கன்னியரை கற்பழிக்க காமுகர்கள்
கண்டு பிடித்த கழிசடை தினம்
காதலின் பெயரால் கற்பை சூறையாட
ஒரு தினம் தேவையா?
சிந்திப்பீர்!
இது ஒரு மதவெறி அமைப்பு, காதலர் தினம் குறித்து தனது பெண்ணடிமைத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சுவரொட்டி வாசகங்கள். இதில் இருக்கும் கன்னியர்கள், கற்பழிப்பு, கற்பு போன்ற ஆணாதிக்க பன்றித்தனத்தை நீக்கி விட்டு
- பெண்களை பாலியல் வன்முறை செய்யாதே!!;
- வேலைக்கு வரும் ஏழைப்பெண்களை சித்திரவதை செய்யாதே!
- மதத்தின் பெயரால் பெண்களை சூறையாடும் ஒரு காட்டுமிராண்டித்தனம் தேவையா?
என்ற வாசகங்களைப் போட்டு ஒரு சுவரொட்டியை இவர்கள் எழுத வேண்டும். அதை அரபிமொழியில் எழுதி சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளிலும், இஸ்லாமிய அரசு என்ற காட்டுமிராண்டி கொலைகாரர்களின் கட்டுப்பாடு பிரதேசங்களிலும் ஒட்ட வேண்டும்.
இவர்கள் பெண்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்றால் முதலில் தமது குடும்பங்களை பிரிந்து, பிறந்த நாடுகளை விட்டு வறுமை என்னும் கொடுமையினால் வளைகுடா நாடுகளிற்கு வேலைக்காக சென்று பாலியல் வன்முறைகளை எதிர்கொள்ளும் ஏழைப்பெண்களைப் பற்றிக் கவலைப்படவேண்டும். உடம்பு முழுக்க ஆணி ஏற்றுதல், சவுக்கடி என்று மனித குலமே கேட்டுப் பதறிப் போகும் சித்திரவதைகளிற்கு உள்ளாகும் பரிதாபத்திற்குரிய பெண்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். யாசிடி பழங்குடிப்பெண்களை கடத்திச் சென்று பாலியல்வன்முறை செய்து அவர்களை விற்பனைப் பொருட் களாக சந்தையில் விற்றது குறித்து கவலைப்பட வேண்டும்.
பெண்களை கொடுமைக்குள்ளாக்கும் அந்த முதலாளிகள் என்னும் நாய்களைக் குறித்து கோபம் கொள்ள வேண்டும். மனித குலத்தின் ஒரு பாதியான பெண்களை கடத்திச் சென்று விற்கும் மதவெறி மிருகங்களைக் குறித்து கோபம் கொள்ள வேண்டும். கைதராபாத்தின் ஏழை முஸ்லீம் குடும்பங்களை தமது பணத்தை காட்டி ஏமாற்றி அவர்களின் சிறுபெண்களை மணம் செய்கிறோம் என்று தமது வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளும் பணக்கார சேக்குகளின் மேல் கோபம் கொள்ள வேண்டும். தமது நாடுகளிற்கு சென்ற பின்பு கைதராபாத்தில் ஏமாற்றி விட்டுச் சென்ற பெண்களை தொலைபேசிமூலமே மூன்று முறை தலாக் என்று சொல்லி விவாகரத்து செய்வதைப் பற்றி கோபம் கொள்ள வேண்டும்.
இவர்கள் இந்தக் கொடுமைகளைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல இவர்கள் போன்றவர்கள் இந்தக் கொடுமைகளை மதத்தின் பெயரால் ஆதரிப்பவர்கள்; இந்தக் கொடுமைகளை செய்பவர்கள் தமது மதத்துக்காரர்கள் என்பதால் அதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்துபவர்கள். அதனால் தான் ரிசானா என்ற சிறுமியை எந்தவிதமான மனிதாபிமானமும் இன்றி, ஒரு நீதியான விசாரணை இன்றி சவுதி அரசு கொலை செய்ததை இவர்கள் போன்ற மதவெறியர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி, மனதிலே எந்த விதக் கனிவும் இன்றி நியாயப்படுத்தினார்கள்.
சவுதி அரேபியா ரிசானாவைக் கொலை செய்ததை எதிர்த்து பேசிய கவிஞர் மனுசபுத்திரனை, அவர் உடலின் இயலாமை குறித்து "நொண்டி நாய்" என்று ஊளையிட்டார்கள். இந்த காதலர் தின சுவரொட்டி குறித்து கேள்வி எழுப்பிய தமிழச்சி என்ற பெண்ணை தமிழில் உள்ள அத்தனை பொறுக்கி வார்த்தைகளாலும் திட்டுகிறார்கள். தமிழச்சி உங்கள் மதம் குறித்து கேள்வி தான் எழுப்பி உள்ளார், உங்கள் மதத்தை அவர் தூசணத்தால் திட்டவில்லை. அவரின் கேள்விக்கு மறுமொழியை தூசணத்தால் சொல்வது தான் உங்களது புனிதமதம் கற்றுத் தந்த பண்பாடா?. இஸ்லாமிய அரசுக்காரர்கள் கையில் ஆயுதம் இருப்பதால் கொலை செய்கிறார்கள்; பெண்களை பாலியல் வன்முறை செய்கிறார்கள். இவர்கள் தூசணத்தால் திட்டுகிறார்கள். மதங்கள் என்பவை மனிதகுலத்திற்கு விரோதமானவை என்பதைத் தான் இவர்கள் மறுபடி, மறுபடி நிரூபித்துக் காட்டிகிறார்கள்.
இவர்கள் இப்படி என்றால் இந்துமதவெறியர்கள் காதலர் தினத்தன்று காதலர்களை அடித்து அவமானப்படுத்தி கொண்டாடுகிறார்கள். ஒரு காணொளியில் பெண் "சாதுக்கள்" பெண்களை அடிக்கிறார்கள். சாதுக்கள் என்றால் அமைதியானவர்கள், அகிம்சையாளர்கள் என்று நம் மொழியறிவு சொல்கிறது. ஆனால் சாதுக்கள் என்றால் அடிப்பவர்கள், பெண்களை பொது இடத்தில் அவமதிபவர்கள் என்று இந்துமதம் சொல்கிறது.
வன்னியப்பெண்களை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலிக்கிறோம் என்று ஏமாற்றுகிறார்கள் என்று தமிழ் இடிதாங்கி ராமதாஸ் பதைபதைத்து போகிறார். இவர் போன்றவர்கள் தான் தமிழ், தமிழர், ஈழத்தமிழர் என்று பேசுபவர்கள். ஆனால் ஒரு தமிழ்மொழி பேசும் பெண்ணை ஒரு தமிழ் மொழி பேசும் ஆண் காதலித்தால் அவரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. இது தான் மதம் என்னும் பயங்கரவாதம், இது தான் சாதி என்னும் பிற்போக்குத்தனம். மதம், சாதி என்னும் பிற்போக்குத்தனங்களை பின்பற்றும் பகுத்தறிவற்றவர்களைப் பொறுத்தவரை பெண்கள் என்றால் அடிமைகள். இனம், மொழி, சாதி, சமயம் என்னும் தாம் செலுத்தும் அடக்குமுறைகளின் கீழ் வாழ விதிக்கப்பட்டவர்கள்.
பெண்கள் சுதந்திரமாக, இயல்பாக தமது சிந்தனைகளை, உணர்வுகளை வெளிப்படுத்தும் போது இந்த பகுத்தறிவற்ற பிற்போக்குவாதிகளின் மண்டைகள் கிடுகிடுத்துப் போகின்றன. பெண்கள் எப்படிக் காதலிக்கலாம், பெண்கள் எப்படிக் கேள்விகள் கேட்கலாம் என்று அழுக்கேறிய மண்டைகள் நடுநடுங்கிப் போகின்றன. மனிதர் தமது இயல்பான அன்பை மதம், சாதி என்னும் பொய்யான எல்லைகளை உடைத்துக் கொண்டு வெளிப்படுத்துவதை இந்த மனிதகுலவிரோதிகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? மதம் என்னும் பொய்க்கோட்டைகளை இடித்துக் கொண்டு மனிதர் ஒருவரை ஒருவர் காதலிப்பதனால் தமது அதிகாரம் தகர்ந்து போவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த மண்டை கழண்டவர்கள் ஊளையிடுகிறார்கள்.
உலகம் என்னும் இன்பக்கனவு, மானுட விடுதலை மீண்டு இங்கு வர வேண்டும். பொய்யாய், பழங்கதையாய் மதம், சாதி என்னும் பிற்போக்குத்தனங்கள் ஒழிந்து போகவேண்டும். ஆதலினால் அன்பு செய்வீர்!!; காதல் செய்வீர்!!