Language Selection

புதிய ஜனநாயகம் 2007

mars_2007.jpg

"நேற்று வரை நாங்கள் விவசாயிகள்; இன்று எங்கள் நிலம் பறிக்கப்பட்டுச் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு விட்டோம். நிலம்தான் எங்கள் தாய்! எங்கள் தாயைப் பறித்து, எங்களை அனாதைகளாக்கிப் பட்டினியில் தள்ளி விட்டுள்ளார்கள்'' என்று குமுறுகிறார், பல்தேவ் சிங் என்ற விவசாயி. இவர் பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த நடுத்தர விவசாயி.

 

பர்னாலா மாவட்டம் படேகர் சன்னா கிராமத்தில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, பஞ்சாப் மாநில அரசு 300 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவியுள்ளது. இங்கு டிரிடெண்ட் என்ற நிறுவனம் தகவல்தொழில்நுட்பப் பூங்காவை நிறுவி வருகிறது. தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்க வந்துள்ள இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகக் கடந்த இரு மாதங்களாக இவ்வட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசாங்கம் தரும் நிவாரணத் தொகையை ஏற்க மறுத்து, ""எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; நிலம்தான் வேண்டும்'' என்று போராடி வரும் விவசாயிகள் கடந்த ஜனவரி 31ஆம் தேதியன்று டிரிடெண்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தி, அதன் சுற்றுச் சுவரை உடைத்தெறிந்தனர்.

 

இதைக் கண்டு ஆத்திரமடைந்த பஞ்சாப் ஆட்சியாளர்கள், விவசாயிகளின் போராட்டத்தை மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் வன்முறைச் செயல் என்று குற்றம் சாட்டியதோடு, டிரிடெண்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளைப் பாதுகாக்க அச்சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் போலீசைக் குவித்து அச்சுறுத்தினர். அதைத் துச்சமாக மதித்து கடந்த பிப்ரவரி 2ஆம் நாளன்று மீண்டும் விவசாயிகள் போராடத் தொடங்கியதும், தடியடித் தாக்குதல் நடத்திய போலீசு, துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைப் படுகாயப்படுத்தியது. ""அங்கு சிதறிக் கிடக்கும் காலணிகளும், இரத்தம் தோய்ந்த டர்பன் (தலைப்பாகை)களும் ஜாலியன்வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது'' என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே குறிப்பிடுமளவுக்கு போலீசு வெறியாட்டம் போட்டுள்ளது.

 

பர்னாலா மாவட்டம் மட்டுமல்ல; பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் அருகே முப்போகம் விளையும் பூமியும் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகப் பறிக்கப்படவுள்ளது. தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனமான சஹாரா குழுமம் தொழில் தொடங்க, ஏறத்தாழ 1200 ஏக்கர் நிலத்தைப் பறிக்கப் போவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நிலத்தைக் கையகப்படுத்த அரசு அதிகாரிகள் வந்தபோது, ஜீத்தாகலன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர். பரம்பரை பரம்பரையாக இங்கு விவசாயம் செய்துவந்த விவசாயிகள் தங்கள் கண்ணெதிரே விளைநிலங்கள் பறிக்கப்படுவதைக் கண்டு விக்கித்து நிற்கின்றனர்.

 

பஞ்சாப், ஐந்து நதிகள் பாயும் வளமான பூமி; பசுமையான வயல்வெளிகள்; அறுவடைக் காலத்தில் தங்க நிறத்தில் தகதகக்கும் கோதுமைக் களஞ்சியம். இருப்பினும், தாராளமயமாக்கலைத் தொடர்ந்து வளம் கொழிக்கும் இம்மாநிலம் படிப்படியாக நசியத் தொடங்கியது. உணவு தானியக் கொள்முதலை அரசு கைகழுவியதாலும், உரம்பூச்சி மருந்து முதலான இடுபொருட்களின் விலை உயர்வாலும், தாராளமயத்தால் அன்னிய கோதுமை இறக்குமதி காரணமாக விலை வீழ்ச்சியாலும் பஞ்சாப் விவசாயிகள் போண்டியாகி நிற்கிறார்கள். வேறுவழியின்றி பன்னாட்டு ஏகபோக விவசாய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒப்பந்த முறையில் விவசாயம் செய்தவர்களும் அந்நிறுவனங்களால் வஞ்சிக்கப்பட்டு திவாலாகிக் கிடக்கிறார்கள்.

 

ஆந்திரா, கர்நாடகாவைத் தொடர்ந்து இப்போது வளம் கொழிக்கும் பஞ்சாபிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகரித்து வருகிறது. மான்சாண்டோவின் ""பி.டி.'' எனப்படும் மலட்டு பருத்தி விதைகளால் நட்டப்பட்டும், உற்பத்திச் செலவுக்கேற்ற விலை கிடைக்காமல் கடன்பட்டும் சங்ரூர், மான்சா, படிண்டா மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் நொடித்துப் போயுள்ளனர். ""ஆர்த்தியா'' எனப்படும் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கிக் கொண்டு கடன் சுமையிலிருந்து மீள வழி தெரியாமல் பல பருத்தி விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகின்றனர். சங்ரூர் மாவட்டத்திலுள்ள கல்பஞ்சரா கிராமத்தில் மட்டும் கடந்த நான்கு மாதங்களில் எட்டு விவசாயிகள் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசே ஒப்புக் கொள்கிறது. இருப்பினும், இதர மாநிலங்களைப் போலவே, மாண்டுபோன விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு இன்று வரை நிவாரணம் கூட அளிக்க மறுக்கிறது.

 

""ஒரு காலத்தில் பருத்தி எடுக்க இராஜஸ்தானிலிருந்து கூலி விவசாயிகள் திரள் திரளாக இங்கு வருவார்கள்.பருத்தியை ஏற்றிச் செல்ல எங்கள் வட்டாரத்தில் லாரிகள் வந்து குவியும். இன்று எல்லாமே தலைகீழாகி விட்டது. பருத்திக்காக லாரியோ டிராக்டரோ இங்கு வருவதில்லை. பிழைப்பைத் தேடி நாங்கள் இராஜஸ்தான் மாநிலத்திற்கு கூலி வேலை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்'' என்று பருத்தி விவசாயிகளின் அவலத்தை விளக்குகிறார் கல்பஞ்சரா கிராமத்தைச் சேர்ந்த அமர்சிங்.

 

தாராளமயம் தோற்றுவித்த பயங்கரம் பஞ்சாப் மாநிலமெங்கும் தலைவிரித்தாடும் சூழலில், இப்போது விவசாயிகளின் தலையில் இடியென இறங்கியுள்ளன, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். பஞ்சாபில் தற்போது 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்டு, விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இறுதிக்குள் 20க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவ முயற்சித்து வருவதாக அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார். ""எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிட்டு கலகம் செய்ய முயற்சிக்கின்றனர். நான் முதல்வராக உள்ளவரை கறாராகச் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து மாநிலத்தைத் தொழில்மயமாக்கியே தீருவேன்'' என்று திமிராகக் கொக்கரிக்கிறார் அவர். அடுத்தடுத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், சண்டிகரிலிருந்து அமிர்தசரஸ் வரையிலான வீதியெங்கும் விவசாயிகள் திரண்டு அடுத்து என்ன செய்வது என்று கவலையோடு விவாதிக்கின்றனர்.

 

சண்டிகரைச் சுற்றியுள்ள கிராமங்களின் வீடுகளில் இப்போது புதிய எண்கள் குறியிடப்பட்டுள்ளன. ""1.6, 1.4, 0.7'' என்றெல்லாம் குறியிடப்பட்டுள்ள இந்த எண்கள், புதிய கதவிலக்க எண்கள் அல்ல. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக அரசாங்கம் கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கான நிவாரணத் தொகையை (இலட்ச ரூபாய் கணக்கில்) அந்தந்த விவசாயிகளின் வீட்டுக் கதவுகளில் உள்ளாட்சி நிர்வாகம் எழுதி வைத்துள்ளது. லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்தவனைப் பார்த்து மற்றவர்களும் போட்டி போட்டுக் கொண்டு லாட்டரி சீட்டை வாங்கி ஏமாறுவதைப் போல, அரசாங்கம் செய்யும் இந்த மோசடியைப் புரிந்து கொள்ளாமல், பல விவசாயிகள் தாங்களும் நிலத்தை விற்கக் கிளம்புகின்றனர். அரசாங்கமோ, சுயவிருப்பத்துடன் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்பதாக மாய்மாலம் செய்கிறது.

 

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்கிறது மத்திய வர்த்தக அமைச்சகம். பஞ்சாபிலோ முப்போகம் விளையும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இது சட்டவிரோதமாயிற்றே என்று கேட்டால், ""நாங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை; விவசாயிகள் சுயவிருப்பத்துடன் நிலங்களை விற்கிறார்கள்; நாங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி வருகிறோம்'' என்கிறார் பஞ்சாப் முதல்வர்.

 

தரிசு நிலங்களில்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு, ஒரு போகம் சாகுபடியாகும் நிலங்களிலும் நிறுவலாம் என்று மாறி, பின்னர் இரு போகம் சாகுபடியாகும் நிலங்களில் 10% வரை கையகப்படுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டு, இப்போது முப்போகம் விளையும் பூமியையும் கொல்லைப்புற வழியாக ஆக்கிரமிக்க எல்லா ஏற்பாடுகளையும் கைக்கூலி ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். இதற்காகவே காலனிய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட, 1894ஆம் ஆண்டின் நிலக் கையகப்படுத்தும் சட்டம் புதிய பெயரில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, ""பொதுப் பயன்பாட்டுக்கு'' என்ற பெயரில் நில உரிமையாளரின் ஒப்புதலின்றி எந்த நிலத்தையும் மாநில அரசு கையகப்படுத்தலாம். இதை எதிர்த்து வழக்கு தொடரக்கூட முடியாது. மே.வங்க போலி கம்யூனிஸ்டு ஆட்சியிலிருந்து காங்கிரசு, பா.ஜ.க. ஆட்சி வரை எல்லா மாநில அரசுகளும் இச்சட்டத்தைக் கையிலேந்தி விவசாயிகளை நாடோடிகளாக்கி விட்டு விளைநிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

 

இவையெல்லாம் தரகுப் பெருமுதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஏற்பாடுகள் என்பது மட்டுமல்ல; ஏழை நாடுகளின் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்து, உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்யத் துடிக்கும் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கச் சதியின் ஓர் அங்கம்தான் இவை. ""உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து; ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து "மலிவான' விலையில் உணவு தானியங்களை இறக்குமதி செய்!'' என்று உத்தரவிடுகிறது, உலக வர்த்தகக் கழகம். இதனடிப்படையில் மானியக் குறைப்பு, ரேசன் உணவுப் பொருட்களின் விலையேற்றம், அரசு கொள்முதல் நிறுத்தம், ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானிய இறக்குமதி என அடுத்தடுத்து தாக்குதல்களை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விட்டனர். இப்போது அதைத் தீவிரப்படுத்தும் வகையில், விளைநிலங்களை ஆக்கிரமித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி வருகின்றனர்.

 

ஒரிசாவின் கலிங்கா நகர். மே.வங்கத்தின் சிங்கூர் நந்திகிராமம், மகாராஷ்டிராவின் ராய்காட், உ.பி.யின் தாத்ரி, தமிழகத்தின் ஓசூர், பஞ்சாபின் பர்னாலா எனத் தொடரும் விவசாயிகளின் போராட்டங்கள் வெறும் நிலத்திற்காகவும் கூடுதல் நிவாரணத்திற்காகவும் நடக்கும் போராட்டங்கள் அல்ல; இவை மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஓர் அங்கம்.

இவற்றை ஒருங்கிணைத்து மறுகாலனிய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போரை நடத்த வேண்டியுள்ளது. நாடும் மக்களும் இன்னுமொரு பகத்சிங்கையும், கட்டபொம்மனையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


· குமார்