தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகிறது விலைவாசி. மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவுதான் இந்த விலைவாசி உயர்வு என்ற உண்மையைத் திட்டமிட்டே மறைப்பதில் எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. விலைவாசி உயர்வு காய்ச்சலென்றால், அதைத் தோற்றுவிக்கும் டைபாய்டு கிருமி மறுகாலனியாக்கம். கிருமியைப் பாதுகாத்துக் கொண்டே, காய்ச்சலை மட்டும் கட்டுப்படுத்தி விடலாம் என்று பித்தலாட்டம் செய்கின்றன ஓட்டுக் கட்சிகள்.
மக்களைக் கொல்லும் விலைவாசி உயர்வு என்பது மறுகாலனியாக்க அடிமைத்தனத்தின் விளைவு என்பதை விளக்கியும், மறுகாலனியாக்கத்தை வீழ்த்த உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் திரண்டு போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தியும் பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், முழக்கத்தட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கடந்த 15.3.07 அன்று தமிழகமெங்கும் விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, விழுப்புரம், நெய்வேலி, சிவகங்கை, சீர்காழி, சாத்தூர், ஓசூர், தொண்டி, பென்னாகரம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் திரளான உழைக்கும் மக்களும் தோழமை அமைப்புகளும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள், விலையேற்றத் தாக்குதலுக்கு எதிராகவும் ஓட்டுக் கட்சிகளின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி நாட்டு விடுதலைக்காகப் போராட அறைகூவுவதாகவும் அமைந்தன.
பு.ஜ. செய்தியாளர்கள்.