Language Selection

புதிய ஜனநாயகம் 2007

june_2007.jpg  குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ""லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சோராபுதீன், முதல்வர் நரேந்திர

 மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்தபொழுது, போலீசாரோடு நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு துறையைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் அறிவித்தனர்.

 

""சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும்; அவரது மனைவி கவுசர்பீ காணாமல் போனது பற்றியும் மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்'' எனக் கோரி, சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், உச்சநீதி மன்றத்திற்குக் கடிதமொன்று எழுதினார். அக்கடிதத்தைப் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையைப் பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இம்மோதலைப் புலனாய்வு செய்த கீதா ஜோஹ்ரி என்ற அதிகாரி, ""இது போலி மோதல் கொலையாக இருக்கலாம்'' என அறிக்கை அளித்தார். இப்பொழுது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ""சோராபுதீன் போலி மோதலில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மனைவி கவுசர்பீயும் கொல்லப்பட்டு, அவரது சடலம் இரகசியமாக எரிக்கப்பட்டு விட்டதாக'' குஜராத் அரசே உச்சநீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

 

இவ்வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என். தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்; ஆய்வாளர் என்.ஹெச்.தாபி, காவலர் சாந்தாராம் ஷர்மா; போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியனின் தனி உதவியாளர் அஜய் பர்மர் உள்ளிட்டு ஆறு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

""ஹைதராபாத் நகரில் இருந்து மகாராஷ்டிராவிற்குத் தனது மனைவி கவுசர்பீ, தனது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரோடு பயணம் செய்து கொண்டிருந்த சோராபுதீன் வழி மறிக்கப்பட்டு, நவம்பர் 22, 2005 அன்று நள்ளிரவில் போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் சென்ற குஜராத் மற்றும் ஆந்திர மாநில போலீசாரால் கடத்தப்பட்டது தொடங்கி, நவம்பர் 26, 2005 அன்று அகமதாபாத் நகரில் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையால் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது வரை அனைத்தையும்'' போலி மோதல் கொலையில் பங்கு கொண்ட காவலர் அஜர் பர்மர் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.

 

சோராபுதீன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மனைவி கவுசர்பீ, பா.ஜ.க.வின் அகமதாபாத் நகர கவுன்சிலர் சுரேந்திரா ஜிராவாலாவுக்குச் சொந்தமான பங்களாவில் இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, நவ. 28, 2005 அன்று அதே பங்களாவில் கொல்லப்பட்டு, பிறகு அவரது சடலம், (இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி) வன்சாராவின் சொந்த கிராமமான இலோலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இரகசியமாக எரிக்கப்பட்டதை குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு போலீசு படையைச் சேர்ந்த ஓட்டுநர் நாதுசிங் ஜடேஜா வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.

 

மேலும், கடத்தி வரப்பட்ட சோராபுதீன் கவுசர்பீ தம்பதியினரைத் தனியார் பண்ணை வீட்டில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதற்கு உதவிய சதீஷ்பாய் ராம்ஜிபாய் ஷர்மா; கவுசர்பீயின் சடலத்தை எரிப்பதற்குத் தேவையான விறகினை போலீசுக்கு விற்ற பகவதி டிம்பர் மார்ட் என்ற நிறுவனத்தின் அதிபர்; கவுசர்பீயின் சடலம் எரிப்பதற்குக் கொண்டு செல்லப்பட்டபொழுது, சகதியில் சிக்கிக் கொண்ட வாகனத்தை மீட்பதற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்ட கிரேன் இயக்குநர் ஆகியோரும் கவுசர்பீயின் கொலை தொடர்பாகச் சாட்சியம் அளித்துள்ளனர்.

 

சோராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டதற்கு, கவுசர்பீ வலுவான சாட்சியமாக இருந்திருக்கிறார். குஜராத் போலீசார், இந்த வலுவான சாட்சியத்தைக் கலைப்பதற்காகவே, ""பணம் தருகிறோம்; பாகிஸ்தானுக்கு ஓடி விடு'' என கவுசர்பீயிடம் பேரம் நடத்தியுள்ளனர். அதற்கு கவுசர்பீ ஒத்துக் கொள்ளாததால்தான், அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, அதற்குப் பின் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

 

இம்மோதல் கொலையின் மற்றொரு சாட்சியான துளசிராம் பிரஜாபதி, இராசஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ரோந்து போலீசாரால், டிச.26, 2006 அன்று குஜராத் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டமான பனசகந்தாவில் உள்ள அம்பாஜி நகரில் நடந்த ""மோதலில்'' சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

சோராபுதீனைச் சுட்டுக் கொன்ற போலீசு படைக்குத் தலைமை தாங்கிய வன்சாரா, குஜராத் மாநில எல்லைப்புற போலீசு பிரிவின் போலீசு இயக்குநராகப் பதவியேற்றுக் கொண்ட இரண்டாவது வாரத்திலேயே, பிரஜாபதி அம்மாநிலத்தின் எல்லைப் பகுதியில் நடந்த "மோதலில்' சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும்; இம்மோதல் சோராபுதீன் கொலை பற்றிய விசாரணை ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சோராபுதீன் கொலையின் மற்றொரு சாட்சியான சில்வஸ்டர் டானியல் கிறிஸ்டியன், பிரஜாபதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ""காணாமல்'' போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

 

சோராபுதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரா ஒருபுறம் அழித்துக் கொண்டிருந்த பொழுது, இன்னொரு புறம் குஜராத் அரசின் உள்துறை அமைச்சகம் கொலை தொடர்பான விசாரணையைத் தாமதப்படுத்துவதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது.

 

உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையை விசாரிக்குமாறு சனவரி 21,2006 அன்று குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசு உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்திய உள்துறை துணை அமைச்சர் அமித் ஷா, ""கவுசர்பீ, சோராபுதீனின் சட்டபூர்வ மனைவி கிடையாது; கவுசர்பீ பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பாகிஸ்தானுக்குத் தப்பியோடியிருக்கலாம்'' என அண்டப்புளுகை அவிழ்த்து விட்டார். உச்சநீதி மன்ற உத்தரவு வந்து ஆறு மாதங்கள் கழித்துதான், இம்மோதல் கொலை பற்றிய விசாரணை அதிகாரியாக கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார்.

 

""இது போலி மோதல் படுகொலை'' என அவர் அளித்த முதல் அறிக்கையை, உச்சநீதி மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்காமல், குஜராத் அரசு காலதாமதப்படுத்தியது. விசாரணை தொடர்பாக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த கீதா ஜோஹ்ரிக்கு, அந்நகருக்குச் செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் குற்றவாளிகளென கீதா ஜோஹ்ரி முடிவு செய்து அறிக்கை கொடுத்த பிறகு, அக்குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது என கீதா ஜோஹ்ரிக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டது.

 

இறுதியாக, விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன், கீதா ஜோஹ்ரிக்குப் பதிலாக அவரின் ""எதிரி'' ரஜ்னிஷ் ராய் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ரஜ்னிஷ் ராய் அம்மூன்று அதிகாரிகளைக் கைது செய்ததோடு, அவர்களை உண்மை அறியும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்தார். இதே சமயத்தில், ""கீதா ஜோஹ்ரி ஏன் மாற்றப்பட்டார்?'' என உச்சநீதி மன்றம் கேட்டதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குஜராத் அரசு, ரஜ்னிஷ் ராயைத் தூக்கியடித்துவிட்டு, கீதா ஜோஹ்ரியை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்தது. எனினும், கீதா ஜோஹ்ரி தன்னிச்சையாகப் செயல்படுவதைத் தடுப்பதற்காக, அவருக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, குஜராத் அரசு.

 

குஜராத் மாநில காங்கிரசு கமிட்டியின் தலைவர் பரத்சிங் சோலங்கி, ""ராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்பில் கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் முதலாளிகளைப் பணம் கேட்டு மிரட்டி வந்த சோராபுதீனைப் போட்டுத் தள்ள அவர்கள் விரும்பியதாகவும்; அதற்கான பேரம், பா.ஜ.க. தலைவர்கள் மூலம் வன்சாராவிடம் நடந்ததாகவும்; இதற்காக 60 இலட்ச ரூபாய் பணம் கைமாறியதாகவும்'' குற்றஞ் சுமத்தியிருக்கிறார். குஜராத் மாநில போலீசு இந்தப் பின்னணி பற்றி விசாரணை நடத்தவேயில்லை.

 

···

 

இது போன்ற மர்மம் நிறைந்த ""தேச பக்த கொலைகள்'' இந்து ராஷ்டிரமான குஜராத்தில் இரண்டு மாதத்திற்கு ஒன்று நடப்பதாகவும்; நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான போலீசு அதிகாரியான வன்சாரா 9 மோதல் கொலைகளை நடத்தி, 15 பேரைக் கொன்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன், அக். 22, 2002 அன்று சமீர்கான் என்ற முசுலீம் இளைஞர் குஜராத் மாநில குற்றப் பிரிவு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்சாரா தலைமையில் நடந்த இம்மோதல் படுகொலை, மோடியின் அரசியல் பயணத்தில் முக்கியமான ஒன்று.

 

""சமீர்கான் ஜெய்ஷ்இமுகம்மது என்ற பாக். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்; பாக்.இல் பயங்கரவாதப் பயிற்சி பெற்றவன்; நரேந்திர மோடியைக் கொல்லவே குஜராத்திற்குள் நுழைந்திருக்கிறான்'' என வன்சாரா சமீர்கானைச் சுட்டுக் கொன்ற பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. நரேந்திர மோடி, ""குஜராத் பெருமையைக் காப்பாற்ற உழைக்கும் என்னை முசுலீம் ஜிஹாதிகள் குறி வைக்கிறார்கள்'' எனக் கூறி, இம்மோதலைத் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார்.

 

இம்மோதல் படுகொலையை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம், ""சமீர்கான் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவரோ, பாக்.இல் தீவிரவாதப் பயிற்சி பெற்றவரோ கிடையாது'' எனத் தீர்ப்பளித்தது. இப்படுகொலையை மோதலாகக் காட்ட முதலமைச்சர் அலுவலகமும், போலீசு அதிகாரிகளும் இணைந்து பல மோசடிகள் நடத்தியிருப்பதை, ஐ.கே.யாதவ், தீர்த் ராஜ் என்ற இரு உயர் போலீசு அதிகாரிகளே தங்களின் விசாரணையில் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளனர்.

 

ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் நகரின் நுழைவாயில் பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன் உள்ளிட்டு நான்கு முசுலீம்கள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவும், மோடியின் உயிரை ""தீவிரவாதிகளிடமிருந்து'' காப்பாற்ற, வன்சாரா நடத்திய மோதல்தான். இம்மோதல் கொலை பற்றி தேசிய மனித உரிமைக் கமிசன் குஜராத் போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், ""இம்மோதல் பற்றி போலீசார் விவரித்துள்ளதில் கடுகளவுகூட அடிப்படை ஆதாரம் இல்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது.

 

பி.ஜி. வர்கீஸ் என்ற பத்திரிகையாளர், ""குஜராத்தில் 2003க்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த 21 மோதல் படுகொலை பற்றி முறையாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ""இந்த 21 மோதல் படுகொலைகளில் ஒன்றில் கூடப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூடக் கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை'' என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

···

 

சோராபுதீன் கொலையை இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு நியாயப்படுத்தி வரும் இந்து மதவெறிக் கும்பல், இன்னொருபுறம், ""மற்ற மாநிலங்களில் போலி மோதல் கொலைகளே நடப்பதில்லையா?'' என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து விட்டது.

 

""மோதல்'' கொலைகளின் மூலம்தான் தீவிரவாதிகளை ஒழிக்க முடியும் என்ற பொதுக் கருத்தை, ஓட்டுக் கட்சிகளும், போலீசு அதிகாரிகளும், பத்திரிக்கைகளும் இணைந்து உருவாக்கி வருகின்றன. மேலும், ""தீவிரவாதி யார்?'' என்ற கேள்விக்கு, வலதுசாரி பா.ஜ.க. தொடங்கி இடதுசாரி போலி கம்யூனிஸ்டுகள் வரை, அனைத்து ஓட்டுக் கட்சிகளின் பதிலும் ஒன்றுதான்.

 

அதனால்தான், காங்கிரசாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் சோராபுதீன் கொலையை நியாயப்படுத்தும் மோடியின் ""தேச பக்த'' அரசியலை எதிர்த்து நிற்க முடியவில்லை. ""சோராபுதீன் கொலையை சி.பி.ஐ. விசாரிக்கத் தேவையில்லை'' என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டதால், காங்கிரசும், போலி கம்யூனிஸ்டுகளும் மூக்கறுந்து போய் நிற்கிறார்கள் என்பதே உண்மை.

 

மோதல் கொலைகள், தடா, பொடா போன்ற அரசு பயங்கரவாதத்தையும், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி பயங்கரவாதத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால், ""நக்சல்பாரிகள், தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள், முசுலீம்கள் இவர்கள்தான் தீவிரவாதிகள்'' என இந்திய ஆளும் கும்பல் உருவாக்கி வைத்துள்ள கருத்தை முதலில் அடியோடு புறக்கணிக்க வேண்டும். இல்லையென்றால், மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகள் வெற்றி பெறுவதையும், வன்சாரா போன்ற காக்கிச் சட்டை கொலைகாரர்கள் ""ஹீரோ''க்களாக வலம் வருவதையும் தடுக்க முடியாது.


· குப்பன்