மக்களால், மக்களிற்கு, மக்களின் அரசு தான் ஜனநாயக அரசு என்று படம் வரைந்து, பொருள் சொல்லி முதலாளித்துவ அரசிற்கு பொழிப்புரை சொல்வார்கள். இதிலே இந்த அரசுகள் பூமியிலே இருந்து என்றைக்குமே மறைந்து போக மாட்டா என்று ஆபிரகாம் லிங்கன் பயம் காட்டுகிறார். இவை மக்களிற்கான அரசுகள் இல்லை, முதலாளிகளிற்கான அரசுகள்; ஊழலில் ஊறிப் போன குள்ளநரிகளிற்கான அரசுகள்; மகிந்த ராஜபக்ச போன்ற கொலைகாரர்களிற்கு நாட்டின் தலைவர்கள் என்று பட்டம் கொடுக்கும் அரசுகள்; பசியிலும், பட்டினியிலும் வாழும் மக்களை ஆலையின் உருளைகளில் நசுங்கும் கரும்பு போலகசக்கிப் பிழியும் அரசுகள்.
கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று சைவசமயத்தில் வைத்திருக்கிறார்கள். தாரா தேவி என்ற பெளத்த பெண்தெய்வம் தான் சரஸ்வதி என்று இந்துசமயத்தில் சொல்லப்படுகிறது என்று பேரறிஞர் மயிலை சீனி வெங்கடசாமி ஆய்வு செய்திருக்கிறார். இவர்கள் கடவுள் என்று சொல்லும் கல்வியை விற்காதே என்று மாணவர்கள் போராடியதற்காக இரத்தம் ஓட வைத்திருக்கிறார்கள் நாங்களும் புத்தனைப் போல அகிம்சையை அப்பிடியே பின்பற்றுகிறோம் என்று பினாத்தும் இந்த கொலைகார ஆட்சியாளர்கள்.
உலகவங்கி போன்ற கொள்ளையர்களின் இலாபவேட்டைக்காக இலங்கை மக்களின் அடிப்படை உரிமையான கல்வியின் தரத்தை குறைக்காதே!, கல்வி விற்பனைக்கு அல்ல! என்ற தமது கோரிக்கைகளிற்காக ஊர்வலம் சென்ற மாணவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தி விட்டு மாணவர்கள் வன்முறையில் இறங்கினார்கள் என்று வெட்கமின்றி பொய் சொல்லுகிறார்கள். ஓங்கும் குரல்கள் ஒலிக்க, தாங்கும் கரங்களில் தட்டிகள் வைத்திருந்தது தான் அவர்கள் செய்த வன்முறை. ஏழைக்குழந்தைகளிடம் இருந்து எதிர்காலத்தை பறிக்காதே என்று கேட்டது தான் அவர்கள் செய்த வன்முறைப் பிரச்சாரம், சொல்கிறார்கள் உத்தம புத்திரர்கள்.
தமிழ்மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று விட்டு மிகச் சிலரே போரில் தவிர்க்க முடியாமல் உயிர் இழந்தார்கள் என்று சொல்லும் இலங்கை அரசுகள் மாணவர்களின் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் போடுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சாவின் குடும்ப ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து விட்டோம், ஆகாவென்று எழுந்தது பார் "நல்லாட்சி" என்று மைத்திரி சிறிசேனாவும், ரணில் விக்கிரமசிங்காவும் சொல்லி ஆட்சிக்கு வந்து அதிக காலமில்லை. இலங்கை மக்களிற்கு இல்லை இனி பிரச்சனைகள் என்று இணையத்தளங்களிலும், முகப்புத்தகங்களிலும் கைப்பிள்ளைகள் கதைகள் சொல்லி கன காலம் ஆகவில்லை.
வன்முறையினால் நம் வாழ்வை இழந்தோம்; நம் மக்களைப் பலி கொடுத்தோம். அந்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ் விடுதலைக் கூட்டமைப்பு இலங்கை அரசின் இந்த வன்முறைகளை கண்டிக்கவில்லை. வழக்கம் போல் வாய் மூடி மெளனவிரதம் இருக்கிறது. இலங்கை மக்களின் எதிர்க்கட்சித் தலைவர் என்னும் பதவி வகிக்கும் சம்பந்தன் ஆளும் கட்சியின் அராஜகத்தை எதிர்க்கவில்லை. ஏனெனில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே முதலாளித்துவத்தின் அடிவருடிகள் என்னும் போது கொள்கையில் வித்தியாசம் எங்கே இருக்கப்போகிறது?. இனவாதத்தை வளர்த்து மக்களைப் பிரிப்பதற்காக ஆளும்கட்சி, எதிக்கட்சி என்று வேடம் போடும் வலதுசாரியத்தின் வாரிசுகளிற்குள் வேறுபாடு எங்கே இருக்கப் போகிறது?
இலங்கை மக்களின் அடிப்படை உரிமையான கல்வியில் கை வைக்காதே! என்று மாணவர்கள் போராடியது சிலரிற்கு முன்னிலை சோசலிசக் கட்சி தனது அரசியல் லாபத்திற்காக மாணவர்களை போராட வைத்ததாக தெரிகிறது. உலகத்து பிரச்சனைகளை எல்லாம் அரசியல் ஆய்வு செய்யும் சிலரிற்கு இலங்கையில் நடந்தது இன்னும் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் இடதுசாரிகள் என்று தமக்கு தாமே புரட்சிப்பட்டம் கொடுத்துக் கொள்ளுகிறவர்கள். அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தில் முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்களும் என்ற ஒரே காரணத்தால் தான் இந்தக் காழ்ப்புணர்வு, இந்த இருட்டடிப்பு.
கொடிய மிருகத்தின் இரையென மனிதரை
முறைவைத்துக் கொன்று கொழுக்கின்ற வர்க்கத்தை
அடியொடு அழித்து மனித விடுதலை காண
எழுந்து வாருங்கள்!!
என்று எம் தோழன் லோகநாதன் பாடினான். வலி சுமந்த மனிதர் நம் வாழ்வு மலர எழுந்து வாருங்கள் எம் தோழரே!!