ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரி மகிந்தாவை பதவியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவதற்காக இடதுசாரிய கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்கின்றன. இன்றைய பொதுக்கோசமாக இருப்பது சர்வாதிகாரி மகிந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் ஆட்சியதிகாரத்திலிருந்து விரட்டுவதே.
இதற்காகக் கூட்டிணைந்திருக்கும் கட்சிகளினதும், மகிந்தா அரங்கேற்றிய வன்னி இனப்படுகொலை, வெள்ளைவான் கடத்தல், மீனவர், மாணவர், குடிக்க சுத்தமான நீர் கேட்ட மக்கள் என பலர் மீதான தாக்குதல்களின் போது கூடவிருந்து விட்டு தற்சமயம் திடீரென ஜனநாயகவாதிகளாக மாறிக் கொண்டிருப்பவர்களினதும் அதிகார துஸ்பிரயோகம் ஊழல் ஜனநாயகமற்ற தன்மை என்பன மகிந்தாவிற்கு நிகரானவையே.
இடதுசாரிய முன்னணி தனது பொது வேட்பாளராக துமிந்த நாகமுவவினை நிறுத்தி இருக்கின்றது. இடதுசாரிய முன்னணியினதும் வேட்பாளரினதும் நோக்கம் வாக்கு கேட்பதல்ல. மாறாக இந்நாட்டு மக்கள் எவ்வாறு நவதாராயமய பொருளாதாரத்தினால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதனையும் ஆட்சி முறையின் போலி ஜனநாயகத் தன்மையினையும் அம்பலப்படுத்தி இதற்கு மாற்றான மக்களின் நல்வாழ்வினை உறுதிப்படுத்தும் சோசலிசத்தினை வென்றெடுப்பதற்கான இடதுசாரிய நடைமுறையினை எடுத்து செல்வதே.
அண்மைக்காலமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான கருத்தாடல் ஒன்று நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இக்கருத்தாடலில் ஜனாதிபதி முறையின் அதிகாரங்கள் மீளமைக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் ஆலோசனையும், ஜனாதிபதி முறையினை ரத்து செய்து விட்டு பாராளுமன்ற முறையின் கீழ் பிரதமருக்கு அதிகாரங்களை வழங்கும் ஆலோசனையும் அடங்கியிருந்தன. இது அடிப்படையில் இந்த நாட்டை ஆளும் அரசியல் முறைமை சார்ந்த விடயமாகும்.
இங்கு பேசப்படுகின்ற ஜனாதிபதி, பாராளுமன்ற முறைமை மற்றும் ஜனநாயக உரிமை என்பன இலங்கையில் இன்று இருக்கின்ற முதலாளித்துவ நவதாராளமய பொருளாதார அமைப்பு முறைமைக்குள் தான் வரையறுக்கப்படுகின்றது. உண்மையில் ஜனநாயகத்திற்கும், அரசியல் பொருளாதாரத்திற்கும் உள்ள நெருக்கமான தொடர்பினை மறைத்த வண்ணம் பாராளுமன்ற முறைமை மூலமாக மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும் என்றும் இது ஒரு அரசியல் முறைமை சார்ந்த விடயமல்ல என்பதை மறைத்து மக்களை ஏமாற்றுதலாகும்.
இன்றைய அரசியல் முறைமை
காலனியத்தின் பிரதான நோக்கமாக இருந்தது இந்த நாட்டின் வளங்களை கொள்ளையிடுவதும் மக்களின் உழைப்பை உறிஞ்சுவதுமே. இரண்டாம் உலகப்போரின் பின்னான நெருக்கடிகள் காரணமாக பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரத்தினை வழங்கியது. இது மக்கள் போராடியதனால் பெற்ற சுதந்திரம் கிடையாது. மாறாக நாட்டை விட்டு விட்டு வெளியேறினாலும் தொடர்ந்தும் சுரண்டலை தொடரும் விதமான அரசியல் முறையின் கீழ் தனக்கு விசுவாசமான உள்நாட்டு மேல்தட்டினரிடம் ஆட்சியை கையளித்து சென்றது. பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியான ஜனாதிபதி ஒருவரின் கீழான பாராளுமன்ற முறையினை உருவாக்கியது. ஆனால் வளங்களை கொள்ளையிடலும் மக்களின் உழைப்பை சுரண்டலும் தொடர்ந்தது.
இந்த சுரண்டலிற்கு துணை போன பாராளுமன்ற முறைமையினை எமது உள்நாட்டு ஆளும் வர்க்கம் ஜனநாயகம் என பீற்றிக் கொண்டது. உள்நாட்டு ஆளும் வர்க்கத்தினரிடையே போட்டி காரணமாக பிளவுகள் ஏற்பட்டன. இந்தப் பிளவுகள் புதிய கட்சிகளை உருவாக்கின. ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக இனவாதம், மதவாதம் தூண்டப்பட்டன. மக்களைப் பிளவுபடுத்தி மோத விட்டும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்தும், மனித உரிமைகளை மீறியும் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றியது ஆளும் வர்க்கம். குறித்த காலத்திற்கு ஒரு தடவை தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தினை நிலை நாட்டுகின்றோம் என மக்களை இந்த சுரண்டல் அமைப்பு முறையின் பின்னால் ஓட விடுகின்றனர்.
தேர்தல்களின் போது வாக்குகளைப் பெற்றுக் கொள்ள பணம், கூரைத் தகடுகள், கைபேசிகள், உடைகள் பகிர்ந்தளிப்பதிலிருந்து அன்னசத்திரங்கள் நடத்துவது வரை லஞ்சம் வழங்கப்படுகின்றது. மறுபுறம் பணம், ஊடகங்கள், குண்டர் பலம், அதிகார பலம் அனைத்தும் பாவித்து பாரிய பரப்புரைகள் மூலம் போலியான மக்கள் கருத்து உருவாக்கப்படுகின்றது. இதன் மூலமாக நிலவும் நவதாராள பொருளாதாரமயத்திற்கு பொருத்தமான மனிதர்களை உருவாக்குகின்றனர். இந்த வகையில் ஆட்சிக்கு வருபவர்களை எப்படி மக்களுக்கான ஒரு ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியும்?
தேர்தல் காலங்களில் மட்டுமே இவர்களிற்கு பொது மக்கள் தேவை. தேர்தலில் வென்ற பின்னர் பெறும் அதிகாரங்களை கொண்டு தம்மை கொழுக்க வைப்பதனையே குறியாக வைத்து இருக்கின்றனர். தமது அதிகாரம் பறிபோகக் கூடிய தருணங்களில் கட்சி விட்டு கட்சி மாறி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், அதிகாரத்தை மேலும் இறுக்கக் கூடிய சட்டங்களை கொண்டு வந்து மக்களை சுரண்டி மேலும் கொழுப்பதற்கும் இந்த அரசியல் முறைமை ஆளும் வர்க்கத்திற்கு உதவுகின்றது.
1972 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் அமைப்புமுறை மாற்றத்தின் கீழ் முடிக்குரிய குடியரசு நாடாக அறிவித்து பிரித்தானிய காலனியத்திலிருந்து வெளியேற்றம் நிகழ்ந்தது. ஆனால் புதிய அரசியலமைப்பானது பிரதமருக்கு பல அதிகாரங்களை வழங்கியது. 1977 அக்டோபர் 20ம் திகதி 1972 அரசியல் அமைப்பில் கொண்டு வரப்பட்ட இரண்டாவது திருத்தத்தின் மூலமாக பிரதமரால் ஜனாதிபதியை நியமிக்கும் உறுப்புரை நீக்கப்பட்டு தேர்தல் மூலம் மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற உறுப்புரை சேர்க்கப்பட்டது. ஜனாதிபதியை அமைச்சரவை உறுப்பினராக நியமித்து அமைச்சரவை தலைவராக இருந்த பிரதமருக்கு பதிலாக ஜனாதிபதி அமைச்சரவை தலைவராக்கப்பட்டார். அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் மிக எளிய மாற்றத்தினூடாக நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியினை நிர்மாணிக்கும் அதிகாரம் 1972 அரசியலமைப்பின் மூலம் பிரதமருக்கு கிடைத்திருந்தது.
மேலே கூறிய விடயம் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கும், பிரதமரின் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும் நாடாளுமன்ற முறைக்கும் மத்தியில் எந்தவித வித்தியாசமும் கிடையாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இன்று முன்வைக்கப்படுகின்ற நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமரை நியமித்தல் என்ற ஆலோசனையினது நோக்கம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவி குறித்து உருவாகியிருக்கின்ற மக்கள் எதிர்ப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, அதே அரசியல் உள்ளடக்கத்தினை வேறு பெயரில் முன்னெடுத்து செல்வது தான்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் தனியாளாக அனைத்து முடிவுகளையும் எடுத்ததற்கு பதிலாக நாடாளுமன்ற நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் சிலரோடு உடன்பட்டு செயற்படும் நிலை உருவாகும்.
இந்த அரசியல் முறைமையினால் உருவான அதிகாரம் சட்டத்தையும் மீறி பல தடவைகள் செயற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கோனவல சுனில் என்ற நபர் ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டது மற்றும் கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் மில்ரோய் பர்னாந்துவின் மனைவி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டவற்றை கூறலாம்.
இன்றுள்ள அரசியல் முறைமையானது மக்களுக்கானதல்ல. மக்களையும் நாட்டையும் கொள்ளையிட்டு வாழும் சிறுகுழுவான அதிகார வர்க்கத்தினரினதும் அவர்களது அந்நிய எஜமானர்களினதும் நலன்களை பேணுவதாகவே இருக்கின்றது. மக்களிற்கு எத்தகைய பொருளாதார நன்மைகளையோ அன்றி ஜனநாயகத்தினையோ வழங்க மாட்டாது. இந்த முறைமை போலியானது. மக்களை பாழ்கிணற்றில் தள்ளிவிடும்.
மாறாக இடதுசாரியம் மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான பிரச்சினையை வெறுமனே அரசியல் அமைப்பு முறைக்குள் (நிறைவேற்று அதிகார ஜனாதிபதி- பாராளுமன்ற முறைகள்) குறுக்காது அதனை உண்மையான பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின்பால் உயர்த்தி பிடித்து ஒட்டுமொத்த சமூக பொருளாதார உபாயங்களுடன் முன்னெடுத்து செல்லும். அதாவது அரசியல் அமைப்பு முறையினை கடந்து மக்கள் நல்வாழ்வுக்கான பொருளாதார திட்டம், தேசிய பிரச்சினையால் உருவாகியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காணல், உழைக்கும் சகல மக்களினதும் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுத்தல், வெளியுறவுக் கொள்கையில் பயன்தரக்கூடிய மாற்றங்களை கொண்டுவருதல் போன்றவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள முழுமையான ஒரு வேலைத்திட்டத்தின் வாயிலாக மட்டுமே மக்களுக்கான உண்மையான ஜனநாயகத்தை கட்டி அமைக்க முடியும்.
மாறாக பொருளாதாரதுறையில் மறுசீரமைப்பின்றி அரசியலமைப்பு முறையினை திருத்தி ஜனநாயகத்தினை கட்டியெழுப்ப முன்வைக்கப்படும் ஆலோசனைகள் எவற்றாலும் எந்த பிரதிபலன்களும் மக்களிற்கு கிடைக்கமாட்டா.
உழைக்கும் மக்கள் சக்திகளான தோட்டத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர், விவசாயிகள், சிறு வர்த்தகர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், சிற்றூழியர்கள், கடை சிப்பந்திகள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவரும் இன்று வாழ்வது உண்மையான வாழ்க்கை தானா? இந்த முதலாளித்துவ வாழ்க்கைக்குள் சிக்குண்டு அதனை காவிக்கொண்டிருக்கின்றனர். இந்த அபாயகரமான முதலாளித்துவ வாழ்வு பற்றி சிந்திக்க நேரமின்றி தமது பொருளாதார தேவைக்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நெருக்கடியான வாழ்விலிருந்து மக்களை மீட்க கூடியது சமத்துவம் நிறைந்த சோசலிச வாழ்க்கை முறைமை மட்டுமே.
ஆட்சியாளர்களின் முகங்களை மாற்றியது போதும்!.
மக்களுக்கான அரசியல் அமைப்பு முறைமை மாற்றத்திற்கு தயாராவோம்!
இடதுசாரிய சக்தியினை உருவாக்கி பலப்படுத்திட அனைவரும் ஒன்றிணைவோம்!