Language Selection

புதிய ஜனநாயகம் 2007

02_2007_pj.jpg

தை மாட்டுப் பொங்கல் திருநாளில் மாடுகளுக்குப் பொங்கல் வைத்து, மாலையில் மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவதும் குலவையிடுவதும் தமிழக விவசாயப் பெருமக்களின் பண்பாடாக உள்ளது. உசிலம்பட்டி வி.வி.மு. தோழர்கள், இம்மாட்டுப் பொங்கல் விழாவை மறுகாலனியாக்கத்திற்கெதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரமாக மாற்றி மாடுகளின் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.

மாட்டுப் பொங்கலன்று மாலையில், ""மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நாங்க பொங்கப் போறோம்! மனுசங்க நீங்க...? என்ற கேள்வியுடன் கொம்புகளுக்கிடையே கட்டப்பட்ட அட்டையுடன் மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்த வி.வி.மு. தோழர்கள், மாட்டின் முதுகின் இருபுறமும், ""அமெரிக்கா, ஜப்பானில் மாட்டுக்கு மானியம் பல ஆயிரம் ரூபாய்; இங்கே ஒன்றுமில்லை. தீனியில்லாம நாங்க சாகறோம். பால் பவுடர் இறக்குமதியால பாலுக்குக் கொள்முதல் விலை குறையுது. மாடுகளாகிய நாங்க நசிகிறோம். மறுகாலனியாக்கத்தால விவசாயம் அழியுது. விவசாயிங்க தவிக்கிறாங்க. அதனால, ஐந்தறிவு உள்ள மாடுங்க நாங்க மறுகாலனியாக்கத்துக்கு எதிராகப் போராடப் போறோம். ஆறறிவு உள்ள நீங்க...?'' என்ற முழக்கங்களை எழுதி கருக்கட்டான்பட்டியலிருந்து உசிலம்பட்டி வரை இந்தப் புதுமையான ஊர்வலத்தை நடத்தினர்.

 

வழியெங்கும் உழைக்கும் மக்கள் திரண்டு வரவேற்க, அவர்களது சந்தேகங்களுக்குத் தோழர்கள் அளித்த விளக்கம் தெருமுனைக் கூட்டங்கள் போல நடந்து புதுமையான பிரச்சாரமாக அமைந்தது. பொங்கல் விழா என்ற பெயரில் ஓட்டுக்கட்சிகளும் இதர அமைப்புகளும் கூத்தடித்துக் கொண்டிருந்த வேளையில், நாடும் மக்களும் எதிர்கொண்டுள்ள மையமான பிரச்சினைகளை முன்வைத்துப் புதிய பாணியில் நடந்த இந்தப் பிரச்சாரம் இப்பகுதிவாழ் மக்களிடம் பெருந்தாக்கத்தையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பு.ஜ. செய்தியாளர்கள்.