இனவெறி அற்ற
பொது வெளிக் கூட்டை
அமைத்திடத் துணிகிறபோது...
உள்ளே என்ன நடக்கிது என்று
சாளரம் வழியே எட்டிப் பார்த்து
கற்பனைகளுக்கு காது மூக்கு வைத்து
கதைகளைப் பறைந்து தடைகளைப் போடாமல்...
கடந்த காலப் பொறிகளை உடைத்து
அகலத் திறவுங்கள் பொதுவெளிப் பாதையை.
இனவெறி அற்ற மக்களின்
ஜனநாயகப் பொதுவெளி திறக்க
மூடித் தடையாய் இருப்பவை
கடந்தகால அரசியல் மட்டுமல்ல
இனவாத அரசுகள் மட்டுமல்ல
சதிகார உலகியல் மட்டுமல்ல
இவற்றின் உள் அடிப்படையில்
முழுத் தடையாக இருப்பவர்..?
இந் நிலையை ஏற்காத - உணராத
மக்கள் மீது மக்கள் கொலை வெறியாடும்
இனவாத - தனிவாத மக்களும்...
கடந்த கால, மக்களுக்கற்ற அரசியலை
இனியாவது வேண்டாம் என்போரிலும்
சமூக இயங்கியலுக்கு தாம் தான்
சேணங் கட்டும் தகுதி கொண்டோர் என
தங்களின் பிரமுகத்தனங்களை
சமூகத்தில் நிலைக்க முனையும்
பொது மறுப்பேயாகும்.
ஆகவே... அனைவரும்
மக்களுக்கான பொது வெளியுணர்ந்து
பொதுவெனும் மனங்களால் இணைந்து
கருத்தாடவும் - செயலாற்றவும் வாருங்கள்...
அன்பு மிகு நட்புகளே..!
எமதருமைத் தோழமைகளே..!!
கருத்துலகின் கேள்விச் சிந்தனாவாதிகளே..!!!
பொருள் இல்லாமல் சிந்தனை இல்லை
சிந்தனை இல்லாமல் செயல் இல்லை
செயல் இல்லாமல் விளைவு இல்லை
விளைவு இல்லாமல் உலக இயக்கம் இல்லை...
ஆக...
உள்ளே என்ன நடக்கின்றது என
சாளரம் வழியே எட்டிப் பாராமல்
பொது வெளிக்கான கதவுகளுடு
உள்ளே வாருங்கள்.
- மாணிக்கம்.