விளை நிலங்களைப் பறித்து, பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கத் துடித்த மே.வங்க போலி கம்யூனிச அரசுக்கு எதிராக, நந்திகிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் இடியோசை ஓயும் முன்பே, அதன் எதிரொலி போல புதுச்சேரி மாநிலத்தில் துறைமுக விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து நிற்கும் தேங்காய்திட்டு கிராம மக்களின் போராட்டம் தொடர்கிறது.
புதுவையில் தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் காங்கிரசு ஆட்சி நடத்தி வருகின்றது. நாடு முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி, நாட்டைப் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றிவரும் காங்கிரசு கும்பல், தாங்கள் ஆளும் புதுச்சேரியில் மட்டும் அதனைச் செயல்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன? பன்னாட்டு ஏகபோக முதலாளிகளே வியக்கும் வண்ணம் நான்கு பகாசுரத் திட்டங்கள் மூலம் புதுவை மாநிலத்தையே கூறுபோட்டு விற்கும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. இதன்படி மிகச்சிறிய புதுவை மாநிலத்தில் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், இரண்டு துணை நகரங்கள், துறைமுக விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம் என ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை விழுங்கக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கென நிலங்களை ஆக்கிரமிக்கும் வேலைகளும் தொடங்கிவிட்டன.
இப்பகாசுரத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் புதுவை மாநில மக்களில் பெரும்பாலோர் வீடிழந்து, நிலமிழந்து, வாழ்விழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் பேரபாயம் நேரிடும். விவசாயமும்விவசாயிகளும், மீனவர்களும்மீன்பிடித் தொழிலும், கடற்கரையும் நீராதாரங்களும் நாசமாகும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
புதுச்சேரி கடற்கரைப் பகுதி அதிக ஆழமில்லாததால், இதுவரை புயல் கரையைக் கடக்காத மாநிலமாக புதுச்சேரி இருந்து வருகிறது. துறைமுக விரிவாக்கம் என்ற பெயரால் 400 மீட்டர் அகலம் 20 மீட்டர் ஆழத்துக்கு மணல் அகற்றப்பட்டால் இனிவரும் காலங்களில் புயல் மிக எளிதில் இப்பகுதியைத் தாக்கும். மேலும், கடற்கரை ஆழப்படுத்தப்பட்டால் கடல்நீரின் அழுத்தம் அதிகரித்து, நிலத்தடி நீரானது முற்றிலும் உப்புநீராகிப் போகும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உப்பு நீரால் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்படும். சரக்குக் கப்பல்களுக்குத் தேவைப்படும் இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் புதுச்சேரியில் உறிஞ்சி எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நிலம் பாலைவனமாகி, அப்பகுதியெங்கும் வெப்பம் அதிகரிக்கும். துறைமுக விரிவாக்கத் திட்டத்தின்படி, இலட்சக்கணக்கான டன்கள் அளவுக்கு மலைபோல நிலக்கரி மற்றும் இரும்புக் கழிவுகள் இறக்குமதியாகி குவிக்கப்பட்டால், அதன் துகள்கள் காற்றில் பறந்து மக்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
இத்திட்டங்களால் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு, விவசாயிகள் நாடோடிகளாக அலைய வேண்டிய அவலநிலை ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால் தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சூறையாடுவதற்கென்றே உருவாகியுள்ள இத்திட்டங்களால் புதுச்சேரி மாநிலமே சுடுகாடாகிப் போகும். இவற்றைப் படிப்படியாக உணரத் தொடங்கியுள்ள புதுச்சேரி மாநில உழைக்கும் மக்கள், தமது போர்க்குணமிக்க போராட்டங்களால் அம்மாநிலத்தையே அதிர வைத்து வருகின்றனர்.
உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளை சூறையாடலுக்கென்றே "வளர்ச்சி'யின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களுள் ஒன்றுதான் துறைமுக விரிவாக்கத்திட்டம். ரூ. 2,600 கோடி மதிப்பிலான இத்திட்டம் ""பாண்டிச்சேரி போர்ட் லிமிடெட்'' என்ற தனியார் கம்பெனியிடம் கடந்த பிப்ரவரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தால், ஏறத்தாழ 300 ஏக்கர் விளைநிலங்கள் பறிக்கப்படவுள்ள கிராமம்தான் தேங்காய்திட்டு.
தங்களது வீடும் நிலமும் வாழ்வுரிமையும் பறிக்கப்படுவதைக் கண்டு பீதியடைந்த இக்கிராம மக்கள், இத்திட்டத்தைக் கைவிடக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராடினார்கள். வீடுகளில் கருப்புக் கொடியேற்றியும், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை நடத்திய கூட்டத்தில் இத்திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்தும் கூட ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று துறைமுகப் பகுதியிலும் அரசு புறம்போக்கு பகுதியிலும் ஆரம்பகட்ட வேலைகளை ""பாண்டிச்சேரி போர்ட் லிமிடெட்'' நிறுவனம் தொடங்கியது. துறைமுகப் பகுதியிலுள்ள நீண்ட சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டதை அறிந்த தேங்காய் திட்டு கிராம மக்கள் ஆவேசமடைந்து, அத்தனியார் நிறுவனத்தின் பெயர் பலகையை உடைத்தெறிந்து, அந்நிறுவனத்தின் அலுவலகத்தைச் சூறையாடினர். பின்னர், துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி பணிகளைத் தொடங்கிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, தேங்காய்திட்டு கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்.
இத்தனைக்கும் பின்னரும் இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தை காங்கிரசு அரசு கைவிடாத நிலையில், தேங்காய் திட்டு கிராம மக்கள் ""நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு''வைக் கட்டியமைத்து அதன் தலைமையில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு கோரியதோடு, அரசைக் கண்டித்து தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து மார்ச் 27ஆம் தேதியன்று துறைமுக விரிவாக்கத்தை கைவிடமறுக்கும் அரசை எதிர்த்து, சட்டமன்றத்தை முற்றுகையிட்டு தமது ரேஷன் கார்டு நகல்களை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர். இப்போராட்டத்தை ஆதரித்து முதலியார்பேட்டை வியாபாரிகள் நலச் சங்கத்தினர் அந்நாளில் அப்பகுதியெங்கும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றினர். மார்ச் 27ஆம் நாளன்று தேங்காய்திட்டு கிராம மக்கள் மட்டுமின்றி, வியாபாரிகள், அறிவுத்துறையினர், மாணவர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் திரள ஏறத்தாழ 5000 பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி சட்டமன்றத்தை நோக்கி விண்ணதிரும் முழக்கங்களுடன் முன்னேறியது. வழியிலேயே அவர்கள் போலீசாரால் மறிக்கப்பட்டு ஏறத்தாழ 1500 பேர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்தும், துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்கள் தமது ரேசன் கார்டு நகல்களை தீயிட்டுக் கொளுத்தி முழக்கமிட்டனர்.
மக்களின் உறுதிமிக்க இப்போராட்டங்களைக் கண்டு ஆத்திரமடைந்த துறைமுகத்துறை அமைச்சரான வல்சராஜ், ""எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் இத்திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவோம்; மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்'' என்று மே.வங்க பாசிச முதல்வர் புத்ததேவ் வழியில் சட்டமன்றத்திலேயே கொக்கரித்தார். மேலும் போராடிய மக்களைத் தரக் குறைவான வார்த்தைகளால் ஏசி, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி திமிராகச் சாடினார். இதைக் கண்டு வெகுண்டெழுந்த தேங்காய்திட்டு கிராம மக்கள், அமைச்சர் வல்சராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தீர்மானித்தனர். இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இத்திட்டம் கசிந்துவிட, அரண்டுபோன புதுவை அரசு, அமைச்சர் வல்சராஜ் வீட்டுக்கு மூன்று அடுக்கு போலீசு பாதுகாப்பு போட்டது. இதனால் கிராம மக்கள் இம்முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அமைச்சரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.
திட்டமிட்டபடியே ஏப்ரல் 13ஆம் நாளன்று தாரை தப்பட்டைகள் முழங்க, அமைச்சரின் கொடும்பாவியை அலங்கார சவப்பாடையில் ஏற்றி கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பெண்கள் ஒப்பாரி வைக்க, இளைஞர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் இக்கொடும்பாவி பாடையை தூக்கி வந்தனர். தகவலறிந்து முதலியார்பேட்டை போலீசு நிலைய ஆய்வாளர் ரவிக்குமார், பெரும்படையுடன் போலீசை திரட்டி வந்து ஊர்வலத்தைத் தடுத்ததோடு பெண்களை ஆபாசமாகத் திட்டினார். ஆவேசமடைந்த பெண்கள் சவத்திற்குத் தெளிக்க வைத்திருந்த மஞ்சள்குங்குமக் கரைசலை ஆய்வாளர் மீது ஊற்றி அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர். இதற்கிடையே அமைச்சர் வல்சராஜின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அதைத் தடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். இத்தாக்குதலில் 14 பெண்கள் உள்ளிட்டு 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தமது கடமையைச் செய்ய விடாமல் தடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி 257 பேர் மீது போலீசு பொய் வழக்கு போட்டுள்ளது.
இக்கொடுஞ்செயலைக் கண்டு வெகுண்டெழுந்த மக்கள், போலீசு மிருகங்களை எதிர்த்து முதலியார்பேட்டை போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட ஊர்வலமாகச் சென்றனர். போராடும் மக்களின் கோபாவேசத்தைக் கண்டு பீதியடைந்த போலீசார், முதலியார்பேட்டை போலீசு நிலையத்தை உடனடியாக காலி செய்து, துப்பாக்கிகள் மேசை நாற்காலிகள், ஆவணங்கள் அனைத்தையும் ஒரு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு தப்பியோடினர். அப்போலீசு நிலையம் பூட்டு போடப்பட்டு, மத்திய ரிசர்வ் போலீசாரின் பாதுகாப்பில் விடப்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்டு அரசு எந்திரம் அரண்டுபோய் விக்கித்து நின்றது.
அடுத்த கட்டமாக, மீண்டும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். புதுவை முதல்வர் ரங்கசாமி, மக்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கும் எந்தத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படாது என்று உறுதியளித்து சமரசம் பேசியதால், தற்காலிகமாக இப்போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேங்காய் திட்டு கிராம மக்களின் போராட்டம் மட்டுமல்ல; சிறப்புப் பொருளாதார மண்டலம், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் ஆகிய திட்டங்களால் விளைநிலங்களைப் பறிகொடுத்த மக்கள் ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடியேற்றுதல், சாலை மறியல் என அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரு மாதங்களாக புதுவை மாநிலமே இத்திட்டங்களுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டு நிற்கிறது.
தமது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராடத் தொடங்கியதும், அரசியல் ஆதாயம் கருதி எதிர்த்தரப்பு ஓட்டுக் கட்சிகள் இப்போராட்டங்களை ஆதரித்து அறிக்கைகள் வெளியிடுகின்றன. ""உங்களோடு சேர்ந்து தெருவில் இறங்கிப் போராடுவேன்; பிரதமரை நேரில் சந்தித்து முறையிடுவேன்'' என்றெல்லாம் சீறி வெடிக்கிறார், பா.ம.க. தலைவர் இராமதாசு. புதுவை துறைமுக விரிவாக்கத் திட்டம் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வரை அனைத்து முடிவுகளையும் மைய அரசுதான் எடுத்திருக்கிறது. அமைச்சரவையின் முடிவுகளில் மகன் அன்புமணி கையெழுத்திடுகிறார். தந்தையோ இங்கே தாவிக் குதிக்கிறார்.
பா.ம.க. மட்டுமல்ல, எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது, எதிர்க்கட்சியாக உள்ளபோது மக்கள் போராட்டங்களை ஆதரிப்பதாக வாய்ச்சவடால் அடிப்பது என்ற நாடகத்தை நடத்தி வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆட்சிகள் மாறிவிட்டன. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற ஒரே கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தையும் கொள்ளையடித்து சூறையாடுவதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளைத்தான் எல்லா கட்சி அரசாங்கங்களும் நிறைவேற்றி வருகின்றன. இவையனைத்தும் வெறும் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல; இவை நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்.
சுருக்கமாகச் சொன்னால், விளைநிலங்களையும் வாழ்வுரிமையையும் பறித்து மறுகாலனிய ஆக்கிரமிப்பு எனும் உள்நாட்டுப் போரைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள், எதிரிகள். இப்போரை, மக்கள் போரினால் மட்டுமே முறியடிக்க முடியும். எனவே, தமது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் புதுவை மக்கள், இப்போராட்டங்களை மறுகாலனிய எதிர்ப்புப் போராட்டமாக விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மே.வங்கத்தின் நந்திகிராம மக்கள், அப்பகுதியில் அரசு எந்திரம் செயல்பட முடியாமல் முடக்கி வைத்துப் போராடி, அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் துடித்த போலி கம்யூனிஸ்ட் அரசைப் பணிய வைத்ததைப் போல, புதுவை மக்கள் தமது போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாட்டுப்பற்றும், ஜனநாயக உணர்வும் புரட்சிகர சித்தாந்தமும் கொண்ட புதிய போராட்டத் தலைமையின்கீழ் புதுவை மக்கள் போராடும்போது மட்டுமே, இம்மறுகாலனிய ஆக்கிரமிப்புப் போரை முறியடிக்க முடியும்; நந்திகிராம மக்களைப் போல எப்பேர்ப்பட்ட எதிரியையும் மண்டியிடச் செய்ய முடியும். அத்தகையதொரு புரட்சிகரத் தலைமையையும், போராட்டங்களையும் கட்டியமைப்பதே, இன்று போராடி வரும் புதுவை மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது.
பு.ஜ. செய்தியாளர்கள், புதுச்சேரி.