Language Selection

mars_2007.jpg

"இந்தியா உண்மையில் ஒளிர்கிறது; உறங்கிக் கிடந்த இந்தியா என்ற புலி கம்பீரமாக எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கி விட்டது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும் கௌரவமும் மேலும் ஒருபடி முன்னேறியுள்ளது. வெள்ளைக்கார காலனியாதிக்கக் கம்பெனிகளிடம் அடிமைப்பட்டிருந்த இந்திய நாடு, அந்த அடிமைத்தளைகளை விலக்கி, வெள்ளைக்கார நிறுவனத்தையே விலைக்கு வாங்கி பதிலடி கொடுத்துள்ளது!''

 

கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியத் தரகு பெருமுதலாளித்துவ நிறுவனமான டாடா நிறுவனம், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ""கோரஸ்'' என்ற எஃகு உற்பத்தி நிறுவனத்தை 54,000 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, இந்திய ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் இப்படி ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.

 

""இது மகத்தான சாதனை; நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இந்தியத் தொழிலதிபர்களின் தன்னம்பிக்கை தைரியத்தையும் இந்த நிகழ்ச்சி உலக அரங்கில் நிரூபித்துக் காட்டியுள்ளது. இது தொடக்கம்; இது தொடரும்'' என்று முதலாளித்துவப் பத்திரிகைகள் அட்டைப்படக் கட்டுரைகளை வெளியிட்டு ஆரவாரத்துடன் குதூகலிக்கின்றன.


கோரஸ் நிறுவனம், ஆண்டொன்றுக்கு 180 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஐரோப்பா கண்டத்தின் மிகப் பெரும் ஏகபோக நிறுவனம். இந்நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் டாடா எஃகு நிறுவனமானது, உலகில் அதிகமாக எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம், ஏறத்தாழ 40,000 தொழிலாளர்கள் என பிரம்மாண்டம்; அதைவிட ஏழைநாட்டின் எஃகு நிறுவனம் ஏகாதிபத்திய நிறுவனத்தைக் கைப்பற்றிய அதிசயம் என பூரித்துப் புளகாங்கிதமடைகின்றன, முதலாளித்துவப் பத்திரிகைகள்.

 

இங்கிலாந்து நாட்டின் அரசுத்துறை நிறுவனமான ""பிரிட்டிஷ் ஸ்டீல்'' நிறுவனமும் டச்சு நாட்டு எஃகு நிறுவனமும் இணைந்து 1991ஆம் ஆண்டில் கோரஸ் எஃகு நிறுவனம் உருவாகியது. இது ஏகாதிபத்திய உலகிற்கே உரித்தான சர்வதேச தொழில் கூட்டின் ஓர் அங்கமாகும். கடந்த 15 ஆண்டுகளில் இதுபோல பல ஏகபோக நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து மூலதனத்தையும் உற்பத்தியையும் ஒன்று குவித்துப் பன்னாட்டு ஏகபோக தொழிற்கழகங்களாக வளர்ந்து உலகச் சந்தையைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

 

மிகப் பிரம்மாண்டமான அளவில் மூலதனத்தை ஒன்று குவித்து உலகச் சந்தையில் போட்டியிடும் இத்தகைய ஏகபோக நிறுவனங்கள், பொதுமக்களிடம் பங்குகளை விற்று மூலதனத்தைத் திரட்டுகின்றன. இதனாலேயே பல தொழில் நிறுவனங்களில் சிறு முதலீட்டாளர்களின் பங்குகள் மிக அதிகமாகவும், அந்நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் முதலாளிகளின் பங்குகள் குறைவாகவும் இருக்கின்றன. இத்தகைய நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை யார் வேண்டுமானாலும், அப்பங்குகளை வைத்துள்ளோரிடமிருந்து ஏலத்துக்கு வாங்க முடியும். ஒரு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ஒருவர் வாங்கி, அதன்பிறகு மொத்த நிறுவனத்தையே வாங்கி விடலாம்.


இப்படித்தான் கோரஸ் நிறுவனத்தை டாடா நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. கோரஸ் நிறுவனத்தில், அதை நிர்வகிக்கும் ஏகபோக முதலாளிகளின் பங்கு 1 சதவீதத்துக்கும் கீழானதாக இருந்தது. இதனால் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவன நிர்வாகத்தின் பங்குகளையும் இதர பங்குதாரர்களின் பங்குகளையும் ஏலத்தில் வாங்க முயற்சித்தது. ஏறத்தாழ 5 மாதங்களுக்கு முன்பு, கோரஸ் நிறுவனப் பங்குதாரர்களிடமிருந்து ஏலத்தில் பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பமும் கொடுத்தது.

 

ஏலத்தில், டாடா அறிவித்த விலைக்கு மேலாக அதிகம் கொடுப்பதாக தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள ஏழை நாடான பிரேசிலைச் சேர்ந்த சி.எஸ்.என் என்ற எஃகு நிறுவனம், சில ஏகாதிபத்திய வங்கிகளோடு கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது. டாடா மற்றும் சி.எஸ்.என். நிறுவனங்களின் போட்டா போட்டியில் கோரஸ் நிறுவனப் பங்குகளின் விலைகள் உயர்ந்து கொண்டே போயின. இறுதியில், இங்கிலாந்து அரசின் கம்பெனி ஏல அமைப்புச் சட்டப்படி ஒரே நாளில் 9 சுற்று ஏல முறைப்படி கடைசிச் சுற்றில் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கே கம்பெனி உடைமையாகும் என முடிவாகியது. அதன்படி, சி.எஸ்.என் நிறுவனத்தைவிட, அதிக விலை கொடுத்து கடைசிச் சுற்றில் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்க டாடா நிறுவனத்துக்குப் போதிய நிதியில்லாத நிலையில், சர்வதேச நிதிமூலதன வங்கிகளான ஏ.பி.என். அம்ரோ வங்கி மற்றும் ஜெர்மானிய வங்கி ஆகியவற்றோடு கூட்டுச் சேர்ந்து டாடா நிறுவனம் இந்தக் கைப்பற்றுதலைச் சாதிக்க முடிந்துள்ளது. இல்லையேல் கோரஸ் நிறுவனத்தை பிரேசில் நாட்டின் சி.எஸ்.என் நிறுவனம் கைப்பற்றியிருக்கும்.

 

மூலதனம் உலகமயமாகியிருப்பதும், மூலதன ஒன்று குவிப்பை அடிப்படையாகக் கொண்ட தேசங் கடந்த தொழில் கழகங்களும் நிதி மூலதன வங்கிகளும் புதிய ஏகபோகங்களாக வளர்ந்திருப்பதும் ஏகாதிபத்திய சகாப்தத்தின் புதிய கட்டத்தை உணர்த்துகின்றன. இதன்படியே, பல்வேறு நாடுகளில் தொழிற்கூட்டுகளும், கைப்பற்றுதல்களும் மறுகூட்டுகளும் போட்டா போட்டிகளும் வேகமாக நடக்கின்றன. இவையெல்லாம் ஏகாதிபத்திய நாடுகளில்தான் நடக்கும்; ஏழை நாடுகளின் தரகுப் பெருமுதலாளிகள் அத்தகைய போட்டா போட்டிகளில் ஈடுபடவே மாட்டார்கள் என்பதல்ல. இந்தியாவின் டாடாவும் பிர்லாவும் ரிலையன்சும் இத்தகைய போட்டா போட்டிகளில் ஏற்கெனவே இறங்கியுள்ளதோடு, வெளிநாடுகளில் முதலீடு செய்தும் அந்நாடுகளது பெருந்தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றவும் செய்துள்ளனர். அதேபோல, ஏழை நாடான பிரேசிலின் சி.எஸ்.என்; தென்கொரியாவின் சாம்சங், ஹூண்டாய், இந்தோனேஷியாவின் சலீம் குழுமம் எனப் பல தேசங்கடந்த தொழிற்கழகங்கள் நிதி மூலதன வங்கிகளின் துணையோடு வெளிநாடுகளில் முதலீடு செய்தும் பெருந்தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றவும் செய்கின்றன.

 

இதற்கு முன்பு, இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் தமது மொத்த சொத்து மதிப்பில் 50% அளவுக்கு மட்டுமே வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்றும் 10 கோடி டாலருக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது என்றும் இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தன. கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து, இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்றும், அந்நியச் செலாவணியை ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி பிற உள்நாட்டு வெளிநாட்டு நிதி மூலதன வங்கிகளிடமிருந்து திரட்டிக் கொள்ளலாம் என்றும் எல்லா கட்டுப்பாடுகளையும் இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள ஒரு பெருந்தொழில் நிறுவனம், தாம் செய்துவரும் தொழிலுக்குத் தொடர்பேயில்லாத வேறு பிற தொழில்களில், வெளிநாட்டில் முதலீடு செய்யவும், அத்தகைய தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றிக் கொள்ளவும் இந்திய அரசு தாராள அனுமதி கொடுத்துள்ளது. இந்திய அரசே உலகமயமாக்கலுக்கு ஏற்ப தனது சட்டங்களையும் விதிகளையும் மாற்றித் தகவமைத்துக் கொண்டுள்ள நிலையில், டாடா நிறுவனம் உலகளாவிய போட்டியில் இறங்கி, கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இத்தகைய நிகழ்வினால் தரகுப் பெருமுதலாளிகளின் அடிப்படைத் தன்மையில் மாற்றங்களும் நிகழ்ந்துவிடவில்லை.

 

கோரஸ் நிறுவனத்தை டாடா கைப்பற்றியது மட்டுமல்ல; கடந்த ஐந்தாண்டுகளில் டாடா நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றைக் கைப்பற்றியுள்ளது. பிரிட்டனின் டெட்லி டீ நிறுவனம், அமெரிக்காவின் எனர்ஜி பிராண்ட்ஸ், சிங்கப்பூரின் நாட்ஸ்டீல், தாய்லாந்தின் மில்லினியம் ஸ்டீல், தென்கொரிய டேவூ மோட்டார் நிறுவனத்தின் கனரக வாகனப் பிரிவு என அடுத்தடுத்து பல்லாயிரம் கோடி மதிப்பில் பல கைப்பற்றுதல்களை டாடா நிறுவனம் செய்துள்ளது. அதேபோல பிர்லாவின் ஹிண்டால்கோ எனும் அலுமினிய உற்பத்தி நிறுவனம் நோவலிஸ் நிறுவனத்தையும், சுஸ்லான் நிறுவனம் ஆர்.இ.பவர்சிஸ்டத்தையும், வீடியோகான் நிறுவனம் தென்கொரியாவின் டேவூ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தையும் கைப்பற்றுவதற்கான பேரங்கள் முடிந்துள்ளன. டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ், விப்ரோ, சுஸ்லான், ரான்பாக்சி, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், பாரத் ஃபோர்ஜ், மகிந்திரா முதலான 21 இந்தியத் தரகு பெருமுதலாளித்துவ நிறுவனங்கள், அமெரிக்கஐரோப்பிய நிறுவனங்களைக் கைப்பற்ற பேரங்கள் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன.

 

சிறிய மீன் பெரிய மீனை விழுங்க முடியுமா? இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் ஏகாதிபத்திய நாடுகளது பெருந்தொழில் நிறுவனங்களைக் கைப்பற்ற முடியுமா? இது எப்படி சாத்தியமாயிற்று? ""இன்றைய உலகமய சூழலில் மூலதனமானது உலக நாடுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாகப் பாய்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு எந்தவொரு சிறிய நிறுவனமும் பெரிய நிறுவனத்தைக் கைப்பற்ற முடியும். மேலும், மூலதன அழுத்தம் கொண்ட பல பெருந்தொழில் நிறுவனங்களில் ஒப்பீட்டளவில் லாபம் குறைவாகவும் அதிக செலவு பிடிப்பதாகவும் உள்ளதால், மேற்கத்திய நாடுகள் இத்தகைய நிறுவனங்களைக் கைப்பற்ற பொதுவில் போட்டி போடுவதில்லை. அந்நாடுகள் கணினி, செயற்கை இழை உள்ளிட்ட இரசாயனத்துறை மற்றும் நிதிமூலதனம், தகவல்தொழில்நுட்ப சேவைத் துறைகளிலேயே கவனம் செலுத்துகின்றன. அனைத்துலக வங்கிகள் மூலம் மூலதன வாய்ப்பும், குறைந்த செலவில் மனித ஆற்றலும் மூலாதாரங்களும் கிடைப்பதால் இந்திய நிறுவனங்கள் பிற வெளிநாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்துவதில் போட்டி போட முடிகிறது'' என்கிறார் சுஸ்லான் நிறுவனத் தலைவரான துளசி டாண்டி.

 

அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியினால் ஏற்பட்டுள்ள பலன்களை அறுவடை செய்து ஆதிக்கம் செலுத்தும் நோக்கில், கொள்ளை இலாபம் தரக்கூடிய சேவைத்துறைகளில் ஏகாதிபத்தியங்கள் மூலதனத்தைக் குவிக்கின்றன. அதேசமயம், ஒப்பீட்டு ரீதியில் சற்றே குறைவான லாபம் தரக்கூடியதும் அதிக அளவில் மனித ஆற்றலைக் கொண்டதுமான கனரகத் தொழில்களை ஏழைநாடுகளது தரகுப் பெருமுதலாளிகள் கைப்பற்றிக் கொள்ள ஏகாதிபத்தியங்கள் தடையோ கட்டுப்பாடோ விதிப்பதில்லை. இதேபோல சுற்றுலாஓட்டல்கள், மருத்துவமனைகள், அடிக்கட்டுமான துறை முதலானவற்றில் மூலதனத்தைக் குவித்து தரகுப் பெருமுதலாளிகள் விரிவடையவும், வெளிநாடுகளில் இத்தகைய தொழில்களைத் தொடங்கவும் ஏகாதிபத்தியங்கள் தடையாக நிற்பதில்லை. இந்தியாவின் ஓபராய் நிறுவனம் ஆஸ்திரேலியா வரை ஓட்டல் தொழிலில் விரிவடைந்திருப்பதும், டாக்டர் ரெட்டி குழுமமும் ரான்பாக்சி நிறுவனமும் ஏகாதிபத்திய மருத்துவ நிறுவனங்களைக் கையகப்படுத்தியிருப்பதும், லண்டன் மற்றும் நியூயார்க் பங்குச் சந்தைகளில் பல இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் இதை நிரூபித்துக் காட்டுகின்றன.

 

இந்தியாவின் டாடா மட்டுமல்ல; சீனாவின் கணினி தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ""லெனோவோ'' நிறுவனம் உலகின் மிகப்பெரிய ""ஐ.பி.எம்.'' கணினி நிறுவனத்தையும், ஜெர்மானிய ஏகபோக நிறுவமான சீமென்ஸ்இன் செல்பேசி தயாரிப்பு நிறுவனத்தை தைவானின் ""பென்கியூ'' நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இதன்மூலம் அந்தந்தத் தொழில்துறைகளில் உற்பத்தியை மையப்படுத்திக் குவித்து சந்தையைக் கைப்பற்ற இந்நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதேபோலத்தான், டாடா நிறுவனமும் இந்தியாவின் இரும்புத்தாது சுரங்கங்களை ஐரோப்பிய சந்தையுடன் இணைத்து, "மலிவான' விலையில் எஃகு உற்பத்தி செய்து, தனக்குப் போட்டியாக உள்ள ""அர்சலர்மிட்டல்'' எஃகு நிறுவனத்தையும், தென்கொரியாவின் ""போஸ்கோ'' நிறுவனத்தையும், பின்னுக்குத் தள்ளிவிடும் நோக்கத்துடன் கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்காகவே ஒரிசா, ஜார்கண்ட், சட்டிஸ்கர் மாநிலங்களின் இரும்புத்தாது சுரங்கங்களை ஒருங்கிணைக்கவும் மலிவான கச்சாப் பொருளையும் "மலிவான' மனித ஆற்றலையும் ஒன்று குவித்து மலிவான விலைக்கு எஃகு உற்பத்தி செய்து ஐரோப்பிய சந்தையைக் கைப்பற்றத் துடிக்கிறது.

 

இதே உத்தியோடு, தொழிலாளர்களை அற்பக் கூலிக்குக் கசக்கிப் பிழிந்து நுகர்பொருட்களை மலிவான விலைக்கு உற்பத்தி செய்து, அமெரிக்க நுகர்பொருள் சந்தையில் பாதிக்கு மேல் சீனா கைப்பற்றியுள்ளது. இதர ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் அது கால் பதித்து வருகிறது. உற்பத்தியையும் மூலதனத்தையும் ஒன்று குவித்து சீனப் பெருமுதலாளிகள் உலகச் சந்தையில் போட்டி போட்டு முன்னேறுவதைக் காட்டி ""இது மாபெரும் பாய்ச்சல்; சீனா வல்லரசாகிவிட்டது'' என்று ஏகாதிபத்தியவாதிகள் துதிபாடினர். அதேபோலத்தான் இப்போது டாடா நிறுவனம், கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றி உலகச் சந்தையில் போட்டி போடுவதைக் காட்டி இந்தியா உண்மையிலேயே ஒளிர்கிறது என்றும் காலனியாதிக்கவாதிகளுக்குக் கொடுத்த பதிலடி என்றும் இந்திய ஆளும் வர்க்கமும் பத்திரிகைகளும் கூத்தாடுகின்றன. உலகமயமாக்கலின் கீழ் நடக்கும் இந்தப் போட்டாபோட்டியில் நாளை டாடா நிறுவனத்தை வேறொரு நிறுவனம் கைப்பற்றிக் கொண்டு கவிழ்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுதான் ஏகாதிபத்திய உலகயமாக்க அராஜகத்தின் தவிர்க்கவியலாத விளைவு!

 

இவற்றையெல்லாம் பூசிமெழுகிவிட்டு டாடா நிறுவனம், ஏகாதிபத்திய நிறுவனத்தையே விலைபேசும் அளவுக்கு உயர்ந்து விட்டது என்றும் இது தாராளமய உலகமய கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றும் பிரமையூட்டி ஆட்சியாளர்களும் பத்திரிகைகளும் நம்பச் சொல்கின்றனர். ஆளும் வர்க்கத்தினர்தான் இப்படி ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் என்றால், "புரட்சி' பேசும் போலி கம்யூனிஸ்டுகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டு கூத்தாடுகின்றனர். சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ வங்கமொழி நாளேடான ""ஜனசக்தி'', கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றிய டாடாவுக்கு உச்சிமுகர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து தலையங்கமே தீட்டியுள்ளது. உள்நாட்டில் தொழிலை விரிவுபடுத்துவதோடு, உலக அளவில் விரிவடைந்து டாடா நிறுவனம் வெற்றியைச் சாதிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து, இதற்காக இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் என்கிறது.

 

ஆளும் வர்க்க அடியாட்களாகச் சீரழிந்துவிட்ட போலி கம்யூனிஸ்டுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழினப் பிழைப்புவாத தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளதைக் கண்டு பூரித்துப் போகிறது. ""இந்தியப் பெருமுதலாளிகள் உலகமய முதலாளிகளாக மாறிவிட்டதற்கு இன்னுமொரு சான்று இது. ஐரோப்பா உள்ளிட்டு உலகச் சந்தைக்குப் போட்டியிடும் அனைத்திந்திய பெருமுதலாளிகளை இதற்குப் பிறகும் தரகு முதலாளிகள் என்று வரையறுப்பது அறியாமை என்பதையும் டாடாகோரஸ் இணைவு தெளிவுபடுத்தும்'' என்று அக்கட்சியின் இதழான ""தமிழர் கண்ணோட்ட''த்தில் அக்கட்சியின் "தானைத் தலைவர்'களுள் ஒருவரான கி.வெங்கட்ராமன் தனது அடிமுட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி குதூகலித்துள்ளார். (தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2006)

 

ஏகாதிபத்தியம், மேல்நிலை வல்லரசு, மறுகாலனியாக்கம், உலகமயமாக்கம் என்பனவற்றைப் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாத திருவாளர் கி.வெ., ""உலகமயத்திற்கு எதிராக இந்திய சுதேசியம் பேசுவதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்நிலையில் இந்தியத்தை வைப்பதும் போலியானவை போகாத ஊருக்கு வழிகாட்ட முயல்பவை'' என்று வேறு உபதேசமும் செய்கிறார்.

இந்தியப் பெருமுதலாளிகள் தரகு முதலாளிகளாக இல்லாமல், "உலகமய' முதலாளிகளாகிவிட்டதால், தமது கட்சித் திட்டம் மற்றும் நடைமுறை வேலைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் பற்றி இவர் விளக்க முன்வரவில்லை. மாறாக, மார்க்சிய லெனினியப் புரட்சியாளர்கள் இந்தியப் பெருமுதலாளிகளை தரகு முதலாளிகள் என்று வரையறுத்திருப்பது தவறாகி விட்டது என்று நிரூபிக்க முயற்சித்து, அதற்கு டாடா கோரஸ் இணைவைச் சான்றாகக் காட்டி குதியாட்டம் போடுகிறார்.

 

""தரகு முதலாளிகள் எனப்படுவோர் அன்னிய வர்த்தக நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரி அல்லது நிர்வாகியாவர்; இவர்கள் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளாவர்'' என்று சீனப் புரட்சியின் தொடக்கக் காலத்தில் இருந்த தரகு முதலாளிகளின் தன்மைகள், செயல்பாடுகளைத் தோழர்கள் ஸ்டாலினும் மாவோவும் வரையறுத்திருந்தனர். அதை அப்படியே இந்தியப் பெருமுதலாளிகளுக்கு ஒப்பீடு செய்து ""பார்த்தீர்களா, இவர்கள் தரகு முதலாளிகளே இல்லை'' என்பதுதான் இந்த கிணற்றுத்தவளை அறிஞரது வாதம். ஆனால், தரகு முதலாளிகளின் தன்மையிலும் செயல்பாடுகளிலும் தொடர்ந்து நடந்து வந்த பரிணாம வளர்ச்சிக்கேற்ப தோழர்கள் ஸ்டாலினும் மாவோவும் புதிய வரையறுப்புகளை முன்வைத்துள்ளனர். இதை ஹோகான்சியின் ""நவசீனப் புரட்சியின் வரலாறு'' என்ற நூல் தெளிவாகவே விளக்குகிறது.

 

உலகமயமாக்கத்தின் கீழ் தரகு முதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டில் பரிணாம மாற்றங்களே இருக்காது; அவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யவோ ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கையகப்படுத்தவோ மாட்டார்கள்; அப்படிச் செய்தால் அவர்கள் தரகு முதலாளிகளே அல்ல என்பதுதான் இந்த அறிஞரின் குதர்க்கவாதம். ஏகாதிபத்தியங்கள்தான் ஏழை நாடுகளில் முதலீடு செய்யும்; நிறுவனங்களை இணைக்கும்; அதுபோல இந்தியப் பெருமுதலாளிகளும் செயல்படுவதால் இவர்களும் ஏகாதிபத்தியஉலகமய முதலாளிகள்தான் என்று அரிய கண்டுபிடிப்பை அவிழ்த்துவிட்டுள்ளார் இந்த அறிஞர். கட்டபொம்மனுக்கு வல்லிய மீசை இருந்தது என்றால், மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மன்தான் என்கிறார் இவர். இவரது வாதப்படி இந்தியத் தரகு முதலாளிகள் மட்டுமல்ல; பிரேசில், தென்கொரியா, தைவான், இந்தோனேஷியா முதலான பல ஏழை நாடுகளின் பெருமுதலாளிகளும் இனி தரகு முதலாளிகள் அல்ல; அந்நாடுகளிலும் உலகமயத்துக்கு எதிரான தேச விடுதலைப் புரட்சிகள் சாத்தியமே இல்லை என்பதுதான். இதைக் கேட்டால், இந்த ஏழைநாடுகளின் புரட்சியாளர்களும் போராளிகளும் வாயால் சிரிக்க மாட்டார்கள்.


பொருளாதாரப் புள்ளி விவரங்களைக் காட்டி தரகுப் பெருமுதலாளிகளின் அரசியல் தன்மையை மூடி மறைக்கக் கிளம்பியிருக்கிறார், திருவாளர் கி.வெ. உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடு அமெரிக்காதான் என்று பொருளாதாரப் புள்ளி விவரங்கள் காட்டுவதால், அமெரிக்காவை ஏழை நாடு என்று வரையறுக்க முடியுமா? அரசியலும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், தரகு முதலாளிகளின் பொருளாதார அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அம்முதலாளிகளின் அடிப்படைத் தன்மையை வரையறுக்கக் கிளம்புவது அபத்தமான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும். தரகு முதலாளிகள் ஏகாதிபத்தியத்தோடு எத்தகைய அரசியல் உறவைக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்காமல், தரகு முதலாளிகள் பொருளாதார ரீதியில் வீங்கி விரிவடைவதைக் காட்டி, இவர்கள் தரகு முதலாளிகளே அல்ல என்று வரையறுப்பதும், அரசியல் வரையறையே இல்லாமல் பொதுவில் ""உலகமய முதலாளிகள்'' என்று குறிப்பிடுவதும் அடிமுட்டாள்தனமானது என்பது சொல்லாமலேயே விளங்கும்.

 

தரகுப் பெருமுதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டிலும் உலகமயமாக்கம் புதிய மாற்றங்களை ஏற்பத்தியிருப்பதோடு, அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களுக்கும் புதிய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. தேசங்கடந்த முதலீடுகளாலும் கூட்டிணைவு கையகப்படுத்தல்களாலும் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் சர்வதேசியமயமாகியுள்ளதால், தென்கொரிய ஹூண்டாய் தொழிலாளர்களின் போராட்டம் தமிழக ஹூண்டாய் தொழிலாளர்களின் போராட்டமாக விரிவடையும். டாடாகோரஸ் நிறுவனத்தின் டச்சு நாட்டுத் தொழிலாளர்களின் போராட்டம் இங்கே ஜாம்ஷெட்பூரில் எதிரொலிக்கும். இப்புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு உலகமயத்திற்கு எதிராகவும், தரகுப் பெருமுதலாளிகளுக்கு எதிராகவும் அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்திப் போராடுவதும், போலி கம்யூனிசப் புரட்டல்வாதிகளோடு பல வண்ண குதர்க்கவாதிகள் சீர்குலைவுவாதிகளை அரசியல்சித்தாந்த ரீதியில் முறியடிப்பதுமே புரட்சிகரஜனநாயக சக்திகளின் இன்றைய கடமையாக உள்ளது.


· பாலன்