"அவள் பிறந்த போது தொட்டில் வாங்கக் கூட பணமில்லை. அவள் இறந்த போது சவப்பெட்டி வாங்கவும் பணமில்லை" என்று ஜென்னி மார்க்ஸ் தங்கள் செல்லக் குழந்தை பிரான்சிஸ்கா இறந்த போது மனமுருகிச் சொல்கிறார். கார்ல் மார்க்ஸ் - ஜென்னி மார்க்ஸ் தம்பதியினரின் சின்னக் குழந்தை பிரான்சிஸ்காவின் இறுதி நிகழ்வுகள் இங்கிலாந்தில் அகதியாக வாழ்ந்த ஒரு பிரெஞ்சுக்காரர் கொடுத்த இரண்டு பவுண்டுகள் உதவி இல்லாவிட்டால் நடந்திருக்காது. பிரான்சிஸ்கா இறந்தது 1852 இல்.
ஆனால் 2016 இலும் ஏழை மக்களிற்கு வறுமை தான் விதியாக இருக்கிறது. இறந்த தன் மனைவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வழியற்று தோளிலே சுமந்து செல்ல வேண்டிய அவலத்திலே தான் அந்த பழங்குடி மனிதனை இந்தச் சமுதாயம் வைத்திருக்கிறது. "வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்து காதலித்து முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்" என்று தன் தாய் இறந்த போது பட்டினத்தார் பாடினார். இறந்த இந்த பழங்குடிப்பெண்ணின் சின்ன மகள் எதற்கென்று அழுவாள்? "காப்பாற்றிச் சீராட்டிய" தாய் இறந்து விட்டாள் என்ற பெருந்துயரில் கதறி அழுவாளா? இறந்த தன் தாயை தோளிலே சுமந்து செல்லும் தந்தையின் கையறு நிலையை எண்ணிக் கலங்குவதா?
"எல்லோரிடமும் உதவி கேட்டேன். கவனிப்பார் யாருமில்லை. எல்லோரும் கை விரித்த பின்பு இறந்து போன என் மனைவியை தோளிலே சுமந்து செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியேது" என்று அந்த ஏழை மனிதன் மனம் கசந்து சொல்கிறார். "நாங்கள் கட்டாயமாக ஒரு வாகனத்தை ஒழுங்கு செய்து கொடுத்திருப்போம். ஆனால் இறந்து போன பெண்ணின் கணவர் தான் நாங்கள் வாகனத்தை ஒழுங்கு செய்யும் வரை காத்திருக்கவில்லை" என்கிறார் அந்த மாவட்ட ஆட்சியாளர். எவ்வளவு பொய். ஏன் அந்த ஏழை வாகனத்திற்கு காத்திராமல் தன் அன்புக்குரியவரின் உடலை தோளிலே சுமந்து கொண்டு செல்ல வேண்டும்?
ஒரு சின்னக் குழந்தையை தோளிலே சுமந்து கொண்டு நெடுந்தூரம் போவதே மிகவும் கடினமானது என்னும் போது தன் மனைவி இறந்த வேதனையில் வாடும் ஒரு மனிதன் தாயை இழந்து தவிக்கும் தன் மகளையும் கூட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியாளர் செய்ய இருந்த ஏற்பாடுகளிற்கு காத்திருக்காமல் அவர்கள் செய்ய இருந்த உதவிகளை உதறித் தள்ளி விட்டு வெளியேறினானாம். இந்திய அதிகாரவர்க்கம் என்றைக்கு ஏழைகளின் குரலிற்கு செவி சாய்த்திருக்கிறது? என்றைக்கு அது ஏழைகளிற்காக ஒரு துரும்பையேனும் தூக்கிப் போட்டிருக்கிறது? ஏழை சொல் என்றைக்கு அம்பலம் ஏறியிருக்கிறது?
ஒரு ஏழைப்பெண்ணின் உடலை ஏற்றிச் செல்ல ஒரு வாகனத்திற்கு வழி செய்ய மனமில்லாத இந்த இந்திய அரசு தான் ஏற்கனவே கொழுத்துப் போயிருக்கும் முதலாளிகளிற்கு மக்களின் பணத்தை கடனாக கொடுக்கிறது. ஆயிரங்கோடிகளில் இருக்கும் அப்பணம் திரும்ப வரப் போவதில்லை என்பது கொடுக்கும் இந்திய அரசுக்கு தெரியும். திருப்பிக் கொடுக்க வேண்டிய ஒரு வேளை வரப் போவதில்லை என்பது வாங்கும் முதலாளிகளிற்கு தெரியும்.
பசி தீரா வயிற்றுடன் ஏழைகள் வாழும் நாட்டில் தான் பல்லாயிரக் கோடிகள் செலவிட்டு ஏவுகணைகளை வானில் வெடிக்க வைக்கிறார்கள். ஏழை உழைக்கும் மக்களின் வறுமை சூழ்ந்த வாழ்வை ஒழிக்க முடியாத நாட்டில் தான் பெரும் பணத்தை பாழாக்கி அணுவைப் பிளந்து எதிரிகளை ஒழிக்கப் போகிறார்களாம். தவித்த வாய்க்கு குடிக்க ஒரு சொட்டு சுத்தமான தண்ணீர் கொடுக்க முடியாத கூட்டம் சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்யப் போவதாக தம்பட்டம் அடிக்கிறது.
மக்கள் விரோத மனு தர்மத்தை இந்திய அரசியல் சாசனமாக நடைமுறையில் வைத்திருக்கும் அதிகார வர்க்கம் ஏழை உழைக்கும் மக்களை மனிதர்களாக என்றைக்குமே மதிக்க போவதில்லை. உயிரோடு இருப்பவர்களையே தீண்டத்தகாதவர்கள், சமமற்றவர்கள் என்று மண்டை கழண்ட நாலு வருண மசிர் தத்துவத்தால் அவமதிப்பவர்களிற்கு இறந்த ஏழை மக்களின் மீது மட்டும் மரியாதை வந்து விடவா போகிறது? அதனால் தான் அந்தப் பெண் இறந்ததும், அவரின் உடலை கொண்டு செல்ல முடியாத கையறு நிலையில் கணவன் நின்றதும் அவர்களிற்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
இரந்து தான், பிச்சை எடுத்துத் தான் உயிர் வாழ் வேண்டும் என்ற நிலை மக்களிற்கு இருந்தால் இந்த உலகைப் படைத்தவனும் அலைந்து அழியட்டும் என்று சபிக்கிறான் அய்யன் வள்ளுவன். இறந்த பிறகும் இரக்க வேண்டும் என்ற நிலையில் மக்களை வைத்திருக்கும் இந்த கேடுகெட்ட முதலாளித்துவம் அழியட்டும். அதனைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஊழலில் ஊறிய அற்பப் பிறவிகள் அழிந்து ஒழியட்டும்.