சாத்திரக்காரர்கள் சொல்லும் கிரகப்பெயர்ச்சி போல் ஜனாதிபதி தேர்தலில் நடந்த கூட்டணிப் பெயர்ச்சிகளையும் அறிவுசீவிகள், அரசியல் ஆய்வாளர்களின் மகிந்தாவைக் கலைச்சு விட்டு கடைசி நிமிசம் வரைக்கும் மகிந்தாவின் கூட்டுக்களவாணியாக இருந்த மைத்திரிக்கு மாலை போடாவிட்டால் இலங்கைத் திருநாட்டின் ஜனநாயகத்தை கொன்ற குற்றத்திற்கு ஆளாவீர்கள்
என்ற விஞ்ஞான விளக்கத்தையும், இடதுசாரிக்கட்சிகள், ஜனநாயக சக்திகள் இணைந்து ஒரு இடதுசாரிய முன்னணியைக் கட்டி மக்கள் விரோதிகளிற்கு எதிராக போராடுவோம் என்ற முன்னிலை சோசலிசக் கட்சியின் வேண்டுகோளை என்ன சாட்டு சொல்ல முடியுமோ அவ்வளவு சமாளிப்புகளை சொல்லி "பார்த்தால் மச்சாளை தான் இல்லையெண்டால் பரலோகம் தான்" என்று விலகிச் சென்ற உத்தம புத்திரர்களையும் பார்த்த அய்யாமுத்துவிற்கு 2020 ஜனாதிபதி தேர்தல் எப்படி இருக்கும் என்ற ஞானோதயம் மண்டையில் உதித்தது.
புத்தர் பரிநிர்வாணம் அடைந்தது போல் அய்யாமுத்துவும் உள்ளொளி பெற்றான். புத்தருக்கு அரசமரத்திற்கு கீழ் ஞானம் வந்தது போல மனிசிக்காரி வரவேற்பறையில் தொட்டியில் வைத்திருந்த கள்ளிச்செடியின் மரத்திற்கு கீழ் தனக்கு ஞானஒளி பொழியுது என்பதை அந்த ரணகளத்திலேயும் அய்யாமுத்து கவனிக்க தவறவில்லை. "இவள் எப்பவும் இப்பிடிதான், ஒரு ரோசாவையோ, செம்பரத்தையோ வைக்காமல் கள்ளியை வைச்சிருக்கிறாள். புத்தர் ஏன் மனிசியை விட்டு துறவியாக போனார் எண்டு இப்பதான் தெரியுது என்று அய்யாமுத்துவின் மண்டையில் மறுபடி ஒரு ஞானஒளி பளிச்சிட்டது.
தனது தீர்க்கதரிசனங்களை எடுத்துவிட முதல் மறுபடி ஒரு தயக்கம் அய்யாமுத்துவிற்கு வந்தது. சும்மா மாடு சொன்னால் கேட்காமல் மணி கட்டின மாடு சொன்னால் மட்டுமே காது கொடுத்து கேட்கும் உலகத்தில் தனது தீர்க்கதரிசனங்களை வரலாற்றில் பதிவு செய்து வைப்பார்களா என்று மண்டையை போட்டு குழப்பினான். உலக மனித வரலாறு, பண்பாடு என்று எவ்வளவோ விடயங்களை பல்வேறு சமுகங்களில், பல்வேறு மொழிகளில் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து கொண்டிருந்த போது தமிழ் படத்தில் கடைசி நேரத்தில் வந்து வில்லனை கைது செய்யும் பொலிஸ்காரனைப் போல் அய்ந்தாம் நூற்றாண்டில் "மனிதனை சுட்ட களிமண்ணில் இருந்து கடவுள் படைத்தார்" என்று சொன்னவர்கள் தீர்க்கதரிசியாகும் போது தனது பொன்மொழிகளையும் அறிவுசார் உலகம் ஏற்றுக் கொள்ளும் என்று முடிவு செய்து ஒவ்வொன்றாக எடுத்து விட்டான்.
ஊழலிலும், அராஜகத்திலும் உடன்பிறவாச்சகோதரிகளான ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒட்டி இருந்தது போல தமிழ்மக்களின் இனப்படுகொலைகளிலும், நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிப்பதிலும் ஒட்டி இருந்த மகிந்தாவின் உடன்பிறவாச் சகோதரன் மைத்திரி சிறிசேனாவை திடீரென சந்திரிகாவும், ரணிலும் கிளப்பிக் கொண்டு வந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க வந்த நல்லவர், வல்லவர் என்று சொன்னார்கள். மைத்திரி இலங்கையின் எல்லா ஜனாதிபதிகளையும் போல் நாளொரு கொள்ளையும், பொழுதொரு சண்டித்தனமுமாக ஆட்சி நடத்துவார். தமிழ்மக்களை படுகொலை செய்தது, இலங்கை மண்ணின் வளங்களையும் மக்களின் உழைப்பையும் வல்லரசுகள் கொள்ளையடிக்க உடந்தையாக இருந்தது, ஜனாதிபதி ஆட்சிமுறையின் அதிகாரங்களை அட்டை போல் உறிஞ்சி குடித்தது என்ற சகல அநியாயங்களையும் செய்த சந்திரிகா குமாரதுங்கா திடீரென ஞானத்தாய் (godmother) அவதாரம் எடுத்து ரணிலையும் சேர்த்துக் கொண்டு ஜனநாயகத்தை காப்பாற்ற மைத்திரியை வேட்பாளர் ஆக்கியது போல 2020 இல் மகிந்த ராஜபக்சா ஞானத்தந்தை (godfather) அவதாரம் எடுப்பார்.
மைத்திரி சிறிசேனாவின் ஊழல்களையும், குடும்ப ஆட்சியையும், சர்வாதிகாரப் போக்கையும் தாங்க முடியாமல் "பொறுத்தது போதும் பொங்கியெழு கோத்தபாயா" என்று மகிந்த ராஜபக்சா கருணாநிதியின் வசனம் பேசி கோத்தபாயாவை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்குவார். அதுநாள் வரை மைத்திரியுடன் ஒட்டிக் கொண்டிருந்த மந்திரிகளில் பாதிப்பேர் தமது ஜனநாயகக் கடமையை உணர்ந்து கோத்தபாயாவுடன் இணைந்து மைத்திரியின் சர்வாதிகாரத்திற்கு சாவுமணி அடிக்க கயிறு திரிப்பார்கள். நாட்டை காப்பாற்றி அமைதியையும், சமாதானத்தையும் வெள்ளம் போல் ஓடவிட கோத்தபாயாவினால் மட்டுமே முடியும் என்று அகிம்சாமூர்த்திகளான பொதுபலசேனா எடுத்து விட முஸ்லீம் காங்கிரஸ் அருமையாகச் சொன்னீர் என்று வழிமொழியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்மக்கள் அனுபவித்த இன்னல்களை பட்டியல் போட்டுக் காட்டி தமிழ்மக்களின் எதிர்காலம் கருதி கோத்தபாயாவை ஆதரிக்கிறோம் என்று அய்யா சம்பந்தன் தலைமையில் கூட்டம் போட்டு முடிவெடுப்பார்கள். அதற்கு முதல் அவசரமாக டெல்கிக்கு போய் வருவார்கள் என்பதை தனியே எடுத்து சொல்லத் தேவை இல்லை. வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் அமெரிக்காவின் துணையுடன் இனப்படுகொலையை விசாரித்து மைத்திரியை தூக்கிலே போடுவோம் என்று அறிக்கை விடுவார்கள்.
மைத்திரியின் அரசாங்கத்தில் அமைச்சராகவும், "எப்போதும் பதவியில் இருப்பது எப்படி" என்ற சங்கத்தின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா 2015 இல் "மகிந்தா நல்லவர் மைத்திரி தான் கொத்துக்குண்டு போடச்சொன்னவர்", இனப்படுகொலையாளி மகிந்தா இல்லை மைத்திரி தான் என்று ராணுவ ரகசியத்தை வெளியிட்டது போல் 2020 "மைத்திரி நல்லவர், கோத்தபாயா தான் இனப்படுகொலையாளி என்று அடையாளம் காட்டுவார். ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டில் தீவுப்பகுதிகள் இருந்த போது நடந்த அடாவடித்தனங்களிற்கு கோத்தா தான் காரணம் என்றும் அதற்கெதிராக தான் போராடி வந்ததையும் அவர் ஆதாரத்துடன் வெளியிடுவார்.
வழமைபோல் புலம்பெயர் அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி மைத்திரியை ஆட்சியில் இருந்து அகற்ற எல்லோரும் கையெழுத்து போட்டு அறிக்கை விடுவார்கள். மைத்திரியும், கோத்தபாயாவும் ஒரேமாதிரியான மக்கள் விரோதிகள் என்று சொல்வோரை "இவர்கள் மைத்திரியை பதவியில் வைத்திருக்க வேலை செய்கிறார்கள் என்று நெற்றிக்கண்ணை திறப்பார்கள். இன்னும் சிலர் இவர்களிற்கு அறுபது மில்லியன் மைத்திரியால் கொடுக்கப்பட்டது என்று திடுக்கிடும் செய்தியை புலனாய்வு செய்து கண்டு பிடிப்பார்கள்.
முதல்நாளே இவ்வளவு தீர்க்கதரிசனங்கள் இலங்கையின் கடனைப் போல வந்து கொண்டே இருக்கிறதே என்று அய்யாமுத்து சந்தோசப்பட்டான். தனது கண்டுபிடிப்புகளை முகப்புத்தகத்தில் பதிவிட்டு அதற்கு விருப்பம் தெரிவிக்கிறவர்களிற்கும், அதை பங்கு செய்கிறவர்களிற்கும் பத்து நாளில் சகலநன்மைகளும் கிடைக்கும் என்ற அருள்வாக்கை அள்ளி வழங்கினான். ஏற்கனவே கேலிச்சித்திரம் மாதிரி இருக்கும் தன்னை யாராவது மறுபடி கேலிச்சித்திரம் வரைந்தால் மண்டையில் போடப்படும் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டு முதலாம்கட்ட தீர்க்கதரிசனத்தை முடித்துக் கொண்டான்.