Language Selection

02_2007_pj.jpg

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்க்கை அவலமான நிலையில் இருப்பதை, சென்னை பகுதி மீனவர்களிடம் நடந்துள்ள சிறுநீரகத் திருட்டு அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. பட்டினியில் இருந்தும், கடனில் இருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவே, தங்களின் சிறுநீரகங்களை விற்று விட்டதாக மீனவப் பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

 

மேகலா என்ற மீனவப் பெண்ணுக்கு உயர் இரத்த அழுத்த நோய் இருந்ததால், அவரின் சிறுநீரகத்தை விலைக்கு வாங்கத் தனியார் மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. இதனால், அவர் தனது தலைமுடியை ரூ. 500க்கு விற்று, நிலைமையைச் சமாளித்திருக்கிறார். ""முடி வளர்ந்த பிறகு மீண்டும் விற்பேன்'' என்கிறார், அவர். மானத்தைத் தவிர, மற்ற எதையும் விற்று வாழ வேண்டிய கட்டாயத்தில் மீனவர்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.

 

சுனாமிக்குப் பிறகு, தமிழக அரசால் வட சென்னையில் உருவாக்கப்பட்ட சுனாமி நகரில்தான் சிறுநீரகக் கொள்ளை கொடி கட்டிப் பறந்து வருகிறது. எனினும், சுனாமிக்கும் சிறுநீரகக் கொள்ளைக்கும் தொடர்பில்லை என்று காட்டுவதற்காக, சிறுநீரகத்தை விற்றுள்ள 30 பெண்களுள் 4 பெண்கள்தான் சுனாமிக்குப் பிறகு சிறுநீரகத்தை விற்றிருப்பதாக, ஒரு சொத்தையான வாதத்தை தமிழக அரசு முன் வைத்துள்ளது.

 

தமிழகத்தை சுனாமி தாக்கியவுடனேயே, ஜெயா தலைமையில் இருந்த தமிழக அரசும்; தி.மு.க. அங்கம் வகிக்கும் மைய அரசும் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண உதவிகளை அறிவித்தன. இதோடு, அரசு சாரா நிறுவனங்களும் நிவாரணப் போட்டியில் குதித்தன. மேலும், மீனவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காகவும்; அவர்களின் சமூக மேம்பாட்டுக்காகவும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளிடம் கடன் வாங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, கூட்டிக் கழித்துப் பார்த்தால், மீனவர்களிடம் சிறுநீரகக் கொள்ளை நடந்திருப்பதும்; தற்காலிகக் குடியிருப்புகள் என்ற பெயரில் மாட்டுக் கொட்டகைகளைவிட கேவலமான இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும்தான் கண் முன் தெரிகிறது.

 

தமிழகத்தில் சுனாமியால் 66,400 வீடுகள் சேதமடைந்ததாக அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. சுனாமி தாக்கி இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடிந்த பிறகும் கூட, வீடு வாசலை இழந்தவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினருக்குக் கூடத் தமிழக அரசால் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க முடியவில்லை. கட்டி முடிக்கப்பட்ட தொகுப்பு குடியிருப்புகளில் கூட அடிப்படையான வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை.

 

""கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வசதியும், கழிவுநீர் வெளியேற்றும் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. புதிய குடியிருப்புகளில் பள்ளிக்கூட வசதிகள், மருத்துவ சுகாதார வசதிகள்; அக்குடியிருப்புகளை நகரத்தோடு இணைக்கும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை'' எனத் தமிழக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. (தி இந்து, 26.12.07, பக்.5)

 

சென்னை மெரீனா கடற்கரையையொட்டி வாழ்ந்து வந்த மீனவர்களை, கூலித் தொழிலாளர் குடும்பங்களை நகரில் இருந்து 2530 கி.மீ. தள்ளி துரைப்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிக ளில் குடியமர்த்தினார், ஜெயா. துரைப்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் போக்குவரத்து வசதி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொழுது, போலீசை ஏவிவிட்டு அவர்களின் மண்டையை உடைத்தார், ஜெயா. ஆட்சி மாறிய பிறகும், இந்த அவல நிலை மாறவில்லை.

 

செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்டவர்கள் நகருக்கு வர பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்றால், தங்களின் வீடுகளில் இருந்து 3 கி.மீ. தூரம் நடந்து வர வேண்டும். அடையாறு, திருவான்மியூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு அன்றாடம் கூலி வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள், காலை 9 மணிக்குள் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்காது. ""வேலைக்காக, பல நேரங்களில் பேருந்தை நம்பாமல், 50 ரூபாய் கொடுத்து ஆட்டோ பிடித்துச் செல்வதாகக் கூறுகிறார்'' ராஜாமணி என்ற தச்சுத் தொழிலாளி.

 

வடசென்னையில் சுனாமி நகரில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்கள், தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் 5 கி.மீ தள்ளியுள்ள காசிமேடு கடற்கரைக்கு, அதிகாலை 23 மணிக்குள் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் போக்குவரத்து வசதி இருக்காது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது முப்பது ரூபாய் வேண்டும். இதன் காரணமாகவே, பல மீனவர்கள் தங்களின் பரம்பரைத் தொழிலையே கைகழுவி விட்டதாகக் கூறப்படுகிறது.

 

மீனவ சமுதாயத்தில், குடும்பத்தை நடத்துவதில், ஆணின் வருமானத்தைவிட, பெண்ணின் வருமானத்திற்கு முக்கியப் பங்குண்டு. ஆண், தனது வருமானத்தைக் குடியிலும், சீட்டாட்டத்திலும் தொலைத்துவிட்டால் கூட, மீனவப் பெண்கள், அன்றாடம் சந்தைக்கு மீனை எடுத்துக் கொண்டு போய் விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப வண்டியை ஓட்டி விடுவார்கள். ஆனால், சுனாமிக்கு பிறகு மீனவக் குடும்பங்கள் கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் விசிறியெறியப்பட்டு விட்டதால், மீனவப் பெண்களின் வருமானம் நின்று போய்விட்டது. இதனால்தான், மீனவப் பெண்கள், வாங்கிய கடனை அடைக்கவோ, பட்டினியில்லாமல் குடும்பத்தை நடத்தவோ, தங்களின் சிறுநீரகங்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டனர்.

 

தென் சென்னைப் பகுதியில் புதிது, புதிதாக முளைத்துவரும் கால்சென்டர் நிறுவனங்களின் வசதிக்காக, பல கோடி ரூபாய் செலவில், பளபளப்பான அகன்ற தார்சாலைகளைப் போட்டுத் தரும் தமிழக அரசு, துரைப்பாக்கத்திலும், செம்மஞ்சேரியிலும், சுனாமி நகரிலும் குடியமர்த்தப்பட்ட மீனவர்களும், தொழிலாளர்களும் வேலைக்குப் போய் திரும்புவதற்கு ஒரு பேருந்தைக் கூட விட மறுக்கிறது. இதன் மூலம், அவர்களின் வேலை வாய்ப்பினைத் தட்டிப் பறித்துவிட்டு, இன்னொருபுறம் நிவாரணம், உதவி எனப் பேசுவதெல்லாம் மோசடித்தனமாகாதா? தமிழகத் தலைநகர மீனவர்களின் வாழ்க்கையே இவ்வளவு மோசமானதாக இருக்கும்பொழுது, பிற பகுதி மீனவர்களின் வாழ்க்கை வேறெப்படி இருந்து விட முடியும்?

 

தமிழகத்தில் நடந்துள்ள சுனாமி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்திருக்கும் இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியே, நிவாரணம் என்ற பெயரில் மோசடிகள் நடந்தியிருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 

· சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகள், பள்ளமான நீர் தேங்கும் பகுதிகளில் இருந்ததால், எவரும் அதில் குடியேறவில்லை. இதனால் பாழான தொகை இரண்டரை கோடி ரூபாய்.

 

· விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட 3,026 தற்காலிக வீடுகளில் ஒருவரும் குடியேறாததால், ஒன்றே முக்கால் கோடி ரூபாய் விரயமானது.

 

· சுனாமியால் இறந்து போனவர்களின் சடலங்களைப் புதைப்பது தொடங்கி, உணவுப் பொருட்கள் வழங்குவது வரையான ஒவ்வொரு நிவாரண நடவடிக்கையிலும் நடந்துள்ள மோசடிகள், குளறுபடிகளை அந்த அறிக்கை பட்டியல் இட்டுள்ளது.

 

சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, பிடிக்கப்படும் மீன்களின் அளவு அதிகரிக்காததால், மீனவ சமுதாயத்தின் பொருளாதார நிலைமை நசிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், படகு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட கடன் குட்டி போட்டதுதான் கண்ட பலன் என்கிறார்கள் மீனவர்கள்.

உலக வங்கி உத்தரவுப்படி மீனவர்களை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தவும்; மீனவ சமுதாயத்தில் அரசு சாரா நிறுவனங்கள் ஊடுருவி வேலை செய்யவும்; அதிகாரிகள் இலஞ்சம் ஊழல் மோசடிகளில் ஊறித் திளைக்கவும்தான் சுனாமி நிவாரணம் பயன்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை போன்ற தனியார் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள், மீனவர்களின் இந்த அவல நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சிறுநீரகத் திருட்டு வியாபாரத்தை நடத்தி வருகின்றன. அரசு, தனது அலட்சியத்தை மூடி மறைக்க, இந்தத் தனியார் மருத்துவமனைகள் மீது பாயப் போவதாக ""பாவ்லா'' காட்டுகிறது. மீனவர்களோ, தங்கள் சிறுநீரகங்களை இதைவிட நல்ல விலைக்கு வாங்க யாராவது வருவார்களா எனக் காத்துக் கிடக்கிறார்கள்!