கூட்டமைப்பு ஒரு மாதத்திற்கு மேலாக ஆய்வுக்களம் செய்து, தமிழ் பேசும் மக்களின் வாக்கு யாருக்கு என அறிவித்துள்ளது. மைத்திரியை ஆதரிக்கும் படியாக காரணங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.
"மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு, மைத்திரி - மகிந்தாவைப் பற்றிய பரீசீலனை, அத்தோடு முக்கிய காரணமாக இருப்பது நடைமுறையில் இருக்கும் சர்வவல்லமை கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்து பாராளுமன்ற ஆட்சி முறையை உருவாக்குதல் என்னும் அவசியமும்" எமது முடிவிற்கான காரணமாகும் எனச் சொல்லுகின்றனர். கூட்டமைப்பினரும் சரி மற்றையவர்களும் சரி இலங்கை அன்னிய நாடுகளின் சுரண்டலுக்குள் அகப்பட்டுக் கிடப்பதையம், அதனால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகளை, அதன் விளைவுகளைப் பற்றி எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குதான் இவர்கள் மக்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கவும், வரலாற்று வழியில் உண்மையரசியலை புரிந்து கொள்ளமுடியாத பம்மாத்துக்களை அரங்கேற்றுகின்றனர். சரத் பொன்சேகா விடயத்திலும் இவர்கள் இவ்வாறுதான் உளறியிருந்தார்கள். ஆனால் சரத் பொன்சேகாவோ ஒரு பெருமும் தேசிய இனவாதி என்பதிற்கு அப்பால், எந்த நற் செயற்பாடுகளையும் சிறபான்மையினர் சார்பாக இன்றுவரை முன்னெடுக்கவில்லை என்பது உண்மையாகும்.
விளையும் பயிரை முளையில் தெரியும். "தான் தெரிவாகினாலும், இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது" என மைத்திரி கூறுகிறார் இக்கூற்றானது பேரினவாதத்தின் வெளிப்பாடாகும்.
இலங்கை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் காலங்காலமாக பேரினவாத குணாம்சங்களில் இருந்து விடுபடாத தன்மையும், அத்தோடு தமது வர்க்க நலன் சார்ந்து தமது சுகபோக அதிகாரங்களைச் சுவைப்பதிலுமே நாட்டம் கொண்டவர்களாக, அதற்காக மிக மோசமான அடக்கு முறையாளர்களாகவும், நடந்து கொண்டார்கள் என்பது தான் வரலாறாகும்.
இலங்கைப் பாராளுமன்ற ஆட்சிமுறையில் பல அடக்கு முறைகள் நடந்தன. அது சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு எதிராகவும் இவ்வாறான போக்குகள் காணப்பட்டன. நாம் இவை பற்றி சில உதாரணங்களைப் பார்க்க முடியும்.
1- மலையக மக்களை நாடற்றவராக்கிய சட்டம்.
2- 1956-ல் தனிசிங்கள மெழிச்சட்டம்.
3-அதேயாண்டில் மொழியுரிமையை கோரியதற்காக காலி முகத்திடலில் வன்முறை. அப்போது தான் அமிர்தலிங்ம் அவர்களின் மண்டையும் உடைக்கப்பட்டதும்.
4-இனக்கலவரங்களை தூண்டி இனங்களுக்கிடையிலான முரண்பாட்டில் அரசியல் லாபம் அடைந்ததும் இதே பாராளுமன்றவாதிகள் தான்.
5-திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு அத்திவாரம் இட்டவர்களும் பாராளுமன்றக்காரர்கள் தான்.
6- 1971-ல் யின் கிளர்ச்சியை இந்தியாவின் உதவியோடு பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்தவர்களும் பாராளுமன்றக்காரர்கள் தான்.
7- சுதந்திரத்திற்கு பின்னாரான இடதுசாரி அரசியல்சார்ந்து முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களை வன்முறை கொண்டு அடக்கியதும் பாராளுமன்றம் தான்.
சமூக அரசியல்ப் பொருளாதார வரலாற்றை எடுத்துக்கொண்டால் தனியுடமை உற்பத்திமுறை தோன்றியதன் பின்னர். அரசர்கள், நிலபிரபுக்கள், முதலாளிகள் என்போர் தமது நலன் சார்ந்து சர்வதிகாரங்களை மேற்கொண்டே தமது ஆட்சிகளை தக்கவைத்துக் கொள்கின்றனர்.
அவர்கள் வெளிப்படையான தமது சட்டங்களில் மனிதவுரிமை, ஜனநாயகம், பேச்சுச்சுதந்திரம் போன்ற வாசகங்களை நிறைத்திருந்தாலும், மறைமுகமாக கொலைக் குழுக்கள் தொடக்கம் நீதித்துறை வரை அதிகாரம் செலுத்தும் இன்னமொரு சட்டத்தையும் கையில் வைத்திருப்பதே அவர்களின் அரசியல் வாழ்வின் ஆதாரம்.
இலங்கையில் மட்டுமல்ல வேறு முதலாளித்தவ பாராளுமன்ற ஆட்சிமுறையிலும் சர்வதிகாரம் தலை விரித்தாடியுள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொண்டால் மற்றைய தேசியப் போராட்ங்களை நசுக்குவது. ஊழல் புரிவது. உதாரணத்திற்கு போபஸ் பீரங்கி ஊழல் புரிந்தது ரஜீவ் காந்தி தான். குஜராத்தில் மோடி மாநிலப்பிரதமராக இருக்கும் போதுதான் ஆயிரக்கணக்கில் முஸ்லிம் மக்களைக் கொலை செய்த கொடூரம் நடந்தது.
இலங்கையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்கியும், அடக்கியும் ஆள வழிவெட்டியதே பாராளுமன்றம்தான். அதன்பின்னர் தான் சர்வதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஜே.ஆர் மூலமாக ஆரம்பமாகிறது. உண்மையில் முதலாளித்துவ நலன்களைப் பாதுகாக்கும் பாராளுமன்றம், அதன் பிரதமர் அவசியமான போது எல்லா அதிகாரங்ளையும் கையில் எடுக்கும் குறுக்கு வழிகைளை தம்வசம் வைத்துள்ளனர். என்பதுதான் வரலாற்று உண்மை.
சர்வதிகாரம் என்பது முதலாளித்துவாட்சி நீடிக்கும் வரை தொடரும் நோயாகும் பாராளுமன்றப்பிரதமர், அல்லது சர்வதிகார ஜனாதிபதி இருவரும் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்பதைதான் வரலாறு உணர்த்துகிறது.
திலக்
1.1.2015