யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இலங்கைத் தமிழ்ச்சமுகத்தின் கல்விக்கு பெரும் பங்களிப்பை நூற்று இருபத்தைந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதன் அதிபர்கள், ஆசிரியர்கள் தமது வாழ்வை கல்விக்காகவும், மாணவர்களிற்காகவும் அர்ப்பணித்தார்கள். உறுதியான பொதுவுடமை போராளியான கார்த்திக்கேசன் கல்லூரியின் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற பின்பு, ஈழநாடு பத்திரிகை ஆசிரியராக இருந்த சபாரத்தினம், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் என்று அவர்களின் வரிசை மிக நீளமானது.
தமிழ் மக்களிற்காக தனது இன்னுயிரை இளம் வயதில் துறந்த சிவகுமாரன் போன்ற ஆயிரக்கணக்கான போராளிகளை கல்லூரி தமிழ்ச்சமுதாயத்திற்கு தந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அதன் முதலாவது தலைவராக இருந்த பேராசிரியர் கைலாசபதி போன்ற ஆயிரம், ஆயிரம் கல்வியாளர்களை அது கல்விச்சமுகத்திற்கு தந்தது. சமுக உணர்வும், அதற்காக பணி புரிவதுமே மனிதர்களின் வாழ்வை முழுமை பெறச் செய்கிறது என்ற பெரும் தத்துவத்தை கல்வியுடன் சேர்த்து மாணவர்களிற்கு கனிவுடன் வழங்கிய ஆசிரியர் மகாதேவாவின் காலடிச் சுவடுகளில் கல்லூரி பழைய மாணவர்கள் வன்னியில் ஏழைக்குழந்தைகளிற்கு கல்விப்பணி செய்கிறார்கள்.
முல்லைத்தீவு தண்டுவான் கிராமத்தில் "மகாதேவா படிப்பகம்" என்ற கல்விசார் சமுகசேவை அமைப்பொன்றை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் நான்கு வருடங்களாக நடாத்தி வருகின்றார்கள். யாழ் இந்துக் கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியராக இருந்து மறைந்த திரு.மகாதேவா அவர்களின் ஞாபகார்த்தமாக இந்த படிப்பகத்தை அவரின் மாணவர்கள் நடாத்தி வருகிறார்கள். திரு.மகாதேவா அவர்கள் தமது பாடசாலைப்பணி முடிந்தவுடன் மாலைநேரங்களில் மாணவர்களிற்கு இலவசமாக கற்பித்து வந்தவர்; தமது மாணவர்கள் முன்மாதிரிகளாக, சமுக உணர்வு கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதை எப்பொழுதும் வலியுறுத்தி வந்தவர். இன்று அவரின் மாணவர்கள் அவரின் சொல்லை, அவரின் செயலை தொடருகின்றார்கள்.
இத்தகு பெருமைமிகு வரலாறும், சமுக அர்ப்பணிப்பும் கொண்ட கல்லூரியின் நூற்று இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை அதன் பிரித்தானிய பழைய மாணவர்கள் சங்கத்தவர்கள் மூன்றாந்தர தமிழ்ச்சினிமா கூத்தாடிகளை கூட்டிக் கொண்டு வந்து கொண்டாடுகிறார்கள். அதற்காக அதிகமில்லை மகாஜனங்களே ஐம்பது ஆயிரம் பவுண்டுகள் தான் செலவளிக்கப் போகிறார்கள். ஆகக் குறைந்த கட்டணமான இருபது பவுண்டுகள் கொடுத்து போகும் உங்களிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, ஆயிரக்கணக்கனக்கில் பணம் வாங்கிய ஒருவர் அசட்டு ஜோக்குகள் சொல்லுவார். நீங்கள் எத்தனையோ தரம் கேட்ட பாடல்களை மறுபடியும் வந்து பாடப் போகிறார்கள்.
சிங்கள இனவாத இலங்கை அரசின் தமிழ்மக்களின் மீதான கொடுந்தாக்குதலினால் தமிழ்மக்களின் வாழ்வு அழிந்து போயிருக்கிறது. எத்தனையோ நம் குழந்தைகள் தம் தாய், தந்தையரை இழந்து நீர் நிற்கா விழிகளுடன் அலைந்து திரிகிறார்கள். எத்தனையோ நம் குழந்தைகள் பசிக்கு ஒரு வாய் உணவு இல்லாமல் பரிதவிக்கிறார்கள். வன்னியிலும், மலையகத்திலும், கிழக்கு மாகாணத்திலும் மரத்தடிகளிலும், மாட்டுக்கொட்டகை போன்ற கட்டிடங்களிலும் நமது குழந்தைகள் பசித்த வயிறுடன் பாடம் படிக்கிறார்கள். பாடசாலைகளில் போதிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. மழைக்கு ஒதுங்க ஒழுங்கான ஒரு கட்டிடம் இல்லை. கல்வி என்னும் அமுது உண்ண காலை எழுந்து வரும் குழந்தைகளிற்கு குடிக்க ஒரு வாய் கஞ்சி கூட இல்லை.
யாழ்ப்பாணத்து முன்ணனிப்பாடசாலைகள் நன்கொடை கேட்டு ஏழைக்குழந்தைகளை வர முடியாமல் முள்வேலி இடுகின்றன. போதுமான தரம் இருந்தாலும் கொடுக்கப் போதுமான பணம் இல்லாவிட்டால் "சற்றே விலகி இரும் பிள்ளாய்" என்று அவை தடை போடுகின்றன. தாம் கொள்ளை அடிப்பதற்காக இலங்கை மக்களின் அடிப்படை உரிமையான இலவசக்கல்வியை முதலாளிகளிற்கு விற்க இலங்கை அரசு முயன்று வருகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் இலவசக்கல்வியை இல்லாமல் செய்ய இலங்கை அரசிற்கு இலஞ்சம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவை எதுவும் ஏன் இவர்களின் கண்களிற்கு தெரிவதில்லை?. இத்தனை ஆயிரம் பவுண்டுகள் இலங்கைப் பணத்திற்கு எத்தனையோ கோடிகளை நம் குழந்தைகள் உணவில்லாமல், கல்வியில்லாமல் தவிக்கும் போது தமிழ்நாட்டு சினிமா கோமாளிகளிற்கு ஏன் கொட்டிக் கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்து பாடசாலைகளில் போதைமருந்து விற்பனை நடக்கின்றது என்று யாழ்ப்பாண அரசாங்க அதிபரது அறிக்கை தெரிவிக்கின்றது. அதிர்ச்சியும், கவலையும் தரும் போதை மருந்து பாவனைக்கு அடிமைகளான நம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி ஏன் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இவ்வளவு பணத்தை வீணாக்குபவர்கள் மது, போதை மருந்து, வன்முறை குறித்த உளநல ஆலோசனைகள், சிகிச்சைகளை மாணவர்களிற்கு அளிக்க ஏன் முன் வருவதில்லை.
புலம்பெயர் கோவில்கள் என்ற பெரும் வியாபாரிகள் அர்த்தமற்ற சடங்குகளிற்கும், ஆடம்பரங்களிற்கும் சேரும் பணத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டு விட்டு ஒரு சிறு பணத்தை தாயகத்தில் உள்ள அவதிப்படும் மக்களிற்கு அனுப்புகிறோம் என்று விளம்பரம் செய்வார்கள். அது போல இந்த பழைய மாணவர் சங்கங்களும் தமிழ்ச்சினிமா கழிசடைகளிற்கு பெரும்பகுதியை கொடுத்து "கலைச்சேவை" செய்துவிட்டு மிஞ்சும் அற்ப பணத்திற்கு "கல்விச்சேவை" செய்கிறார்கள். "தமிழர் தலை நிமிர் கழகத்தில்" கல்வி கற்ற இந்த அறிவாளிகள் இப்படியான நிகழ்ச்சிகளிற்கு வரும் தமிழ்ச்சினிமாக்காரர்களுடன் சேர்ந்து படம் எடுத்து முகப்புத்தகத்தில் போட்டு வாழ்க்கையின் பிறவிப்பயனை அடைகிறார்கள்.
உண்மையான கலைத்திறமை உள்ள நமது கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து இவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை. மிகச் சிறந்த நாடகக் கலைஞரும், தமிழ்க்குழந்தைகளிற்கு எத்தனையோ வருடங்களாக நாடகப்பள்ளி நடத்தி வருபவரும், யாழ் இந்துவின் பழைய மாணவருமான பாலேந்திராவை இவர்கள் ஒரு போதும் அழைப்பதில்லை. ஈழத்து கவிஞர்களின் கவிதைகளையே பாடல்கள் போல இசையமைத்து மனதிற்கினிய கானங்களாக தந்த யாழ் கண்ணனின் நினைப்பு இவர்களிற்கு ஒரு போதும் வருவதில்லை.
வாழ்வு என்பது அழுவதற்கு அல்ல. கொண்டாட்டங்களும், விழாக்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. ஆனால் நம் குழந்தைகள் பசித்திருக்கும் போது தென்னிந்திய சினிமாக்காரர்களிற்கு பணத்தை வீணாக்குவது என்பது மிகப் பெரிய குற்றம். மனச்சாட்சி உள்ள மனிதர்கள் சிந்திக்க வேண்டும். வரும் நாட்களாவது தவறுகள் நீங்கிய புதிய நாட்களாக வரட்டும்.