அமெரிக்க மேலாதிக்கத் திமிரின் உச்சகட்டமாக, ஈராக்கின் "முன்னாள்' அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்ட கொடுஞ்செயலை எதிர்த்து ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த ஜனவரி 12 தேதிகளில் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
· திருச்சியில், 2.1.07 அன்று காலை 10 மணியளவில், இப்புரட்சிகர அமைப்புகளும் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனும் இணைந்து, புத்தூர் நாலுரோடு அருகே எழுச்சிமிகு முழக்கங்களுடன் உலக மேலாதிக்கப் பயங்கரவாதி புஷ்ஷின் உருவப் பொம்மையைத் தூக்கிலிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஏகாதிபத்திய கொலைக் குற்றவாளிகளான புஷ்பிளேர் கும்பல் தூக்கிலிடப்படும் வரை மானமுள்ள நாட்டுப்பற்றுள்ள எந்த மனிதனும் உறங்க முடியாது; உறங்கக்கூடாது!'' என்றும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டு அனைத்துத் துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிந்து மறுகாலனியாக்கத்துக்கு எதிராகப் போராடி, ஏகாதிபத்தியங்களை வீழ்த்த அறைகூவியும் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். ம.க.இ.க மையக் கலைக் குழுவினர் பாடிய புரட்சிகர பாடல்கள் போராட்ட உணர்வைத் தட்டியெழுப்பின. பயங்கரவாதி புஷ் உருவப் பொம்மையைத் தூக்கில் போட்டு, செருப்பால் அடித்துத் தீயிட்டு, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்று ஏகாதிபத்திய கொலைகாரர்களுக்கு எதிராக தமது வெஞ்சினத்தை வெளிப்படுத்தினர்.
· தஞ்சையில், 2.1.07 அன்று கீழவாசல் காமராசர் சிலை அருகில் ம.க.இ.க., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து கொலைகார புஷ்பிளேர் கும்பலுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. எழுச்சிமிகு முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன், ஏகாதிபத்திய உலகின் காட்டுமிராண்டித்தனத்தைச் சாடி, ஏகாதிபத்திய காலனியவாதிகளுக்கு எதிராகப் போராட அறைகூவினார். திரளான உழைக்கும் மக்களும் வணிகர்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம், அமெரிக்கப் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடச் சூளுரைப்பதாக அமைந்தது.
· இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தில், 8.1.07 அன்று மாலையில், புரடசிகர அமைப்புகள் இணைந்து தோழர் வேலு அவர்கள் தலைமையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால் இலட்சக்கணக்கான ஈராக்கியர்களைக் கொன்ற பயங்கரவாத புஷ்ஷûக்கு என்ன தண்டனை என்று கேள்வி எழுப்பியும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஐக்கியப்பட்டுப் போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். திரளான முஸ்லிம் உழைக்கும் மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கவாதிகளை வீழ்த்த அறைகூவுவதாக அமைந்தது.
பு.ஜ. செய்தியாளர்கள்