Language Selection

may_2007.jpg

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனப்படும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராக தொடர்ந்து உறுதியாகப் போராடிவரும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், சிறு வணிகத்தை விழுங்க வந்துள்ள ரிலையன்ஸ் வால்மார்ட்டுக்கு எதிராக ""சிறு வணிகம், சிறு தொழில்கள் உயர்த்திப் பிடி! சூறையாடும்

 ரிலையன்ஸை துரத்தியடி!'' என்ற மைய முழக்கத்துடன், மே நாளன்று ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து, தமிழகமெங்கும் வீச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

 

தற்போது சென்னையில் 24 இடங்களில் ரிலையன்ஸ் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் கடைகளைத் திறப்பது என்ற வெறியோடு ரிலையன்ஸ் செயல்பட்டு வருகிறது. வால்மார்ட், திரிநேத்ரா போன்ற நிறுவனங்களும் அடுத்தடுத்துக் களத்தில் இறங்க உள்ளன. பன்னாட்டு, ஏகபோக மூலதனத்தின் இந்தத் தாக்குதல் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி வியாபாரிகளுடன் நிற்கப் போவதில்லை. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பொருட்கள், ஹார்டுவேர் கடைகள், துணிக்கடைகள், பிற நுகர்பொருட்கள் என அடுக்கடுக்காக அனைத்துத் துறைகளிலும் நுழையவிருப்பதாக பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் அறிவித்துள்ளன.

 

எதிரிகளின் தாக்குதல் இப்படித் தீவிரமடைந்து வரும் நிலையில் ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் கள்ளத்தனமாக மவுனம் சாதிக்கின்றன. இருப்பினும், தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், காய்கறி அங்காடிகளின் சிறுவணிகர்கள் முதலானோர் மட்டுமின்றி, எல்லா பிரிவு மக்கள் மத்தியிலும் இப்பிரச்சாரம் உற்சாகமான ஆதரவைப் பெற்று வருகிறது. இவ்வமைப்புகள் வெளியிட்டுள்ள ""சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!'' என்ற சிறு வெளியீடு வணிகர்கள் மத்தியிலும், பரவலான மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் வெளியீடுகளை விற்பனைக்காகக் கோரிப் பெற்று வருகின்றனர். அச்சிட்டுத் தருவதற்கும் முன் வந்திருக்கிறார்கள். இது புரட்சிகர அரசியலுக்குக் கிடைத்த வெற்றி.

 

நெல்லையில் இவ்வமைப்புகள் நடத்திய கோக் எதிர்ப்புப் போராட்டம் போலவே ரிலையன்ஸ் எதிர்ப்புப் போராட்டமும் ஒரு முத்திரையைப் பதிக்கும் போராட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஓங்கட்டும் போராட்டம்!


பு.ஜ. செய்தியாளர்கள்.