தனது குறுகிய கால (9 மாதங்கள்) இயக்க வாழ்க்கையையும், அக்கால அரசியல் சூழுலையும் நேர்மையான, பக்க சார்பற்ற சுய மீளாய்வுக்குட்படுத்திய ஆசிரியரின் முயற்ச்சி பாராட்டுக்குரியது. தான் சார்ந்த இயக்கத்தையும், ஏனைய இயக்கங்களையும் எவ்வித வேறுபாடுகளுமின்றி நடுநிலை தவறாது விமர்சிப்பது மெச்சத்கது. இப்படியான கண்ணோட்டங்களை இந்நாட்களில் வாசிக்கக் கிடைப்பது அரிது. சமகாலத்தில் வெளியாகும் போராட்டம் தொடர்பான நூல்களில் தவறுகளை நியாயப்படுத்தல் பலவவீன்னங்களை மிகைப்படுத்தல், ஒருசிலரை குறிவைத்து தாக்குதல் போன்னறவை அதிகமாகக்காணப்படும். இந்நூல் அதற்கு விதிவிலக்கு.
தனது வாலிப்பருவத்தில் தேவாலய வழிபாடுகளிலும், நிர்வாகத்திலும் முழுமூச்சசாக் செயற்பட்டுடிருந்தாலும் கூட சமூக அநீதிகளுக்கும், ஒடுக்குமுறைக்கும் இறைவன் மூலம் பதில் தேட முற்பட்டு, அதில் திருப்தியடையாத காரணத்தால் இன்றுவரை வெளியுலகிற்கு போலிவேடம் தரியாமை ஆசிரியரின் நேர்மைக்கு மேலுமோர் எடுத்துக்காட்டு.
டொலோவில் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகள் அவற்றைத் தீர்க்கத் தலைமை கையாண்ட அணுகுமுறை, எடுத்த நடவடிக்கைகள், அவை தொடர்பன தமது நிலைப்பாடு, தாம் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்கள் ஆபத்துக்கள் என்பவற்றையும் அவற்றை எவ்விதம் மன உறுதியுடனும், தைரியமாகவும் முகங்கொடுத்தார்கள் போன்றவிபரங்களை இறுதிவரை சலிப்பு தட்டதாவாறு எல்லாளன் கொண்டு சென்றுள்ளார்.
தாங்கள் ஆபத்திலிருக்கும் தருணங்களில்கூட புலிகளிலிருந்து பிரிந்து வந்தவர்களுக்கு அபயம் கொடுத்து காப்பாற்றிய சம்பவங்களை வாசிக்கும்போது இப்படியும் நடக்குமா என எம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் ஆசிரியர். ஆனால் அவர்கள் பட்டபாடுகள் அவர்கட்குத்தான் தெரியும். வார்த்தைகளால் விபரிக்கப்பட முடியாதவை ஒரு புத்தகத்துக்குள் மட்டுப்படுத்தப்பட முடியாதவை. இவர்கள் எதிர் கொண்ட பிரச்சனைகள் ஏனைய இயக்கங்களிலிருந்த முற்போக்குச் சிந்தனை கொண்ட பல போராளிகளும் சந்தித்தார்கள். TELO தலைமை கையாண்ட அதே பாணியைத்தான் ஏனைய தலைமைகளும் பயன்படுத்தி எதிர்ப்புக்களை கொடூரமாக முறியடித்தனர். இதன் விளைவுகளை எல்லாளன் மிக அழகாக பின்வருமாறு விபரிக்கிறார். "அவரது (மனோ மாஸ்டர்) உழைப்பு, செயற்திறனற்ற பிற்போன்குத் தலைமையை வளர்க்கவே பயன்பட்டது. அவ்வாறு திறமையுள்ள போராளிகள் அத்தகைய தலைமையினால் பயன்படுத்தபடுவது கொலைகார மிருக வெறியுள்ள பிற்போக்குத் தலைமைகளை வளர்ப்பதற்கே உதவியது". இக்கூற்று எவ்வளவு உண்மையானது எவ்வளவு துர்ரதிஷ்டவசமானதும் கூட.
இத்துடன் நில்லாது தங்களை மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணிலைவாதிகள் என தம்பட்டமடிப்போர்களின் முகத்திரைகளையும் ஆசிரியர் கிழிக்கத் தயங்கவில்லை. குறிப்பாக நிர்மலா நித்தியானந்தன் தவிச்ச முயல் அடிக்கப்புறப்பட்டது. பிரமச்சாரித்துவத்தை களைந்தெறிந்து விட்டு தாம்பத்திய உறவில் புகுந்து கொண்ட முன்னாள் மதகுரு அன்ரன் சின்னராசா. பெண் போராளிகளுக்கு கல்வி கற்பதற்க்கு உதவுவாதகக்கூறி சிலரை புலிகளில் இணைத்தது. தர்க்கரிதியில் மேதாவிகளாக அடையாளப்படுத்திக் கொண்ட என் எல் எவ் டி யினரின் நடைமுறை முட்டாள்த்தனம். பனாகொட மகேஸ்வரனின் கபடத்தனம் என சாதாரண மக்களுக்குத் தெரியாத பல விடயங்களை ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார்.
இறுதியில் டொலோவின் மாயை குறித்து முக்கிய விடயமொன்றையும் குறிப்பிடுகின்றார். குட்டிமணி, தங்கத்துரை போன்றோரை வெலிக்கடை சிறையிலிருந்து மீட்டெடுக்க TELO தாக்குதலொன்றை மேற்க்கொள்ள விருந்ததாகவும், அதுவரையில் வேறு எவ்வித தாக்குதலையும் நடாத்த வேண்டாமென ஏனைய இயக்கங்களிடம் தாங்கள் கோரியிருந்ததாகவும். ஆனால் புலிகள் வேண்டுமென்றே திருநெல்வேலியில் கண்ணிவெடி தாக்குதலை நடாத்தி தங்களது திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டதாகவும், டெலோ ஓர் வதந்தியை மக்கள் நம்பும்படியாக பரப்பியிருந்தது. ஆனால் 1983 இல் டொலோவிடம் அப்படியானதொரு தாக்குதல் கொழும்பில் நடாத்த போதியளவு ஆயுதங்களோ ஆளணிகளோ இருக்கவில்லை. ( சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தாக்குதல் முறிகண்டி இரயில் தாக்குதல் என்பவை 84, 85 இல் தான் நடாத்தப்பட்டன) என்ற அவரது கணிப்பு மிகச்சரியானதே.
மனோ மாஸ்டரின் கொலையைக் கண்டித்து வடமராட்ச்சி மக்கள் நாடாத்திய ஆர்ப்பாட்ட எதிர்ப்பு ஊர்வல புகைப்படம் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.
சமகால போராட்ட வரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசித்து விளங்கிக்கொள்ள வேண்டிய ஆவணம் எல்லாளனின் "ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்பு"
- Terrence Anthonipillai