Language Selection

may_2007.jpg

கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் சோராபுதீன் ஷேக் என்பவர், போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவர் லஷ்ஹர்இதொய்பா அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதி என்றும், இவர் குஜராத் முதல்வர் மோடியையும், விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர்களையும் கொல்ல வந்த பயங்கரவாதி என்றும் போலீசார் அறிவித்தனர்.

உண்மையில், சோராபுதீன் தீவிரவாதியோ பயங்கரவாதியோ அல்ல; அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சோராபுதீனின் சகோதரரான ரூபாபுதீன், இந்த மோதலில் சோராபுதீன் கொல்லப்பட்டது பற்றியும் அவருடன் சென்ற அவரது மனைவி கௌசர்பானு காணாமல் போனது பற்றியும் மைய புலனாய்வுத் துறை விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். குஜராத் மாநில அரசிடம் இதுபற்றி விசாரித்து அறிக்கை தருமாறு உச்சநீதி மன்றம் நிர்பந்தித்ததால், அம்மாநில அரசு கீதாஜோரி என்ற புலனாய்வு அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை நியமித்தது.

 

2005 நவம்பர் 23ஆம் நாளன்று, ஹைதராபாத் நகரிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் சாங்லி நகருக்குப் பேருந்தில் பயணம் செய்த சோராபுதீன் தம்பதியினரையும், துளசிராஜ் பிரஜாபதி என்பவரையும் சீருடைய அணியாத ராஜ்குமார் பாண்டியன் எனும் பயங்கரவாத எதிர்ப்புப் படைøயச் சேர்ந்த குஜராத் போலீசு உயரதிகாரி தலைமையிலான குழுவினர், நள்ளிரவில் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, அம்மூவரையும் இறக்கி தங்கள் வாகனங்களில் கடத்திச் சென்றனர்.

 

கடத்திச் செல்லப்பட்ட இம்மூவரில் சோராபுதீன், மூன்று நாட்களுக்குப் பிறகு அகமதாபாத் புறநகர் பகுதியில் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டு, மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டார். போலீசு ஆள்காட்டியான துளசிராஜ் பிரஜாபதி, இப்படுகொலையை வெளியே கக்கிவிடுவாரோ என்று சந்தேகித்து அவரையும் போலீசு கொன்றொழித்துத் தடயங்களை அழித்து விட்டது. சோராபுதீனின் மனைவி கௌசர்பானு, சபர்கந்தா காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு போலீசாரின் கும்பல் வன்புணர்ச்சிக்குப் பின் சுட்டுக் கொல்லப்பட்டு, எரித்து சாம்பலாக்கப்பட்டார்.

 

கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநில அரசிடம் சமர்பித்த இடைக்கால அறிக்கையில், உதிரத்தை உறைய வைக்கும் இந்த உண்மைகளை கீதாஜோரி விசாரணைக் குழு வெளிக்கொணர்ந்தது. தற்போது எல்லா விசயங்களும் அம்பலமாகிப் போனதால், வேறு வழியின்றி மூன்று போலீசு உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோடியைக் கொல்ல முயன்றதாகக் கதைகட்டி நடத்தப்பட்ட இப்போலி மோதல் நாடகத்தைத் தலைமையேற்று வழி நடத்திய வஞ்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ்குமார் ஆகிய மூன்று போலீசு உயரதிகாரிகளும் மோடிக்கு மிக நெருக்கமானவர்கள்; அவரது கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாகச் செயல்பட்டவர்கள்.

 

இவர்களில் பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவின் டி.ஐ.ஜி.யான வஞ்சாரா ""மோதல் கொலை நிபுணர்'' என புகழப்பட்டவர். இதுவரை 9 போலி மோதல்கள், 15 பேர் படுகொலை என விரியும் இவரது பயங்கரவாதக் கொலைப்பட்டியலில், மும்பையின் ஏழை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஸ்ரத் ஜெஹானும் அடக்கம். கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இம்மாணவி, மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதியாகவே சித்தரிக்கப்பட்டார்.

 

குஜராத்தின் பயங்கரவாத போலீசார், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய போலி மோதல் கொலைகளை நடத்தி, ஒவ்வொரு முறையும் தாவூத் இப்ராஹிமிடமிருந்து பாகிஸ்தான் உளவுத்துறை வரை பழிபோட்டு, மோடியை தேசிய அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அதிமுக்கிய தலைவராகச் சித்தரித்து, இந்துவெறி தேசியவெறியை கிளறிவிட்டு வந்துள்ளனர். கடந்த ஈராண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இத்தகைய போலி மோதல் கொலைகள் போலீசாரால் நடத்தப்பட்டுள்ளன.

 

இப்போது போலி மோதல் கொலைகள் மூலம் மோடியின் பயங்கரவாதச் சதிகள் அம்பலமான பின்னரும், இக்கொலைகார இந்துவெறி பாசிசத் தளபதியை, இந்திய நாட்டின் சட்டம் தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மதவெறி சக்திகளை வீழ்த்தப் போவதாக சவடால் அடித்து ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி அரசு கை கட்டி நிற்கிறது. இடதுவலது போலி கம்யூனிஸ்டு கட்சிகளோ, காங்கிரசு கூட்டணி அரசை முட்டுக் கொடுத்து ஆதரித்துக் கொண்டு, மதவெறி சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்கப் போவதாக வீரவசனம் பேசிக் கொண்டிருக்கின்றன.

· தனபால்