கடவுளே..!
கடவுள்களே..!!
கடவுளின் நம்பிக்கைகளே..!!!
கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள்
மற்றும் கடவுளுடன் தனித்தனி
கதைப்பவர்கள் ஆனோர்களே..!
கடவுளின் அன்பான உங்களில்
மனங்கனிந்த எங்களின்
நேரடியான கோரிக்கை
அல்லது வேண்டுகோள்
இத்தால் பொது வெளியாகின்றது..,
அதாவது,
உலகை மட்டுமல்ல
அனைத்து அண்டங்களையும்
சில நொடிப் பொழுதிற்குள்
டப்பெனப் படைத்த கடவுள்(கள்)
இவ்வுலகை சில பொழுதிற்குள்
முழுமையாக அழிக்க வல்ல
அனைத்து அழிவாயுதங்களையும்
அதற்குப் பின்னாலுள்ள
அனைத்துச் சக்திகளையும்..,
உலக இயற்கையில்
எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல்
24 மணி நேரத்திற்குள்
நிர்மூலம் செய்யச் சொல்லுங்கள்.
இக் கோரிகையை
அல்லது இவ் வேண்டுகோளை
கடவுள் 'தனித் தனி ஒவ்வொரு கடவுளும்"
ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்..,
அழிவாயுத வல்லரசுகளுடனும்
பொருளாதாரத் திமிர் கொண்டோருடனும்
சாதி - இன - மத ..,
வக்கிரம் கொண்டோருடனும் மட்டுமே
ஒத்தாசையாகக் குலவிக் கூத்தடிக்கும்
கடவுள் இருக்கின்றார்(கள்) என்றால்..!?
அவ் வொவ்வொரு தனிக் கடவுளையும்
இவ்வுலகில் இருந்து
உடனடியாக - முழுமையாக
வெளியேறச் சொல்லுங்கள்.
அல்லது,
மனிதத்தை மதியா
ஒவ்வொரு கடவுளையும், விட்டகன்று
மனிதரை - மனிதத்தை மதிக்கும்
பக்கத்தில் நீங்களே வாருங்கள்.
- மாணிக்கம்.