நாயோடு படுத்தவன் உண்ணியோடுதானே எழுந்திருக்க முடியும்? தரகுப் பெருமுதலாளிகளோடும் அந்நிய ஏகபோக நிறுவனங்களோடும் கூடிக் குலாவினால் இரத்தக் கறையோடுதானே தரிசனம் தரமுடியும்? ஆம்! கொலைகாரர்களாகக் காட்சி தருகிறார்கள், மே.வங்கத்தை ஆளும் "மார்க்சிஸ்டு'கள். உழைக்கும் மக்களின் அரசு என்று மார்தட்டிக் கொண்ட மே.வங்க "இடதுசாரி' அரசு இன்று இரத்தக் கவிச்சி வீசும் கொலைகார அரசாக நாடெங்கும் நாறுகிறது.
சிங்கூரைத் தொடர்ந்து இப்போது நந்திகிராமத்தில் அடக்குமுறை கொலைவெறியாட்டம். விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஏகாதிபத்திய சேவைக்குப் பெயர் "தொழில் வளர்ச்சி'! அதை மூடிமறைக்க கோயபல்சையும் விஞ்சும் அண்டப்புளுகுகள்; தகிடுதத்தங்கள். பிணங்களின் மீதேறி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதில் புதுவேகம்; புதுமோகம்.
ஒருவரல்ல, இருவரல்ல; ஆறு பேர் கொலை. 15 முறை போலீசு துப்பாக்கிச் சூடு; தடியடி, கண்ணீர் புகை வீச்சு, 144 தடையுத்தரவு. ஆளும் வர்க்கக் கட்சிகளையே விஞ்சும் வண்ணம் "மார்க்சிஸ்ட்' கட்சி குண்டர்களின் வெறியாட்டம். வர்க்க விரோதிகள், மக்கள் விரோதிகள் என்று உழைக்கும் மக்களாலேயே குற்றம் சாட்டப்பட்டு காறி உமிழப்படுகிறது, மே.வங்க "இடதுசாரி' ஆட்சி. இதுதான் போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கம்.
ஏற்கெனவே சிங்கூரில் டாடாவின் கார் தொழிற்சாலைக்காக 997.1 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, போராடிய விவசாயிகளை ஒடுக்கி, சமூக பாசிஸ்டுகளாகிக் கொக்கரித்த "மார்க்சிஸ்டுகள்'. இப்போது அதேவழியில் ஹால்டியா வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவ மூர்க்கமாக இறங்கியுள்ளனர். சிங்கூரில் போராடிய மக்களையும் எதிர்த்தரப்பினரையும் ஒடுக்கியது போலவே, மிருகத்தனமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டால் எதிர்ப்புகளை முறியடித்து விடலாம் என்பதுதான் "மார்க்சிஸ்டுகள்' வகுத்துக் கொண்ட உத்தி. ஆனால் இந்த துரோகத்தனம் வெகுவிரைவிலேயே அம்பலப்பட்டு, மறுகாலனியாக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகள் எடுத்துள்ள புதிய கைக்கூலி அவதாரம் நாடெங்கும் சந்தி சிரிக்கிறது.
மே.வங்கத்தின் ஹால்டியா வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி மாநிலத்தைத் தொழில்மயமாக்கப் போவதாக "இடதுசாரி' அரசு அறிவித்துள்ளது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலம் 14,500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இதில் 10,000 ஏக்கர் நிலம் இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்கும் 4,500 ஏக்கர் நிலம் ருயா குழுமத்துக்கும் தாரை வார்க்கப்படும். இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களைப் பறிகொடுக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம்.
விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகக் கடந்த நான்கு மாதங்களாக, இப்பகுதியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு விவசாயிகளை அணிதிரட்டி வந்தார்கள். இதுதவிர, எதிர்த்தரப்பு ஓட்டுக் கட்சிகளும், ஜாமியத் உலேமாஐஹிந்த் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பும், தன்னார்வக் குழுக்களும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தன.
இப்பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 8 முதல் ரூ. 10 லட்சம் வரை வழங்கப்பட உள்ளதாக சி.பி.எம். கட்சியினரே வதந்திகளைப் பரப்பி வந்தனர். இத்தொகுதியின் "மார்க்சிஸ்ட்' எம்.பி.யான லக்ஷ்மண் சேத், ஏக்கருக்கு ரூ. 4.3 லட்சம் வரை கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், நந்தி கிராமத்தில் பகுதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் நந்திகிராம வட்டார வளர்ச்சி அதிகாரி (ஆஈO) அலுவலகத்துக்கு ஜனவரி 2ஆம் நாளன்று, இப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதற்கு நிலங்களைக் கையகப்படுத்த விரைவில் செயல்படுமாறு ஓர் அறிவிப்பை அறிக்கையாக அனுப்பியது. இது, நந்திகிராம வட்டார வளர்ச்சி அதிகாரியின் அலுவலக தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டது. இதைக் கண்டதும் நந்திகிராம மக்கள் கொதிப்படைந்தனர்.
மறுநாளில் நந்திகிராமத்தை அடுத்துள்ள கர்சக்ரபேரியா கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகள் கூட்டம் நடப்பதைக் கண்ட மக்கள், விளைநிலங்களைக் கையகப்படுத்தவே இக்கூட்டம் நடப்பதாகச் சந்தேகித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு முழக்கமிட்டு போராடினர். அவர்கள் மீது தடியடி நடத்தி வெறியாட்டம் போட்டது மே.வங்க போலீசு. ஆத்திரமடைந்த மக்கள் அப்பஞ்சாயத்து அலுவலகத்தை அடித்து நொறுக்கி, இரண்டு போலீசு வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
அடுத்தநாளான ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து நந்திகிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதோடு, கிராமத்தைச் சுற்றி தடுப்பரண்களை எழுப்பிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சி.பி.எம். கட்சித் துரோகிகளின் வீடுகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த கிராம மக்கள், இப்பகுதியிலுள்ள இரண்டு சி.பி.எம். கட்சிக் கிளை அலுவலகங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
சோனாசுரா கிராமத்தில், ""நந்திகிராம நிலப்பாதுகாப்புக் கமிட்டி'' எனும் கூட்டமைப்பின் முன்னணியாளர்கள் கூடி போராட்டத்துக்குத் திட்டமிடுவதை அறிந்த சி.பி.எம். குண்டர்கள், அக்கிராமத்தை அடுத்துள்ள தெகாலி கிராமத்தில் இரகசியமாக அணிதிரண்டனர். ஜனவரி 6ஆம் தேதியன்று அதிகாலையில் சோனாசுரா கிராமத்துக்கு 250 பேருக்கும் மேலாகத் திரண்டு வந்த சி.பி.எம். குண்டர்கள். அக்கிராம விவசாயிகளது வீடுகளின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் நாளன்று எதிர்க்கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தின்போதும் போலீசு தடியடி நடத்தியதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்குமுறை வெறியாட்டம் போட்டது.
இத்தனைக்கும் பிறகு, முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைத்த கதையாக, வீண் வதந்தியைப் பரப்பி திரிணாமுல் காங்கிரசாரும் நக்சல்பாரிகளும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதாகவும், கொல்லப்பட்டவர்கள் சி.பி.எம். ஆதரவாளர்கள் என்றும் கூசாமல் புளுகுகிறார் மே.வங்க சி.பி.எம். முதல்வர்.
ஆனால், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராடிய விவசாயிகள் என்று நந்திகிராம மக்கள் சாட்சியம ளிக்கின்றனர். அக்கட்சியின் எம்.பி.யாகிய லக்ஷ்மண் சேத், நந்திகிராமத்தில் நிலம் கையகப்படுத்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று கோயபல்சையே விஞ்சும் வகையில் அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டார். சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான எச்சூரியும், கட்சியின் அதிகாரபூர்வ நாளேடுகளும் இதுதான் உண்மை என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தன.
ஆனால், இது அண்டப்புளுகை விஞ்சும் ஆகாசப்புளுகு என்பதை மே.வங்க நாளேடுகள், லக்ஷ்மண் சேத் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையையும், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் படத்தோடு செய்தியாக வெளியிட்டு நாறடித்தன. அதன் பிறகே மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதை உடனே ரத்து செய்யுமாறு ஆணையிட்டுள்ளதாகவும் இப்போது பசப்புகிறார். முழுமையான விவரங்களை வெளியிட்டு விவசாயிகளின் ஒப்புதலோடு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் உபதேசம் செய்கிறார்.
விவசாயிகளின் ஒப்புதலோடு நிலம் கையகப்படுத்தப்படுமா, ஒப்புதல் இல்லாமல் செய்யப்படுமா என்பதல்ல பிரச்சினை. சிறப்புப் பொருளாதார மண்டலம் எனும் மறுகாலனியாக்கச் சூறையாடலை சி.பி.எம். கட்சி ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்பதுதான் மையமான கேள்வி.
நேற்றுவரை சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பதாகவும், பின்னர் மனிதமுகம் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவப் போவதாகவும் நாடகமாடிய சி.பி.எம். இப்போது, இதர ஓட்டுக் கட்சிகளை எல்லாம் விஞ்சும் வகையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதில் வெறியாக இருக்கிறது. நேற்றுவரை உழைக்கும் மக்களின் அரசாகச் சித்தரிக்கப்பட்ட மே.வங்க "இடதுசாரி' அரசு. இன்று மே.வங்க உழைக்கும் மக்களாலேயே காறி உமிழப்படுகிறது. பிரபல நாவலாசிரியரான மகாஸ்வேதா தேவி, ""இது பாசிஸ்டு அரசு'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார், மேதாபட்கர். அருந்ததிராய், நீதிபதி சச்சார் என அறிவுத்துறையினரின் கண்டனத்துக்கு ஆளாகி மே.வங்க போலி கம்யூனிஸ்டு அரசு தனிமைப்பட்டுப் போயுள்ளது.
தரகுப் பெருமுதலாளி டாடா கார் தொழிற்சாலை நிறுவுவதற்காக, சிங்கூரில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, போராடிய மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய மே.வங்க இடதுசாரி அரசு, போராட்டங்கள் வலுக்கத் தொடங்கி மம்தா பானர்ஜி தொடர் உண்ணாவிரதம் இருந்தபோது, சிங்கூர் விவகாரம் பற்றி அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி இணக்கமாக முடிவை எட்ட விழைவதாக அறிவித்தது. ஆனால், அந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு டாடா கார் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்டது. இதற்கெதிரான மீண்டும் போராடிய மக்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இவையெல்லாம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைச் சீர்குலைக்கும் செயல் என்று குற்றம் சாட்டும் சி.பி.எம். கட்சியினர், தமது கட்சி ஊழியர்களை வைத்து எதிர்போராட்டம் ஊர்வலம் என்று மூர்க்கமாக இறங்கிவிட்டனர்.
மறுகாலனியாக்கத்தின் கீழ், புரட்சி சவடால் அடித்துக் கொண்ட சந்தர்ப்பவாதிகளாகவும் துரோகிகளாகவும் வலம் வந்து கொண்டிருந்த போலி கம்யூனிஸ்டுகள், இப்போது மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்யும் எதிரிகளாக புதிய பரிணாமத்தை எட்டியுள்ளார்கள். இதுவரை போட்டு வந்த போலி முற்போக்கு போலி கம்யூனிச முகமூடிகள் அனைத்தையும் கழற்றி எறிந்துவிட்டு, ஏகாதிபத்தியங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிக்கும் தொண்டூழியம் செய்வதில் இதர ஓட்டுக் கட்சிகள் அனைத்தையும் விஞ்சி விட்டார்கள் என்பதை சிங்கூர் நந்திகிராம விவகாரங்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன.
நாற்பதாண்டுகளுக்கு முன்பு மே.வங்கத்தில் கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி பேரெழுச்சியானது போலி கம்யூனிஸ்டுகளின் துரோகத்தைத் திரைகிழித்துக் காட்டியது. இன்று அதே மே.வங்கத்தில் தொடரும் சிங்கூர் நந்தி கிராம மக்களின் போராட்டங்கள், போலி கம்யூனிஸ்டுகளை உழைக்கும் மக்களின் எதிரிகளாக அடையாளம் காட்டிவிட்டது. போலி கம்யூனிஸ்டு கட்சிகளிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகள் உடனடியாகக் கலகத்தில் இறங்கி, சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட துரோகத் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும். அதன்மூலம் மார்க்சிய லெனினியத்தைப் பற்றிப் பாதுகாத்து, மறுகாலனியாக்கத்தை வீழ்த்தும் மகத்தான புரட்சிக்குத் தோள் கொடுக்க முன் வரவேண்டும்.
· பாலன்