இலங்கை பல்கலைக்கழகங்களில் ஜனநாயகமே இல்லை என்றெல்லாம் எழுதுகிற பிரபல எழுத்தாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. அநேகமான புலம்பெயர் செய்திச் சேவைகளின் செய்திகளை பார்க்கின்ற போது எப்படி இலங்கை ஒரு வாழ்வதற்கே தகுதியில்லாத நாடு வன்முறைகள் நிறைந்த நாடு என்ற உணர்வு எங்களை மீறி ஏற்படுமோ அதே அளவிற்கு பல்கலைக்கழகங்களை பற்றிய வர்ணனைகளை அள்ளி இறைக்கிறார்கள்.
இன்று பேராதனை சம்பவத்தையும் யாழ்ப்பாண சம்பவத்தையும் ஒரே தளத்தில் ஆராய்கிறார்கள். இவ்வகை ஒப்பிடுதல்கள் மிகவும் தவறானவை. வேறு வேறு பரிமாணங்கள் கொண்ட விடயங்கள் அவை. எதிர்ப்பார்கள் என்று தெரிந்தும் பெரகர நடனக்காரர்களை கொண்டு வந்திறக்கிய மாணவர்களிற்கும் , அதை எதிர்த்த அதே பீடத்து மாணவர்களிற்கும் மற்றைய பீடத்தின்/பீடங்களின் மாணவர்களிற்குமான மோதல்களோடு புதுமுகமாக வந்து பல்கலைக்கழக சூழலிற்கு இயைவாக்கமுறாத அதாவது எதிர்த்தாக்குதல் நடத்த முடியாத மாணவர்களை இரண்டாம் வருட சிங்கள மாணவர்களின் ஒரு குழுவினர் நடத்திய தாக்குதலையும் ஒப்பிடுகின்றீர்கள். குறிஞ்சிக்குமரன் சம்பவம் என்று அதைக்குறிப்பதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. இதில் தான் ஒரு பெரிய கருத்தியல் திணிப்பு இருக்கின்றது. தாக்கப்பட்ட மாணவர்கள் குறிஞ்சிக்குமரனில் இருந்து மட்டும் வரவில்லை. பல்கலைக்கழக பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கடமைகளை முடித்துவிட்டு வந்த முஸ்லிம் மாணவர்களும் இருக்கிறார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவத்தோடு இத்தாக்குதலை இணைத்துப்பேச அதன் தொடர்ச்சியாக நிறுவ தங்களின் ஒப்பிடுதலை நியாயப்படுத்தத்தான் முஸ்லிம்கள் நீக்கப்பட்டு வெறும் தமிழ் மாணவர்கள் மட்டும் தாக்கப்பட்டார்கள் என்பது போல குறிஞ்சிக்குமரன் சம்பவம் என்று ஒரு புதிய அடையாளக் குறியீடு (# tag) உருவாக்கப்படுகின்றது.
கட்டுரையெழுதுபவர்களுக்கும் ராக்கிங்க்கும் என்ன பழைய பகை என்றே தெரியவில்லை. இராணுவத்தை கொண்டு அரசு அடக்குமுறையை நிகழ்த்துவதை இதோடு ஒப்பிடுகிறார்கள். அவர்கள் இலக்கியவாதிகள்(?) என்பதால் உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை என்பதை சரியாகக் கையாளுகிறார்களோ தெரியவில்லை. அடிப்பதை, உதைப்பதை, தாக்குவதை ராக்கிங் என்கிற போல கண்டமேனிக்கு வரைகிறார்கள். உண்மையில் இருக்கின்ற நடைமுறையின் படி புதுமுக மாணவர்களிற்கு பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று மாதங்கள் வரையில் இரண்டாம் வருட மாணவர்களால் சுயமாக இயங்க அனுமதிக்கப்படுவதில்லைத்தான். இக்காலப்பகுதியில் தான் அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. கட்டுரையாளருக்கு விடயத்தெளிவின்மையும் இது தொடர்பான பட்டறிவுகளின் வரட்சியும் தான் தென்னிந்திய சினிமாக்களில் வரும் தரையில் நீச்சலடிப்பது, புகைக்க பழக்குவது போன்ற காட்சிகளை மனதில் வைத்து கட்டுரை கற்பனையில் தீட்ட தூண்டியிருக்க வேண்டும். இந்த ஒழுங்குமுறைகள் புதுமுகமாணவர்களுக்கு பரிச்சயமாக்கப்படுகின்ற காலத்தில் புதுமுகங்கள் பெறுகின்ற படிப்பினைகள் வாழ்க்கையில் கிடைக்காத இனியும் கிடைக்கப்பெறாத அனுபவங்களாகத்தான் இருக்கும். ஒற்றுமை, குழுவாக இயங்குதல், காட்டிக்கொடுக்காமல் இருத்தல், பணிவு, எல்லோரையும் சமனா மதிக்கிற தன்மை, இனபேதமில்லாமல் மத பேதமில்லாமல் செயற்படுகின்ற தன்மை என்று தனிப்பட்ட ரீதியில் பல மாற்றங்களை கொண்டு வரக்கூடிய காலப்பகுதியே இதுவாகும்.
இவைகளிற்கு பகிடிவதை என்று பெயரிடுவதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இச்செயன்முறையை எதிர்ப்பவர்களில் முதலாவது பிரிவினர் தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காககவும் அரசியல் இருப்பை தக்கவைக்கவும் இவைகளை எதிர்க்கின்றனர். ஏனையவர்கள் போதுமான புரிதல்களில்லாமல் ஆராயாமல் எதிர்க்கின்றனர். கட்டுரையாளர்கள் இரண்டு பிரிவினரில் எதைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். முதலாவது தரப்பினர் செய்கின்ற பிரச்சாரங்கள் தான் இரண்டாவது தரப்பின் தோற்றத்துக்கும் நீட்சிக்கும் காரணம். ஊடகங்களை மேடைகளை பயன்படுத்தி இரண்டாவது தரப்பை தங்களின் சுயநலங்களிற்காகவும், பதவியுயர்வுகளிற்காகவும், அரசியல் இலாபத்திற்காகவும் ஒட்டுமொத்தமாக இவைகளினால் கிடைக்கும் பொருளாதார அனுகூலங்களிற்காகவும் தங்களோடு தொடர்ச்சியாகத் தக்க வைக்க முயலுகின்றார்கள்.
இலங்கையில் யுத்தகாலத்திலும் அதற்கு பின்னரும் அரசியல் கட்சிகளின் மேதினக்கூட்டங்களையும் விட அதிகமானவர்களை எதிர்ப்புப் போராட்டமொன்றுக்கு தலைநகரிலோ அல்லது அதற்கு வெளியேயோ திரட்டும் வல்லமையுள்ள ஒரே ஒரு அமைப்பு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாகும். இவ்வமைப்பின் போராட்டங்கள் அரச இயந்திரத்திற்கு எதிரானவையாகவே பெரும்பாலும் இருக்கும். மிகப்பிரதானமாக இலவசக்கல்வியை பாடசாலை மட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்கள் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலான போராட்டங்களை சொல்ல முடியும். எப்போதும் தளர்ச்சியில்லாமல் இயங்கும் இவ்வொன்றியத்தின் செயற்பாடுகள் மாணவர் அடக்குமுறைகளிற்கெதிராக தீவிரமானதாக இருக்கும். 2012 அளவில் எங்கள் பீட சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகம் முழுவதும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்சானன் பரமலிங்கம் சகோதரர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சுவரொட்டிகளை இரவோடு இரவாக ஒட்டியிருந்தோம். மாவீரர் தினத்தில் விளக்கேற்றியமை தொடர்பில் யாழ் பல்கலை விடுதிகளுக்குள் இராணுவத்தினரை உள்நுழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராதனை, றுகுணு மாணவர்கள் பெருமளவில் இனபேதமில்லாது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினர். பாடசாலைகளில் பணம் அறவிடுதலை எதிர்த்து இப்போதும் அவ்வமைப்பே போராடுகின்றது. இப்படி மாணவர் அடக்குமுறைகள் நிழுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெலிவேரிய ரத்துபஸ்வல துப்பாக்கிப்பிரயோச் சம்பவம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று பல போராட்டங்களில் பங்குபற்றி அதிகார மட்டத்திற்கு ஒரு பிரதான எதிர்ப்பாளராக இருப்பது தான் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.
இந்த எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளை உடைத்ததை போல மாணவர் ஒன்றியத்தை உடைப்பதற்கு முயன்றது ஜனநாயக விரோத மகிந்த அரசு. இந்த நிகழ்ச்சி நிரல் மிக நீண்டது. மொரட்டுவ பல்கலைக்கழக இரண்டு மாணவர் தலைவர்கள் விபத்து என்ற போர்வையில் கொலை செய்யப்பட்டதாக ஒன்றியம் அறிவித்திருந்தது. மாணவர் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். போராட்டங்களில் காவல்துறையினர் தடியடிகளை நிகழ்த்தினார்கள். இதுவெல்லாம் பயனளிக்காத நிலையில் தான் மாணவர் திரளலை கட்டுப்படுத்த புதிய வழிகளை கையாளத் தொடங்கியது அதிகாரம். புதுமுக மாணவர்களின் ஒன்றியத்தை நோக்கிய திரளலை குறைத்து விட்டால் அடிப்படையையே சிதைத்து விடலாம் என்று புரிந்துகொண்டது. அதைக் குறைக்கத்தான் ராக்கிங்க்கு எதிரான நடவடிக்கைகளை இன்னும் இறுக்கமாக்கியது அரசு. சிரேஷ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்களுடன் கதைத்தாலே வகுப்புத்தடை என்ற நிலைமை அன்று இருந்தது. இருபது பேர், முப்பது பேர் என்று கணக்கில்லாமல் பேராதனை, ருகுணு, களனி, ஜயவர்தனபுர, சபரகமுவவில் வகுப்புத் தடைகள் ஒவ்வொருபீடங்களிலும் வழங்கப்பட்டன. எனினும் இவைகளால் மாணவர் அணிதிரளலை குறைக்க முடியவில்லை. அடுத்து அரசு போட்ட திட்டம் தான் பல்கலைக்கழகம் நுழைய முன்னர் கட்டாயமானதாக வழங்கப்பட்ட தலைமைத்துவப் பயிற்சி. மூன்று வாரங்களில் எப்படி தலைமைத்துவத்தை வளர்க்க முடியும் என்று புதுமுகங்களே குழம்பிப்போனார்கள். தலைமைத்துவ பயிற்சி என்கிற பெயரில் தெரிவு செய்யப்பட்ட இராணுவ முகாம்களில் நடாத்தப்பட்ட இராணுவப்பயிற்சிகளில் ராக்கிங்க்கு எதிரான கருத்துக்கள் புதுமுகங்களின் மனதில் ஆழப்பதிய வைக்கப்பட்டன. நாமல், எஸ்.பி. ஆகியோர் எல்லா பயிற்சி முகாம்களிற்கும் சென்று மாணவர்களிற்கு மூளைச்சலவைகளை செய்து தனியார் பல்கலைக்கழகங்களை ஆதரிப்பதான கருத்துக்களை தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். தனியார் மருத்துவக்கல்லூரியை மாலபேயில் தொடங்கியதை போல கண்டியிலும் தொடங்க எத்தனித்த பண முதலைகளுக்கும் அப்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கும் இப்பிரச்சாரமே மிகத்தேவையாகயும் இருந்தது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் புதுமுக மாணவர்களை வரவேற்பு விழா வைக்கும் வரையில் அவர்களை பொதுவிழாக்களில் பங்கேற்பதிற்கு அனுமதிப்பதில்லை. பல்கலைக்கழக மாணவர்களிடையே இருக்கிற ஒழுங்குகளை அறியாமல் பங்குபற்ற வைப்பது என்பது பொருத்தமில்லாத படியால் அந்த ஒழுங்குகளை புதுமுகங்களிற்கு அறிவிக்க முதல் மூன்று மாதங்கள் (பீடம், மாணவர் எண்ணிக்கை, நிர்வாகத்தின் அடக்குமுறை என்பதற்கேற்ப இக்கால எல்லை மாறுபடும்) ஒதுக்கப்படுகிறது. புதுமுகங்களிற்கு அது ஒரு அழுத்தமான காலப்பகுதியாகும். பல்கலைக்கழக விதிமுறைகள் உபகலாச்சார நடைமுறைகள் என்பவை சொல்லித்தரப்படுகின்ற காலப்பகுதி இதுவே ஆகும். விரிவுரை மண்டபத்தில், ஆய்வுகூடத்தில், விடுதிஅறைகளில் நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதோடு அவைகளை பின்பற்றுவது அவதானிக்கப்பட்டு திருப்தியான அவதானங்கள் கிடைக்கும் பட்சத்திலேயே சிரேட்டர்களால் வரவேற்பு விழா வழங்கப்படும். அதுவரையில் சாதாரண மாணவராக புதுமுகங்களால் இயங்க முடியாது. இக் காலப்பகுதியில் தான் மாணவர் வீரர்கள் அதாவது இலவசக்கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்த மாணவர்களின் வரலாறுகளும் சொல்லித்தரப்படும்.
இந்த மாணவ வீரர்களில் முகம்மட் நிஸ்மி, ரஞ்சிதம் குணரட்ணம் என்பவர்களும் உள்ளடங்குகிறார்கள். இவர்கள் இருவரும் மாணவர் ஒன்றியங்களில் முக்கியமான தலைவர்களாக இருந்து போராட்டங்களின் போது கடத்தப்பட்டு மரணிக்கப்பட்டவர்கள். பேராதனையில் உள்ள விடுதிகளில் ஒரு ஆண்களிற்கான விடுதி மாணவர்களால் நிஸ்மி விடுதி என்று பெயரிடப்பட்டது. குறிஞ்சிக்குமரனுக்கு அண்மையில் இருக்கும் ஐவர் ஜென்னிங்க்ஸ் விடுதி என்று நிர்வாகத்தால் பெயரிடப்பட்ட விடுதியை மாணவர்கள் ரஞ்சிதம் விடுதி என்றே அழைத்தனர். உண்மையில் வரவேற்பு விழா வரையிலான காலத்தை பகிடிவதைக்காலம் என்பதை விட பல்கலைக்கழக சூழலிற்கு இயைபாக்கம் அடைகின்ற காலம் என்றே சொல்லலாம். பல்வேறு கலாச்சார பின்னணி பிரதேசங்கள் பொருளாதார மட்டங்கள் என்று வருகின்றவர்களை ஒரே அணியாக ஒருவரையொருவர் அறிந்து கொண்டு ஒற்றுமையாக இருப்பதற்கு தான் மேற்குறிப்பிட்ட அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. ஒரு சிரேஷ்ட மாணவரும் தனிப்பட்ட ரீதியில் புதுமுகங்களை தன் விருப்பத்திற்கேற்றவாறு நடாத்துவது முடியாது. குழுவாகத்தான் செயற்பட முடியும். இக்காலத்தில் எந்த ஒரு பௌதீக தாக்குதலுக்கும் இடமளிக்கப்படுவதில்லை. வெறும் வார்த்தைகள் தான் வழிநடத்துவதற்கு பயன்படுத்தப்படும். நான்கு வருடங்களும் வேறுபீட மாணவர்களோடு ஊர் பொதுமக்களோடு பல்கலை நிர்வாகத்தோடு பிரச்சினைகள் வந்து அதை சரியாக கையாளத்தெரியாத மாணவர் அணிகளை முதலில் பல்கலைக்கழக சமூகம் குறிப்பது சீனியர்ஸ்ட ராக்கிங் சரியில்லை. கிட்டத்தட்ட அம்மா அப்பாட வளர்ப்பு சரியில்ல என்று ஊருக்குள் சொல்வதை போல.
இவற்றையும் தாண்டி ஒருவர் அல்லது ஒருகுழு புதுமுகத்தை தாக்குவார்களேயாயின் அது தனிப்பட்ட பகையாகத்தான் பார்க்கப்பட வேண்டும். எப்போதும் அன்ரி ரக்கர்ஸ் என்பவர்கள் நிர்வாகத்துக்கு விசுவாசிகளாகவும் அரசியல் மட்டங்களில் அறியப்பட்டவர்களின் பிள்ளைகளாகவும் தானிருப்பார்கள். அவர்கள் எந்தவிதமான தொடர்புகளையும் மற்றைய மாணவர்களுடன் பேண மாட்டார்கள். ஏறத்தாழ பாடசாலை மனநிலையிலேயே இருப்பார்கள்.
பல்கலைக்கழகங்களில் ஜனநாயகச்சூழல் இல்லையாம் என்று புலம்புகின்றார்கள். பொது ராகிங் என்கிறார்கள். ராகிங்கின் அடிப்படை நோக்கம் அடிப்பது தான் என்ற இவர்களின் மனநிலை வருத்தத்திற்குரியது. பௌதீக ரீதியில் ஒரு எல்லைக்குள் இருக்கின்ற மாணவர்கள் ஒரே வகையாக நடத்தப்பட வேண்டும் என்பதே அக்காலப்பகுதியின் நோக்கம். உதாரணத்திற்கு ஒரு பீடத்தில் இருப்பவர்கள் அங்கே ஒரு பிரச்சினை அல்லது மாணவர் அடக்குமுறை என்றால் அது அனைவரும் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இன்னும் பல சந்தர்ப்பங்களில் விழாக்களில் அவர்களிற்கிடையேயான ஒற்றுமை தான் தேவைப்படுவதால் அவர்கள் அனைவரையும் ஒரே விதத்தில் அவர்களின் சிரேஷ்ட மாணவர்களால் அணுகப்பட வேண்டிருக்கியிருக்கிறது. சில பீடங்களில் தமிழ் மாணவர்கள், தமிழ் மாணவர்களையே ராகிங் செய்வார்களாம் என்று எழுதுகிறார்கள். அப்படி பிரிந்து தமிழ் முஸ்லிம் சிங்களவர் என்று பிரிந்து செயற்பட்டதில் என்ன பயன் கண்டார்கள். தூரநோக்கில்லாத குறுகிய மனப்பாங்கு தான் இந்த தனிப்பட்ட குழுக்களின் ராகிங். இவர்களால் மாணவர் சமூகம் எதிர்கொள்கிற விடுதிப் பிரச்சினை, மகாபொல பிரச்சினை ,நிர்வாகத்துடனான பிரச்சினை, வகுப்புத்தடைகள் போன்ற பொது பிரச்சினைக்காக ஒன்றுபட முடியாது. மற்றைய கலாச்சாரங்களைக் கூட புரிந்து கொள்ளக்கூட தவறவிடுகிறார்கள். ஏறத்தாழ பாடசாலையில் இருந்த அதே மனப்பாங்கையே கொண்டு வெளியேறுகின்றனர். வன்மங்கள் மட்டும் அப்படியே அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றன. பிரிந்து தனியாக செயற்படுகின்ற குழுக்களை சேர்ந்த சிங்கள, முஸ்லிம், தமிழ்ச் சகோதரர்களால் சகோதர மொழிகளை விளங்கிக்கொள்ள இயலுமானவர்களாயாவது வெளியேறுகின்றார்களா? ஆனால் பொது நடைமுறைக்குக்கீழ் இருந்து வந்தவர்களால் இப்போதும் சமூக அக்கறையில் நடத்தப்படும் போராட்டங்களில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறிய பிறகும் பிரதேச இன மத வேறுபாடுகளை விட்டு மக்கள் நலப்போராட்டங்களில் கலந்துகொள்வதை என்னால் இனங்காட்ட முடியும்.
இதை தவிர பல்கலைக்கழகத்தை விட வெளியிடங்களில் இருப்பவர்கள் அல்லது வேறு வேறுபட்ட பல்கலைக்கழகங்களில் இருப்பவர்கள் ஒன்றிணைந்து புதுமுகங்களை பாடசாலை அல்லது பிரதேச அடிப்படையில் ஒன்று திரட்டி தங்கள் வன்மங்களை தங்கள் இருப்பை காட்டுவதையும் ராகிங் என்கிறார்கள். இவையெல்லாம் என்ன நோக்கத்திற்கானவை என்ன பயனிற்காக நிகழ்த்தப்படுகின்றன என்று தெரியவில்லை. இவைகளையும் சமூகம் ராகிங் என்று சொல்வதால் தான் கட்டுரையாளர் போன்றோர் குழம்பிப்போகிறார்கள். ஒழுங்குபடுத்தப்படாத செயன்முறைகள் இவைகள் ஒருவரை பல்கலைக்கழக நடைமுறைகள் கற்பிக்கப்படும் காலத்தில் இருந்த சிரேட்ட மாணவர்களுக்கு கனிட்டர்கள் மீதான கடமையொன்று இருக்கின்றது. ஒரு ஆலோசகராக பரீட்சைகளுக்கு வழி நடத்துபவராக தொழில் வாய்ப்புக்களை இனங்காட்டுபவராகவே அவர் இருப்பார். பிரதேச பாடசாலை ரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட இந்த முறைமைகளில் இத்தன்மைகள் எந்தளவு சாத்தியம் என்று புரியவில்லை. ஏனென்றால் தொடர்பேயில்லாத துறைகளை சேர்ந்தவர்களின் ஒன்றிணைவுகள் தான் அவை.
தாக்குதல் இடம்பெற்ற இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீடத்தில் உண்டியல் பிரச்சினை பேசப்படுகின்றது. மற்றைய பீடங்களில் பல்கலைக்கழகங்களில் ஏன் இப்படி உண்டியல் பிரச்சினைகள் எழவில்லை என்பதற்கு பதில் வேண்டுமெனில் சற்று பின்னோக்கி பார்க்க வேண்டியிருக்கிறது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் நான்கு வருட பட்டம் அனைவருக்கும் என்ற போராட்டம் இதே பீடத்தின் மாணவர்களால் (கிழக்கு, கொழும்பு, ஜபுர பல்கலைக்கழகங்கள்) ஆறு மாதங்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நூற்று எழுபத்தைந்து நாட்கள் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. இந்த போராட்டங்களில் அன்றைய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் நஜித் இன்டிகா (Najith Indika) சகோதரர், பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த திமுத்து (Dimuthu Bagya Prabashwara) சகோதரரும் முன்னின்றனர். அரச இயந்திரத்தின் பொய்வாக்குறுதிகள் மாணவர்களால் பறக்கணிக்கப்பட்டன. போராட்டங்கள் ஊர்வலங்கள், தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளுடன் தான் நடைபெற்றன. இதன் போது ஆறு அரச பல்கலைக்கழகங்கள் நேரடியாக பங்குபற்றியதுடன் ரஜரட்ட, சபரகமுவ, மொறட்டுவ, களனி பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பொருளுதவிகளையும் சுவரொட்டிகளையும் கணிசமான நேரடி பங்களிப்பையும் வழங்கியிருந்தார்கள். இப்போது அவர்களின் கல்விசார் பிரச்சினைகளிற்கு இதே பீடத்தின் மாணவர்கள் பங்களிப்பை செய்ய வேண்டிய கட்டாயமிருப்பதாலேயே உண்டியல் குலுக்குவது நடைமுறையிலுள்ளது. அத்தோடு ஆறு மாதங்கள் போராட்டத்தில் யாழ்ப்பாணம், கிழக்கு, றுகுணு, கொழும்பு, ஜ'புர மற்றும் பேராதனை மாணவர்களின் நூற்றியெழுபத்தைந்து நாட்கள் முழுமையான விரிவுரைகளை பகிஷ்கரித்து கோட்டை புகையிரத நிலையத்தின் முன் வீதியில் இருந்த வரலாறுகள் புதுமுகத் தமிழ் மாணவர்களிற்கு முறையாக கொண்டு சென்று சேர்க்கப்பட்டிருக்குமாயின் தங்கள் கடப்பாடுகளை உணரத்தலைப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மையாகும். அதை விடுத்து வெறுமனே உண்டியல் பிரச்சினை என்று இரண்டு வரிகளில் முடித்து விடுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
வீணாக விடயத்தெளிவு இல்லாத விடயங்களைக் கூறி அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கலை பல்கலைக்கழகங்களில் திணிப்பதை ஆதரித்தே ஆகவேண்டும் என்பதை சூசகமாக சொல்லும் உங்களை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் சமூகத்திற்கு நீங்கள் தருகிற பிழையான தகவல்கள் பல்கலைக்கழகங்களில் இன்னும் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். -
- துவாரகன் கிருஸ்னவேணி வேலும்மயிலும்