ஏறுகிறது கோவில்களில் கொடி, இறங்குகிறது தமிழரின் மானமும் பகுத்தறிவும்!
பசியும், பயமும் பின் தொடரும் நிழல்களாக துரத்த அவர்கள் மரணத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். கனத்த மழை பெய்து கரிய இருள் போர்த்திய இரவு நேரத்திலும் அவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், குருதிப்போக்கு குறையாமல் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தவர்கள் மனிதத்தின் எதிரிகளிடம் போய்க் கொண்டிருந்தார்கள். காத்திருப்பது மரணம், சித்திரவதை, பாலியல் வன்முறை, பரிகாசம் என்று தெரிந்தும் அவர்கள் பிணம் தின்னும் கழுகுகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
நந்திக்கடலை நடந்து கடக்கையிலே தாய் குண்டுபட்டு இறக்க குழந்தை தண்ணீரிலே தாண்டு இறக்கும். கொடுப்பதற்கு ஒரு துளி நீர்,ஒரு பிடி உணவு எதுவுமில்லாமல் தன்னை, தனது உதிரத்தில் ஊறும் பாலை கொடுத்து பசி தீர்க்க மார்போடு குழந்தையை அணைத்து கொஞ்சும் போதும் கொலைகாரர்களின் குண்டுகள் வெடித்து சிதறி உயிர் கொண்டு போகும். தாய் உயிர்மூச்சு தேடி தவிச்சு போய் தரையிலே விழுந்ததும் தெரியாமல் அப்போதும் அவள் ஊட்டும் பாலமுதம் பருகும் அக்குழந்தை. சிங்களம்,தமிழ் என்று வளர்ந்த மனிதர்களின் வார்த்தைகள் எதுவும் தெரியாத மழலைகளின் உயிர்குடிக்கும் குண்டுகள் கொலைமொழி மட்டும் பேசும்..
2009 வைகாசி மாதத்தில் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை எம்மக்களின் மீது நடந்தது. அடுத்த வந்த மாதங்களில் இலங்கையிலும், புலம்பெயர்தேசங்களிலும் கோயில்களில் கொடிகள் ஏறின. பட்டுவேட்டிகள், பளபளக்கும் சரிகைகளில் காஞ்சிபுரங்கள், கழுத்து நிறைய மின்னும் தங்கச்சங்கிலிகள் அணிந்த மனிதர்கள் கோவில்களில் கொலு வந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் மரணத்தில் வாழும்போது பகட்டாக பவனி வந்தவர்கள் எம்மக்களைக் கொலை செய்த மகிந்து கும்பல் அல்ல. எம்பெண்களை கசக்கி எறிந்த ராணுவத்தினர் அல்ல. எம்குழந்தைகளின் குருதி குடித்த கோத்தபாயாவின் காவல்நாய்கள் அல்ல. முகாம்களிலே உடலும்,உயிரும் தேய வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் குடும்பத்தவர்கள், சொந்தங்கள், ஊரவர்கள், தமிழ் மொழி பேசும் இலங்கைத்தமிழர்கள்.
ஏன் இந்த பைத்தியக்காரத்தனம், மனநிலை பிறழ்ந்த மனிதர்களா இவர்கள். காலங்காலமாக கண்ணீர் சிந்தி வழிபட்ட கடவுள்கள் எல்லாம் இத்தனை ஆயிரம் மனிதர்கள் இறந்த போதும் கூட ஒரு மசிரும் புடுங்கவில்லையே என்று ஒருகணம் ஏன் சிந்திக்கவில்லை. கல்லை தேரிலே வைத்து கட்டி இழுத்து கண்ட பலன் என்ன ஒரு கணப்பொழுது கூட மனக்கண் திறந்து பார்க்கவில்லை. முகாம்களிற்குள்ளே போவதிற்கு வாசலிலே காத்திருந்த வேளையிலே பசியிலே களைத்துப்போய் பலபேர் இறந்த போது மூன்றுவேளை உணவுக்கும் ஒருகுறை இல்லாத புலப்பெயர்தேசங்களிலே சைவக்கோவில்களில் அன்னதானம் என்று உணவை அநியாயம் ஆக்குகிறார்களே என்று ஆத்திரம் ஏன் வருவதில்லை இவர்களிற்கு.
தமிழகத்தில் பெரியாரும், தோழர்களும் பகுத்தறிவு இயக்கத்தை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றனர். பார்ப்பனியத்தை, இந்துசமயத்தை, சாதி என்னும் சதியை சளைக்காது எதிர்கொண்டனர். மாறாக தமிழ்க்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்ற வலதுசாரிகள் ஈழத்தில் சாதியையும், சமயத்தையும் கட்டிக்காத்தனர். புலிகள் ஒருபடி மேலே போய் கோயில் கட்டி காசு சேர்த்தனர். கீற்று இணையத்தளம் போன்ற தமிழ்நாட்டு இணைய தமிழ்தேசியவாதிகள் கோயில்கட்டி சேர்க்கின்ற காசும் விடுதலைக்கு தான் என்று அதற்கு விஞ்ஞான விளக்கம் கொடுத்தனர்.
ஒரு விடுதலை இயக்கமே மூடநம்பிக்கைகளையும், பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதர்களை பிரிக்கும் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் சமயத்திற்கு கோயில் கட்டும் போது கொடிய இந்து சமயத்தின் பிராமணக்குருமார்களை தன் மேடைகளில் ஏற்றும் போது எங்கிருந்து வரும் பகுத்தறிவு, எப்படி அழிந்து போகும் சாதி, எப்படி ஒழிந்து போகும் மூடநம்பிக்கை. இப்படி இவர்கள் முன்னே மூட்டிய திருப்பணியை இன்று வியாபாரிகள், காசுக்காக எதுவும் செய்யும் கயவர்கள் தொடர்கிறார்கள். அடிக்கிற கொள்ளையில் ஒரு பகுதியை அவர்கள் அல்லல்படும் தமிழ்மக்களிற்கும் அனுப்பி வைக்கிறார்களாம். அதைக்காட்டி இன்னும் பணம் சேர்ப்பதும், கொடைவள்ளல்கள் என்று தமக்கு தாமே சொறிந்து கொள்ளுவதும் தான் இவர்களின் நோக்கம். சாயிபாபா, சங்கராச்சாரி, பங்காரு, நித்தி என்று அத்தனை கள்ளர்களின் அடிச்சுவடு தான் இது.
அய்யப்பன், ஆஞ்சநேயர், பங்காருவின் மேல்மருத்தூர் என்று அத்தனை கடவுள்களையும், கள்ளச்சாமியார்களையும் இறக்குமதி செய்து இன்னும், இன்னும் காசு சேர்க்கும் இந்தக்கள்ளர்களின் பொய்களை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மத நம்பிக்கை உள்ளவர்கள் அந்த நம்பிக்கைக்காக பகுத்தறிவை இழப்பதும்,சாதி என்ற பெயரில் மனங்களில் வேற்றுமையை வளர்ப்பதும் சரிதானா என்பதை யோசிக்க வேண்டும். வழிபாடு என்ற பெயரில் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளும், ஆடம்பரங்களும் தேவை தானா என்று சிந்திக்க வேண்டும்.
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
- யாழ் நூல் தந்த விபுலானந்தர்-