வீடுகளை எரித்த நெருப்பு அணைந்திடவில்லை
விம்மி அழுத குழந்தைகள் விழி மூட மறந்தன
தேடி வந்த கால்கள் தெருக்களில் அலைகின்றன
வெறும்கையினராய் நின்றவர் மேல் "போர் என்றால் போர் என்று"
கொடுங்குரல்கள் கொல்லச் சொல்லி ஆணையிடுகின்றன
மரத்தின் தொங்கும் கிளைகளின் கீழே நிழல் கவிவது போலே
மரணத்தின் இருள் பரவிய பாலைநிலத்தில்
தானைத் தலைவர்கள் தாமே என்றவர்கள் தலைகள் பதுங்கின
மெலிந்த கைகளுடன்
மென்மையான நெஞ்சுடன்
நீ உன் தோழர்களுடன் வந்தாய்
ஒரு கையில் அரிவாளும்
மறு கையில் ஆயுதமுமாய்
அவர்களை எதிர்கொள்வோம் என்றாய்
பாறை பிளந்து பச்சைமுளை படர்ந்த போது
சேர்ந்து வந்தவரே பறித்து எறிந்தார்
அஞ்சவில்லை நீ
ஓடித் தனிமையிலே ஒதுங்கவில்லை
அதனால் தான் தொண்ணூறு வயதிலும்
அபாயகமானவர்களின் பட்டியலில் இருந்தாய்
போய் வா அய்யா!
தன்னலம் தெரியா தலைமகனே!
நம் சுதந்திரக் கப்பலின் வழிநட்சத்திரமே!
தொண்ணூறு வயது பயங்கரவாதியே
போய் வாரும் அய்யா!!!