மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப்
பத்திரிகைகள் குறிப்பிட்டன. உத்திரப்பிரதேச தேர்தல் தோல்வியை வைத்து இந்துத்துவ அரசியல் பின்னடைவுக்கு ஆளாகிவிட்டதாகவும் சில அறிஞர்கள் ஆய்வுரை எழுதக்கூடும். இந்த வெற்றி தோல்விகள் எனப்படுபவையெல்லாம் தேர்தல் அரசியல் குறித்த மக்களுடைய கண்ணோட்டத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனவேயன்றி, இவை இந்து பாசிசக் கும்பலின் பலம் அல்லது பலவீனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல.
தேர்தல் அரசியலின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால், சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் திரட்டப்பட்ட ஒரு பாசிச அமைப்பாக சங்கப் பரிவாரம் இருக்கிறது. தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறைக்குள் முடங்கிக் கொண்டு, அறிக்கை அரசியல் நடத்தும் பிற முதலாளித்துவக் கட்சிகளைப் போல அது முடங்கிக் கொள்வதில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பதவிச் சண்டையாலும், உட்கட்சிப் பூசல்களாலும், பாரதிய ஜனதாக் கட்சியே முடங்கி விட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கணித்தன. நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, கட்டுப்பாடான, ஒழுக்கமான கட்சியாகத் தன்னை சித்தரித்துக் கொள்ள முயன்றதில்தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததேயன்றி, அத்தகைய சீரழிவுகள் இப்பாசிச கும்பலின் பலத்தை குன்றச் செய்துவிடவில்லை.
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, காங்கிரசு கூட்டணி அரசின் மீது மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இத்தகைய மக்கள் பிரச்சினைகள் எதற்காகவும் போராடாத அதேநேரத்தில், தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை சங்கப் பரிவாரம் முடுக்கி விட்டிருக்கிறது. சமீபத்திய பல நிகழ்வுகள் இதனை நிரூபிக்கின்றன.
மதம் மாறிக் காதலிக்கும் நபர்களை காவி வெறியர்கள் கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. குஜராத்தில் தனது முசுலீம் கணவனின் உயிரைக் காக்க முனைந்த "குற்றத்திற்காக' நடுவீதியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இந்துப் பெண்ணான கீதா பென்னின் கதை நாம் அறிந்ததுதான்.
சமீபத்தில் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் அத்தகைய அபாயத்திலிருந்து மயிரிழையில் ஒரு காதல் ஜோடி தப்பியது. முசுலீம் மதத்தைச் சேர்ந்த உமரும், இந்து மதத்தைச் சேர்ந்த பிரியங்காவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடுமையான எதிர்ப்பு உருவாகக் கூடும் என அஞ்சி மும்பைக்குத் தப்பியோடி, உமர் தன்னைச் "சுத்திகரிப்பு' சடங்கு செய்து கொண்டு, இந்துவாக மதம் மாற்றி கொண்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
உடனே இந்த "சர்வதேச'ப் பிரச்சினைக்காக பஜ்ரங் தள் களத்தில் (கலவரத்தில்) இறங்கியது. உமரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போபாலில் உமரின் மீது ஆள்கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டது. உமரின் அண்ணன் போலீசால் கைது செய்யப்பட்டார். மும்பை உயர்நீதி மன்றத்தில் பாதுகாப்பு கோரி, உமரும், பிரியங்காவும் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களுக்கு மும்பையிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உமரும், பிரியங்காவும் போபாலுக்குள் நுழையக் கூடாதென்றும், மீறி நுழைந்தால் உயிர் மிஞ்சாதெனவும் பஜ்ரங் தள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது. ஏப்ரல் 12 அன்று போபாலில் இப்பிரச்சினைக்காக பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்தது. மேலும் இவ்வாறு "ஆசை காட்டி மதமாற்றம் செய்யும்' முசுலீம்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பதற்காக, "இந்துப் பெண்கள் பாதுகாப்புக் கமிட்டி' என்றொரு அமைப்பையும் உருவாக்கியுள்ளது. ""பெண்கள் ஆண்களோடு இரு சக்கர வண்டிகளில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியக் கூடாது. நவீன ஆடைகள் அணியக் கூடாது'' என்று தாலிபான்களை விஞ்சும் விதத்தில் பல "கட்டுப்பாடுகளை'யும் அறிவித்திருக்கிறது, இந்த அமைப்பு. இவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்திய ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறது, இந்து பாசிச குண்டர் படை.
1998ஆம் ஆண்டு ஒரிசாவிலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் எனும் பாதிரியார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், குஜராத்தில் பைபிள்கள் எரிக்கப்பட்டதும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதும், கன்னியாஸ்திரீகள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும் பழைய கதைகள் அல்ல. அன்று பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காரணத்தினால் மட்டும் அவை நடந்துவிடவுமில்லை.
ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஜெய்ப்பூரில் வால்ட்டர் மசி எனும் பாதிரியாரின் வீடு புகுந்து நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளிவந்து வடமாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தாக்குதலை சந்தர்ப்பவசமாக படமாக்கிய ஆஜ்தக் செய்தி நிறுவனத்தின் நிரூபர் சரத்குமார், ""அப்பாதிரியாரின் பரிதாபக் கதறல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு குரூரத்தை, உதவிக்கு ஆளில்லாத ஒற்றை மனிதனை இத்தனை பேர் ஈவிரக்கமின்றித் தாக்கியதை இது வரை நான் கண்டதேயில்லை'' என மனமுடைந்து கூறினார்.
ஊடகங்களில் வெளிவந்த இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மே 6ஆம் தேதியன்று மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் மாவட்டத்தின் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் பட்டப் பகலில் நடுவீதியில் இரு கிறித்தவ நிறுவன ஊழியர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அடித்தவர்களில் ஒருவரைக் கூடக் கைது செய்யாத போலீசு, மதமாற்றம் செய்ய முயன்ற "குற்றத்திற்காக' குற்றுயிராகக் கிடந்த இருவரையும் கைது செய்தது.
அதேநாளில் கர்நாடகாவில் கோலார் தங்க வயலுக்கு அருகிலுள்ள நரசப்பூரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு தேவாலயங்களிலிருந்து வெளியில் வந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். பத்து நாட்களில் தேவாலயம் மூடப்பட வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மே 3ஆம் தேதியன்று சத்திஸ்கரில் பிரார்த்தனைக்காக கூடிய கிறித்தவர்களை வீடு புகுந்து தாக்கிய பஜ்ரங் தள் வெறியர்கள், அவர்களது கை, கால்களை முறித்தனர். மே 1ஆம் தேதியன்று ஆக்ராவில் ஒரு கிறித்தவப் பள்ளி தாக்கப்பட்டது.
···
ஆர்.எஸ்.எஸ்.இன் ""கண்காணிப்பு'' இப்பொழுது கல்விக் கூடங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. மே 9ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவில் மாணவர்களின் ஓவியங்கள் ஆண்டுத் தேர்விற்காக ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் பி.ஜே.பி. குண்டன் நீரஜ் ஜெயின் என்பவனுடைய தலைமையில் அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், மாணவர் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் இந்துக் கடவுள்களையும், இயேசுவையும் அவமதிக்கும் விதமாக இருப்பதாகக் கூறி அவரைத் தாக்கினர்.
இங்கேயும் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்கப்பட்ட சந்திரமோகன் "மத விரோதத்தைத் தூண்டினார்' எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு துணைவேந்தர் இத்தாக்குதல் பற்றி மௌனம் சாதிக்க, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டங்களுக்கு போலீசு அனுமதி மறுக்கவே, மாணவர்கள் இந்துப் பாசிசத்தை அம்பலப்படுத்துமுகமாக காமரசத்தை வெளிப்படுத்தும் பழங்கால இந்திய ஓவியங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
சந்திரமோகன் தாக்கப்படும்போது அமைதி காத்த துணைவேந்தர், இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். அக்கண்காட்சியை மூட உத்தரவிட்டார். துணைவேந்தரின் நடவடிக்கையை மாணவர்கள் எதிர்த்தனர். மாணவர்களை ஆதரித்த குற்றத்துக்காக கல்லூரி முதல்வர் சிவாஜி ராவ் பணிக்கர் மே 12ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இக்கண்காட்சிக்கு வந்த பி.ஜே.பி. உறுப்பினர்கள், ""உங்களுடைய நிர்வாணப் படங்களை நாங்கள் மாட்டுவோம்'' என்று கல்லூரி மாணவிகளை மிரட்டினர். தற்பொழுது பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறையே இழுத்து மூடப்பட்டு விட்டது. கைது செய்யப்பட்ட மாணவர் சந்திரமோகன், நாடு தழுவிய எதிர்ப்பைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போல உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரதிய ஜனதா ஒரு குறுந்தகடை வெளியிட்டது. சங்கப் பரிவாரம் நடத்திவரும் அருவறுக்கத்தக்க முசுலீம் எதிர்ப்பு வெறி பிரச்சாரத்தின் அனைத்து முடை நாற்றமும் "பாரதத்தின் குரல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறுந்தகட்டில் நாடக வடிவில் பச்சையாகவே பதிவாகியிருக்கிறது.
""இந்துக்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சும்மாயிருப்பார்கள். ஆனால், முசுலீம்கள் ஐந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு 35 நாய்களைப் பெற்றெடுத்து நாட்டையே முசுலீம் நாடாக்கி விடுவார்கள்.'' (முசுலீம்கள் கூறுவது போன்ற காட்சியில்) ""ஹா! ஹா! ஹா! இந்துப் பெண்கள் நம்மிடம் சிக்கிக் கொண்டு திணறும் பொழுது கத்திக் கூச்சலிடுவார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். ஹா! ஹா! ஹா''
""பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடவில்லையென்றால் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த நாடு அடிமையாகி விடும். உங்கள் நெற்றியில் உள்ள திலகங்களை அழித்துவிட்டு நீங்கள் தாடி வளர்க்க வேண்டியிருக்கும்.''
தேர்தலுக்கு முன் இந்தக் குறுந்தகடுப் பிரச்சினையையொட்டி பயங்கரமாகச் சண்டமாருதம் செய்த தேர்தல் ஆணையம், இதற்காக எந்தத் தலைவரையும் கிரிமினல் வழக்கில் கைது செய்யவில்லை என்பதையும் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலக் கூச்சலுக்குப் பின் மூச்சு விடவும் இல்லை என்பதையும் நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.
···
குஜராத் கலவரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடி, அங்கே ஒரு "ராம ராஜ்ஜியத்தை' நிறுவி விட்டான் என்றால் அது மிகையல்ல. குஜராத் கலவரத்தில் தமது உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து விரட்டியடிக்கப்பட்ட முசுலீம்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்றும் தங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்ல முடியவில்லை. இந்துக் குடியிருப்புகளும், முசுலீம் சேரிகளும் குஜராத்தில் தனித்தனித் தீவுகளாக பிரிக்கப்பட்டு விட்டன. படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கே வெளிப்படையாக உலவுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் வழக்குத் தொடுத்தவர்களும் பதுங்கி வாழ்கிறார்கள். பாபு பஜ்ரங்கி, நீரஜ் ஜெயின் போன்ற காலிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூக, கலாச்சாரக் காவலர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். குஜராத் கலவரம் குறித்து பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட "பர்ஜானியா' என்ற திரைப்படத்தைக்கூட குஜராத்தில் வெளியிட முடியவில்லை.
உத்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெளியிட்ட குறுந்தகட்டில் ஒரு வசனம் வருகிறது. ""தான் இந்துவென்று அழைத்துக் கொள்ளவே அஞ்சவும், நம்மை ஆத்மராமென்றோ, ராதாகிருஷ்ணன் என்றோ, சோகன்லால் என்றோ, மோகன்லால் என்றோ அழைத்துக் கொள்ளவே அஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் எங்கு பார்த்தாலும் அப்பாஸ்களும், நக்விக்களும், ரிஜ்விக்களும், மௌல்விக்களும் மட்டுமே இருப்பார்கள்.''
எதிர்காலத்தில் நடைபெறப் போவதாக ஊதிப் பெருக்கப்படும் இந்த கோயபல்சுகளின் பொய் பிரச்சாரம் நேரெதிரான விதத்தில் குஜராத்தில் கண்கூடாகக் காணக் கிடக்கிறது. இன்று அங்கே ஜீகன்புராவில் வசிக்கும் முசுலீம்கள் நாராயண்புரா எனும் இந்துப் பகுதிக்கு வேலைக்குச் செல்வதில்லை. செல்ல நேர்ந்தாலும், தாங்கள் முசுலீம் என்பதை சொல்லிக் கொள்வதில்லை. நாளை இந்நாடே இவர்களின் குரு கோல்வால்கர் கண்ட ஆரியக் கனவாக, மோடி நிதர்சனமாக்கிய குஜராத்தாக மாறுமேயானால், அங்கே முசுலீம் என்று மட்டுமல்ல, பகுத்தறிவாளன், சாதி மறுப்பாளன், மொழி உணர்வாளன், கம்யூனிஸ்டு என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. வீதிதோறும் பஜ்ரங்கிகளும், ரிதம்பராக்களும் காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தின் தருமகர்த்தாக்களாக நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதிகாரம் செய்வார்கள்.
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் கோரத் தாக்குதல் மக்கள் மத்தியில் தோற்றுவித்து வரும் அதிருப்தி அலையை விழுங்கிக் கொள்வதற்கு பார்ப்பன பாசிசம் தம் பதுங்கு குழியிலிருந்து மேலெழும்புகிறது. மக்களின் வெறுப்பை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டு ஆட்சி அமைக்குமானால், அந்த ஆட்சி இந்துத்துவத்தின் இன்னுமொரு ஆட்சி என்பதைவிட, குஜராத்தைப் போல, நாடே இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக மாற்றப்படும் ஆட்சியாக அமையும்.
· அழகு