நீர் இன்றி அமையா உலகமிதில்
நிலம் உறையும் மசகுப் பொருளெடுத்து
விற்போரிடம், வாங்க மட்டும் தெரிந்த
சிறிலங்கா - சுன்னாக மின்சார சபையே..!
எதற்காகப் பாழ் கிணற்றில்
நிலப் பெருங்குளாய் பலவிறுக்கி
உன் பெருங் கழிவை அதிற் செலுத்தி
அடி நிலமேகும் நீரொடு கசிந்திடச் செய்தீர்..?
உன், அனல் மின்னறுப்புக் கழிவுகளை
திட்டமிட்டு - நிலத்திலிட்டு - உறையவைத்து
புதுவகை மசகெடுக்க விளைந்தீரோ..!
அது, உயிர்களின் ஆகார நீரெனத் தெரியாதோ
உம்மால், மயிலணியின் ஊர்க் கிணறுகளில்
மிதப்பதனை நீவீரே முதற் குடிப்பீரோ..?
பசுங்காய் கனிகள் விளைந்து
தினம், அதிகாலைச் சந்தையில் பொலிந்திடும்
யாழ். குடா மக்களின் மரக்கறிச் சுரபியது.
நீரொடு மேலேகும் கழிவுனதால்
அனைத்தும் அழியும் நிலையாகி
ஆங்கே, பயிர் விளைத்த உழவர்களும்
அப் பெரும் மனித மூலதனமும்
அதில் தம் வாழ்வைக் கொண்டிருந்தோரும்
அத்தனை மக்கள் - பின் சந்ததியும்
இனி என்னாகும் அவர்க்கு வாழ்வு..?
எண்ணெய்க்குக் குழாய் தோண்டும் உலகத்தில்
ஆகாரத் தண்ணிக்குத் தோண்டிய கிணறுகளில்
கழிவெண்ணையா..!? உண்மையா..!!? என
கல்லுப் போட்டுப் பார்க்கிறது ஒரு வட்டம்
அதை விண்ணாணம் செய்கின்றது சில வட்டம்
இனி, சுன்னாகம் மறந்திடுமோ நின் திட்டம்..?
மின்சாரம் தேவையெனும் போதினிலே
இயல் மின்சாரம் காணும் வழி தேடாமல்
அனல் மின்னாலை - அணு மின்னாலை
இவைக்கு ஒப்பான கொலைகார மின்னாலை
எவைதானும் மக்களுக்காய் அமையலாமோ..?
கொஞ்சக் காலம் முன்பாக கழிவொயிலை
போராடும் மனிதரிலே வீசிய பக்ச அரசியல்
இதோ.., ஊர் மக்கள் குடிக்கின்ற
சமைக்கின்ற - குளிக்கின்ற - விதைக்கின்ற - என
ஒவ்வொரு மழைத் துளியிலும் இருந்து
நிலத்தடி தேங்கி ஓடும் நீர்வரை
சுழல்கின்ற நீரின் அர்த்தமே
உலகின் அடிப்படை உயிர் - இதில்..,
• மக்களின் பொதுச் சொத்தைக் கெடுத்தோரைக் கைது செய்.
• நீரிலும் - நிலத்திலும் நஞ்சைக் கலந்தோரைக் கைது செய்.
• இயற்கையை கெடுத்த அனைத்து நிறுவனங்களையும் கைது செய்.
• நேர்மையான நீதிக் கூண்டில் குற்றவாளிகள் அனைவரையும் நிறுத்து.
• சுன்னாகத்தின் கழிவு மின்சக்தியை முழுமையாக நிறுத்து.
• இயற்கையை பாதிக்காதஇ இயல் மின்சாரத்தை மக்களுக்கு தொடர்ந்து வழங்கு.
• காலவரையற்ற தூய நீரை, தொடற்சியாக - இலவசமாக வழங்கு.
• பாதிக்கப்படும் அனைத்துக்கும் - அனைவருக்கும் இழப்பீடு - மாற்றீடு வழங்கு.
• பொறுக்கித்தனமான - பக்கச் சார்பான - மக்கள் எதிரிகளை இங்கு பொறுப்பில் வைக்காதே.