தன் தமிழ்மக்கள் கொலை கண்டு எழுந்த துயரத்தில், அவர்களை துடிக்க துடிக்க கொன்ற கொலைகாரர்களின் மீது பொங்கிய கோபத்தில் பிரபாகரன் என்ற ஒரு மனிதன் நாராயணன் என்னும் இழிபிறவிக்கு செருப்பால் அடித்து தன் வஞ்சம் தீர்த்தான். ஜோர்ஜ் புஷ் என்னும் கொலைகாரனிற்கு ஈராக்கிய பத்திரிகையாளன் செருப்பால் அடித்து மரணித்த தன் ஈராக்கிய மக்களிற்கு மரியாதை செய்ததைப் போல பிரபாகரன் ஈழத்து மண்ணில் புதையுண்ட தன் மக்களிற்கு என்றும் உம் பகைவரை மன்னிக்க மாட்டோம் என்று உறுதிமொழி சொல்லியிருக்கிறார்.
இவனிற்கு செருப்படி விழுந்ததும் அகிம்சையைப் பரப்ப என்றே அவதாரம் எடுத்த சில மரியாதை ராமன்கள் பதறிப் போய் ஒரு வயது முதிர்ந்த மனிதனிற்கு செருப்பால் அடிக்கலாமா என்று கண்ணீர் விடுகிறார்கள். பேச்சு, பேச்சாக இருக்க வேண்டும்; கருத்தை, கருத்தாலே சந்திக்க வேண்டும் என்று இந்த கைப்பிள்ளைகள் கதறுகிறார்கள். இந்த வயது முதிர்ந்த மனிதன் எத்தனை வயது முதிர்ந்த அப்பாவிகளை தங்களது இந்திய வல்லரசு ஆதிக்கவெறிக்காக கொன்றான்?
ஈழ மக்களைக் கொன்று குவித்து இந்திய வல்லரசை வலுப்படுத்த வேண்டும் என்ற கொள்கைவகுப்பாளர்கள் என்ற கொலைகாரக் கூட்டத்தில் இவனும் இருக்கவில்லையா? வயது முதிர்ந்தவன், உடல் தளர்ந்தவன் என்பதற்காக எம் குழந்தைகளை இவன் கொல்லாமல் விட்டானா?அவர்கள் கொலை செய்யலாம், உயிர்ப்பலி கொடுத்தவர்கள் உட்கார்ந்து அழு வேண்டும் என்பது தான் இந்த உத்தமபுத்திரர்களின் ஆராய்ச்சி முடிவு.
தோழர் கோவன் பாடிய பாட்டிலும் இவர்கள் சொற்பிழை, பொருட்பிழை கண்டு பிடிக்கிறார்கள். ஜெயலலிதா சாராயம் விற்கலாம்; தமிழ் நாட்டையே சாராயக் கடையாக மாற்றலாம் அது குறித்து இவர்கள் எதுவும் பேச மாட்டார்கள். காந்தியவாதியும், மது விலக்கு போராளியுமான சசிபெருமாள் கன்னியாகுமாரியில் போராடிக் கொண்டிருக்கும் போதே மரணமடைந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் மதுவிலக்கு போராட்டத்திற்காக, சாகும்வரை உண்ணாவிரதமிருந்த காந்தியவாதி குருசரண் சப்ரா மரணமடைந்திருக்கிறார்.
இவர்கள் பாட்டு எதுவும் பாடவில்லை. இந்திய அரசும், இந்த அயோக்கிய அரசியல்வாதிகளும் தேசத்தந்தை என்று தூக்கிப்பிடிக்கும் காந்தியின் வழியிலேயே போராடினார்கள். இந்த சாராய வியாபாரிகள் செவி சாய்த்தார்களா? இல்லை, கோவனின் பாடலில் இவர்கள் ஆபாசம், வன்முறை என்று சொல்லுகிற வரிகளை நீக்கி விட்டு பாடினால் அதை தமிழ்நாட்டு அரசின் கொள்கைபரப்பு பாடலாக சாராயக்கடைகளில் ஒலிபரப்பிகளில் ஒலிக்க விடுவார்களா? இல்லை, இந்த விமர்சனத்தை வைப்பவர்கள் தாங்கள் பாடிக் கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பார்களா?
கல்வியை தனியாருக்கு விற்று கொள்ளையடிக்கு முயற்சி செய்யும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்களின் போது மாணவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டனர். அப்போதும் வலதுசாரிகளும், இடதுசாரிகள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்ளும் சிவப்புத்தோல் போர்த்திய போலிகளும் மாணவர்கள் வன்முறையில் இறங்கியதால் தான் மைத்திரி - ரணில் அரசு மாணவர்களை தாக்கியது என்று அரசபயங்கரவாதத்திற்கு நியாயம் கற்பித்தனர். கல்வி அடிப்படை உரிமை; கல்வி விற்பனைக்கு அல்ல; ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதே என்று மாணவர்கள் தமது உரிமைகளைக் கேட்பது வன்முறை என்று இந்த வேதாளங்கள் தேவாரங்கள் பாடுகின்றன.
வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
என்று அவ்வைக்கிழவி சொன்னது போல நாராயணிற்கு விழுந்த அடி காங்கிஸ் கொலைகாரர்களுடன் கூட்டுச் சேர்ந்திருந்து கொண்டு இலங்கைத் தமிழர்களிற்காக உண்ணாவிரதம் இருக்கிறோம் என்றவர்களின் மேல் விழ வேண்டும். மகிந்த ராஜபக்ச அரசு மக்களைக் கொன்று கொண்டு இருந்த போது "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று தன் கோரப்பற்களைக் காட்டிய தமிழ்நாட்டு பாசிசப்பேயின் மேல் விழ வேண்டும். அந்த பாசிசப்பேயை "ஈழத்தாய்" என்ற கால் பிடித்த கோமாளி அடிமைகளின் மேல் விழ வேண்டும். தமிழ்நாட்டிலே இருந்து கொண்டு தமிழ்மக்களிற்கு ஊடகங்களின் மூலம் இலங்கை அரசின் கொலைவெறியாட்டங்களை நியாயப்படுத்திக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் என்ற வியாபாரிகளின் மீது விழ வேண்டும்.
இதை தமிழ்நாட்டில் செருப்படி வாங்க வேண்டியவர்களின் கணக்கோடு நிறுத்திக் கொள்கிறேன். இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் செருப்படி வாங்க வேண்டியவர்களின் கணக்கை தொடங்கினால் அந்த பட்டியல் இலங்கையின் கடனைப் போல் இடையறாது நீண்டு இருக்கும். அரசியல்வாதிகளின் சொத்துக்கள் போல் அளவிட முடியாததாக இருக்கும். அவ்வளவு செருப்புகளிற்கு எங்கே போவது? "என்னிடம் மூவாயிரம் செருப்புக்கள் இருக்கின்றன என்று பொய் சொல்கிறார்கள், என்னிடம் ஆயிரத்து அறுநூறு செருப்புகள் மட்டுமே இருக்கின்றன" என்ற பிலிப்பைன்சின் இமெல்டா மார்க்கோசிடமோ; இல்லை மாதம் ஒரு ரூபா சம்பளம் வாங்கிக் கொண்டு இமெல்டாவின் சாதனையை முறியடித்த தமிழ்நாட்டு ஊழல்காரியிடமோ தான் அவ்வளவு செருப்புகள் இருக்கும்.