puja_apri_07.jpg

தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இருந்து நாட்டுப்புறக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து, பொதுநூலகத் துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை உதவியுடன் தமிழ் மையம் எனும் தன்னார்வ நிறுவனம், ""சங்கமம்'' எனும் பெயரில் பிப்.20ஆம் தேதி தொடங்கி பிப்.26 முடிய, 6 நாட்களில் 400 நிகழ்ச்சிகளை, சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தியது.

 

கரகாட்டம், தப்பாட்டம், செண்டா மேளம், இவற்றுடன் சுதா ரகுநாதனின் கர்நாடக சங்கீதக் கச்சேரி என கதம்பமாக நடந்த இந்நிகழ்ச்சி, அந்நிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டதாக அரசு அறிவித்தது.

 

""திருவிழா நம்ம தெருவிழா'' எனும் விளம்பரத்துடன் பல கோடி செலவில் நடந்த இவ்விழாவை ஒருங்கிணைத்தவர், கருணாநிதியின் மகள் கனிமொழி. இதற்கான விளம்பரம், நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியவற்றுக்கு அரசுப் பணம் தாராளமாய் செலவிடப்பட்டது. வழக்கமான அரசு விழாக்களுக்கு செலவிடப்படும் விளம்பரச் செலவின் வரம்பு, சங்கமத்திற்கென்றே ஓர் அரசாணை மூலம் தளர்த்தப்பட்டது. தங்குதடையின்றி வந்த விளம்பரப் பணம், பெரும் பத்திரிக்கை முதலாளிகளின் பையை மட்டும்தானே நிறைக்கும்! பத்திரிக்கை நிருபர்களுக்கு? கனிமொழி பற்றி "கவர் ஸ்டோரி' எழுத என ரூபாய் 2,000ஐ கவரில் வைத்துத் தந்தார்கள்.

 

கனிமொழியின் தாயார் ராஜாத்தி இலக்கிய அரங்கு ஒன்றை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஸ்பென்சர் பிளாசா, கடற்கரை, பூங்காக்கள் எனப் பல்வேறு இடங்களிலும் நாட்டுப்புற கலைஞர்கள், "கலைஞ'ரின் மகளுக்கு மட்டும் இன்றி, கலைஞரின் 7 வயதுப் பேரனுக்கும் சலாம் வைத்தனர். அன்று பண்ணையார் வீட்டு நாய்க்குட்டிக்கும் பயந்து வாழ்ந்த விவசாயக் கூலிகளின் அவல நிலைதான் நெஞ்சில் நிழலாடியது. கவிஞர் இளையபாரதி, ராசாத்தி அம்மையாரை மேடையிலே "சின்னம்மா' என அழைத்து தன் பெயரை கலைஞரின் இதயத்தில் பொறித்து விட்டார்!

 

தமிழ் மையத்தின் நிறுவனரான கஸ்பார், ஈழத் தமிழர்களுடன் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றியதை மையாக்கி "புலிகளுடன் தொடர்புடையவர்கள் கனிமொழியுடன் இணைந்து நடத்திய விழா' என்றும், சங்கமம் விழா வழியாக புலிகளுக்குப் பணம் சென்றிருக்கின்றது என்றும் அறிக்கை விட்டு, மீண்டும் விடுதலைப் புலிகள், பயங்கரவாதம்' என்று பீதி கிளப்பினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த பயங்கரவாதப் பீதிக்கு துக்ளக் சோவும், ஜூனியர் விகடனும் பக்கமேளம் வசித்து, சங்கமம் நிகழ்ச்சியை விமர்சிக்கும் போர்வையில் தங்களது பார்ப்பன அரிப்பைச் சொறிந்து கொண்டனர். சாதாரண பால்ரஸ் குண்டுகள் பிடிபட்டதற்கே "வெடிகுண்டு செய்யப் பயன்படும் இரும்பு குண்டுகள் புலிகளுக்கு கடத்தல்' என்று பேனைப் பெருமாளாக்கும் துக்ளக்கும், ஜூ.வி.யும், ஜெயலலிதாவும் இணைந்து சங்கமத்திற்கும், கஸ்பாருக்கும் உள்ள உறவை, அமெரிக்காவில் கைதாகியுள்ள சாக்ரடீஸ் எனும் ஈழ ஆதரவாளர் வரை இணைத்து கருணாநிதி அரசுக்கு நெருக்கடி தர முயல்கின்றனர்.

 

சங்கமத்தில் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் இடம் பெற்றதாலோ என்னவோ, "சோ' எனும் பார்ப்பன அறிவுஜீவி, ""இக்கலைகளைக் கிராமத்துக் கோவில் திருவிழாக்கள் ஏற்கெனவே காத்து வருகின்றன. எனவே, இதற்கென பொதுமக்கள் பணத்தை வீணாக்கக் கூடாது'' என விமர்சித்துள்ளார். உழைக்கும் மக்களின் இசையையும், நடனத்தையும், காலங்காலமாய் இழிவுபடுத்தும் பார்ப்பனிய அழகியலின் விமர்சனம்தான் அது. இத்தகைய கேடுகெட்ட காமாலைக் கண்ணுக்கு, வானொலியும், தூர்தர்சனும் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அக்கிரஹாரத்தின் கர்நாடக சங்கீதக் கச்சேரி, பரத நாட்டியம் நிகழ்ச்சிகளை வழங்கி (ண்ணீணிணண்ணிணூ), பொதுமக்கள் பணத்தைச் சூறையாடி வருவதும் தெரியாது. அரசுப் பணத்தில் பத்மா சுப்ரமணியம் போன்ற பார்ப்பன நடனமணிகள் கோனார்க் கோவிலில் ஆட்டம் போட, கோடிகளை "ஸ்வாஹா' செய்ததும் தெரியாது.

 

ஏற்கெனவே பேரனை மத்தியிலும், மகனை மாநிலத்திலும், கட்சியிலும் பதவிகளால் அலங்கரித்து வைத்துள்ள கருணாநிதி, தனது மகளையும் சங்கமம் மூலம் வாரிசு அரசியலுக்கென்று அரங்கேற்றி அழகு பார்த்துள்ளார். சங்கமம் தொடக்க விழாவில் ""எனது வழித் தோன்றலாக கலை, இலக்கியத்தில் எனக்குப் பிறகு அப்பணியை ஆற்றிட ஒரு வழித்தோன்றல் உருவாகி இருக்கின்றது'' என்று அவர் உள்ளம் பூரித்துச் சொன்னதே இதற்குச் சான்று. ஓட்டுக் கட்சிகள் எவையும் இதனை விமர்சனம் செய்வதற்கு யோக்கியதை கிடையாது. அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளும் சரி, காங்கிரசு, பா.ஜ.க போன்ற தேசியக் கட்சிகளும் சரி, தனக்குப் பிறகும் அரசுப் பணத்தை ஆண்டு அனுபவிக்க தனது வாரிசுகளை உருவாக்குவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

 

சங்கமத்திற்கு பொருள் ரீதியில் உதவிய தமிழ் மையம் அமைப்பில் யார் யார் உள்ளனர் எனப் பார்த்தால் படித்த பட்டதாரிகளை குறைந்த கூலிக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி வைக்கும் "மாஃபோய்'' நிர்வாகவியல் நிறுவன அதிபர் பாண்டியராஜன், நட்சத்திர அந்தஸ்து மருத்துவமனை மூலம் மருத்துவ வணிகம் நடத்தி வரும் மியாட், நெதர்லாந்து நாட்டின் கவுரவத் தூதர் என ஒரு வானவில் கூடடணியே உள்ளது. இவர்களுக்கும், சங்கமத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஃபோர்டு பவுண்டேசனின் கூத்துப் பட்டறைக்கும், நசிந்து கொண்டு வரும் தமிழர் பாரம்பரியக் கலைகள் மீது அப்படி என்னதான் ஆர்வம்?

 

கருணாநிதியும் கூட இந்தக் கூட்டணியுடன் சேர்ந்திசைந்து ""தமிழர் கலைகள் அழிந்துவிடாமல் காக்கப்படல் வேண்டும்'' என்று பேசுகிறார். தமிழ் மையத்தின் சார்பில் இனி ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்கிறார், கனிமொழி.

 

இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை அள்ளித் தெளித்தவாறு அவசர கதியில் அரசே ஏற்று நடத்துவதால் மட்டும் தமிழர் கலைகளைக் காப்பாற்றி விட முடியுமா? அதன் உள்ளடக்கமாக இருக்கும் பெண்ணடிமைத்தனம், புராணப் புளுகுகள் போன்றவை, இன்றைக்குத் தேவைப்படும் பார்ப்பன எதிர்ப்புணர்வு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய முற்போக்கான கருத்துக்களால் மாற்றப்படாவிட்டால், எந்த அடித்தட்டு, நடுத்தர மக்களும் ""வாலிவதம்'' ""வள்ளி திருமணம்'' போன்றவற்றுக்கு ஆதரவு தரப் போவதில்லை. வடிவத்தை மட்டும் நாட்டார் கலைகளில் இருந்து சுவீகரித்துக் கொண்டு முற்போக்கு சிந்தனைகளை கலைவடிவத்தில் தந்தால் மட்டுமே தமிழர் கலைகள் பிழைக்க முடியும். இல்லாவிட்டால் கூத்துப்பட்டறை தயாரிக்கும் 50 பேர் மட்டுமே பார்த்து ரசிக்கும் "செத்த கலை'யாக மாறிவிடும்.

 

பெரும்பாலான தமிழர் கலைகள் இன்றைக்கு மரணப் படுக்கையில்தான் உள்ளன. சங்கமத்திற்கு எனப் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட கலைஞர்கள், ""சாப்பாட்டுக்கு மட்டும் பஞ்சமே இல்லை, கனிமொழி அம்மா புண்ணியத்திலே'' எனச் சொல்லும் நிலையில்தான் உள்ளனர். இது ஏதோ தற்செயலாக நடைபெற்றுவிட்ட செயலல்ல. நாட்டார் கலைகளின் பிறப்பிடமான விவசாயப் பொருளாதாரம் சூறையாடப்படுவதால், தமிழர்கள் நிலத்திலிருந்து துரத்தப்பட்டு, காய்ந்த சருகு காற்றில் பறப்பது மாதிரி வயிற்றைக் கழுவிக் கொள்ள ஏதாவது ஒரு தொழிலைப் பார்ப்போம் என்று பெருநகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ஓடுகின்றனர். பறிக்கப்படும் அவர்களின் நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகின்றன. ஓர் இனத்தின் அன்றாட வாழ்வோடு பிணைந்திருப்பதுதானே அவ்வினத்தின் கலைகள்? தமிழன் மட்டும் பஞ்சைப் பராரியாய் ஆக்கப்படுகையில், தமிழ்க் கலைகள் மாத்திரம் காக்கப்படுமா என்ன?

 

உழைக்கும் மக்களின் நலனைக் கொள்ளையிடும் ஒரு கூட்டம், அவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள முயலும் நரித்தந்திரம் இப்போது அனைத்து மட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது. நம் நாட்டின் நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, நீராதாரத்தை அழித்து வரும் கோக்கோ கோலா, சென்னைப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் குடிநீர் வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில், சங்கமம் எனும் பெயரில் தன்னார்வக் குழுக்களும், சில தரகு முதலாளிகளும், அரசும் இணைந்து தமிழர் கலைகளைக் காக்கப் புறப்பட்டிருப்பதும், அதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டவும் கண்டுப் பிடித்திருக்கும் சடங்கே "சங்கமம்'.

 

உலகமய, தாராளமயக் கொள்கையால் கஞ்சித் தொட்டி நோக்கித் தள்ளப்படும் நெசவாளர்களின் பாரம்பரிய தறி நெசவை, "காட்சிப் பொருளாக்கிய' சங்கமத்தின் நிகழ்ச்சி ஒன்றே போதும், சங்கமத்தின் நோக்கம் என்னவென்பதைப் புரிந்து கொள்வதற்கு!


· கவி