தோழர் லலித் வீரராஜ் ஒரு இரப்பர் தோட்டத்து தொழிலாளியின் மகன். மூன்று சகோதரிகளுடன் பிறந்தவர். அதனால் தொழிலாளிகளிற்கே உரிய போர்க்குணம் கொண்டவர்; வறுமையின் கொடுமையை வாழ்நாள் முழுவதும் உணர்ந்தவர். இக்காரணங்களால் தொழிலாளிகளின் போராட்டக் குரலான பொதுவுடமை தத்துவத்தை தன் வாழ்வின் பொருளாக கண்டு கொண்டவர். இலங்கையின் ஒடுக்கப்படும் மக்களின் அமைப்பாக எழுந்த முன்னிலை சோசலிசக் கட்சியில் இணந்து கொண்டார். முன்னிலை சோசலிசக் கட்சியின் அமைப்பான மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தார்.
மக்கள் போராட்ட இயக்கம் இலங்கை அரசுகளினால் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை இணைத்து போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருந்தது. இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவும் அவனது ஏவலாளிகளும் அதிகாரத்தில் இருந்த குருதி தோய்ந்த நாட்கள் அவை. அவனிற்கு எதிராக எழுந்த சிறு முனகல்களைக் கூட மூர்க்கமாக முறித்துப் போட்ட பயங்கரவாதிகளின் காலங்கள் அவை. ஆனால் மனதில் உறுதியும், மக்களின் மேல் பற்றும் கொண்ட மனிதர்களை ஆயுதங்களையும், அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு வீரம் பேசும் கோழைகளால் அச்சுறுத்த முடியுமா? மரணத்திற்கு அஞ்சாத மனிதர்களை மகிந்த ராஜபக்ச போன்ற அற்பபிறவிகளால் அச்சுறுத்த முடியுமா?
மக்கள் போராட்ட இயக்கத்தினால் தை மற்றும் கார்த்திகை 2011 இல் மாபெரும் போராட்டங்கள் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டன. "காணாமல் போனவர்களை வெளிப்படுத்து", "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என்ற முழக்கங்களை முன் வைத்து மகிந்த ராஜபக்ச அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக முதலில் எழுந்த குரல்களாக லலித்தினதும் அவரது தோழர்களினதும் உறுதியான போர்க்குரல் எழுந்தது.
தம் அன்புக்குரியவர்களை இழந்த சோகமும், அதற்கு காரணமான இலங்கை அரச கொலைகாரர்களை எதிர்த்து கேட்க ஒரு குரலும் இல்லாது தவித்து நின்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களிற்கு மக்கள் போராட்ட இயக்கத்தினது போராட்டங்கள் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தன. லலித்தின் அர்ப்பணிப்பும், அதிகாரங்களிற்கு அடிபணியா துணிச்சலும், காணாமல் போனவர்களின் குடும்பங்களில் காட்டிய அக்கறையும் காரணமாக அக்குடும்பங்கள் லலித்தை தம் பிள்ளைகளில் ஒருவராக ஏற்றுக் கொண்டு அன்பு காட்டினார்கள்.
தோழர் குகன் முருகானந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக பத்து வருடங்கள் செயற்பட்டவர். பின்பு தோழர் லலித், மக்கள் போராட்ட இயக்கத்தினரின் தொடர்புகளால் முன்னிலை சோசலிசக் கட்சியில் இணந்து கொண்டார். மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருந்து காணாமல் போனவர்களின் விபரங்களை தொகுத்தல், அவர்களின் குடும்பங்களை ஒன்று சேர்த்து அமைப்பாக்குதல் போன்ற பணிகளை முன்னின்று ஒருங்கிணைத்தவர். வறுமை சூழ்ந்த வாழ்வு என்ற போதிலும், மனைவி, சிறு குழந்தை என்ற பொறுப்புகள் இருந்த போதிலும் கொலைகாரர்களின் தொடர்ந்த அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் தயங்காது, தளராது மக்களிற்காக தம் வாழ்வை அர்ப்பணித்தவர்.
"முப்பத்திநான்கு வருடங்களாக இடதுசாரிய அரசியலில் என்னுடைய வாழ்க்கையினை தொடர்ந்த நிலையில், நான் வலிமையுடனும் நம்பிக்கைப்பற்றுடனும் அதனையே தொடர்வேன். நான் இங்கு வலிமை எனக் குறிப்பிடுவது யாதெனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய பிரச்சனைகள் எதனையும் இந்த அமைப்பினால் தீர்க்க முடியாது என்ற தத்துவத்தின் மற்றும் தர்க்கவியல் நிலையாகும். நான் நம்பிக்கைப்பற்று எனக் கூறும்போது, சோசலிசத்துக்கான போராட்டத்தில் தம்முயிரைத் தியாகம் செய்த தோழர்களோடு எனது மனச்சாட்சியை இணையாவதை குறிப்பிடுகிறேன்" என்று பொதுவுடமைத் தத்துவத்தை தன் வாழ்க்கைத் தத்துவமாக தன் சிறுவயதில் இருந்து வரித்துக் கொண்ட தோழர் குமார் குணரத்தினம் அனுராதபுரத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இத் தோழர்களும், இவர்களை ஒத்த ஆயிரம் ஆயிரம் தோழர்களும் இலங்கை அரசிற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலமே கேடு கண்ட, மக்கள் விரோத இலங்கை அரசுகளை தூக்கி எறிய முடியும் என்ற மக்கள் போராட்ட சித்தாந்தத்தை தம் வழிமுறையாகக் கொண்டவர்கள். எந்த விதமான தீர்வுகளையும் கொடுக்க முடியாத கோசங்களை எழுப்பி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு மக்களைப் பலியிட்டு தாம் பதவிகளை பெற்றுக் கொள்ளும் நயவஞ்சக அரசியலை எதிர்த்தவர்கள்.
தேசபக்தி பேசியவர்கள் சர்வதேச கொள்ளையர்களிற்கு நாட்டின் வளங்களையும், ஏழை மக்களின் உழைப்பையும் தரகுப்பணத்திற்காக விற்கிறார்கள்; தமிழ் மக்களின் தலைவர்கள் என்று சொல்பவர்கள் தமிழ் மக்களைக் கொன்றவர்களை கட்டித் தழுவுகிறார்கள்; முஸ்லீம்களின் காவலர்கள் என்பவர்கள் பள்ளிவாசல்களை இடித்தவர்களுடன் சேர்ந்து நிற்கிறார்கள்; மலையக தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியவர்களுடன், அவர்களை மாறா வறுமையில் வைத்திருப்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தீர்வு பெற்றுத் தருவோம் என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் எமது தோழர்கள் சிறையில் வதைபட நேரினும், மரணமே வரினும் மக்களிற்கான போராட்டம் என்னும் இலட்சியத்தில் இருந்து என்றுமே விலகாதவர்கள். அதனால் தான் தோழர் குமார் குணரத்தினம் வயது முதிர்ந்த தன் தாயை, ரஞ்சிதன் குணரத்தினம் என்ற தன மூத்த மகனை பிரேமதாச என்ற கொலைகாரன் காலத்து இலங்கை அரசின் கொலைக்கரங்களில் பறி கொடுத்த தாயை ஏங்க வைத்து விட்டு சிறையில் இருக்கிறார். "எனக்கு நம்பிக்கை இருக்கு, என்னைப் பார்க்க என் அப்பா நிச்சயம் வருவார்" என்று தன் சின்ன மகளை அழ வைத்து விட்டு தோழர் குகன் காணாமல் போய் விட்டார். காணாமல் போவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக தன் சகோதரிகளிற்கு தனது புகைப்படம் ஒன்றைக் கொடுத்து விட்டு " நான் கொல்லப்படலாம், அதற்காக அழாதீர்கள்" என்ற தோழர் லலித்தை அவரது சகோதரிகள் அழுதபடி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
கொடுஞ்சிறைகள்
இருள்வெளி மறைவுகள்
மரணங்கள்
உம்மை மறைக்க முடியாது
இதயங்களிலும்
ஆத்மாக்களிலும்
உம் வாழ்வும்
வார்த்தைகளும்
கல்வெட்டு வரிகளாய்
என்றும் கலந்திருக்கும்