பங்குச் சந்தையும், அந்நிய மூலதனமும், மொத்த தேசிய உற்பத்தியும் ஒருபுறம் வளர்ந்து கொண்டே செல்லும்பொழுது, இன்னொருபுறமோ வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் மக்களைப் பிடித்தாட்டுகிறது. ""வளர்ச்சி இருந்தால்
ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும்'', ""பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் விலைவாசி உயரத்தான் செய்யும்'' என ஆளும் வர்க்கம் தர்க்க நியாயம் பேசி, இந்த எதிரும் புதிருமான நிலையை வெளிப்படையாகவே நியாயப்படுத்தி வருகிறது.
மக்கள் அனைவரின் சட்டைப் பைகளிலும் பணம் பிதுங்கிக் கொண்டு வழிவதைப் போலவும்; இந்தப் பணத்தைச் செலவழிப்பதற்காகவே அவர்கள் பொருட்களைத் தேடி ஓடுவது போலவும் ஒரு மோசடியான பிரச்சாரத்தை ஆளும் கும்பல் நடத்தி வருகிறது.
ஆனால் உண்மையென்ன? தொழில் துறை வளர்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்துவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கிராமப்புற ஏழை மக்கள், நாளொன்றுக்கு 30 ரூபாய் கூலியைச் சம்பாதிப்பதற்காக, தினந்தோறும் தங்கள் கிராமத்தில் இருந்து 150 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டிய அவலமான நிலையில் இருக்கிறார்கள்.
இந்தியாவிலுள்ள 46 சதவீதக் குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சானாக நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதாக ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது. ஒரு மனிதன் ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 157 கிலோ அளவிற்கு அரிசி, கோதுமை, பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும்; ஆனால், இந்தியர்கள் இந்தக் குறைந்தபட்ச அளவைவிட 15 கிலோ குறைவாக, 142 கிலோ கிராம் அளவிற்குத்தான் உணவுப் பொருட்களை உட்கொள்வதாக சத்துணவிற்கான தேசிய நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்த 142 கிலோ கிராம் நுகர்வை வர்க்கரீதியாகக் கூறுபோட்டால், ஏழை விவசாயிகளும், உதிரித் தொழிலாளர்களும் அரைகுறைப் பட்டினியில் வாழ்க்கையை ஓட்டும் உண்மை புலப்படும்.
அப்படியென்றால், எந்த "இந்தியனிடம்' பணப்புழக்கம் இருக்கிறது? அமெரிக்காவின் "பிட்ஸா' வகை உணவுகளைத் தினந்தோறும் வயிறு முட்டத் திண்ணும் இந்தியர்கள் யார்? என்ற கேள்விகளை எழுப்புவதன் மூலம் இந்தப் பொருளாதார வளர்ச்சியின் மோசடித்தனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
விவசாயத்திற்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க மறுக்கும் ப.சிதம்பரம், கார், இரு சக்கர வாகனங்கள், குளிர் சாதனப் பெட்டி போன்ற ஆடம்பர நுகர்பொருட்களின் விற்பனையைத் தூக்கி நிறுத்துவதற்காக வங்கிகளின் கஜானாவை அகலமாகத் திறந்து வைத்தார். தனிநபர் கடன் , கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என்ற வகைகளில் வங்கிப் பணம் சந்தையில் கொட்டப்பட்டு, செயற்கையாகப் பணப்புழக்கம் ஏற்படுத்தப்பட்டது. வீட்டுக்கடன் மூலம் ""ரியல் எஸ்டேட்'' வியாபாரம் ஊதிப் பெருக்க வைக்கப்பட்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 45/க்குக் கீழாகக் குறைந்து போனால், ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற காரணத்தால், ரிசர்வ் வங்கி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 2 இலட்சம் கோடி ரூபாயை இறக்கிவிட்டு, அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய நிதிச் சந்தையில் சரிந்து விடாமல் காப்பாற்றியது. அபரிதமான பணப்புழக்கத்தின் பின்னுள்ள உண்மை இதுதான்.
சந்தையில் புழக்கத்துக்கு வரும் பொருட்கள் சேவைகளின் மதிப்பைவிட, பணப்புழக்கம் ஓரளவு அதிகமாக இருந்தால்தான், பொருட்களின் விலை உயர்ந்து, முதலாளிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும் என்பதுதான் முதலாளித்துவ பொருளாதார விதி. செயற்கையான பணப்புழக்கத்தின் மூலம், இந்த விதி ஊதிப் பெருக்கப்பட்டதால், தரகு முதலாளிகள்ஏற்றுமதி வர்த்தகர்களின் இலாபம் எகிறிப் பாய்ந்தது. இந்தப் பணப்பழக்கத்தால் இலாபம் அடைந்த புதுப் பணக்காரக் கும்பல் கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக் குவித்த பொழுது, சராசரி வருமானமுள்ள இந்திய மக்களோ, தங்களின் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
செயற்கையாகப் பணப்புழக்கம் உருவாக்கப்பட்டதைப் போலவே, உணவுப் பொருள் உற்பத்தியில் தேக்க நிலையும் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகத்திடம் ஜூலை 02இல் 6 கோடியே 30 இலட்சம் டன் உணவு தானியம் (அரிசியும், கோதுமையும்) கையிருப்பில் இருந்தது. இந்தக் கையிருப்பு அடுத்த மூன்றே ஆண்டுகளில் சடசடவெனச் சரிந்து, கோதுமை இருப்பு ஏப்ரல் 2005இல் 1 இலட்சம் டன் என்ற அளவிற்கு வீழ்ந்தது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்குத் தாராளமாக ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருள் விநியோகிக்கப்பட்டதால் இந்தச் சரிவு ஏற்படவில்லை. அபரிதமாகக் கையிருப்பில் உள்ள உணவு தானியங்களைக் கொண்டு, நாடு முழுவதும் வேலைக்கு உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கொடுத்த ஆலேசனையை, அப்பொழுது பிரதமராக இருந்த வாஜ்பாயி ஒதுக்கித் தள்ளினார்.
வேலைக்கு உணவுத் திட்டத்திற்கு மாறாக, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் 2.99 கோடி டன் உணவு தானியங்கள் மிகக் குறைந்த விலையில் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்காக, 14,135 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. 1.87 கோடி டன் உணவு தானியங்கள் உள்ளூர் பெரிய வியாபாரிகளிடம் விற்கப்பட்டது. 1.47 கோடி டன் உணவு தானியங்கள் கடத்தப்பட்டு மறைந்து போயின.
இப்படி உணவு தானியக் கையிருப்பு மொட்டையடிக்கப்பட்ட அதேசமயம், அரசு கொள்முதல் அதிரடியாகக் குறைக்கப்பட்டது. 200506 இல், 1.85 கோடி டன் கோதுமை தேவை என்ற நிலையில், 1.47 கோடி டன் கோதுமைதான் கொள்முதல் செய்யப்பட்டது. 200607இல் 1.9 கோடி டன் கோதுமை தேவை என்ற நிலையில் 90 இலட்சம் டன் தான் கொள்முதல் செய்யப்பட்டது.
இதன்மூலம், அரிசி, கோதுமை பயிரிட்ட விவசாயிகள், தங்களின் விளைச்சலைத் தனியாரிடம் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தனியார் கொள்முதலை ஊக்குவிக்கும் முகமாக, பன்னாட்டு நிறுவனங்கள் உணவு தானியக் கிட்டங்கிகளைத் திறந்து நடத்த அனுமதிக்கப்பட்டனர். உணவு தானியங்களை வாங்கிப் பதுக்கிக் கொள்வதற்கு வசதியாக, அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இணைய தள முன்பேர வர்த்தகத்தில் வியாபாரம் செய்வதற்கு அரிசிக்கும், கோதுமைக்கும் இருந்த தடை நீக்கப்பட்டது.
இதற்கு இணையாகவும், அரிசி, கோதுமை பயிரிடும் விவசாயிகளை அச்சாகுபடியில் இருந்து அப்புறப்படுத்தும் விதமாகவும், ""உணவுப் பொருள் உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்; எனவே, விவசாயிகள் மலர் சாகுபடி போன்ற பணப்பயிர் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்'' என்ற பிரச்சாரம் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியிலும், அதற்கு அடுத்து வந்த காங். கூட்டணி ஆட்சியிலும் தீவிரமாகச் செய்யப்பட்டது. உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையில் அரிசிக்கும், கோதுமைக்கும் நிர்ணயிக்க வேண்டிய ஆதார விலையை ஏற்றித் தராமல் இருப்பது; இடு பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்ப்பது — இவற்றின் மூலம் உணவு தானிய விவசாயிகள் அச்சாகுபடியில் நம்பிக்கை இழக்க வைக்கப்பட்டுள்ளனர்.
மைய அரசின் இந்த விவசாய விரோத நடவடிக்கைகளால், 1999 2000இல் 7.63 கோடி டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி 2005 06இல் 6.94 கோடி டன்னாகக் குறைந்தது. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களின் மொத்த உற்பத்தி 21.2 கோடி டன்னில் இருந்து (200304) 20.9 கோடி டன்னாகக் (200607) குறைந்துவிட்டது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தப் பற்றாக்குறை / தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோதுமை இறக்குமதிக்கு அனுமதி அளித்து, உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளையை நிறைவேற்றியது, காங்கிரசு கூட்டணி ஆட்சி.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனைவருக்கும் ரேசன் கடைகளின் மூலம் விநியோகிப்பது; அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் வித்துக்கள் ஆகிய உணவுப் பொருட்களின் உற்பத்திக்கு ஊக்கமளிப்பதோடு, அவற்றை அரசு கொள்முதல் செய்வதை விரிவுபடுத்துவது; தனியார் கொள்முதலுக்கும், ஊக பேர வாணிபத்துக்கும், நல்ல விளைநிலங்களை விழுங்கும் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்துக்கும் தடை போடுவது ஆகிய நடவடிக்கைகளுக்கு மாறாக, உணவுப் பொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்வதை நிரந்தரமாக்கத் திட்டம் போடுகிறது காங். கூட்டணி ஆட்சி. இதற்கு ஏற்றார்போல, பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தாராள இறக்குமதிக் கொள்கை, உணவு உற்பத்தியில் இந்தியா அடைந்துள்ள தன்னிறைவுத் திறனைச் சிறுகச் சிறுகச் சாகடித்து விடும்; அதன்மூலம் உணவுப் பொருள் தட்டுப்பாட்டையும், விலைவாசி உயர்வையும் நிரந்தரமாக்கும். இந்திய மக்களை உணவுக்காக ஏகாதிபத்திய நாடுகளிடம் கையேந்த வைப்பதன் மூலம் தாராளமயம் தனியார்மயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாதிக்கம் தீவிரமாகும்.
எதிர்கட்சி வரிசையில் உள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. மட்டுமல்ல, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள இடது, வலது போலி கம்யூனிஸ்டுகளும் விலைவாசி உயர்வை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றன. இக்கட்சிகள் காங். கட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் எனக் கூறுவதன் மூலம், விலைவாசி உயர்வுக்குப் பின்னுள்ள உண்மையான காரணத்தை மறுகாலனியத் தாக்குதலை மூடி மறைக்கின்றன. நாம் இந்த உண்மையான காரணத்தை மக்கள் முன் அம்பலப்படுத்தும்பொழுதுதான், ஆளும் காங்கிரசை மட்டுமல்ல; மக்களின் அதிருப்தியை ஓட்டுக்களாக அறுவடை செய்யக் காத்திருக்கும் எதிர்க்கட்சிகளையும் தனிமைப்படுத்த முடியும்; மக்களின் கோபத்தை மறுகாலனியத்துக்கு எதிரான போராக மாற்ற முடியும்!
· ரஹீம்