puja_apri_07.jpg

1993ஆம் ஆண்டு நடந்த மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் 123 பேரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்திருக்கிறது, ""தடா'' சிறப்பு நீதிமன்றம். இவர்களுக்கான தண்டனை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

""தாமதமாகக் கிடைக்கும் நீதி, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது'' என்பார்கள். மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; ஆனால், இக்குண்டு வெடிப்புக்கு மூல காரணமான மும்பய் கலவர வழக்கிலோ, இன்னும் முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லை.

 

மும்பய் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன் நடந்த மும்பய் கலவரத்தில் 1,000 முசுலீம்கள் கொல்லப்பட்டதோடு, ஒரு இலட்சம் முசுலீம்கள் அகதிகளாகத் துரத்தப்பட்டனர். மும்பய் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு 10,000 பக்க அளவில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. அதேசமயம், மும்பய் கலவரம் சம்பந்தமான 1,370 வழக்குகள் உண்மையானவை என ஒப்புக் கொள்ளப்பட்டாலும், சாட்சியங்கள் சேகரிக்க முடியாது என நொண்டிக் காரணம் கூறப்பட்டு, அவ்வழக்குகள் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டன.

 

மும்பய் கலவரத்தை விசாரித்த சிறீகிருஷ்ணா கமிசன், இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்திய இந்து மதவெறிக் குண்டர்கள் தொடங்கி, அவர்களுக்குத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு, குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி கொடுத்துதான் காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அம்மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் இம்மதச்சார்பற்ற கூட்டணி, இந்து மதவெறி பாசிஸ்ட் பால் தாக்கரேயை மட்டுமல்ல, சிறீ கிருஷ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள 32 போலீசு அதிகாரிகளைக் கூடத் தண்டிக்காமல் பாதுகாத்து வருகிறது.

 

மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் கிடையாது. ""மும்பய் கலவரத்தின்பொழுது எனது வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால்தான், மும்பய் பிளாசா திரைப்பட அரங்கம் அருகே குண்டுகள் நிறைந்த வேனைக் கொண்டு போய் நிறுத்தியாக'' ஷா நவாஸ் குரேஷி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ""மும்பய் கலவரத்தைத் தொடர்ந்து எனது குடும்பத்தினருக்குத் தொலைபேசி மிரட்டல்கள் வந்ததால்தான், தாவூத் கும்பலிடமிருந்து ஏகே 56 இரக துப்பாக்கிகளை வாங்கி வைத்துக் கொண்டதாக'' ஒப்புக் கொண்டுள்ளார், நடிகர் சஞ்சய் தத்.

 

எனினும், இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாகத் தண்டிக்கப்படவில்லை. சாமானிய முசுலீமான குரேஷி காலாவதியாகிவிட்ட ""தடா'' சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். பணபலமும், அரசியல் செல்வாக்குமிக்க நடிகர் சஞ்சய் தத், ""தடா'' குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், சஞ்சய் தத்திடமிருந்த ஏகே 56 இரகத் துப்பாக்கிகளை அழிக்க உதவியதற்காக, தத்தின் நண்பர்கள் மன்சூர் அகமதுவும், ஜாய்புன்னிஸா காசியும் ""தடா''வின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

 

நாடாளுமன்றத் தாக்குதலையடுத்து, பாக். மீது போர் தொடுக்க இந்தியா முண்டா தட்டியபொழுது, மும்பய் குண்டுவெடிப்புக்குத் திட்டமிட்டுக் கொடுத்த தாவூத் இப்ராகிம், ""டைகர்'' மேமன் உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மைய அரசு கூச்சல் போட்டது. ஆனால், அமெரிக்க நிர்ப்பந்தம் காரணமாக, போர் முஸ்தீபுகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்து, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பிறகு, பயங்கரவாதிகளை ஒப்படைக்க கோருவதுகூட சம்பிரதாய நடவடிக்கையாக நீர்த்துப் போய்விட்டது. இதனால், மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்பு, எய்தவனை விட்டு விட்டு அம்பை மட்டும் தண்டித்த கதையாக முடிந்துவிட்டது.


···


இந்து மதவெறி பயங்கரவாத நடவடிக்கைகளையும், அதற்கு எதிரான முசுலீம் தீவிரவாத நடவடிக்கைகளையும் பாரபட்சமாக நடத்துவது, ""சமூக நீதி'' மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில் கூட அம்மணமாக நடக்கிறது. 1997ஆம் ஆண்டு இறுதியில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களும், தமிழக போலீசாரும் சேர்ந்து நடத்திய கலவரத்தில் 18 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; 5 கோடி பெறுமான முசுலீம்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இக்கலவரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டதற்கு மேல், வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு விசாரணை நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை.

 

அதேசமயம், இக்கலவரத்தின் எதிர்வினையாக நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 166 முசுலீம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 166 பேரில், 3 முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரித்துவிட்டது.

 

45 முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.

 

இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அப்துல் மதானி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனு கொடுத்தார், அவர். மதானியின் மனுவை காது கொடுத்து விசாரிக்கக் கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது, உச்சநீதி மன்றம்.

 

முசுலீம் "தீவிரவாதி' மதானியிடம் இப்படி கறாராக நடந்து கொண்ட உச்ச நீதி மன்றம், பார்ப்பன பயங்கரவாதி ஜெயேந்திரர், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்தபொழுது, அவ்வழக்கு தொடர்பாக போலீசு விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது.

 

""மதானியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. பார்ப்பன ஜெயா ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, சூத்திர தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை.

 

கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயது அப்பாஸுக்கு, சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவருக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவர் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, ""எய்ட்ஸ்'' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவரது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அரசின் அலட்சியம் என்பதா, இல்லை பழி தீர்த்துக் கொள்ளும் வெறி என்பதா?

 

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இம்முசுலீம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், இவர்கள் இப்பொழுதே பிணை கூட கிடைக்காமல், ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தைச் சமூக நீதி என்பதா, இல்லை பார்ப்பன மனுநீதி என்பதா?

 

சமூக நீதிக் காவலர்கள் ஆட்சி புரியும் தமிழகமே இப்படியென்றால், இந்து ராஷ்டிரத்தின் ஆய்வுக் கூடமான குஜராத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

 

இந்து மதவெறிக் கும்பல் மட்டுமல்ல, எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும், அரசும், நீதிமன்றமும் கை கோர்த்துக் கொண்டு, முசுலீம்களுக்கு, வாழ்வுரிமையையும், நீதியையும் மறுப்பதன் மூலம், அவர்களைத் தீவிரவாதம் பக்கம் தள்ளி விடுகின்றன. பிறகு, இதையே காரணமாகக் கூறி, இந்து மதவெறி பாசிசத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் இந்திய நாட்டின் மீதும், மக்களின் மீதும் கட்டவிழ்த்து விடுகின்றன.


· குப்பன்