தற்போது எம்மிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடையம் ஜனாதிபதி தேர்தல். இத் தேர்தலே சில பல அரசியல் செயற்பாட்டின் வெளிச்சமாகவும் அவ்வரசியலை வரையறுக்க வகைசெய்யும் ஒரு புள்ளியாகவும் காணக்கூடியதாக உள்ளது.
யுத்தம் முடிவடைந்த பிற்பாடு மக்கள் தம்மை ஓரளவேனும் சுதாகரித்துக் கொண்டு வாக்களிக்க செல்லும் ஒரு தேர்தல் என்பதால் மக்களின் பெயரால் போலி ஜனநாயகத்தை முன்னிறுத்த இந்த வல்லாதிக்க சக்திகள் முயல்கின்றன. இதற்கு மூலகாரணம் தற்போது நாடு பூராகவும் அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நவதாராளவாத பொருளாதார நலனிலான செயற்பாடுகளே தவிர வேறு எதுவும் அல்ல.
தேர்தல்கள் மூலம் மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படுகின்றனவா என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல்கள் என்பது மக்களின் ஜனநாயகம் என்ற ஒரு விளக்கப்பாட்டை பலர் கொண்டுள்ளோம். இது இன்றைய காலகட்டத்தில் சரியானதா? உண்மையானதா? என்பதை விளங்கி கொள்ள எமது நாட்டின் தேர்தல் வரலாற்றின் பின்னணியை ஒருமுறை அலச வேண்டியுள்ளது.
எமது நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை தேர்தல்கள் மூலம் ஏதாவது மக்களுக்கு நடைபெற்றிருக்கின்றனவா என்று ஆராய்வோமாயின், பல உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும். தேர்தல் காலங்களில் மக்களிற்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகள் எங்கு சென்றுவிடுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாக்குறுதிகளில் ஒன்றை அல்லது இரண்டை நிறைவேற்றிவிட்டு மக்களை அதை வைத்து முட்டாள்கள் ஆக்குகின்றனர். இதைவிட தேர்தல் காலங்களில் கட்டணக்குறைப்பு, சில சலுகைகள் என்பவற்றை வழங்கி தம் ஆட்சியில் இருந்த களங்கங்களை பூசி மெழுகி மக்களின் மனதை இலகுவாக வெற்றியும் கொள்கின்றனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் வழமைபோல மக்கள் மீது சுமைகளை ஏற்றுகின்றனர்.
இவை ஒருபுறம் இருக்க தேர்தலில் தாம் (கட்சிகள்) வெற்றி கொள்வதற்காக எந்தவகையான கீழ்த்தரமான செயற்பாடுகளை அவை செய்திருக்கின்றன.
1. தேர்தலில் வாக்களிக்காமல் இருக்க மலையகத் தமிழர்களின் வாக்குகள் பறிக்கப்பட்டமை
2. தேர்தலில் வெல்வதற்காய் இன ரீதியான முரண்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்கியமை
3. இனவாதத்தை தொடர்ந்தும் வளர்த்தெடுத்தமை
4. மத வேறுபாடுகளுக்குள் மக்களை தள்ளி பிளவுபடுத்தியமை
5. உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறித்தமை
6. சொத்து சுகபோகங்களை பெருக்கிக் கொண்டமை
இவ்வாறு வகைப்படுத்தினால் நீண்டு கொண்டே போகக் கூடிய அளவிற்கு தமது சுயலாபத்திற்காக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திவரும் கூட்டந்தான் தங்களை மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடிப்பதே இவர்களின் செயற்பாடாக மாறியது.
சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி என்ற நிலையை அமுல்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியே. அதேபோன்று இனவாதத்தை கூர்மையடையப் பண்ணியதும் இக்கட்சியே. இந்த மகிந்த அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் காரணம் மக்களுக்கு ஜனநாயகம் தேவை என்கின்றனர். ஆனால் இவர்களின் காலத்தில் மக்களுக்கான ஜனநாயகம் இருந்ததா? மகிந்த அரசை வீழ்த்தி அதற்குப் பிரதியீடு செய்யும் அரசாக ஏற்கனவே மக்களை சுரண்டிய அரசை நிறுவ முற்படுவது மீண்டும் மக்களின் பெயரால் சர்வாதிகாரத்தையும், போனபாட்டிஸ அரசையும் கொண்டுவர முன்நிற்கும் செயற்பாடே.
ஜனநாயகம் அற்ற நாட்டில் ஒரு இடைவெளியாவது கிடைக்கும் என்ற கூற்று பலமாக பேசப்படுகின்றது. இக்கூற்றில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடையம் ஜனநாயகம் அற்ற நாட்டில் இவ்வரசை மாற்றுவதன் மூலம் மக்களுக்கு ஒரு இடைவெளி கிடைக்கும். இடைவெளியின் பின் மீண்டும் சர்வாதிகாரமும் மக்கள் ஒடுக்குமுறையும் தொடரும் என்பதை இக் கூற்றை கூறுபவர்களே மறைமுகமாக கூறுகின்றனர் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இடைவெளி என்பதும் கூட மக்களுக்கானதா என்றால் ஒரு போதும் இல்லை.
மக்களின் அன்றாட வாழ்வு, கிடைக்கப்படும் இடைவெளியில் சுபீட்சம் அடையப்போகின்றதா? இல்லை. மாறாக அதே ஒடுக்குமுறை அதே அதிகார துஸ்பிரயோகம் என்பன தொடரத்தான் செய்யும்.
மகிந்த அரசு தமிழ், சிங்களம், முஸ்லீம், மலையகம், ... என எந்தப் பாகுபாடும் பாராது தொடர்ச்சியாக மக்களை ஒடுக்கிவரும் அரசு. ஆனால் அவ்வொடுக்குமுறையை நிறைவேற்ற தனது பினாமி அமைப்புகள் மூலம் இனவாதத்தை தூண்டி அதனது ஆட்சியை நடத்துகின்றது. மகிந்தவின் ஆட்சி என்பது இலங்கையை சீனாவிற்கு விற்பதாகவே உள்ளது. இவ்வகை அரசுக்கு எதிராகப் போராடும் அனைவரும் காணாமல் போவதுடன், குற்றம் புரிந்தவர் என்று அரசால் தண்டிக்கவும் படுகின்றனர்.
மக்களின் பொது வாழ்விற்கு கூடி முட்டுக்கட்டையாக நிற்கும் இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மாறாக அதற்கு மாற்றீடாக அதே போன்ற அரசை நிறுவ முற்படுபவதுதான் ஆபத்தானதும் பயங்கரமானதுமாகும்.
மக்களாகிய நாம் எமக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு ஜனநாயக குறியீடாக உள்ள வாக்கு உரிமையை எவ்வாறு எதற்கு பயன்படுத்துவது என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிப்பவர்களாக மாறவேண்டும். மற்றவன் தீர்மானத்தில் நம் வாழ்க்கையை தொலைப்பதை விட நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி நாம் என்பதை இத்தேர்தல் மூலம் உணர்த்த வேண்டும்.
எமது தலைவிதியை தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்?
எமது நாடு எமக்கே சொந்தம் இதை மறக்கப் போகின்றோமா?
கல்வியை தனியார் மயப்படுத்திய இந்தப் பணப்பிசாசிகளிடம் எம் வருங்கால சந்ததியை ஒப்படைக்க முடியுமா?
இனங்கள் மதங்கள் எனப் பிரிக்கப்பட போகின்றோமா?
இது சிங்கள தேசம் என்று மறைமுகமாக சொல்லும் இவர்களை தொடர்ந்து அனுமதிப்போமா?
நாம் தொடர்ந்தும் இந்த வாக்குப் பொறுக்கிகளிடம் ஏமாறப் போகின்றோமா?