சென்னை போலீசு துறை ஆரம்பிக்கப்பட்டு 150ஆவது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி ஜனவரி 5ஆம் நாளன்று சென்னையில் கோலாகலமான விழாவைத் தமிழக அரசு கொண்டாடியது. அரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் வந்திருந்து சிறப்பித்து, போலீசாரை ஒன்பது உறுதிமொழிகள் ஏற்க வைத்தார். சாகச நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் போலீசுக்கு பதக்கங்கள், புது
வீடுகள் என மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்தது போலீசு. இக்கொண்டாட்டங்களுக்கெல்லாம் தகுதியானதுதானா தமிழக போலீசுதுறை?
சென்னை போலீசு துறையின் வரலாறே, அன்னிய ஆட்சிக்கு எடுபிடி வேலை செய்வதில் இருந்து தொடங்குகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கிந்திய கம்பெனி, சென்னப் பட்டணக் கோட்டையின் பின்புறம் ஒரு மார்க்கெட்டை நடத்தி வந்தது. அம்மார்க்கெட்டைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட "போலீசு' எனும் அமைப்பே பின்னாளில் ஆங்கிலேய அதிகாரிகளின் தலைமையில் "சென்னை போலீசு துறை'யாகப் பரிணமித்தது. காலனி ஆட்சியாளர்களின் நலனைக் காக்கவும், விடுதலைக்காகக் குரல் எழுப்பிய சொந்த நாட்டு மக்களின் குரல்வளையை நெறிக்கவும் பாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்ட அத்துறை இன்னமும் காலனியத்தின் நீட்சியாகவே திகழ்கின்றது.
சொந்த நாட்டு மக்களைச் சந்தேக வட்டத்துக்குள்ளே வைத்திருக்கவும், அவர்களைத் தேவைப்படும்போது ஒடுக்கி வதைக்கவும் தயாரிக்கப்பட்ட இப்பாசிசப் படை, 1947க்குப் பிறகும், மாற்றம் ஏதுமின்றி ஆட்சியாளர்களால் மேலும் கொம்பு சீவி விடப்பட்டு, நம் நாட்டு மக்களின் வெறுக்கத்தக்க எதிரியாகவே இன்றும் திகழ்கிறது. ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக மக்கள் திரளும்போதெல்லாம், அரசின் உறுப்பான இராணுவத்துக்கு நிகராய் போலீசும், போராடும் மக்களை மிருகத்தனமாகச் சித்திரவதை செய்து ஒடுக்குகிறது. போலி மோதல்கள் மூலம் கம்யூனிசப் புரட்சியாளர்களையும், தேசிய இனங்களின் விடுதலைக்காகப் போராடுபவர்களையும் கொன்றொழிப்பதில் முன்னிலையில் இருக்கின்றது.
அரசு பணத்திலிருந்து இவர்களுக்குத் தீனி போடவென்றே மது விலக்குப் பிரிவு, கியூ பிரிவு, வரதட்சணைக் கொடுமைப் பிரிவு, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு, திருட்டு விசிடி பிரிவு என ஆயிரத்தெட்டு பிரிவுகளாகப் பிரித்து, நூற்றுக்கணக்கான பதவிகளை ஏற்படுத்தியும், மேலும் பலருக்குப் பதவி தருவதற்கென்றே மாவட்டங்களைப் பல துண்டுகளாகப் பிரித்தும், ஆட்சியாளர்கள் இந்த மிருகத்தை செல்லப் பிள்ளையாக வளர்த்து விடுகின்றனர்.
இவ்வாறு வளர்க்கப்பட்ட மிருகம், அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் தனது முழு அதிகாரத்தை மக்கள் மீது ஏவி வெறியாட்டம் போட்டது. ஓட்டுக் கட்சித் தலைவர்களும் இதில் இருந்து தப்ப இயலவில்லை. நெருக்கடி நிலைக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பாசிச எம்.ஜி.ஆரோ, தேவாரம் போன்ற கொலைகார போலீசு கும்பலுக்கு அளவு கடந்த அதிகாரமும், சுதந்திரமும் தந்து, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொல்வது, நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்களைக் கூட விட்டு வைக்காமல் கடத்திச் சென்று கொல்வது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நிரந்தரமாக்கினார்.
அதன் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த கருணாநிதியும், ஜெ.வும் போலீசுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கியும், அவர்கள் மேலும் சம்பாதித்துக் கொள்வதற்கு என்றே கந்துவட்டித் தடை சட்டம் போன்ற புதுப்புதுச் சட்டங்களையும் உருவாக்கித் தருகின்றனர்.
நாளடைவில், சமூக விரோதச் செயல்களைச் செய்ய, தனியாகக் கும்பல் ஒன்று இயங்கி வந்த நிலைமை மாறிப் போய், போலீசே அதன் பாத்திரத்தை ஏற்பதுதான் அதிகரித்துள்ளது. தணிக்கைக்கு உட்படாத பெருந்தொகையைக் கொண்டு பொதுமக்களிடையே ஆட்காட்டிகளை உருவாக்குவதும், இருவேறு ரவுடிகளிடையே உள்ள பகையை வளர்த்து விடுவதும், அவர்களில் ஒரு பிரிவை தனக்கும், ஆட்சியாளர்களுக்கும் பயன்படுத்திக் கொண்டு, தேவை நிறைவேறியதும் "போலி மோதல்' மூலம் ஆளைத் தீர்த்துக் கட்டுவது என்பதுமாக நவீன கிரிமினலாக தமிழகப் போலீசு சீரழிந்துள்ளது.
150ஆவது ஆண்டு விழாவின்போது அப்துல்கலாம், ""பொது மக்களின் நண்பனாக இருப்பேன்'' என உறுதிமொழி ஏற்கச் சொன்ன அதே போலீசுதான், "வீரப்பனைத் தேடுகிறோம்' என்ற பேரால் மலைவாழ் மக்களில் நூற்றுக்கணக்கானோரைச் சித்திரவதை செய்து பலரை ஊனமாக்கியது. பலரைக் கொன்று எரித்துத் தடயமே இல்லாமல் சாம்பலாக்கியது. பல பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் வக்கிரம் உச்சத்துக்குப் போய், பெற்ற தாயையும், மகனையும் அம்மணமாக்கி, அவர்களைப் பலர் முன்னால் உறவு கொள்ளச் செய்து ரசித்தது.
அந்தியூர் விஜயா, அண்ணாமலை நகர் பத்மினி என நூற்றுக்கணக்கான அபலைப் பெண்களைக் கொடூர முறையில் வன்புணர்ச்சி செய்து வக்கிர விளையாட்டு ஆடிய போலீசு துறையிடம் போய் ""பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்'' என்று உரையாற்றுகிறார் அரசவைக் கோமாளி கலாம்.
ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், கால் சென்டரில் பணிபுரியும் பெண்ணைக் கடத்திப் பாலியல் வன்முறை செய்ய முயல்வதாகவும் அவ்வோட்டுநர்களை "என்கவுண்டர்' செய்து கொன்று, பெண்ணின் கற்பைக் காப்பாற்றுவதாகச் சித்தரித்து, உழைக்கும் ஆட்டோ தொழிலாளரை இழிவுபடுத்திடும் வகையில் ""காவலர் உங்கள் சேவகர்'' என்ற சினிமாவைத் தயாரித்த போலீசுதான், சமீபகாலமாக ""கள்ளத் தொடர்பு காரணமாக, மதுரை இன்ஸ்பெக்டர் மனைவியிடம் விளக்குமாத்துப் பூசை வாங்கிய பெண் எஸ்.ஐ.', "ஜெயலட்சுமியுடன் குடும்பம் நடத்திய டஜன் கணக்கான போலீசார்'' என வணிகப் பத்திரிகைகளிலேயே தலைப்புச் செய்தியாகிப் பல்லை இளித்து நிற்கிறது.
"மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக' இருக்கவும், "லஞ்ச லாவண்யம் இல்லாமல்' செயல்படவும் போலீசிடம் வேண்டுகோள் வைத்த அப்துல்கலாமுக்கு, ஆதம்பாக்கத்தில் பொதுஜனம் ஒருவரிடம் 1000 ரூபாய் பறிக்க ஒரு போலீசு முயன்றபோது, அங்கே வந்த மற்றொரு போலீசு "என் ஏரியாவில் வந்து எப்படி வாங்கலாம்' என்று பணத்தைப் பங்கிடப் போய், நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டதும், எழும்பூர் அல்சாமாலில் நிறுவன அதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்ற போலீசு இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடமிருந்து தப்பித்துத் தெருவில் ஓடியதும் தெரிந்திருக்குமா?
கோவை நகைக்கடை ஊழியர்களிடம் தங்கக் கட்டியைக் கொள்ளையிட்ட சென்னை போலீசு, சென்னைக்கு வந்து நகைகளைக் கொள்ளையிட்ட மதுரை போலீசு, பெசண்ட்நகர் கடற்கரையில் நாலாயிரம் ரூபாயை வழிப்பறி செய்த சென்னை போலீசு, ஓடும் பேருந்தில் பெண்ணைக் கேலி செய்து பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய சென்னை போலீசு, குற்றாலத்தில் குடிபோதையுடன் வெறும் ஜட்டியுடன் குளிக்க முயன்று தகராறு செய்த நெல்லை போலீசு, பொதுமக்களின் புகார்களை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள போலீசு, வடசென்னையிலுள்ள கழிப்பறைகளை பினாமிகளை வைத்து கைப்பற்றி, ரௌடிகளைக் கொண்டு அடாவடி கட்டணக் கொள்ளையடிக்கும் போலீசு எனப் பல அவதாரங்களை எடுத்து வருகிறது தமிழ்நாடு போலீசு. இவர்களின் கேடுகெட்ட இத்தகைய செயல்களை முழுமையாகச் சொல்ல வேண்டுமானால், இதற்கென்றே தனியாக சிறப்பு மலர்தான் வெளியிட வேண்டும்.
பாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழகப் போலீசு மிருகம் 1995இல் கொடியங்குளத்தில், தலித் மக்களின் உடைமைகளைச் சூறையாடியும், குழந்தைகள், வயோதிகர்களை வன்மமாய்த் தாக்கியும், அவர்களின் குடிநீர்க் கிணற்றில் மலத்தைப் போட்டு நிரப்பியும் தனது கோரமான சாதிவெறியைக் காட்டியது. நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரை, 1999இல் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இணையாக ஆதிக்க சாதிவெறியுடன் தாக்கிக் கொன்று தாமிரபரணி ஆற்றில் வீசி எறிந்தது. குண்டுபட்டி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்தபோது அந்த ஊரையே தாக்கிச் சூறையாடியது.
கோயம்புத்தூரில் 1997 நவம்பரில் இந்து முன்னணிக் குண்டர்களுடன் கை கோர்த்துக் கொண்டு, 19 முஸ்லிம்களைக் கொன்றும், அவர்களின் உடைமைகளைக் கொளுத்தியும், தனது இந்துவெறிப் பாசிசத்தை உலகுக்குக் காட்டியது, தமிழக போலீசு. பாபர் மசூதி தகர்க்கப்பட்ட 1992ஆம் ஆண்டு தொடங்கி, முஸ்லிம்கள் பெருவாரியாய் வாழும் கோவை கோட்டைமேடு பகுதியை "அறிவிக்கப்படாத திறந்தவெளிச் சிறைக் கொட்டடி' யாக்கி தடுப்பரண்கள், சோதனைச் சாவடிகள் அமைத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தினமும் வாட்டி வதைத்து வருகிறது.
அன்னிய செலாவணி மீது கட்டுப்பாடுகள் பல விதித்து வந்த காபிபோசா, ஃபெரா போன்ற சட்டங்கள், உலகமயப் பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வண்ணம், 1990க்குப் பின்வந்த ஆட்சியாளர்களால் திருத்தப்பட்டன. சில சட்டங்கள் விட்டொழிக்கப்பட்டன. தனியார்மய, தாராளமய நோக்கங்களுக்கேற்றவாறு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டன. ஆனால் 150 ஆண்டுகளாக ஒரே மாதிரியான வேலையைச் செய்து வரும் போலீசுக்கு என்று போலீசு சட்டங்களில் எந்தவிதத் திருத்தமும் அரசுக்கு தேவையாய் இருக்கவில்லை.
அன்னியன் அஞ்சி நடுங்கிடக் கப்பல் விட்ட சிதம்பரனாரை "ராஜதுரோகி'யாகப் பார்த்த போலீசு துறைதான், இன்று அந்நிய "கோக்'கை எதிர்த்திடும் தேசபக்தர்களையும் தேசத்துரோகிகளாகப் பார்க்கிறது. "கோக்'கிற்கு எதிராகப் போராடுபவர்களை "பயங்கரவாதிகள்' என மக்களிடம் போலீசே பிரச்சாரம் செய்கிறது.
பிரிட்டிஷாரை எதிர்த்துக் கூடிய ஆயிரக்கணக்கானோரை ஜாலியன் வாலாபாக்கில் சுட்டு வீழ்த்திய பிரிட்டிஷ் இந்திய போலீசுக்கும், குர்கானில் ஜப்பான் நாட்டு ஹோண்டா நிறுவனத்தில் வேலை நிறுத்தம் செய்த தன் சொந்த நாட்டுத் தொழிலாளர்களின் மண்டையைப் பிளந்த இந்திய போலீசுக்கும் "ஏகாதிபத்திய நலன் காக்கும்' செயலில்தான் எவ்வளவு ஒற்றுமை!
நாளை, தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற ஏகாதிபத்திய நலன்காக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினால், அவர்களை அடித்து நொறுக்கத்தான், இன்றே தமிழக போலீசுக்கு 100 சொகுசு கார்களை ஹூண்டாய் நிறுவனம் "எலும்புத் துண்டாக'க் கொடுத்துள்ளது.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு, இந்திய சிப்பாய்கள் மாண்ட முதல் சுதந்திரப் போரின் 150வது ஆண்டையும் கொண்டாடுகிறது, அரசு. அதேநேரத்தில் இந்த நாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியம் தொடங்கி வைத்து இன்னமும் ஏகாதிபத்திய நலன் காத்து வரும் அடியாள் படையான போலீசுக்கும் 150வது ஆண்டையும் அதே அரசுதான் கொண்டாடுகிறது. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமைபோலும்! இதைவிட பித்தலாட்டம் எதுவும் இருக்க முடியாது; ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் புரட்சியை முன்னெடுக்காமல், ஏகாதிபத்திய நலன் காக்கும் அடியாள் படையான தமிழகப் போலீசு எனும் வக்கிர மிருகத்தைத் தாக்கி அழிக்கவும் முடியாது.
· இரணியன்