள் என்பதற்காக, சிறு உதவிகள் செய்தார்கள் என்பதற்காகவே பல தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். ஆனால் அண்ணன் காசி ஆனந்தன் புலிகளின் மேல் மட்ட உறுப்பினராக இருந்தவர் என்றாலும் இந்தியாவில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு திரிகிறார்.
அந்த நன்றிக்காக அவர் இலங்கைத் தமிழ் மக்களை கொன்ற இந்திய அரசு ஈழ மக்களிற்கு உதவும்; விடுதலை பெற்றுத் தரும் என்று கதைகளை அளந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவிற்காக கண்ணீர் விடுகிறார். இந்த பிழைப்பு வாதத்தையும், கமிசன் கொள்ளைக்காரியை அம்மா என்னும் கேவலத்தையும் அவர் தன்னுடனேயே வைத்துக் கொள்ளட்டும். "நானும் ஈழ மக்களின் பிரதிநிதி தான்" என்று எல்லா ஈழ மக்களையும் கேவலப்படுத்த வேண்டாம். "அண்ணே, எல்லோரும் உங்களைப் போல பிழைப்புவாதிகள் அல்ல", "அடிமைகள் அல்ல" என்பதை இங்கு கமரா இல்லாது விட்டாலும் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.