தேர்தல் வரும் போதெல்லாம் மக்களை அணுகுவதற்கு அரசியல்வாதிகள் புதிய புதிய யுக்திகளை கையாள்வது அவர்களது தந்துரோபயமான அணுகு முறையாகும். இன்று முன்னாள் போராளிகளை அரசியற் களத்தில் பகடைகளாக்கி தங்கள் அரசியல் வாழ்க்கையினை, அரசியற் பிழைப்பினை நகர்த்திக் கொள்ள பல அரசியற் பிரமுகர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.
யார் இந்த முன்னால் போராளிகள், அவர்கள் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள், அவர்களோடு இருக்கும் அரசியல் என்ன..? இப்படி பல கேள்விக்களோடு தான் நாம் இந்த பிரச்சனையினை பார்க்க வேண்டும். இது பரந்து விரிவாக ஆராய்ந்து அதனை தெளிவாக மக்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் தான் எங்களால் ஓர் ஆரோக்கியமான அரசியற் கருத்தினையும் தெளிவினையும் சாதாரண மக்களுக்கும், கடந்த கால வாழ்நாட்களை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்து செயற்பட்ட முன்னால் போராளிகளுக்கும் ஏற்படுத்த முடியும்.
1980களின் ஆரம்பம் பெரும்பாலான தமிழ் இளைஞர்களை அரசியலில் நாட்டம் கொள்ள வைத்த காலகட்டமாகும். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாற்றம் பெற்ற பின்னர் அவர்களுடைய அரசியற் பிரச்சாரங்களும், பொது இடங்களில் சந்திக்கு சந்தி உணர்ச்சி மிக்க வீர வசனங்களோடான மேடைப் பேச்சுக்களும் பல தமிழ் இளைஞர்களை அரசியலில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தனித் தமிழீழம் என்ற கூட்டணியின் கோஷம் இளைஞர்கள் மனதில் எதிர்பார்ப்பினையும், நம்பிக்கையினையும் உருவாக்கியது. இளைஞர்களின் இந்த எதிர்பார்ப்பினை அன்றைய அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலனுக்காக சில இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்து தங்கள் சிறுசிறு அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொண்டார்கள். இறுதியில் கூட்டணியினை புறந்தள்ளிய இளைஞர்களின் அரசியற் பாதை ஆயுதப் போராட்டமாக உருமாற்றம் பெற்று பல இயக்கங்களை உருவாக்கி கொண்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியற் பாதையினை புறந்தள்ளினாலும், கூட்டணி விதைத்த தமிழீழம் என்ற அரசியற் கருத்து இளைஞர்கள் மனதிலும் பல தமிழ்மக்கள் மனதிலும் ஆழமாக வேறூண்றி கொண்டது. தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தமிழீழம் தான் அரசியற் தீர்வாக முடியும் என்ற முழுமையான நம்பிக்கையோடு இளைஞர்களின் போராட்ட உணர்வு வளர்த்தெடுக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் 30வருடங்கள் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் புலிகளின் ஆயுதம் மௌனிக்கும் வரை தமிழீழம் என்றே ஒலித்துக் கொண்டே மௌனமாகியது.
இந்த 30வருட காலத்தில் போராடி மடிந்தவர்கள் மட்டும் தான் போராளிகள் இல்லை, தனது குடும்பத்தை, உறவுகளை, தொழிலை, கல்வியினை.., இப்படி பல இழப்புக்களோடு போராட்டத்தில் தங்களை இணைத்து இறுதியில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து, தொடர்ந்த முகாம்களிலும் சிறைகளிலும் முடக்கப்பட்டு மகிந்த பேரினவாத அரசினால் கொல்லப்பட்ட மறைக்கப்பட்டவர்கள் போக வெளியே வந்துள்ள முன்னாள் போராளிகளான இவர்கள் சமூகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்கள் தொடர்ந்தும் இராணுவத்தினாலும், உளவுப்பிரிவினராலும் கண்காணிக்கப்படுவதால் மக்கள் அவர்களிடமிருந்து தங்களை விலக்கி வைத்துக் கொள்ளும் சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் பாதிக்கப்படுபவர்கள் பெண் போராளிகளே. இந்த 6வருட காலத்தில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வளமான வாழ்க்கையினை அமைத்துக் கொடுக்க பதவியில் இருக்கும் எந்த அரசியல்வாதிகளும் முன் வந்ததாக இல்லை. துப்பாக்கியோடு அவர்கள் இருந்த போராட்ட காலத்தில் அவர்களை வைத்து பிழைப்பு நடாத்தி அரசியல்வாதிகள் இன்று அவர்களை கையாலாகாதவர்களாக கருதி அவர்களை ஓரங்கட்டி வைத்துள்ளார்கள். அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டியதில்லை, அவர்களுக்கு உதவி செய்து அவர்களை இயல்பான வாழ்க்கையிலே எந்த கண்காணிப்போ அச்சுறுத்தலோ இல்லாத ஒர் பாதுகாப்பான சந்தோஷமான வாழ்க்கையினை அமைத்துக் கொடுக்கக் கூட இந்த அரசியல்வாதிகள் தயாராக இல்லை.
இப்போது தேர்தல் வந்துவிட்டதால், அரசியல்வாதிகள் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளுக்காகவும், தாங்கள் அரசியலில் தனிவழியினை உருவாக்கி கொள்வற்காகவும் வித்தியாதரன் போன்ற பழைய ஊடகவியலாளர்கள் முன்னாள் போராளிகளை அரசியற் பகடைகள் ஆக்கியுள்ளார். போராட்ட காலத்தில் புலிகளோடு வாலையும், மகிந்தாவிற்கு தலையையும் காட்டிக் கொண்ட இந்த பழைய ஊடகவியளாளர் வித்தியாதரன் இன்று முன்னாள் போராளிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். கூட்டமைப்புக்கு போட்டியாக தான் ஓர் அரசியற் கட்சியினை உருவாக்கி தானும் அரசியலில் ஒரு இடத்தினை நிரந்தரமாக்கி கொள்ள துடிக்கின்றார். இனவாத அரசியலை விதைத்து பல்லாயிரக் கணக்கான மக்களை அழித்து, இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கையினை சீரளிவுக்குள்ளாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, பின்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட புலிகளுக்கு வாலைக் காட்டிக் கொண்டு பேரினவாத சிங்கள அரசோடும், இந்திய ஆக்கிரமிப்பாள அரசோடும் கைகோர்த்து கொண்ட கூட்டமைப்பிற்கும் இன்று முன்னாள் போராளிகள் மீது கருணை கொண்டு உருகி வழியும் வித்தியாதரனுக்கும் அரசியலில் எந்தவித வேறுபாடுமில்லை.
ஏற்கனவே ஒரு தவறான அரசியற் போக்கினால் இன்று அனாதைகளாக கைவிடப்பட்ட இந்த முன்னால் போராளிகளை மீண்டுமொரு தவறான அரசியலிற்கு கொண்டு செல்லும் இந்த அரசியல்வாதிகளின் அரசியல் என்ன என்பதை இந்த முன்னால் போராளிகளும் மக்களும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக கூறிக் கொண்டு மக்களை இனவாத அரசியலுக்குள் இழுத்து விழுத்தி, சிங்கள பேரினவாத அரசோடும், வெளிநாட்டு அரசியல்வாதிகளோடும் கட்டிப் பிடித்து தங்கள் அரசியற் பிழைப்புக்கு சுகம் தேடும் இந்த அரசியல்வாதிகளா மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள். மேடைப் பேச்சையும், ஊடகங்களுக்கு உருக்கமான போட்டிகளையும் தவிர இது வரையில் இவர்கள் சாதித்ததென்ன. தங்களை எதிர்ப்பவர்களை, ஏற்றுக் கொள்ளாதவர்களை புத்திசாலித்தனமாக அழித்தொழிக்க மட்டும் இவர்களால் முடியுமே தவிர, மக்களுடைய எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண இவர்களால் முடியாது.
மீண்டும் மீண்டும் இந்த அரசியல்வாதி நம்பி உங்கள் வாழ்க்கையினையும், உங்கள் எதிர்கால சந்ததியிருடைய வாழ்க்கையினையும் கேள்விக் குறியாக்கிக் கொள்ளாமல், இன்றைய உலக அரசியல் பொருளாதாரக் கொள்கையினை புரிந்து கொண்டு நாம் செயற்பட வேண்டும். இன்று நாளாந்தம் நாம் இழந்து கொண்டிருக்கும் எமது வாழ்வுரிமைகள் பாதுகாத்துக் கொள்ள எங்களுக்காக குரல் கொடுக்கும் சரியான அரசியலை இனங்கண்டு அந்த அரசியலோடு இணைந்து எங்கள் சகல உரிமைகான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். தமிழ் சிங்கள இனவாதிகளை, பிழைப்பு அரசியல்வாதிகளை அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓரங்கட்டி, எல்லா மக்களும் சாதி, சமய, இன வேறுபாடற்று சம உரிமையோடும், சம அந்தஸ்த்தோடும் கலைகலாச்சார பண்பாட்டோடு வாழும் ஒரு வளமான கூட்டு வாழ்க்கை சமுதாயத்தினை உருவாக்க சரியான அரசியற் பாதையில் பயணிக்க வேண்டிய தேவை எம் எல்லோர் முன்னுமுள்ளது.