june_2007.jpg

தொழில் நகரமான ஓசூரின் அருகிலுள்ள கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஒரே ஆச்சரியம். ஓசூர் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கசக்கிப் பிழிந்து, தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதில் முன்னணியில் நிற்கும் டி.வி.எஸ். நிறுவனம், இக்கிராமத்தின் பெண்களுக்கு

 வேலைவாய்ப்பளிக்கும் வகையில் சப்பாத்தி உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தை நடத்தி வருகிறது. 15க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏறத்தாழ 300 பெண்கள் இம்மையத்தில் சப்பாத்தி தயாரிக்கும் வேலை செய்கின்றனர். டி.வி.எஸ். நிறுவனங்களின் தொழிலாளர் உணவகங்களுக்கு மட்டுமின்றி இங்கு தயாராகும் சப்பாத்திகள் பெங்களூரிலுள்ள பீன்யா தொழிற்பேட்டைக்கும் அனுப்பப்படுகிறது.

 

சப்பாத்தி உற்பத்தி மையம் மட்டுமல்ல; இக்கிராமத்திலும் சுற்றுப்புற பகுதிகளிலும் சமுதாயக் கூடம், ஆரம்ப சுகாதார மையம், பெண்களுக்குத் தையல் பயிற்சி, கிராமங்களில் சாலை அமைத்தல், குடிநீர் கைப்பம்பு அமைத்தல், கிராமப் பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவர் எழுப்புதல் என அடுக்கடுக்காக பல "சமூக சேவை' களை டி.வி.எஸ். நிறுவனம் செய்து வருகிறது.

 

டி.வி.எஸ். நிறுவனம் இப்படி திடீர் சமூக சேவையில் இறங்கியுள்ள அதேநேரத்தில், தாமிர உருக்காலை மூலம் நிலத்தையும், நீரையும் காற்றையும் நஞ்சாக்கி வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், இப்பகுதியிலுள்ள பள்ளி மாணவர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இப்பகுதியிலுள்ள சிற்×ர்களில் இலவச கண் சிகிச்சை முகாம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சுயவேலைவாய்ப்பு முதலானவற்றையும் ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வருகிறது.

 

நிரந்தர மரண பயத்தை விளைவித்துள்ள கூடங்குளம் அணுமின்திட்ட நிர்வாகம், கூடங்குளத்தைச் சுற்றிலுமுள்ள கிராமங்களில் ஆரம்பப் பள்ளிகளைக் கட்டித் தந்து, சாலைவசதியும் மருத்துவ முகாமும் அமைத்துள்ளது. ஈரோடுக்கு அருகில் இயங்கிவரும் சேஷசாயி காகித நிறுவனம் ஒருபுறம் அந்த வட்டாரத்தையே மாசுபடுத்திக் கொண்டிருக்கும் அதேசமயம், மறுபுறம் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் குழாய் பதித்தும், சாலை கழிப்பறை தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுத்தும் "அறப்பணி' ஆற்றுகிறது. தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களை மூளைச்சலவை செய்துவரும் சன் டி.வி. குழுமம், ஆண்டுதோறும் ஏழைகள் சிலரைத் தேர்ந்தெடுத்து இலவசத் திருமணம், சீர்வரிசையாக இரு சக்கர வாகனம், கட்டில், சில்வர் பாத்திரங்களை வழங்கி வருகிறது.

 

தமிழகத்தின் பெருமுதலாளித்துவ பெருந்தொழில் நிறுவனங்கள் இப்படி "தருமதுரை'யாக அவதாரம் எடுத்துள்ளபோது, இந்தியாவின் மிகப் பெரிய கணினி மென்பொருள் தரகுப் பெருமுதலாளியான விப்ரோ பிரேம்ஜி, 16 மாநிலங்களில் 13 லட்சம் ஆரம்பப் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையில், பள்ளிக் கல்வி மேம்பாடுக்கென பல கோடி நிதி ஒதுக்கியுள்ளார். உள்நாட்டின் சிறுவணிகத்தை அழிக்க வந்துள்ள அமெரிக்க வால் மார்ட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள பார்தி மிட்டல், தனது பார்தி அறக்கட்டளை மூலம், அடுத்த ஈராண்டுகளில் நாடெங்கும் கிராமப்புற பாலர் பள்ளிகளை நிறுவ ரூ. 200 கோடி ஒதுக்கியுள்ளார். தரகுப் பெருமுதலாளித்துவ மஹிந்திரா நிறுவனம், மஹாராஷ்டிர மாநிலத்தில் புனாவுக்கு அருகே வறட்சி பாதித்த புரந்தர் வட்டத்தில் பழங்குடியினப் பெண்களின் கல்விக்கும் தொழில் பயிற்சிக்கும் பல கோடிகளை ஒதுக்கியுள்ளது. டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனம், ஆந்திராவிலுள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல கோடிகளை ஒதுக்கியிருப்பதோடு, விசாகப்பட்டினம், ஐதராபாத் நகரங்களிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மதிய உணவைத் தயாரித்துக் கொடுக்க தானியங்கி சமையற்கூடங்களை நிறுவியுள்ளது. இதுதவிர, ஆந்திராவில் நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

 

இந்தியத் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் நாட்டு மக்கள்மீது இப்படி திடீர் கரிசனத்துடன் "சமூக சேவை' செய்யக் கிளம்பியுள்ளபோது, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று இச்சமூக சேவையை விரிவாகச் செய்யக் கிளம்பியுள்ளன. கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தைச் சுடுகாடாக்கி, நெல்லை கங்கை கொண்டானில் தாமிரவருணியை உறிஞ்சி மக்களின் வாழ்வாதாரங்களையே அழித்துக் கொண்டிருக்கும் கொலைகார கோக் நிறுவனம், சென்னையைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ""வாழ்வின் அமுதம்'' எனும் திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. வளரும் குழந்தைகளின் சுவையையே மாற்றியுள்ள காட்பரீஸ் எனும் பன்னாட்டு ஏகபோக நிறுவனம், குவாலியர் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பாலர் பள்ளிகளையும் ஆரம்பப் பள்ளிகளையும் நடத்துகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் இலவச மருத்துவமுகாம் நடத்துகிறது; பஞ்சாயத்துகளுக்குக் கட்டிடங்களைக் கட்டித் தருகிறது.

 

இந்துஸ்தான் லீவர் நிறுவனம், மதுரை மாவட்டத்தின் கிராமப்புறங்களில் ""சக்தி திட்டம்'' எனும் பெயரில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சோப்புக் கட்டி, சலவைத் தூள் விற்பனை செய்து வருவாய் ஈட்ட பெண்களைப் பயிற்றுவிக்கிறது. ஐ.டி.சி. எனும் பன்னாட்டு ஏகபோக சிகரெட் நிறுவனம், ம.பி., ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குளங்கள், தடுப்பணைகள், குட்டைகளை நிறுவி 15,000 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி செய்து தருகிறது. உலகின் மிகப் பெரிய கோடீசுவர முதலாளியான பில்கேட்சின் மைக்ரோ சாப்ட் நிறுவனம், ""சிக்ஷா'' எனும் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் 80,000 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 35 லட்சம் கிராமப்புற மாணவர்களுக்கும் கணினி மென்பொருள் துறையில் பயிற்சி அளிக்கப் போகிறது.

 

கணிப்பொறிகள், செல்போன்களின் ஐ.சி.களை வடிவமைக்கும் பிரிட்டனின் ஆர்ம் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப அறிவியலைப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவி, பயிலரங்குகள், பள்ளிகளுக்கு இலவச கணிப்பொறி மென்பொருள் வழங்குதல் எனப் பல உதவித் திட்டங்களை இந்தியப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. ஹனிவெல் இந்தியா எனும் விமானத் தொழில்நுட்பவியல் நிறுவனம், தனது ஊழியர்கள் மூலம் பெங்களூரைச் சுற்றிலுள்ள கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்துதல், ஏழை மாணவர்களுக்குச் சீருடைநோட்டுப் புத்தகங்கள் வழங்குதல் என சமூக சேவையில் இறங்கியுள்ளது.

 

என்ன ஆயிற்று இந்தப் பெருமுதலாளிகளுக்கு? ஏன் திடீரென இவர்கள் சமூக சேவையில் இறங்கியுள்ளார்கள்? ஒருவேளை இவர்கள் அந்தக் காலத்து இங்கிலாந்து முதலாளியான ராபர்ட் ஓவன் போல தொழிலாளர்கள் மீது இரக்கம் கொண்டு கற்பனாவாத சோசலிஸ்டுகளாக மாறிவிட்டார்களா? அல்லது செய்த பாவங்களைப் போக்க புண்ணியம் தேடும் முயற்சியாக இப்படிச் சில தரும காரியங்களைச் செய்கிறார்களா?

 

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகவே இப்பெரு முதலாளிகள் இப்போது உழைக்கும் மக்கள் மீது திடீர்க் கரிசனை காட்டுகிறார்கள். இதைத் தமது நிறுவனங்களின் திட்டமாக அறிவித்து செயல்படுத்தவும் தொடங்கியுள்ளார்கள். இதைத்தான் பெருந்தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (இணிணூணீணிணூச்tஞு குணிஞிடிச்டூ கீஞுண்ணீணிணண்டிஞடிடூடிtதூ) என்று முதலாளித்துவ மூதறிஞர்களும் ஆட்சியாளர்களும் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

 

ஏற்கெனவே நிலப்பிரபுக்கள் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது, மண்டகப்படி நடத்துவது அல்லது மின்சார விளக்குகள் பொருத்தி ""உபயம்'' என விளம்பரப்படுத்திக் கொள்வது என்று வள்ளல் அவதாரம் போடுகின்றனர். சில பெருமுதலாளிகள் பள்ளிகளுக்கு நன்கொடை தருவது, ரத்ததான முகாம் நடத்துவது, ஆகஸ்ட் 15 அன்று இனிப்பு வழங்குவது என்று தான தருமங்களைச் செய்கின்றனர். ஆனால், அவ்வப்போது கருப்புப் பணத்தை மறைக்க செய்யப்படும் இத்தகைய சமூகசேவைகள் இப்போது பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கொள்கைத் திட்டமாகவே செயல்படுத்தப்படுவதற்கு காரணம் என்ன?


தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற பெயரில் தொடரும் மறுகாலனியாக்கச் சூறையாடலால் உலகெங்கும் பேரழிவுகளும் அதற்கெதிராக உழைக்கும் மக்களின் கலகங்களும் பெருகி வருகின்றன. மறுகாலனியாக்கச் சூறையாடலால் தீவிரமாகிவிட்ட வறுமை, வேலையின்மை, பட்டினிச்சாவுகள், சுற்றுச்சூழல் முறைகுலைவுகளால் கொதித்தெழும் மக்கள் போராட்டங்கள் வெள்ளமாகத் திரண்டெழும் முன்னே, அதற்கு வடிகால் வெட்டி சாந்தப்படுத்தி திசைதிருப்ப ஏகாதிபத்தியவாதிகள் கண்டுபிடித்துள்ள புதிய உத்திதான் இத்தகைய சமூக சேவைத் திட்டங்கள்.

 

பெருந்தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் தமது உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்றால், அப்போராட்டத்தைத் தனிமைப்படுத்தி ஒடுக்கவும், தொழிலாளர்களுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களை ஆத்திரமூட்டவும் இத்தகைய உத்தி உள்நாட்டு வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளுக்குத் தேவையாக உள்ளது. உதாரணமாக, ஓசூர் டி.வி.எஸ். நிறுவனம், தொழிலளர் போராட்டத்தால் தற்காலிகமாக கதவடைப்பு செய்யப்பட்டால், அங்குள்ள தொழிலாளர் உணவகங்களும் மூடப்படும். இதனால் உணவகங்களுக்கு சப்பாத்தி தயாரித்து அனுப்பும் மகளிர் சுயஉதவிக் குழு மையமும் முடங்கி, அங்கு பணிபுரியும் கிராமப் பெண்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பாடும். இதைக்காட்டி, ""உங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுவது தொழிலாளர்கள்தான்!'' என்று எதிர்ப்பிரச்சாரம் செய்து, போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக சப்பாத்தி உற்பத்தி மையத்தின் ஊழியர்களை டி.வி.எஸ். நிர்வாகம் கொம்பு சீவி விடும். இதுதவிர சுற்றுப்புற கிராமங்களில் செய்துள்ள "சமூகசேவை'யைச் சாதகமாக்கிக் கொண்டு, அப்பகுதியிலுள்ள உழைக்கும் மக்களிடம் தொழிலாளர் போராட்டத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு தார்மீக ஆதரவையும், அடியாள்படையையும் திரட்டிக் கொள்ளும்.

 

சுருக்கமாகச் சொன்னால், இப்புதிய உத்தியின் மூலம் பெருந்தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்க முடிகிறது. இந்த ஒடுக்குமுறைக்கு இதரபிரிவு உழைக்கும் மக்களிடம் தார்மீக ஆதரவையும், எதிர்போராட்டத்தையும் கட்டியமைக்க முடிகிறது; தமது சுரண்டல் கொள்ளையையும், அடக்குமுறையையும் மூடிமறைத்து சமூக அக்கறை கொண்ட தருமதுரையாக நாடகமாட முடிகிறது. ""நம்ம முதலாளி, நல்ல முதலாளி'' என்று ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் மக்களையே துதிபாட வைக்க முடிகிறது; மனிதமுகம் கொண்ட தொழில்வளர்ச்சி என்று மாய்மாலம் செய்ய முடிகிறது.

 

இத்தகைய "சமுதாயப் பொறுப்புணர்வு'த் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு இந்திய அரசின் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன. 11வது ஐந்தாண்டுத் திட்டம், பெருந்தொழில் நிறுவனங்களின் இத்தகைய சமூகசேவையை நாட்டின் பல்வேறு சமூக நலத் திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது. பெருந்தொழில் நிறுவனங்கள் தமது வருவாயில் 2% அளவுக்கான தொகையை இத்தகைய சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு செலவிடவும் முன் வந்துள்ளன.

 

டைம்ஸ் பவுண்டேசன், பிரிட்டிஷ் கவுன்சில் முதலான அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்கள், இந்தியாவில் இத்திட்டத்தை வளர்த்தெடுக்கவும் விரிவுபடுத்தவும் இங்குள்ள வெளிநாட்டு உள்நாட்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்துகின்றன. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் தொழில்வர்த்தகத்துக்கும் சமூகத்துக்குமிடையிலான உறவு மேம்பட்டு, சமூக அமைதி நிலவும் என்று டைம்ஸ் பவுண்டேசன் போதிக்கிறது. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் தமது லாபத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால், தமது வருவாயில் 5% வரை இத்திட்டங்களுக்குச் செலவிடுமாறு பிரிட்டிஷ் கவுன்சில் உபதேசிக்கிறது.

 

இத்திட்டங்களை மக்களிடம் விளம்பரப்படுத்தி ஆதரவு திரட்ட ஊடகங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ""ஹிந்து'' பத்திரிகை குழுமத்தின் ""பிசினஸ் லைன்'' நாளேடு அண்மையில் ரிலையன்ஸ், இந்துஸ்தான் லீவர், லீ மெரிடியன் முதலான உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக நிறுவனங்களுடன் இணைந்து சென்னையில் பயிற்சிப் பட்டறையை நடத்தியது. இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகள் அனைத்திலும் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் ""சி.எஸ்.ஆர். ஆசியா வீக்லி'' எனும் வாரப் பத்திரிகையும் தொடங்கப்பட்டுள்ளது.

 

சாலைகள், இருப்புப் பாதைகள், நாடாளுமன்றம், ஆங்கிலேய அடிமைச் சிந்தனைக்கேற்ற மெக்காலே கல்வி முறை என்று பிரிட்டிஷ் காலனியாதிக்கம் புதிய அணுகுமுறையுடன் நமது நாட்டையும் மக்களையும் அடிமைகளாக்கி நீண்ட காலம் அடக்கியாண்டது. காலனியாதிக்கத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட இந்திய நாட்டு மக்களும் பங்கேற்கும்படி உள்ளாட்சி அமைப்புகளை நிறுவி, இந்திய மக்களாலேயே ""ரிப்பன் எங்கள் அப்பன்'' என்று துதிபாட வைத்தது. அதே உத்தியோடு இப்போது மறுகாலனியாக்கம், பெருந்தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. அன்றைக்கு ஒரு ரிப்பன் என்றால், இன்றைக்கு பில்கேட்ஸ், விப்ரோ பிரேம்ஜி, மிட்டல், டாக்டர் ரெட்டி என பல நூறுபேர்.

 

மனித முகம் கொண்ட மறுகாலனியாக்கம் என்ற ஒரு புதிய சதி வேகமாக அரங்கேறி வருகிறது. சமூக சேவையின் பெயரால் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு ஆதிக்கம் செய்யத் துடிக்கும் ஏகாதிபத்திய சதியை, மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடி வரும் உழைக்கும் மக்கள் விழிப்புடனிருந்து முறியடிக்க வேண்டும். தொழிலாளி வர்க்கம் இதரபிரிவு உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்பட்டுப் போராடுவதன் மூலமே இத்தகைய ஏகாதிபத்திய சதிகளைத் தகர்த்தெறிந்து, மறுகாலனியத் தாக்குதலை முறியடிக்கவும் முடியும்.


· பாலன்