Language Selection

mars_2007.jpg

சென்னைக்கு ஆந்திரமாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் கால்வாயைப் பலப்படுத்த 200 கோடி ரூபாயை வழங்கிய மர்மச் சாமியார் சாய்பாபாவுக்குப் பாராட்டு விழா சென்னையில் இவ்வாண்டு ஜனவரியில் நடந்துள்ளது. இதை முன்னிட்டு சென்னை வந்த சாய்பாபா கோபாலபுரம் சென்று "பகுத்தறிவு'ப் பாரம்பரியத்தில் வந்த கருணாநிதியைச் சந்தித்தார்.

 

அங்கே, பகுத்தறிவு திராவிடத்துக்குத் திவசம் நடத்திவிட்ட கருணாநிதியின் முன்பாகவே, அவரின் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் வரவேற்றுள்ளார்.

 

சாய்பாபா தனது ஆன்மீக சக்தியால் தங்களுக்கு மோதிரம் வரவழைத்துத் தந்தார் என்று துரைமுருகனும், தயாநிதி மாறனும் சாய்பாபாவைப் பாராட்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் கூறியுள்ளனர். அந்த மோதிரத் தங்கத்துக்கு வரி கட்டப்பட்டுள்ளதா? இல்லை கடத்தல் தங்கமா என்று தெரியவில்லை.

 

தனது அமைச்சர் ஒருவர் தீக்குழி இறங்கியபோது, அதனைக் காட்டுமிராண்டித்தனம் எனச் சரியாக விமர்சித்த கருணாநிதி, இப்போதோ மவுனம் சாதிக்கிறார்.

 

""பகுத்தறிவு என்பதே மோசடிதான்'' என்றும், ""பகுத்தறிவால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காரணம் ஜாதகம், ராசி, விதி என எல்லாமே உண்டு'' என்று சொல்கிறார், பெண்ணடிமைத்தனத்தையும் பார்ப்பனீயத்தையும் தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் ""சோ'' ராமசாமி என்கிற உலக மகா அறிவாளி!

 

தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்த மூடத்தனத்தையோ, துரைமுருகன், தயாநிதி மாறனின் "ஆன்மீக அற்புத' உளறல்களையோ கருணாநிதி கண்டிக்காமல் இருந்தது அவரின் கொள்கை சமரசத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் ""சோ'' போன்ற காட்டுமிராண்டிகளும், பகுத்தறிவு என்பதை மோசடி எனச் சொல்லி முற்போக்காளர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்ய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

 

உண்மையிலே கருணாநிதி நேர்மையான பகுத்தறிவாளர்தானா? பெரியாரின் இயக்கமும், தாங்களும் இரட்டைகுழல் துப்பாக்கிகள் என்று சொல்லிக் கொண்டே "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்று கொள்கைக் கோவணத்தைக் காற்றில் பறக்கவிட்டவர்கள்தான் கருணாநிதியும், அவரின் வழிகாட்டி அண்ணாதுரையும்.

 

"பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டோம்' என்று வெட்கமின்றிப் பேசிய பாரம்பரியத்தை சேர்ந்த கருணாநிதியோ, தனது மணிவிழாவில் அன்பழகன் முன்னிலையில் தனது துணைவியார் ராஜாத்திக்கு தாலியை இரண்டாம் முறையாகக் கட்டி, ஆயுளைக் கூட்டும் மூடநம்பிக்கை சடங்கை செய்தவர்தான்.

 

மனைவியார் தயாளு சாயிபாபாவின் காலில் விழுகிறார் என்றால், துணைவியார் ராஜாத்தியோ மயிலை முண்டகக்கன்னி அம்மன் கோவிலில் அதிகாலைப் பனியில் உருகி நிற்கிறார்.

 

""குங்குமம்'' என்று "மங்களகரமான' பெயரை தன் குடும்பம் நடத்தும் பத்திரிகைக்கு வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் பத்திரிகை அலுவலகத்தில் ஆயுதபூசை நடத்துவதும், மூடத்தனங்களை பிரச்சாரம் செய்யும் ஆபாச தொலைக்காட்சித் தொடர்களை தன் குடும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதும்தான் கருணாநிதியின் குடும்பம் செய்யும் பகுத்தறிவுப்பணி!

 

பராசக்தி போன்ற திரைப்படங்கள் மூலம் போலிச் சாமியார்களின் முகத்திரையை அன்று கிழித்தெறிந்த கருணாநிதி, இன்று மாடிவீட்டு ஏழையாகி தென்னகமெங்கும் வியாபார சாம்ராஜ்யம் கட்டி, மத்தியிலும், மாநிலத்திலும் பதவி ருசியை அனுபவிக்கும்போது அதே போலிச் சாமியார்களை ""ஆண்டவனுக்கே ஒப்பானவர்கள்'' என்றும் புகழ ஆரம்பித்துள்ளார்.

 

பகுத்தறிவாளர்கள் பலரும் கருணாநிதியின் இச்செயலைக் கண்டிக்கத் தொடங்கியதும் மெல்ல முடியாமலும், விழுங்க முடியாமலும் கருணாநிதி தவித்தபோது, சங்கராச்சாரிக்கு வரவேற்புக் கொடுத்து மார்க்சியத்தை அடகு வைத்த போலி கம்யூனிஸ்டுகளின் ""தீக்கதிர்'' நாளேடு அவரின் செயலை நியாயப்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டது. வேலிக்கு ஓணான் சாட்சி. கருணாநிதிக்கு சி.பி.எம். சாட்சி. போலிகளின் சித்தாந்த குருவாகிய இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, தனது மனைவியுடன் கோவிலுக்குப் போன முற்போக்கு ஜனநாயகத்தை உதாரணம் காட்டி, கருணாநிதி தன் குடும்பத்துடன் ஜனநாயக உறவு வைத்திருப்பதாய்க் கண்டுபிடித்துக் கட்டுரை தீட்டியுள்ளது, அந்நாளேடு. இப்படியெல்லாம் ""தீக்கதிர்'' தனது "பகுத்தறிவை'ப் பறைசாற்றி அரசியல் உணர்வூட்டி வருவதால்தான், சி.பி.எம்.மின் தொண்டர்கள் கொத்துக் கொத்தாய் "மாபெரும் புரட்சிக் கலைஞரின்' கட்சியான தே.மு.தி.க.வில் போய்ச் சேருகின்றனர்.

 

ஜால்ராவை ஓங்கி ஒலிக்கும் கி.வீரமணியின் ""விடுதலை''யும் ""சாய்பாபா கருணாநிதி வீடு தேடி வந்தது பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி'' எனப் பெரியாரின் பகுத்தறிவையும் பலி கொடுத்தது. உடனே கருணாநிதிக்கு தெம்பு வந்துவிட்டது. ""மரியாதையின் பேரில் பெரியவர்கள் காலில் விழுவது தவறில்லை. என் மனைவி சாய்பாபாவின் காலில் விழுந்ததும் அவ்வாறே'' என்று இந்த மானங்கெட்ட செயலை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். "இனமானப் பேராசிரியர்' கருணாநிதியை விட வயதில் மூத்தவர்தானே! பேராசிரியரின் பிறந்தநாளில் என்றைக்காவது கருணாநிதியோ அல்லது அவரின் குடும்பமோ காலில் விழுந்து வணங்கியது உண்டா என்று கேட்டால், இந்தப் போலி பகுத்தறிவுவாதியிடம் பதில் இருக்காது.

 

கருணாநிதியின் குடும்பத்தினராலும் துரைமுருகனாலும் நற்சான்றிதழ் வழங்கப்படும் சாய்பாபாவின் யோக்கியதைதான் என்ன?

 

தந்திரங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டு, வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, வெறும் கைகளில் இருந்து மோதிரம், விபூதி வரவழைப்பது போன்றவற்றைச் செய்து, இவற்றை எல்லாம் ஆன்மீக சக்தி என்று மோசடி செய்யும் கோடீசுவர கருப்புப் பணப் பேர்வழிதான் சாய்பாபா. பகுத்தறிவுச் சிந்தனையாளரான டாக்டர் கோவூர் இந்த விளையாட்டுகளை எல்லாம் சாய்பாபா முன்னிலையில் தன்னாலும் செய்து காட்ட முடியும் என்று சவால் விட்டு பாபாவை பொதுமேடைக்கு வருமாறு சவால் விட்டு பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மோசடி பாபா, இந்தச் சவாலுக்கு இன்று வரை முகம் கொடுத்ததில்லை.

 

பாபா, மோதிரங்கள் போன்றவற்றை எவ்வாறு வரவழைக்கிறார் என்பதை ""ரீவைண்டு'' செய்து பார்த்த அவரின் வீடியோ படங்கள் தெளிவுபடுத்தி விட்டன. மக்கள் பாடகரான கத்தார் கூட ""சிவலிங்கம் வரவழைக்கும் பாபா! திண்ண, பூசணிக்காய் வரவச்சு தாதா!'' என்று தனது பாடலில் கேட்கிறார். பி.பி.சி. ஒளிபரப்பின் தமிழாக்க குறுந்தகட்டின் மூலம் மேட்டூர் அணையைச் சேர்ந்த பெரியார் படிப்பகத்தினர் பாபாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி வருகின்றனர்.

 

இந்த மோசடி மன்னனுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பலர் சீடர்களாகி அன்னாரின் ஆசிரமத்தில் வந்து தங்கி இருந்தார்கள். அப்படிப்பட்ட சீடர்களில் ஒருவர் பாபாவின் ஓரினப்புணர்ச்சி அசிங்கங்களை பி.பி.சி. தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

 

அவரின் மர்ம ரகசியங்களை அம்பலப்படுத்த முயன்ற ஆறு மாணவர்களை பாபாவின் ஆசிரமத்தில் 1993ஆம் ஆண்டு சுட்டுக் கொன்று விட்டு "பாபாவைக் கொல்ல முயன்ற அறுவர் சுட்டுக் கொலை' என்று அக்கொலைகளை மூடி மறைத்தனர்.

 

கிரிமினல் பின்னணி, மோசடித்தனம், ஓரினப்புணர்ச்சி எனும் கழிசடைத்தனம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையான சாய்பாபாவை ஏன் கருணாநிதி, பகுத்தறிவுவாதத்தை எல்லாம் கை கழுவி விட்டு ஆதரிக்கிறார்?

 

திடீர்ப் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை மடைமாற்றி விடுவதற்கென்றே அமிர்தானந்தமாயி, சாய்பாபா போன்ற ஆன்மீகப் பித்தலாட்டக்காரர்கள் உருவாகி உள்ளனர். உண்மையிலேயே சாய்பாபா 200 கோடி நிதி உதவி செய்தார் என்றால், தமிழக அரசே விழா எடுத்திருக்கலாமே? பொதுவாகவே நன்றி சொல்பவர்கள், நன்றிக்கு உரியவர்களைத் தேடிச் சென்று நன்றி சொல்வதுதானே உலக வழக்கம். நன்றிக்குரியவராய் சித்தரிக்கப்படும் பாபாவே நன்றியைப் பெற்றுக் கொள்ள கோபாலபுரம் ஏன் போனார்? ஏன் அந்தச் சந்திப்பின் போது அரசு அதிகாரிகள் உடன் இருக்கவில்லை? என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் அரசிடம் இல்லை.

 

மேலும் மக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டிய தன்னுடைய அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, அதனைச் செய்யச் சொல்லி இம்மோசடிச் சாமியாரிடம் மண்டியிடுகிறார் கருணாநிதி. அரசின் கடமைகளில் ஒன்றுதான் குடிநீர் விநியோகம் எனும் அடிப்படையைப் பற்றி மக்களைச் சிந்திக்க விடாமல், "மந்திரத்தில் மோதிரம் வரவழைத்த' விசயத்தைப் பேச வைத்துப் பிரச்சினையைத் திசை திருப்புகிறார்.

 

பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமையா? கிரிமினல் சாயிபாபாவின் கடமையா? என்று ""தீக்கதிருக்கும்'' சிந்திக்கத் தெரியவில்லை. ""ஒரு மாநிலத்தின் குடிநீர்த் திட்டத்துக்கு உதவிய ஒருவரை அவர் சந்நியாசியாக இருப்பினும் பாராட்டுவது அரசின் கடமை; அதைத்தான் முதலமைச்சர் கலைஞர் செய்துள்ளார்'' என்று கலைஞருக்கு அது முதுகு சொறிந்துள்ளது.

 

உலகவங்கி, கோக், பெக்டல் போன்ற பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளும் நம் மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதாகக் கூறிக் கொண்டுதான் இங்கு சுத்திகரிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றில் நுழைகின்றன. இதற்காக "மார்க்சிஸ்டு' கட்சி உலக வங்கியையும், பன்னாட்டு நிறுவனங்களையும் இனிப் பாராட்டிக் கூட்டம் நடத்தினாலும் ஆச்சரியம் இல்லை.

 

பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்ளாமல் தன் வாழ்வுவசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியாது எனும் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட கருணாநிதி போன்ற பிழைப்புவாதிகள், தனக்கு லாபம் கிடைக்கும்போது அடிப்படைக் கொள்கைகளைக் கூட நீர்த்துப் போகச் செய்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பெரியார், சுயமரியாதை எனும் வார்த்தைகள் எல்லாம், பதவிக்கு வரும் ஏணிகள் மாதிரிதான்.

 

வீரமணி, தீக்கதிர், பார்ப்பனப் பத்திரிக்கைகள் என எல்லோருமே சாய்பாபா விசயத்தின் பின்னால் இருக்கும் குடிநீர் அரசியலைப் பற்றிப் பேசாமல் அதை ஆத்திகநாத்திகப் பிரச்சினையாக மாற்றி ஒட்டு மொத்த தமிழகத்தையே ஏமாளிகளாக்குகின்றனர். இயற்கையின் கொடையான குடிநீரை விற்பனைப் பண்டமாக்கும் உலகமயமாக்கலின் சதியில் நம்மை வீழ்த்துகினறனர். நம்மிடம் வரியை மட்டும் வசூலித்துக் கொண்டு நம் தாகத்தைத் தீர்க்கவும், சென்னையில் நாறும் கூவத்தைச் சுத்தம் செய்யவும் சாய்பாபாவிடம் மண்டியிடச் சொல்கிறது மு.க. அரசு.

 

வரி வசூலிப்பதும், போலீசுக்கு தீனிபோடுவதும் மட்டும்தான் அரசின் வேலை என்றால், அந்த அரசு நீடிக்கத்தான் வேண்டுமா?

 

· கவி