Language Selection

புதிய ஜனநாயகம் 2007

june_2007.jpg

தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகவும் வடலூரில் வள்ளலார் வழிபாட்டு முறையைப் பார்ப்பனமயமாக்கிய சதிக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியிருக்கின்றன. தில்லைக் கோயில் கருவறையின் எதிரில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தேவாரம்திருவாசகம் பாடலாம் என்று

 இந்து அறநிலையத்துறையின் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல, மதங்களையும் உருவ வழிபாட்டையும் எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் மறுத்து வள்ளலார் ஏற்படுத்திய வடலூர் சத்திய ஞான சபையில், சிவலிங்க வழிபாடும் பார்ப்பனச் சடங்குகளும் தடை செய்யப்பட வேண்டுமென்றும் வள்ளலார் உருவாக்கிய சோதி வழிபாடு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

""தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடக்கூடாது'' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் விதித்திருக்கும் தடைக்கு எதிராக சிவனடியார் ஆறுமுகசாமி மேற்கொண்டு வரும் போராட்டம் நெடியது. ஆதீனங்கள், மடங்கள், சைவப் பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள் என்று பல பேரையும் பல ஆண்டுகளாகச் சந்தித்து இந்த அநீதியைத் தட்டிக் கேட்குமாறு மன்றாடியிருக்கிறார் ஆறுமுகசாமி. தனியொரு மனிதனாக கையில் துண்டறிக்கைகளை அச்சிட்டு வைத்துக் கொண்டு, சிதம்பரம் மக்கள் மத்தியிலெல்லாம் விநியோகித்திருக்கிறார். கோரிக்கையின் நியாயத்தை மக்கள் ஆதரித்தனரெனினும், "எல்லாம் வல்ல' தீட்சிதர்களை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த அமைப்பும் முன்வரவில்லை.

 

எனினும், மனம் தளராமல் 8.5.2000 அன்று தனியொரு மனிதனாகச் சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடினார் ஆறுமுகசாமி. அந்தக் கணமே தீட்சிதக் காலிகளால் அடித்து தூக்கியெறியப்பட்டார். கையொடிந்த நிலையிலும் அந்தக் காலிகளுக்கு எதிராகக் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். ஆனால், தீட்சிதர்களின் கூலிப்படையாகவே இயங்கும் போலீசு, திட்டமிட்டே வழக்கை பலவீனமாக்கி தீட்சிதக் காலிகளின் விடுதலைக்கு உதவியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜு மூலம், தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. ""தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம். தில்லைக் கோயிலில் தமிழில் பாட வைப்போம்'' என்று விழா மேடையிலேயே அறிவித்தோம்.

 

2004இல் இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று போராட்டத்தையும் தொடங்கியவுடன் தங்களுடைய நிலையை நியாயப்படுத்திக் கொள்ள இந்து அறநிலையத் துறையையே பயன்படுத்திக் கொண்டது தீட்சிதர் கும்பல். இணை ஆணையர் மூலம் ""தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடுவது மரபுக்கு விரோதமானது'' என்று ஒரு உத்தரவைப் பெற்றது. பிறகு, ""தமிழில் பாடினால் கோயிலின் புனிதம் கெட்டு விடும். சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்'' என்று முன்சீப் கோர்ட்டில் ஒரு தடையாணையையும் வாங்கி வைத்துக் கொண்டது.

 

இந்தத் தடையாணைகளைத் தகர்ப்பதற்காக, கடந்த 4 ஆண்டுகளாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து எமது தோழர்கள் பல்வேறு முனைகளிலும் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சிதம்பரம் நகரெங்கும் பத்து நாட்களுக்கு தொடர்ச்சியாகத் தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டம், தீட்சிதர்களுக்கு எதிராக உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றங்களில் வழக்குகள், கோயிலுக்குள் நடந்த கொலைகள், திருட்டுகள் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்ய மறுக்கும் போலீசுக்கு எதிரான வழக்குகள், இப்பிரச்சினையை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்... இறுதியாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு மேல்முறையீட்டு மனு! இம்முயற்சிகளில் பா.ம.க.வைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.எம்.எஸ்., முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.எஸ்., திரு.சக்திவேல் முருகனார் போன்றவர்கள் துணை நின்றிருக்கின்றனர். இந்த நீண்ட போராட்டத்தின் இறுதியில்தான் அறநிலையத்துறை ஆணையரின் தற்போதைய உத்தரவு வெளி வந்துள்ளது.

 

""தில்லைக் கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல; திருச்சிற்றம்பல மேடையிலிருந்து தமிழ்த் திருமுறைகளை தீட்சிதர்கள் மட்டுமே "தொன்று தொட்டு' ஓதி வருகின்றனர் என்பது உண்மையல்ல; பக்தர்கள் வழிபடலாம், ஆனால் தமிழை உச்சரிக்கக் கூடாது என்பதும் அது கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் என்பதும் தமிழுக்கு இழைக்கப்படும் பேரிழுக்காகும். கோயில் நிர்வாகத்தை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற உள்நோக்கத்தில் தீட்சிதர்களே உருவாக்கிய கட்டுப்பாடாகத்தான் இது தோன்றுகிறது'' என்று கூறுகிறது ஆணையரின் உத்தரவு.

 

எனினும், ""கால பூசைகளின்போது திருக்கோயிலால் நியமிக்கப்படும் ஓதுவார்களைத் தவிர வேறு யாரும் திருமுறைகளைப் பாடக்கூடாது; பக்தர்கள் பூசை முடிந்தபிறகுதான் பாடலாம்'' என்று கூறுகிறது இந்த உத்தரவு. "பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்' தி.மு.க. அரசின் மழுங்கத்தனத்துக்குப் பொருத்தமான வகையிலும், தீட்சிதர்களின் சாதி உரிமையில் தலையிடாத வகையிலும் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதிலும், தீட்சிதப் பார்ப்பனக் கும்பல் இதை ஏற்பதற்குக் கூடத் தயாராக இல்லை.

 

இந்த உத்தரவு கையில் கிடைத்தவுடனே, ""மே 17ஆம் தேதியன்று சிற்றம்பல மேடையேறி ஆறுமுகசாமி தேவாரம் பாடுவார்'' என்ற அறிவிப்பை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்டது. ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. தோழர்கள் செங்கொடிகளுடன் திரண்டனர். விடுதலைச் சிறுத்தைகள், தி.க. ஆகியோருடன் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் பலரும் அணிதிரண்டனர். பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டவுடன் அங்கேயே வழிமறித்தது போலீசு. ""அறநிலையத்துறையின் ஆணை இருக்கிறது, வழிபாட்டு உரிமையை மறுக்க போலீசுக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்ற வாதங்கள் எதையும் போலீசு காதில் வாங்கவில்லை. தீட்சிதர்கள் முன்சீப்பு கோர்ட்டில் ஏற்கெனவே தடை வாங்கியிருப்பதாகவும், எனவே எல்லோரும் கலைந்து செல்லவேண்டும் என்றும் கூறியது போலீசு. கலைந்து செல்ல மறுத்து கொளுத்தும் வெயிலில் 4 மணிநேரம் சாலையை மறித்தனர் தோழர்கள். அனைவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தது போலீசு.

 

பக்தர்களின் வழிபாட்டு உரிமையைத் தடை செய்வது சட்டவிரோதமானது என்று வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்கள் எதுவும் போலீசின் காதுகளில் ஏறவில்லை. ஏறாததில் வியப்புமில்லை. ஏனென்றால், தீட்சிதர்களின் கேவலமான எடுபிடிகளாகவே உடம்பை வளர்த்திருப்பவர்கள் சிதம்பரம் காவல்துறை அதிகாரிகள். கோயிலுக்குள்ளேயே நடைபெற்ற 3 கொலைகள், நகைத்திருட்டுகள், இரவு நேரத்தில் கோயிலே விபச்சார விடுதியாகவும் மதுபான கேளிக்கை விடுதியாகவும் மாற்றப்படுவது ஆகியவை பற்றிக் கொடுக்கப்பட்ட எந்தப் புகார் மீதும் எந்தக் காலத்திலும் சிதம்பரம் போலீசு வழக்கு பதிவு செய்ததில்லை. இவை பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீசு அனுப்பியிருக்கிறது. இதுதான் போலீசின் யோக்கியதை.

 

தங்களுக்கு அரணாக போலீசு நிற்கிறது என்ற போதிலும், இந்தப் போராட்டம் தீட்சிதர் கும்பலுக்குப் பீதியை ஏற்படுத்திவிட்டது. ""நாங்களே ஆறுமுகசாமியை உரிய மரியாதையுடன் அழைத்துச் சென்று பாட வைக்கிறோம். பிரச்சினையை இத்தோடு விட்டுவிடச் சொல்லுங்கள்'' என்று தூது விட்டது தீட்சிதர் கும்பல். "நந்தனை உரிய மரியாதையுடன் அழைத்துச் சென்ற' இந்தக் கிரிமினல் கும்பல், அடுத்த சதிக்கு அவகாசம் வாங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டோம். ஆணையரின் உத்தரவுக்கு எதிராக காதும் காதும் வைத்தாற்போல உயர்நீதி மன்றத்தில் தடையுத்தரவு வாங்கி விடுவதற்கான வாய்ப்பு உள்ளதென்பதால் விழிப்புடன் இருந்தோம். எதிர்பார்த்தபடியே தமிழுக்கு இடைக்காலத் தடை கேட்டு உயர்நீதி மன்றம் வந்தார்கள். அதனையும் கடுமையாக எதிர்த்து முறியடித்தோம். இறுதியாக ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் ஆறுமுகசாமியை மிரட்டியிருக்கிறார்கள் தீட்சிதக் காலிகள். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகார் மீது இந்தக் கணம் வரை போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை.

 

எத்தனை தடைகள் வந்தாலும் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலித்தே தீரும். அதனை எந்த தீட்சிதனாலும் தடுக்க முடியாது. திருவரங்கம் கருவறைக்குள் பெரியாரையும் அம்பேத்கரையும் கொண்டு சென்ற எமது தோழர்கள் இதையும் செய்தே தீருவார்கள். ஆனால், வெறும் 250 தீட்சிதர்கள் ஒரு லட்சம் மக்கட் தொகை கொண்ட சிதம்பரத்தை எப்படி ஆட்டி வைக்க முடிகிறது? ஆறு கோடித் தமிழ் மக்களை எப்படி இழிவுபடுத்த முடிகிறது? இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலாக நீடிக்க இன்னமும் அரசு ஏன் அனுமதித்திருக்கிறது? — என்ற கேள்விகளுக்குத்தான் நமக்கு விடை வேண்டும்.

 

···

 

ஓட்டுக்கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு, ஆதீனங்கள், மடங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பார்ப்பன எடுபிடிகளான "சூத்திரர்களின்' ஆதரவும், பார்ப்பனரல்லாத பக்தர்களின் சொரணையற்ற நிலையும்தான் தீட்சிதர்களின் திமிரைச் சாத்தியமாக்கியிருக்கிறது. சைவத்தையும் தமிழையும் சொல்லி சொத்து சேர்த்திருக்கும் கோடீசுவரர்களான ஆதீனங்கள் ஆறுமுகசாமியைத் தம் பக்கம் அண்டவிடுவதேயில்லை. தமிழில் பாடத் தடை விதிக்கும் தீட்சிதர்களுக்கெதிராக ஒரு இலட்சம் சிதம்பரம் மக்களிடமும் கையெழுத்து வாங்கியிருக்கிறோம். ஆனால், அந்த மனுவை வாங்கிக் கொள்வதற்குக் கூட அறிவாலயம் என்ற அரசியல் ஆதீனத்துக்கு நேரமில்லை.

 

சிதம்பரம் நகர தி.மு.க.வினர் தீட்சிதர் குடும்பங்கள் நடத்தும் பால்ய விவாகத்துக்குத் துணை நிற்கிறார்கள். போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சித் தலைவர்களின் மனைவிமார்கள் தீட்சிதர்களிடம் பிரசாதம் வாங்கக் கையேந்தி நிற்கிறார்கள். தீட்சிதர்களைப் "பார்ப்பான்' என்று நாங்கள் கூறுவதைக் கண்டிக்கிறது "மார்க்சிஸ்டு' கட்சி. அதன் நகரத் தலைவரான மூசாவைக் (பிறப்பால் இசுலாமியர்) கோயிலுக்குள் வரவேற்று பரிவட்டம் கட்டி மரியாதை செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள் என்பது அப்புறம் நமக்குத் தெரியவந்த சேதி.

 

ஆறுமுகசாமி எனும் தனி மனிதர் சிற்றம்பல மேடையேறிப் பாடியிருக்கிறார். தாக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் தளராமல் போராடுகிறார். ஆனால், மேடைதோறும் தமிழ் கூறி வயிறு வளர்க்கும் அறிஞர்களோ, தொலைக்காட்சி மேடைகளில் தம்முடைய தமிழ்ப்பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்ளும் சான்றோர்களோ இந்தச் சிற்றம்பல மேடையேறும் கவுரவத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்து விடுகிறார்கள்.

 

இந்திய தேசியம் என்றாலே பார்ப்பனியம், ம.க.இ.க. மறைமுகப் பார்ப்பனியம் என்று எழுதித் தள்ளும் தமிழ்ப் "போராளி'கள் இந்த நேரடிப் பார்ப்பனியத்தின் சிண்டைப் பிடித்து உலுக்கியிருக்கலாம். தமிழகத்துக்குள்ளேயே தமிழனை மிரட்டும் இந்த ஆபத்தை அடித்து நொறுக்கியிருக்கலாம்.

 

எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் தில்லையில் தீட்சிதர்களின் ஆட்சி தடையின்றி நடக்கிறது. "நாங்கள்தான் செய்தோம்' என்று பெருமை பாராட்டிக் கொள்வதற்காக இவற்றையெல்லாம் கூறவில்லை. இந்தப் "பெருமை வேண்டாமென்று ஒதுங்கியிருக்கும் கட்சிகளின் "பெருந்தன்மையையும்', எமது அமைப்புகளின் முயற்சியைக் கவனமாக இருட்டடிப்பு செய்யும் அவர்களுடைய கீழ்மையையும் வாசகர்களுக்குப் புரிய வைப்பதற்காகக் கூறுகிறோம். அவ்வளவே.

 

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்பவர்கள். தில்லையில் தீட்சிதர்கள் ஆக்கிரமிப்பாகட்டும், வடலூரில் பார்ப்பனமயமாகட்டும், தமிழிசையில் பார்ப்பனத் திருட்டாகட்டும், சிறுவணிகத்தை ரிலையன்ஸ் ஆக்கிரமிப்பதாகட்டும் — இவை ஒவ்வொன்றுக்கும் எதிராக எம்மைப் பேச வைப்பது வர்க்கப் பார்வை. போராடத் தூண்டுவது வர்க்க உணர்வு.

 

""பல்வேறு அமைப்புகள் இருக்க, தேவாரம்திருவாசகத்துக்காக நாத்திகர்களாகிய நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோமே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஐயா?'' என்று ஆறுமுகசாமியிடம் கேட்டார் ஒரு தோழர். ""அந்தச் சிவபெருமான் உங்களை அனுப்பி வைத்திருக்கிறான்'' என்று பதிலளித்தார் அந்தச் சிவனடியார்.

 

எங்களை "உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சிவபெருமான்', பாட்டாளி வர்க்க உணர்வுதான் என்ற உண்மையை அந்தப் பெரியவர் ஒருநாள் புரிந்து கொள்வார். சிவபெருமானும் விரைவில் புரிந்து கொள்வார்.


— ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.