Language Selection

june_2007.jpg

"சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் நுழைவதால், சிறு வியாபாரிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது'' என ஆளும் கும்பலும், அவர்களது எடுபிடிகளும் நடத்தி வரும் பிரச்சாரத்திற்கு, சிறுவணிகர்கள் ஏமாந்து போய்விடவில்லை.

 

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும், சிறு வணிகர்களின் ஆதரவோடு, மே 1, தொழிலாளர் தினத்தன்று, சென்னையில் ரிலையன்ஸ் ஃபிரஷ் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தின.

 

மே 5 அன்று சேலத்தில் நடந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில், சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

சில்லறை வணிகத்தில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்டம் முழுவதும் காய்கறி வியாபாரிகள், தள்ளுவண்டி சிறு வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மே 18ஆம் நாளன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தியதோடு, ஈரோடு நகரில் மாபெரும் கண்டன ஊர்வலத்தையும் நடத்தியுள்ளனர்.

 

ஜார்கண்டு மாநிலத் தலைநகர் ராஞ்சியில், மே 12 அன்று, சிறு வணிகர்களும், காய்கறி வியாபாரிகளும் இணைந்து ரிலையன்ஸ் பிரெஷ்ஷûக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் பொழுது, அவர்கள் ரிலையன்ஸின் கடைகள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதோடு, அக்கடைகளுக்குள் நுழைந்து கலகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராஞ்சி நகரிலுள்ள ஐந்து ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைகளையும் இனி போலீசு பாதுகாப்போடுதான் நடத்த முடியும் என்ற அச்சுறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், காய்கறி வியாபாரிகள் மே 20 அன்று முகேஷ் அம்பானியின் உருவ பொம்மையை எரித்துத் தங்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

 

சிறு பொறியாக எழுந்துள்ள இப்போராட்டங்களை ""வன்முறை'' என்றும், வளர்ச்சிக்கு எதிரானவை என்றும் ஆளும் கும்பல் அவதூறு செய்து வருகிறது.

 

இந்தியாவில் ஏறத்தாழ 4 கோடி குடும்பங்கள் சிறு வணிகத்தை நம்பித்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றன. சில்லறை வணிகத்தில் நுழைந்துள்ள அம்பானியும், டாடாவும், பிர்லாவும், பாரதியும், அவர்களின் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளான வால் மார்ட்டும், காரஃபோரும் இந்த 4 கோடி குடும்பங்களை அழித்துத்தான், 12 இலட்சம் கோடி ரூபாய் புரளும் சில்லறை வணிகச் சந்தையைக் கைப்பற்றத் திட்டம் போடுகின்றன. நான்கைந்து முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக, 4 கோடி குடும்பங்கள் அழிக்கப்படுவது வன்முறை இல்லையாம்; அது பொருளாதார வளர்ச்சியாம்! தனியார்மய தாராளமயத்தின் நீதி எப்படியிருக்கிறது பாருங்கள்.

 

சட்டமே, இந்தச் சந்தை பயங்கரவாதத் தாக்குதலைப் பாதுகாக்கும் பொழுது, நாம் ஏன் இந்தச் சட்டத்திற்கு அடிபணிந்து நடந்து கொண்டு போராட வேண்டும்? சட்டத்தையும், ஓட்டுக் கட்சிகளையும் புறக்கணித்து விட்டு, கலகத்திலும், போராட்டத்திலும் இறங்குவதன் மூலம் மட்டுமே, இச்சந்தை பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும்.

 

ராஞ்சி நகர சிறு வியாபாரிகள் ரிலையன்ஸ் பிரெஷ்ஷûக்கு எதிராக நடத்தியிருக்கும் ""சட்டத்தை மீறிய வன்முறை போராட்டம்'' இந்த உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.