இன்று 07-02-2016 வடக்கிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் குசைய்ன்; “அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தவறு. அவர்களை வழக்கு விசாரணையின் பின்பே விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்க்காக மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் விதமாக "சர்வதேச சமுகம் இதனை ஏற்றுக்கொள்வதில்லை" என நியாயம் வேறு கூறிச் சென்றுள்ளார். அதனை ஆமோதித்து வடக்கு முதல்வர் துரிதமாக வழக்குகளை விசாரிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேசத்திற்கு தலையாட்டி சேவகம் செய்வதற்காக தான் முட்டாள் மக்கள், இவர்களை தங்கள் பிரதிநிதிகளாக தெரிந்துள்ளனர் என்பது சம்பந்தன் முதல் விக்கினேஸ்வரன் வரையான நினைப்பு.
முள்ளிவாய்க்காலில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை மகிந்த அரசு இனப்படுகொலை செய்த போது அதனை தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்து விட்டு இன அழிப்பு முடிந்து மக்களை முகாம்களில் அடைத்ததும், மகிந்த அரச படைகளின் பாதுகாப்புடன் முகாம்களிற்கு விஜயம் செய்து "ஐ.நா உங்களை கைவிடாது" என்று பாக்கி மூன் ஆடிய நாடகத்தை விட இது ஒன்றும் பெரிதல்ல. அன்றே எம்மக்களிற்கு ஐ.நா என்பது எப்படியான நிறுவனம் என்பது புரிந்து கொள்ள முடிந்தது.
இன்று மைத்திரி – ரணில் அரசினை பாதுகாத்து, நவதாராளவாத பொருளாதாரத்தை முனைப்புடன் நடைமுறைப்படுத்துவதுமே மேற்கின் ஒரே நோக்கம். மைத்திரி – ரணில் அரசின் அடி அத்திவாரம் சிங்கள -பௌத்த பேரினவாதம். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதனை சிங்கள இனவாத அடித்தளத்தை கொண்ட மைத்திரி – ரணில் மற்றும் சிங்கள இனவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முழு இலங்கையையுமே கொள்ளையிட மைத்திரி – ரணில் அரசு மேற்குலகத்திற்கு செங்கம்பளம் விரித்துள்ள நிலையிலும், தமிழ் அரசியல்வாதிகள் மேற்குலகின் திட்டங்களிற்கு இடையூறு இல்லாமல் தலையாட்டி பொம்மைகளாக இருக்கும் நிலையிலும்; அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள் பற்றி ஐ.நாவோ அதன் மனித உரிமை பேரவையோ அக்கறை கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது.
குறிப்பாக சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர், பலஸ்தீனத்தில் நம் கண் முன்னால் நடப்பதையும் அதில் ஐ.நாவின் செயற்பாடுகளையும் பார்க்கும் போது, இது ஒரு காலாவதியான அமைப்பு என்பதும் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இயங்குகின்றது என்பதும் தெளிவானது. எனவே ஜ.நா இலங்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையோ, மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியாக நடக்கும் என எண்ணுவது எம்மை நாமே ஏமாற்றுவதில் தான் முடியும்.