தப்பித் தவறி தமிழ்ப்படங்கள் பார்க்க நேரும் நேரங்களில், கதாநாயகர்கள் ஒரு பனை உயரத்திற்கு எழும்பிப் பாய்ந்து வில்லனின் மண்டையை உடைக்கும் காட்சிகளை பார்க்க வேண்டிய கொடுமையிலிருந்து தப்பிக்க முடியாது. தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்ப்பட முட்டாள்தனங்களிற்கு கொஞ்சமும் குறையாமல் தமது மக்கள் விரோத பிழைப்பு அரசியலை, பொய்யான வாக்குறுதிகளை, கண்டுபிடிப்புகளை, விஞ்ஞான விளக்கங்களை அள்ளி வீசுகிறார்கள்.
தமிழ் மக்களைக் கொன்ற இலங்கையரசின் கண்ணிலே அன்பை வர வைத்து அவர் தம் கல்நெஞ்சில் இருந்து தமிழ்மக்களிற்கு நீதியும், தீர்வும் பெற்றுத் தருவோம்; கொன்ற நாட்கள் மறைந்து விட்டன; இன்று அவர்கள் (இலங்கை அரசுகள்) ரொம்ப நல்லவர்கள் என்று தமிழ்க் கூட்டமைப்பு தமது வழக்கமான பொய்யரசியலை தொடர்வது இலங்கை உதாரணம். "மதுக்கடைகளை மூடு" என்று போராடும் மக்களை சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று கொஞ்சம் கூடத் தயங்காமல் அடித்து வன்முறை செய்யும் தமிழ்நாட்டு பிசாசு "தேர்தலில் வென்று வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவேன்" என்று கொஞ்சமும் கூசாமல் பொய் சொல்வது தமிழகத்து உதாரணம்.
"இலங்கைத் தமிழர்களை சிங்களவர்கள் கொல்லவில்லை; திசாநாயக்கா, சேனநாயக்கா, பண்டாரநாயக்கா போன்ற சிங்களவர்களாக மாறிய வந்தேறி வடுக நாயக்கர்கள் தான் கொன்றார்கள்" என்று அண்ணன் சீமான் அண்மையில் கண்டுபிடித்தது இப்படியான முட்டாள்தனம் போல வெளிப்பார்வைக்கு தோன்றலாம். ஆனால் இந்த உளறல்களிற்குப் பின்னால் இனவாதம் என்ற விசம் இருக்கிறது. மக்களை இனம், மொழி, மதம், சாதி பேசி பிரிக்கும் நரித்தனம் இருக்கிறது. மக்களின் பிரச்சனைகளிற்காக எழும் போராட்டங்களை வெறியூட்டும் இனவாத பிரச்சாரங்களினால் மழுங்கடிக்க வைக்க வேண்டும் என்ற அரசியல் இருக்கிறது.
இந்தியாவில் முதலாளித்துவக் கொள்ளையர்களிற்கு எதிராகவும், அவர்களின் கூலிகளான இந்திய அரச அதிகாரத்திற்கு எதிராகவும் புரட்சிகர அமைப்புக்கள் போராடுகின்றன. அப்போராட்டங்களை திசை திருப்ப இந்திய அளவில் இந்து மதவெறி தூண்டப்படுகிறது. தமிழ்நாட்டில் இடதுசாரி, பகுத்தறிவு இயக்கங்கள் தீவிரமாக இந்துத்துவத்தை எதிர்த்து போராடுவதால் பாரதிய ஜனதாக் கட்சி என்ற பயங்கரவாதிகளின் கட்சி வேர் ஊன்ற முடியவில்லை. பெரியாரினதும், அவர் தம் பகுத்தறிவு இயக்கத்தவரினதும் வீச்சை முறியடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் இனவெறி திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகிறது. சாதி மறுப்பிற்காக தன் வாழ்நாள் முழுதும் போராடிய பெரியாரின் கொள்கைகளை எதிர்ப்பதற்காகவே பெரியார் பிறந்த நாயக்கர் சமுதாயத்தை எதிர்க்கிறார்கள். அதற்காகவே தமிழ்நாட்டின் எல்லாப் பிரச்சனைகளிற்கும் "வந்தேறி வடுகர்கள்" தான் காரணம் என்ற வடிகட்டிய பொய்யை வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பிரச்சனைகளிற்கு ஊழலில் ஊறிப்போன கேவலமான அரசியல்வாதிகள் காரணம் இல்லை. தமிழ்நாட்டின் மக்களைச் சுரண்டும் முதலாளிகள் காரணம் இல்லை. காட்டையும், மலையையும், கடலையும் அழித்து தமிழ்மண்ணை பாலை நிலமாக்கும் கொள்ளையர்கள் காரணம் இல்லை. கோடிகோடியாய் கொள்ளை அடிப்பவனும், கட்டைப்பஞ்சாயத்து செய்பவனும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவனும் மக்களின் பிரதிநிதிகள் என்று தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு சட்டசபையிலே ஊளையிடுவது காரணம் இல்லை. தமிழ்நாட்டிலே இருந்து கொண்டு, தமிழ் மொழியிலே பேசிக் கொண்டு தமிழ்மக்களை அடிமைகள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் கேவலப்படுத்தும் பார்ப்பனிய பயங்கரவாதிகள் காரணம் இல்லை என்பது தான் அண்ணன் சீமானினதும் அவர் தம் "நாம் தமிழர்" கூட்டத்தினதும் கண்டுபிடிப்புகள்..
தமிழ்நாட்டின் லூசுத்தனமான தமிழ்ப்படங்களைப் போலவே, அசட்டுத்தனமான தொலைக்காட்சிகள் போலவே தமது நாடகங்களை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலங்கை தமிழர்களின் பாமர, வணிக தொலைக்காட்சிகள் கொப்பி பண்ணி கலையென்று கொல்வார்கள். இலங்கைத் தமிழ்மக்களின் அடுத்த தேசியத் தலைவராக சீமானைக் காணும் இலங்கையை சேர்ந்த அறிவாளிகள் சிலரும் என்னவென்று தெரியாமலே, வடுகர்கள் என்பவர்கள் யாரென்று தெரியாமலே இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளிற்கும் வடுகர்கள் என்று சொல்லப்படுபவர்களிற்கும் மயிரளவிற்கு கூடத் தொடர்பு இருக்கிறதா என்று கூடத் தெரியாமலே "நாம் தமிழர்" இனவெறியர்கள் போல "வடுக வந்தேறிகளை" திட்டித் தீர்ப்பதை காண்கிறோம்.
நரேந்திர சிங்க என்ற கண்டிய அரசன் குழந்தையில்லாமல் இறந்து போகிறான். மதுரை நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்த அவனின் மனைவி தனது சகோதரனை விஜயராஜ சிங்க என்று பெயரில் 1739 ஆம் ஆண்டில் கண்டி அரசின் மன்னனாக ஆக்குகிறாள். அவனில் தொடங்கும் நாயக்கர் அரச பரம்பரை 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றிய போது மன்னனாக இருந்த விக்கிரம ராஜசிங்கன் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்து போவதுடன் முடிவுக்கு வருகிறது. கண்டியை ஆண்ட நாயக்கர்களிற்கும் சிங்கள சமுதாயத்தை சேர்ந்த "நாயக" என்று அழைக்கப்படுபவர்களிற்கும் எந்த விதமான தொடர்புமில்லை.
இலங்கையில் சாதிப்பெயரை பெயருக்கு பின்னால் வைக்கும் வழக்கம் தமிழ் மக்களிடமும், சிங்கள மக்களிடமும் பொதுவாக இல்லை. ஒரு சில குடும்பங்களைத் தவிர ஒரே பெயரை குடும்ப பெயராக (surname) தொடரும் வழக்கம் தமிழ் மக்களிடம் இலங்கையில் இன்றளவும் இல்லை. போர்த்துக்கீசரின் வருகைக்குப் பின்னரே குடும்பப் பெயர் (surname) வைக்கும் வழக்கம் சிங்கள மக்களிடம் வந்தது. கொற்றவை சிறுவன், பழையோள் குழவி என்று தாய்த்தெய்வத்தின் மகனான முருகனை ஆரியப்பிராமணர்கள் சிவனின் மகனாக்கி சுப்பிரமணியன், கார்த்திக்கேயன் என்னும் அவர்களின் தெய்வமும் முருகனும் டபுள் அக்டிங் போட்ட ஒரே ஆள் தான் என்று காதிலே பூச்சுற்றியது போல தலைவன் என்று சிங்களம் உட்பட பலமொழிகளில் பொருள்படும் நாயக (தமிழில் நாயகன்) என்ற பெயரும் நாயக்கர்களும் ஒரே ஆட்கள் தான் என்று அண்ணன் அடித்து விட்டிருக்கிறார்.
சிங்கள கடல் தொழிலாளர்களான "கராவ" சமுதாயத்தின் ஒரு பிரிவினர் வடுகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சமரக்கோன், விஜயக்கோன் என்னும் பெயர்களை (கோன் - மன்னன்) அவர்கள் பெரும்பாலும் வைத்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ் கடல் தொழிலாளர்களிடமும் சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களை வடுகர்கள் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. பிரபாகரனும் கடல் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரும் வடுகர் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கக் கூடும், எனவே அடுத்தமுறை அண்ணன் சீமான் வந்தேறி வடுகர்கள் என்று கூவும் போது யோசித்து கூவுதல் அவருக்கு நல்லது. இல்லையென்றால் தன் தலைவர் என்று சொல்பவரையே வந்தேறி என்று சேம்சைட் கோல் போட்டு விடப் போகிறார்.
சேனநாயக்கா, பண்டாரநாயக்கா எல்லாம் நாயக்கர்கள் தான் என்னும் அண்ணனின் ஆராய்ச்சியின் படி தமிழ்க் காங்கிரசில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் தலைவராக இருந்து "தந்தை" என்று தன் ஆதரவாளர்களினால் அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை செல்வநாயகமும் நாயக்கர் ஆகிறார். ஈழத்தந்தையையே வந்தேறி ஆக்கிய ஒரே ஈழ ஆதரவாளர் உலகத்திலேயே சீமானாகத் தான் இருக்க முடியும்.
தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை அய்யர்களைக் கொண்டு பூசை வைத்து ஆசி பெற்ற சீமான் என்ற சந்தர்ப்பவாதிக்கு சாதி, மதம் என்ற பித்தலாட்டங்களை காலால் உதைத்த பெரியார் எதிரியாவதில் வியப்பு ஒன்றுமில்லை. மக்களின் எரியும் பிரச்சனைகளை மறைக்க இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக சிங்கள இனவாதத்தை தூண்டி விடுவதைப் போல சீமான் தமிழ்நாட்டில் வந்தேறி வடுகர்கள் என்று இனவாதம் பேசுகிறார். அதற்காக இனவாதிகளிற்கே உரித்தான பொய்களும், முட்டாள்தனங்களும் கலந்து "இலங்கையில் நாயக்கர்கள் தான் தமிழ்மக்களைக் கொன்றார்கள்" என்று உளறுகிறார். அப்படி என்றால் மகிந்த ராஜபக்ச என்ற கொலைகாரனும், அவனது கும்பலும் இனப்படுகொலையாளிகள் இல்லையா? இவரை இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று சில ஈழத்தமிழர்கள் சொல்வதை என்னவென்று சொல்ல?.