புதிய ஜனநாயகம் இதழின் வாசகர்களுக்கு மட்டுமல்ல, ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் போன்ற முதலாளித்துவப் பத்திரிகைளின் வாசகர்களுக்கும் ""நல்லகாமனின் கதை'' நினைவிருக்கக் கூடும். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான நல்லகாமன், தமிழக ஆயுதப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பைரவ் சிங்கின் வீட்டை, ரூ. 5,000 கொடுத்து ஒத்திக்கு எடுத்தார்.
ஒத்திப் பணத்தைத் திருப்பித் தராமலேயே தனது வீட்டில் இருந்து நல்லகாமனைத் துரத்தத் திட்டம் போட்டார் பைரவ் சிங். இதற்கு உடன்பட மறுத்தார் நல்லகாமன். அப்பொழுது வாடிப்பட்டியில் போலீசு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ""சங்கரராமன் கொலை வழக்கு புகழ்'' பிரேம்குமார், இப்பிரச்சினையில் தலையிட்டு கட்டைப் பஞ்சாயத்து செய்ததோடு, நல்லகாமன் குடும்பத்தினரை மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தார்.
இம்மனித உரிமை மீறலுக்காக பிரேம்குமார் உள்ளிட்டு 11 போலீசாரைத் தண்டிக்கக் கோரி கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் சட்டரீதியாகப் போராடி வருகிறார் நல்லகாமன். (மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள நல்லகாமன் கதை என்ற சிறு வெளியீட்டிலும்; புதிய கலாச்சாரம் அக்.2002; புதிய ஜனநாயகம் ஜூலை 2003 இதழ்களிலும் நல்லகாமனின் போராட்டம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.)
இந்த வழக்கில், தற்பொழுது தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீசு கண்காணிப்பாளர் பிரேம்குமாருக்கும், மற்றும் செல்லையா, சுப்பிரமணி, ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று போலீசாருக்கும் ஒரு மாத கால சாதாரண சிறை தண்டனை விதித்து, 3.4.07 அன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதி மன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி, அதற்காகத் தனது சொத்து சுகத்தையெல்லாம் இழந்துவிட்ட நல்லகாமன், 25 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்திருக்கும் இத்தீர்ப்பை, ""அற்பத்தனமானது'' என விமர்சித்திருக்கிறார்.
போலீசு சித்திரவதையால் பாதிக்கப்பட்ட நல்லகாமன், தனது சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக மனம் வெதும்பிக் கூறிய விமர்சனமாக, இதை ஒதுக்கிவிட முடியாது. மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இவ்வழக்கு தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பை முழுமையாகப் படித்தால், மனசாட்சியுள்ள யாருமே இந்த முடிவுக்குத்தான் வர முடியும்.
சிறு காயம் ஏற்படுத்துதல், கைவிலங்கு போட்டு இழுத்துச் செல்லுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பிரேம்குமாரையும்; மற்ற மூன்று போலீசாரையும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது, மதுரை உயர்நீதி மன்றக் கிளை. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி, இக்குற்றங்களுக்கு, இரண்டு ஆண்டு முதல் மூன்றாண்டு கால சிறைத் தண்டனையைக் கண்ணை மூடிக் கொண்டு வழங்க முடியும். ஆனால், உயர்நீதி மன்ற நீதிபதியோ, நீதியை நிலைநாட்ட இக்குற்றவாளிகளுக்கு ஒரு மாத கால சாதாரண சிறைத் தண்டனையே போதும் எனத் தீர்ப்பு எழுதியிருக்கிறார். பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் என்ற பழமொழிக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ள இத்தீர்ப்பை, அற்பத்தனமானது என விமர்சிக்காமல், கைதட்டி வரவேற்கவா முடியும்?
நல்லகாமனைச் சித்திரவதை செய்தது தொடர்பாக, தன் மீது தமிழக அரசு சார்பாக மாவட்ட வருவாய் அதிகாரி (ஆர்.டி.ஓ.) போட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி பிரேம்குமார் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கற்பகவிநாயகம், பிரேம்குமாரின் வழக்கைத் தள்ளுபடி செய்து ஐந்தாண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பில் ""சட்டத்தின் மீதோ உண்மையின் மீதோ பிரேம்
குமாருக்குக் கடுகளவு கூட மரியாதை இல்லை'' எனப் பகிரங்கமாகவே கண்டனம் செய்திருந்தார். இப்படிபட்ட நடத்தை கொண்ட பிரேம்குமாரை, ஒருபுறம் இதே இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளி என அறிவித்த மதுரை விரைவு நீதிமன்றம், மறுபுறம் அவரது நன்னடத்தையின் காரணமாகத் தண்டனை எதுவும் வழங்காமல் விடுதலை செய்வதாக ஜூலை 2003இல் தீர்ப்பளித்தது. விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, பிரேம்குமாரின் விடுதலை ரத்து செய்யப்பட்டு, அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி நல்லகாமன் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார்.
""குற்றவாளிகள் போலீசு அதிகாரிகள் என்பதால், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் விசாரணை நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்) மெத்தனமாக நடந்து கொண்டுள்ளதாக'' அத்தீர்ப்பை விமர்சித்துள்ள உயர்நீதி மன்றக் கிளையோ, மூன்று ஆண்டு காலத் தண்டனை கொடுப்பதற்குப் பதிலாக ஒரு மாத சிறைத் தண்டனை போதும் எனத் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் நீதியைக் கேலிக் கூத்தாக்கி விட்டது. குற்றவாளி பிரேம்குமார் போலீசு கண்காணிப்பாளர்; போலீசு சித்திரவதையால் பாதிக்கப்பட்ட நல்லகாமன், சாதாரண குடிமகன் என்பது தவிர, உயர்நீதி மன்றத்தின் கருணைக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
""குற்றவாளிகள், இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான, உயிர் வாழும் உரிமையை மீறியிருக்கிறார்கள்; அரசு ஊழியர்கள் பொது மக்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்ற இலக்கணத்தைக் குற்றவாளிகள் கடைப்பிடிக்கவில்லை; இப்படிபட்ட மனித உரிமை மீறல்கள் நடப்பதைத் தடுக்கும் வண்ணம் தண்டனை வழங்க வேண்டும்'' என்றெல்லாம் தீர்ப்பில் ""கடுமை'' காட்டியிருக்கும் நீதிபதி, தண்டனை வழங்குவதில் வேண்டுமென்றே ""கோட்டை'' விட்டதன் மூலம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கிறார்.
நல்லகாமன் போலீசாரால் சித்திரவதை செய்யபட்டது தொடர்பாக, பிரேம்குமார் உள்ளிட்டு நான்கு போலீசார் மீது கொலைமுயற்சி, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், துன்புறுத்தி வாக்குமூலம் வாங்குதல் உள்ளிட்டு ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் 1983ஆம் ஆண்டே தமிழக அரசு வழக்கு பதிவு செய்திருக்கிறது. நல்லகாமன், தன்னைச் சித்திரவதை செய்த பிரேம்குமார் உள்ளிட்ட 11 போலீசார் மீது கொலைமுயற்சி, சட்ட விரோதமாகக் கும்பல் சேர்த்துக் கொண்டு தாக்குதல் (க்ணடூச்தீஞூதடூ ச்ண்ண்ஞுட்ஞடூதூ) உள்ளிட்டு 13 குற்றச்சாட்டுகளின் கீழ் 1984ஆம் ஆண்டே தனிநபர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
இக்குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் ஏனோதானோவென்று சுமத்தப்பட்டவையல்ல; இறந்துபோய்விட்ட நல்லகாமனின் மனைவி சீனியம்மாள், வாடிப்பட்டி போலீசு நிலையத்தில் பிரேம்குமாரால் மானபங்கப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, ஆசிரியர் சங்கங்கள் சம்பவம் நடந்த மறுநாளே (2.2.82) கண்டன ஊர்வலம் நடத்தின. நல்லகாமனையும், அவரது மகன் மதிவாணனையும் கைவிலங்கிட்டு, சங்கிலியால் பிணைத்து, வாடிப்பட்டி போலீசு நிலையம் தொடங்கி வாடிப்பட்டி பேருந்து நிலையம் முடிய, பிரேம்குமாராலும், மற்ற போலீசாராலும் அடித்து இழுத்துச் செல்லப்பட்டதை அந்த ஊரே பார்த்து திகைத்துப் போய் நின்றிருக்கிறது. பிரேம்குமாரின் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, வாடிப்பட்டியில் 3.2.82 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இம்மனித உரிமை மீறல் தொடர்பாக தமிழக அரசு நடத்திய விசாரணையில், 212 பேர் நேரடியாகவே மாவட்ட வருவாய் அதிகாரியிடம் சாட்சியம் அளித்துள்ளனர். இவ்விசாரணையின் அடிப்படையில், சம்பவம் நடந்தபொழுது உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பிரேம்குமார் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சாட்சியங்கள் அனைத்தும் ஆவணங்களாகவே பதிவாகி இருப்பதால், 25 ஆண்டு காலம் கழிந்த பிறகும், இச்சாட்சியங்களுள் ஒன்றுகூட பிறழ் சாட்சியமாக மாறவில்லை. நல்லகாமன் சார்பாக வாதாடிய மனித உரிமைப் போராளியும், மூத்த வழக்கறிஞருமான கே.ஜி. கண்ணபிரானும், மனிதஉரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் பிரேம்குமாரையும், மற்ற போலீசாரையும் ஆர்.டி.ஓ.வும், நல்லகாமனும் குறிப்பிட்டுள்ள அவரது குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதை, பல்வேறு உச்சநீதி மன்றத் தீர்ப்புகளில் இருந்தும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இத்துணை ஆதாரங்களையும், சாட்சியங்களையும் கீழமை நீதிமன்றம் மட்டுமல்ல, உயர்நீதி மன்றமும் கூட குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து விட்டது. ஒப்புக்குச் சப்பாணியாக இரண்டு சாதாரண பிரிவுகளின் கீழ் தண்டித்து, குறைவான தண்டனையளித்து தனது அதிகார வர்க்க பாசத்தைக் காட்டியிருக்கிறது, உயர்நீதி மன்றம்.
""நல்லகாமனும், அவரது மகன் மதிவாணனும் போலீசாரால் தாக்கப்பட்டிருப்பது உண்மையென்றாலும், அவ்விருவரின் உயிர்நிலை உறுப்புகளின் மீது போலீசார் தாக்கவில்லை. எனவே, ""கொலை முயற்சி குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்வதாக'' உயர்நீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ""போலீசு அடி'' என்ற ஒருவகை சித்திரவதை இருப்பதை, இந்த நீதிபதி அனுபவித்து இருந்தால், தீர்ப்பை வேறுமாதிரி எழுதியிருப்பார்.
பிரேம்குமாரின் அட்டூழியங்களை நியாயப்படுத்துவதற்காகவே, ""நல்லகாமனும் அவரது குடும்பத்தாரும் போலீசாரைக் கடமையை செய்ய விடாமல் தடுத்துவிட்டதாக''க் குற்றம் சுமத்தி ஒரு மோசடி வழக்கை நல்லகாமன் மீது தமிழக போலீசு தொடுத்திருந்தது. இவ்வழக்கில், நல்லகாமனைக் குற்றவாளியாக அறிவித்த மதுரை விரைவு நீதிமன்றம், அவரது நன்னடத்தையைக் காரணம் காட்டி, அவருக்குத் தண்டனை விதிக்காமல் விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி நல்லகாமன் தொடுத்த வழக்கை, மதுரை உயர்நீதி மன்றக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
இதன்மூலம், லீசுக்கு எடுத்த வீட்டைக் காலி செய்யக் கோரும், குடியுரிமை பிரச்சினையில், சக போலீசுக்காரன் பைரவ் சிங்குக்காக, பிரேம்குமார் தனது அதிகார வரம்பை மீறி போலீசு நிலையத்தில் கட்டைப் பஞ்சாயத்து செய்ததையும்; இதற்காக நல்லகாமன், அவரது மனைவி சீனியம்மாள், மகன் மதிவாணன் மூவரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு சித்திரவதை செய்ததையும்; நல்லகாமன் மனைவியைக் கேவலமாகத் திட்டி மானபங்கப்படுத்தியதையும் போலீசாரின் ""கடமையாகவும்'', இந்த அநியாயத்தைத் தடுக்க முயன்ற நல்லகாமனின் தற்காப்பு உரிமையைக் ""குற்றமாகவும்'' காட்டியிருக்கிறது, உயர்(அ) நீதி மன்றம்.
நியாயப்படி மட்டுமல்ல, சட்டப்படி பார்த்தாலும் கூட தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஓ போட்ட வழக்கில், மதுரை விரைவு நீதிமன்றம் பிரேம்குமார், செல்லையா, சுப்பிரமணி, ராமகிருஷ்ணன் ஆகிய நால்வரையும் குற்றவாளியாக அறிவித்தவுடனேயே, தமிழக அரசு இந்த நான்கு குற்றவாளிகளையும் பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். பிரேம்குமாரோ, சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. தி.மு.க. இடையே நிலவும் அரசியல் ஆதாய போட்டாபோட்டி காரணமாகவே தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகும்கூட பிரேம்குமாரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கத் தயங்குகிறது, தமிழக அரசு.
செல்லையா, ராமகிருஷ்ணன் என்ற இரண்டு குற்றவாளிகளும் ஏற்கெனவே எவ்வித வில்லங்கமும் இன்றிப் பதவியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். சுப்பிரமணி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, உயர்நீதி மன்றத் தீர்ப்பு வந்த பிறகே, பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நான்கு குற்றவாளிகளுள் ஒருவர்கூட உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படவில்லை.
தி.மு.க. அரசின் இந்த மெத்தனத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிரேம்குமார், ""தான் தஞ்சாவூர் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராகப் பணிபுரிவதாக'' ஒரு பொய்யைச் சொல்லி, போலீசாரிடம் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவை உச்சநீதி மன்றத்திடம் இருந்து பெற்றுவிட்டார். இப்படியாக, ஒப்புக்காக அளிக்கப்பட்ட அற்பத்தனமான தீர்ப்பும், ஒருமாதகாலச் சிறை தண்டனையும் நடைமுறையில் ஒன்றுமில்லாத காகிதக் குப்பையாக ஆக்கப்பட்டு விட்டது.
போலீசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துச் சட்டரீதியாகப் போராடும் பொழுது, அப்போராட்டம் இந்திய ஜனநாயகம், அதைத் தாங்கி நிற்கும் நீதிமன்றம் ஆகியவற்றின் போலித்தனத்தையும், கயமைத்தனத்தையும் அம்மணமாக்கிவிடுகிறது என்பதற்கு நல்லகாமனின் கதை இன்னுமொரு உதாரணம். மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போலீசாரைச் சட்டப்படி தண்டிக்கக் குதிரைக்குக் கொம்பு முளைக்க வேண்டும் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அமைப்பு ரீதியாகப் போராடுவதும், மக்கள் நீதி மன்றங்களை அமைத்து போலீசு மிருகங்களைத் தண்டிப்பதும்தான் ஒரே மாற்று வழி!
· ரஹீம்