Language Selection

may_2007.jpg

உ.பி. மாநிலம் வாரணாசி மாவட்டத்திலுள்ள பேல்வா கிராமத்தைச் சேர்ந்த இலட்சுமிணாவிடம் அடமானம் வைப்பதற்குத் தனது திருமணப் புடவையைத் தவிர, மதிப்புமிக்க பொருட்கள் வேறெதுவும் இல்லை. அந்தச் சேலையை யாராவது அடமானம் எடுத்துக் கொண்டு நூறு ரூபாய் கொடுத்தால், சாகக் கிடக்கும் தனது மகள்

 சீமாவைக் காப்பாற்றி விடலாம் என நம்பினார், அவர். ஆனால், சேலையை அடகு வைப்பதற்கு முன்பே, சாவு முந்திக் கொண்டு விட்டது. ஒன்பது வயதான சீமா என்ற அந்தச் சிறுமியின் உயிரைக் குடித்த நோயின் பெயர் ""பட்டினி''!

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோனேபத்ரா மாவட்டத்திலுள்ள ராப் கிராமத்தைச் சேர்ந்த 18 காசியா பழங்குடி இனக் குழந்தைகள் பட்டினியால் நோய்வாய்ப்பட்டு இறந்து போயின. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் பேல்வா கிராமத்தில் மட்டும் ஐந்து குழந்தைகள் பட்டினிக்குப் பலியாகியுள்ளன. கிழக்கு உ.பி. பகுதியில் கடந்த இரண்டே ஆண்டுகளில் 174 பேர் பட்டினிக்குப் பலியாகியிருப்பதாக மனித உரிமைகளுக்கான மக்கள் கண்காணிப்புக் குழு குறிப்பிடுகிறது.


கிழக்கு உ.பி. பகுதியில் அடிக்கடி ஏற்படும் வறட்சியால் விவசாயம் நசிந்து விட்டது. சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல், பாரம்பரியமிக்க நெசவுத் தொழில் நொடித்துப் போய் விட்டது. நிரந்தரமான மாற்று வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காததால், இப்பகுதி மக்கள் பட்டினியோடு போராடி வருகின்றனர்.

 

பல நாட்கள் பட்டினி; சில வேளைகளில் அரிசிச் சோறும், வேகவைத்த உருளைக்கிழங்கு மட்டுமே உணவு. இதன் காரணமாக புரோட்டீன் சத்துக் குறைவு ஏற்பட்டு, என்ன ஏதுவென்று கண்டுபிடிப்பதற்கு முன்பே குழந்தைகள் இறந்து விடுவதாக குழந்தை நல மருத்துவர் ராஜேந்திர பதக் குறிப்பிடுகிறார். விவசாயக் கூலி வேலையை நம்பி வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்டோரும், நெசவுத் தொழிலை நம்பியுள்ள முசுலீம்களும் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

உ.பி. மாநில சட்டசபையைக் கைப்பற்றுவதற்காக சாதிக் கூட்டணிக் கணக்கில் மூழ்கிப் போய்விட்ட ஓட்டுக் கட்சிகளுக்கு, இந்தப் பட்டினிக் கணக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ""உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறை இல்லாதபொழுது பட்டினிச் சாவு எப்படி நடக்க முடியும்?'' எனத் திமிராகக் கேட்கிறது அதிகார வர்க்கம். மேலும், பட்டினியோடு போராடும் இம்மக்களை வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்வதாகப் பிரித்து, ரேசன் பொருட்கள் கிடைக்காமலும் வயிற்றில் அடித்துவிட்டது. காங்கிரசும், போலி கம்யூனிஸ்டுகளும் பீற்றிக் கொள்ளும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், இந்தப் பகுதியில் நடைபெற்றதற்கான அறிகுறியே தென்படவில்லை.

 

எத்தியோப்பியா, சூடான், சோமாலியா போன்ற ஏழை ஆப் பிரிக்க நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு, இந்தியாவின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நடந்து வருகின்றன. தாராளமயத்தை மேலும் தீவிரமாக அமல்படுத்துவதுதான் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், பட்டினியையும் ஒழிப்பதற்கான ஒரே வழி என்கிறார், ப.சிதம்பரம்.

 

தாராளமயத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாராளமயம் நத்தை வேகத்தில்தான் நகர்ந்து வருகிறதா? தாராளமயம் "நத்தை' வேகத்தில் நகரும்பொழுதே, இத்துணை பட்டினிச் சாவுகளையும், தற்கொலைச் சாவுகளையும் ஏற்பத்தியிருக்கிறது என்றால், தீவிரமான தாராளமயம் நாட்டையே சுடுகாடாக்கி விடாதா?