புரியாத புதிருடன் புலம்பும் பிழைப்புவாத வழிபாடு. இது பகுத்தறிவற்றது. நேபாள மாவோயிஸ்ட்டுக்களின் இன்றைய சர்வதேச நிலையை வைத்து, பாசிசப் புலிகள் தம்மை நியாயப்படுத்த முனையும் வாதங்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே இந்திய போலி கம்யூனிஸ்ட்டுக்கள், தம்மை தாம் நியாயப்படுத்த வைக்கும் வாதங்கள். அனைத்தும் யாருக்கு எதிராக என்றால், உண்மையான புரட்சியாளர்களுக்கு எதிராகத்தான். மக்களின் அடிப்படைப் பிரச்சனையை பேசாதே என்கின்ற உள்ளடக்கத்துடன், இவ்வாறு அவதூறு பொழிகின்றனர்.

 

அந்த வகையில் அற்புதன் என்பவர் 'நேபாள மாவோக்கள், ஏகாதிபத்திய நலன் சார் அரசியல் முதல் முகட்டைப் பார்த்து எழுதும் வலையுலகப் புரட்சீ'யாளர் வரை.." என்று புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த எழுதுகின்றார்.

 

இந்திய போலி கம்யூனிஸ்டான சந்திப்பு "இந்திய மாவோயிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாதை!" என்று இதை எழுதுகின்றது.

 

ஒன்று புலிப் பாசிசத்தை ஆதரி என்கின்றது. மற்றது போலிக் கம்யூனிசத்தை புரட்சிகர வழி என்கின்றது.

 

இந்தக் கூழ்முட்டைகள் ஒன்றை மட்டும் கண்டு கொள்வதில்லை. மாவோயிஸ்ட்டுகள் நேபாள மக்களுடன் கொண்டுள்ள அரசியல் உறவை. அந்த வழியை தமது சொந்த வழியாக தேர்ந்தெடுப்பதை திட்டமிட்டு நிராகரித்தபடி, நேபாள கம்யூனிஸ்ட்டுக்களை மறைமுகமாக அவதூறு பொழிந்தபடி திரித்துக் காட்டமுனைகின்றனர். இவை மக்களின் புரட்சிகர அக்கறையின் பால் அல்ல. தமது சொந்த எதிர்ப் புரட்சிகர நிலைக்கு செங்கம்பளம் விரிக்கத் தான் இந்த ஏற்பாடுகள்.

நேபாள மாவோயிஸ்டுக்கள் மக்களை மக்களாகவே நேசித்து, அவர்களுக்காக போராடிய, போராடுகின்ற மறுபக்க உண்மையை கண்டு கொள்ளாமல், அரசியல் அவதூறு பொழிகின்றனர். அவர்கள் வெறுமனே மன்னரைத் துக்கியெறியவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ ஆட்சியேறவில்லை. அதற்காக மக்கள் அவர்களை தெரிவு செய்யவுமில்லை.

 

மக்களின் விருப்பை, அவர்களின் புரட்சியை தலைமையெற்று செய்தேயாக வேண்டும். சந்தர்ப்ப சூழலில் அவர்கள் அமைத்துள்ள அரசு, முரண்பட்ட வர்க்கங்களையும் சர்வதேச சூழலையும் எதிர்கொண்டு, தமது வர்க்கப் புரட்சியைச் செய்ய வேண்டியுள்ளது. இதை எதிர்கொள்கின்ற போக்கில், அவர்கள் பலதரப்புடன் கொண்டுள்ள உறவை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, தங்களது சொந்த மக்கள் விரோத அரசியலை நியாயப்படுத்த முனைகின்றவர்கள் அரசியலில் நேர்மையற்றவர்கள். கடைந்தெடுத்த போக்கிரிகள்.

 

நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் இருக்கட்டும், உங்களால் ஏன் மக்களுக்காக போராட முடியவில்லை. இந்த அடிப்படையான அரசியல் விடையத்தை விடுத்து, அதோ பார் அவர்கள் தேர்தலில் நிற்கின்றனர், அமெரிக்காவுடன் கைகுலுக்குகின்றனர். நாங்களும் அதையே செய்கின்றோம் என்ற நியாயவாதமோ கபடத்தனமானது. தேர்தலில் நிற்கின்றனர், அமெரிக்காவுடன் கைகுலுக்குகின்றனர் எல்லாம் சரி, ஆனால் அவர்கள் மக்களின் புரட்சிகர கடமைகளுடன் சேர்ந்து நிற்கின்றனர். மக்களைச் சார்ந்து நிற்கின்றனரே ஒழிய, பாராளுமன்றத்தையோ ஏகாதிபத்தியத்தையோ சார்ந்தல்ல.

 

மக்களுக்கு துரோகம் இழைப்பவர்களும், அவர்களை அடக்கியொடுக்குபவர்களும், நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் மக்களுடன் கொண்டுள்ள அடிப்படையான அரசியல் உறவு தான் என்ன என்பதையிட்டு அவர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

தாம் அடைகாக்கும் சொந்தக் கூழ் முட்டைகளை பொரிப்போம் என்று கொக்கரிக்கும் அடைக்கோழிகள், வேறு எதைத்தான் சொந்த அரசியலில் எதிர்வாதமாக முன்வைக்க முடியும்.

 

நேபாள கம்யூனிட்ஸ்டுக்களை நாம் எந்த வகையில் ஏன் ஆதரிக்கின்றோம்

நேபாள மக்களின் புரட்சிக்கு அவர்கள் தலைமை தாங்குவதால், நாம் அதை ஆதரிக்கின்றோம். நேபாள மக்கள் விரும்பும் புரட்சியை, அவர்கள் செய்யும் எல்லை வரை தான், எமது ஆதரவு. அதை அவர்கள் செய்யத் தவறினால், அவர்களும் வரலாற்றில் துரோகிகள் தான். மக்கள் தமது வாழ்வுக்காக புரட்சியை விரும்புகின்றனர். நேபாள மக்கள் தமது ஆயுதப் போராட்டம் மூலமும், வாக்குப் பலம் மூலமும் கூட, தமது புரட்சிகர செய்தியை தெளிவாக கூறியுள்ளனர். புரட்சியை நடத்தும் அரசியல் அதிகாரத்தை, அவர்கள் தமது சொந்த தலைமைக்கு வழங்கியுள்ளனர்.

 

இதை எந்த விதத்திலும் மாவோயிஸ்ட்டுகள் நிராகரித்தால், துரோகம் இழைத்தால், வரலாற்றில் அவர்களையும் மக்கள் குப்பைத் தொட்டியில் தான் போடுவார்கள்.

நேபாள மக்களின் புரட்சியைச் செய்ய அவர்கள் கையாளும் நடைமுறைகள் மக்களுக்கு எதிராக அமைந்தால், கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் மட்டும் தான் அதை விமர்சிப்போம், அம்பலப்படுத்துவோம்.

 

சர்வதேச வர்க்கங்களின் அணிச் சேர்க்கையிலும், உள்நாட்டு வர்க்க நிலையிலும், வர்க்கப் போராட்டத்தைக் கையாளுவதில் எதிரியுடன் புரட்சியாளர் கொண்ட உறவுகள், வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ளது.

 

இதை மாவோயிஸ்ட்டுகளும் நேபாளத்தில் கையாண்டனர். இன்றைய நிலைக்கு சற்று முந்தைய காலத்தில், அதிகாரத்தில் பங்கு கொண்டிருந்த ஒட்டுக்கட்சிகளுடன் நேபாள மாவோயிஸ்ட்டுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் நடைமுறைகள், புரட்சியை மேலும் நடத்தவே உதவியது. பேச்சுவார்த்தை, தேர்தல் உட்பட அனைத்தும், மிக நுட்பமாக கையை குலுக்கியபடி புரட்சிகரமாக அவர்களை அம்பலப்படுத்தி தூக்கியெறிந்துள்ளனர். இன்று இந்தியா முதல் அமெரிக்கா வரை அவர்கள் கையாளும் சர்வதேச அணுகுமுறை, அவர்கள் மக்கள் விரும்பும் புரட்சிக்காக வெற்றிகரமாக கையாள்வார்கள் என்பதை அவர்களின் சொந்த அனுபவமும் நடைமுறையும் காட்டுகின்றது.

 

மாவோயிஸ்ட்டுகள் வெளிப்படையாக கையாளும் நடைமுறைகளும், ஏகாதிபத்தியம் வெளிப்படையாக கையாளும் அணுகுமுறைகளும், தத்தம் சொந்த வர்க்க நலனை அடிப்படையாக கொண்டது. மாவோயிஸ்ட்டுகள் பொதுவான ஜனநாயகத்தை முரணற்ற வகையில் வெளிப்படையாக கையாள, ஏகாதிபத்தியம் சதியை சொந்த அணுகுமுறையாக கொள்கின்றது. இது நேபாள வர்க்கப்போராட்டத்தில் தெளிவாக மறுபடியும் உறுதியாகும்.

 

நேபாள மக்கள், ஜனநாயகப் புரட்சியை நடத்தும்படி மாவோயிஸ்ட்டுகளைக் கோரி நிற்கின்றனர். மக்களுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை, அவர்கள் நடைமுறையில் செய்வார்கள். அது மட்டும் தான், அவர்களின நீடித்த புரட்சிக்கான அவர்களின் சொந்த வர்க்கத்தின் செயல் தந்திரமாக அமையும்.

 

இதைப் புரிந்துகொள்ள முடியாத கூழ்முட்டைகள், தத்தம் அரசியல் இழிநிலைக்கும் இருப்பு நிலைக்கும் ஏற்ப, நேபாள மாவோயிஸ்ட்டுகளை மக்களுக்கு வெளியில் பிரித்து வைத்து கதைசொல்ல முடிகின்றது. தமது கூழ் முட்டைக்கு ஏற்ப விளக்கம் சொல்லி, அடைகாக்க முடிகின்றது.

 

சந்திப்பு நடத்துகின்ற பிழைப்புவாத போலி மார்க்சிய புரட்டலை, நாம் தனிக்கட்டுரை ஊடாக விரைவில் சந்திப்போம். அற்புதன் என்பவர், புலிப் பாசிச கூழ்முட்டையைப் பாதுகாக்க, தமது சொந்த ஏகாதிபத்திய நியாயப்படுத்தலை எப்படி செய்கின்றார் என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

'நேபாள மாவோயிஸ்டுகளிடம் அமெரிக்க அரசு பேசுகிறது, மாவோக்களும் பேசுகிறார்கள், கைகுலுக்குகிறார்கள். நேபாள மாவோக்களும் தாம் கலப்புப் பொருளாதாரத்தையும், பல் கட்சி ஜனநாயகத் தேர்தல் முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இந்த உலக ஒழுங்கிற்கு ஏற்ப ஆட்சி அமைப்பதாகவும் கூறி உள்ளார்கள்." என்கின்றார். இதனால் அவர்கள் கம்யூனிசத்தை கைவிட்டுவிட்டனர் என்று கூறுகின்ற அற்பத்தனம் அறியாமையும் வெளிப்படுகின்றது. இங்கு மாவோயிஸ்டுகளிடம் தெளிவான வேறுபட்ட பொருளாதார கொள்கை உண்டு என்பது உண்மையல்லவா. அவர்கள் அதற்காக போராடுவார்கள் என்பது வெளிப்படையானது.

 

மறுபக்கத்தில் இதைச் சொன்ன அவர்கள், ஜனநாயகப் புரட்சியை நடத்த மாட்டோம் என்று சொன்னார்களா? மக்களுக்கு தாங்கள் வழங்கிய வாக்குறுதியை கைவிட்டுவிட்டனர் என்று சொன்னார்களா? இல்லை. அவர்கள் சரியாக செல்லுகின்றனர் என்றே கருதுகின்றோம்.

 

'இந்த முரண்பாடு பற்றி இவர்கள் எவருமே இதுவரை எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை," என்கின்றீர்கள் எங்களுக்கு இதில் முரண்பாடே கிடையாது. அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை, அவர்கள் தெரிவு செய்த மக்களின் விருப்பை இது வரை நிராகரிக்கவில்லை, கைவிடவில்லை. அதை அவர்கள் அமுல் செய்வார்கள் என்பதால், எமக்கு இதில் எந்த முரண்பாடும் கிடையாது.

 

வரலாற்றில் லெனின் சர்வதேச சந்தைக்கு ஏற்ப பொருளாதாரத்தை திறந்துவிட்டது உட்பட சிறு உற்பத்தியை ஊக்குவித்த வரலாறும் உண்டு. ஏன் சோசலிச நாடுகள் முதலாளித்துவ நாடுகளுடன் உறவைக்கொண்டு இயங்கியது. ஸ்ராலின் இரண்டாம் உலக யுத்தத்தின் போது கையாண்ட வடிவமும் இதை ஒத்தது தான். சீனக் கம்யூனிஸ்ட்டுக்கள், தமது படைத் தலைமையைக் கூட கலைத்து, சியாங்கே சேக்கின் அதிகாரத்தில் விட்ட வரலாறும் உண்டு. புரட்சியை நெளிவு சுழிவாக மக்களுடன் சேர்ந்து எப்படி நடத்துவது என்பதில், கம்யூனிஸ்டுக்கள் தேர்வுகள் நிலைமைக்கு ஏற்ப அமைகின்றன. நெளிவு சுழிவான வழிகள், மக்களின் புரட்சிகர நலன்களை அடிப்படையாக கொண்டது. இதுவல்ல என்று நிறுவப்படாத வரை, அதை நாம் நிராகரிப்பது கிடையாது. இந்திய அமெரிக்க அரசுடன் கொண்டுள்ள உறவுகளையிட்டு, புரட்சிக்கு எதிரானது என்று எந்த முரண்பாடும் எம்முன் இருப்பதில்லை.

 

இதைவிடுத்து மக்களுக்கு எதிரான பாசிச அரசியலில் மிதப்பவர்களுக்கு, தம்மை நியாயப்படுத்த, இது எப்படி தெரிகின்றது. 'இவர்கள் ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்து கைகுலுக்க வில்லையா?" என்று கேட்க வைக்கின்றது. புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடும் சொந்த அக்கறையின் பாலானா கேள்வியா இது. இல்லை. மாறாக தமது ஏகாதிபத்திய தன்மையை, எதார்த்தமானதாக காட்ட வைக்கும் குதர்க்க வாதம் இது.

 

அடுத்து அவரின் ஏகாதிபத்திய சார்பு வாதத்தைப் பாருங்கள். 'அப்படியாயின் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி, அது ஏகாதிபத்திய சார்பு நிலைப்பட்டது என்றெல்லாம் எழுதிக் குவிக்கும் இவர்களின் எழுத்துக்கள் எவ்வகையில் நேர்மையானவை?" இதன் மூலம் என்ன சொல்ல முனைகின்றார். அதை ஆதரிக்கும் நீங்கள், எங்கள் ஏகாதிபத்திய சார்பு பாசிசப் போராட்டத்தை ஆதரியுங்கள் என்கின்றார். இப்படியும் மானம் கெட்ட அரசியல் பிழைப்பு.

 

ஐயோ பாவம். நேபாள மாவோயிஸ்ட்டுகள் மக்களை சார்ந்து புரட்சி செய்கின்றனர். மக்களின் சமூக பொருளாதார உறவை அரசியலாக கொண்டு, அவர்களின் சொந்த விடுதலைக்காக போராடுகின்றனர். இந்த வகையில் அவர்கள் சர்வதேச சமூகத்துடன் உறவுகொள்கின்றனர். மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலனை முதன்மையாக வைக்கின்றனர்.

 

புலிப் போராட்டம் மக்களின் தேசிய சமூக பொருளாதார உறவுக்காக போராடவில்லை. மாறாக ஏகாதிபத்திய சமூக பொருளாதார உறவை முன்வைத்து, மக்களை எதிரியாக்கி நிற்கின்றது. அடிப்படையில் மக்கள் சார்ந்து நிற்பதில் மாவோயிஸ்டுகளின் அரசியல் நிலை ஒருபுறம், மக்களை எதிரியாக்கி நிற்கும் புலிகள் தலைகீழாய் மறுபுறம். இப்படி இரண்டும் ஏகாதிபத்தியத்தை அணுகுகின்ற விதமே, முற்றிலும் நேர்மாறானது.

 

இப்படி இருக்க, அற்புதன் தனது பெயருக்கு ஏற்ப அற்புதம் செய்ய விரும்புகின்றார். 'நேபாள மார்க்ஸிஸ்ட்டுக்கள், மாக்ஸிஸ்டுக்கள் என்றால் இந்த வலையுலகப் புரட்சியாளர்கள் சொல்லும் மார்க்சிசம் என்ன? சிவப்புக் கொடியும், சுத்தியலும் அரிவாளும் போட்டுக் கோசம் போட்டா அவை தான் மார்சியர்களா? அப்படி போடாதவை மக்கள் நலன் சார்ந்து போராடினால் அவர்கள் ஏகாதிபத்திய அடிவருடிகளா?" என்கின்றார். திருகுதாளம் போட்டு, உண்மையை திரித்து புரட்டி கதை சொல்வது பாசிட்டுகளுக்கு ஏற்ற தர்க்கம் தான்.

 

மாவோயிஸ்ட்டுக்கள் மக்களைச் சார்ந்து நிற்க, அதை இல்லை என்கின்றனர். அதை அவர் 'சிவப்புக் கொடியும், சுத்தியலும் அரிவாளும் போட்டுக் கோசம் போட்டா" என்கின்றார். மறுபக்கத்தில் பாசிட்டுகளான தம்மை மக்கள் இயக்கம் என்கின்றார். அதை அவர் 'அப்படி போடாதவை மக்கள் நலன் சார்ந்து போராடினால் அவர்கள் ஏகாதிபத்திய அடிவருடிகளா?" என்கின்றார். மக்கள் நலன் எதையும் வைக்காத மக்களுக்கு எதிரான புலிகள் எங்கே! மக்கள் நலனை வைத்து அவர்களுக்காக போராடும் மாவோயிஸ்ட்டுகள் எங்கே!

 

மக்களை எதிரியாக்கி, அவர்களைத் துன்புறுத்தி பாசிசத்தை அரசியலாக கொண்டது புலிகள் ஏகாதிபத்திய அரசியல். இந்த நிலைக்காக வக்காளத்து வாங்க, மாவோயிஸ்டுக்களின் மக்கள் அரசியல் நடைமுறைகள் உதவப்போவதில்லை.

 

அடை காப்பது கூழ்முட்டை என்பது தெரியாது, கொக்கரிக்கும் கோழியால் மனித வாழ்வு என்றும் விடியாது. தமது இழிவான மக்கள் விரோத ஏகாதிபத்திய நிலையைப் பாதுகாக்க 'ஏகாதிபத்திய எதிர்ப்பை விட இன்று மக்கள் முன்னால் இருக்கும் பிரதான முரண்பாட்டிற்கான தீர்வே முதன்மையானது" என்கின்றனர். இதைத் தான் ஏகாதிபத்தியமும் சொல்லுகின்றது. இதைத்தான் புலிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி வாதிடும் புலிகளை, நாங்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள் என்று சொல்வதில் என்ன தவறு?

 

'இன்று மக்கள் முன்னால் இருக்கும் பிரதான முரண்பாட்டிற்கான தீர்வே முதன்மையானது" நல்லது. மக்கள் அமைதி மூலம் இதை தீர்க்க விரும்பினர். புலிகள் சண்டை மூலம் தீர்க்க விரும்பி சண்டையைத் தொடங்கினர். 'இன்று மக்கள் முன்னால் இருக்கும் பிரதான முரண்பாட்டிற்கான தீர்வே முதன்மையானது" என்று எமக்கு சொல்லாது, புலிக்கு சொல்லுங்கள்.

'பிரதான முரண்பாட்டிற்கான தீர்"வில் கூட ஏகாதிபத்தியம் தான், அதை தடுக்கின்றது. சமூகங்களுக்கு இடையிலான அனைத்து முரண்பாட்டின் நெம்புகோலும், ஏகாதிபத்திய சமூக பொருளாதார அடிப்படையைக் கொண்டது. அதன் நலனுக்கு உட்பட்டது. இதற்கு வெளியில் அல்ல. மக்கள் நலன் இதற்கு வெளியிலானது. புலியின் நலன் என்பது, மக்கள் நலன் அல்ல என்பதால் 'ஏகாதிபத்திய எதிர்ப்பை விட" முதன்மையானது புலிகளின் சொந்த நலன் என்பது தெளிவானது.

 

அரசியலை புலியின் நலனுக்கு ஏற்ப வடிகட்டுவது நிகழ்கின்றது. 'நேபாளத்தில் அது இந்துத்துவா அடிப்படையிலான முடியாட்சியாகவும் தமிழீழத்தில் அது சிங்களப் பேரினவாதமுமாக இருக்கிறது" என்ன அரசியல் திரிபு.

 

'நேபாளத்தில் அது இந்துத்துவா அடிப்படையிலான முடியாட்சி" என்பது திரிபு. அது நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய தரகுமுதலாளித்துவ முடியாட்சி. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடாமல் இதை ஒழிக்க முடியாது. அது ஒருபுறம். 'தமிழீழத்தில் அது சிங்களப் பேரினவாதமுமாக இருக்கிறது" இது ஒரு திரிபு. சிங்கள பேரினவாத தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய ஆட்சியாக உள்ளது. இதை விடுதலைப்புலிகள் அரசியல் அறிக்கை கூட தெளிவாகக் கூறுகின்றது. விடுதலைப்புலிகளின் ஆரம்பப் பத்திரிகைகள் கூட இதைக் கூறுகின்றது. இன்று அதை மறுக்கும் நீங்கள், ஊர் உலகத்தையே ஏமாற்றுகின்றீர்கள்.

 

தமிழ் தேசியமாக இருப்பது ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாக கொண்டது தான். தேசியம் என்பது சமூக பொருளாதார உறவை அடிப்படையாக கொண்டது. அது சிங்கள பேரினவாதத்தை மட்டுமல்ல, அதை ஆதரிக்கின்ற ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடுவதை அடிப்படையாக கொண்டது.

'மக்களை உண்மையாக நேசிப்பவர்கள் மக்களின் விடுதலையை விரும்புபவர்கள் முன் இன்றிருக்க கூடிய ஒரே தெரிவு தமிழ்த் தேசிய விடுதலை ஒன்றே." இது உண்மையான மக்களின் சொந்த தேசியமாக, மக்களை நேசிக்கின்ற, அவர்களே தமது விடுதலைக்காகப் போராடுகின்ற, அவர்களின் சொந்த சமூக பொருளாதார விடுதலையை முன்னிறுத்துவதாக அமைவது மட்டும் தான் தேசியம். இந்த வகையில் புலிப் பாசிசம் தேசியமாகாது. அது தேசியத்தின் பெயரிலான பாசிசம்.

பி.இரயாகரன்
03.05.2008