காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போய் காணமல் போனவர்களை மட்டும் விடுதலை செய் என்று ஒரு போராட்டம். எந்த காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போனார்களோ அந்த காணமல் போனவர்கள் பற்றி ஒரு போராட்டமும் இல்லை. இவர்கள் செய்யும் அரசியல் உண்மையில் காணமல் போனவர்களிற்காக அல்ல என்பது வெட்ட வெளிச்சம். அதனால் தான் காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போய் காணமல் போனார்களோ?
இது புதிய திசைகள் என்னும் அமைப்பின் முகப்புத்தகத்தில் வந்த மனவிகாரம். இதில் இவர்கள் சொல்லும் "காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போய் காணமல் போனவர்களை மட்டும் விடுதலை செய் என்று ஒரு போராட்டம். எந்த காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போனார்களோ அந்த காணமல் போனவர்கள் பற்றி ஒரு போராட்டமும் இல்லை" என்பது வரை எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் இது புதிய திசைகள் என்னும் அமைப்பு லலித், குகன் என்னும் எமது தோழர்கள் காணாமல் போனதற்காக போராட்டம் நடத்தும் முன்னிலை சோசலிசக் கட்சியைப் பற்றி வைத்திருக்கும் விமர்சனம்.
கட்சியைப் பற்றியும், அதனது போராட்டங்கள் பற்றியும் ஒவ்வொருவருக்கும் பல கருத்துகள் இருக்கலாம், அதில் தவறில்லை. ஆனால் "இவர்கள் செய்யும் அரசியல் உண்மையில் காணமல் போனவர்களிற்காக அல்ல என்பது வெட்ட வெளிச்சம். அதனால் தான் காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போய் காணமல் போனார்களோ?" என்று இலங்கை அரசின் கொலைக்கரங்களிற்குள் சிக்குண்ட எமது தோழர்கள் குகன், லலித் காணாமல் போனதைப் பற்றி ஒரு அமைப்பு என்று சொல்லிக் கொள்பவர்களால் சொல்ல முடிகின்றதென்றால், காணாமல் போனவர்களைப் பற்றி திமிராக பேச முடிகிறதென்றால் இவர்களிற்கும் இலங்கை அரசின் கொலைகாரர்களிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
மகிந்தா, கோத்தபாயா போன்ற மிருகங்கள் தமிழ்மக்களைக் வன்னியில் கொன்று குவிக்கும் போது கக்கிய நஞ்சிற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை இவர்களின் விசப்பற்களில் இருந்து கொட்டும் நஞ்சு. ஆறுமுநாவலர் என்னும் வெள்ளாள சாதிவெறி பிடித்த மனிதன் தமிழ், சைவம் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களாகவும், சைவர்களாகவும் இருந்த மற்றத்தமிழர்களை எப்படி இழிவாக பேசி நஞ்சைக் கொட்டினாரோ அதே நஞ்சு. ஆம், இவர்கள் அந்த யாழ்ப்பாண சைவ வேளாளியத்தின் வாரிசுகள். மற்றவர்களை மனிதர்களாக மதிக்காத சாதிவெறியர்களின் வாரிசுகள்.
லலித், மலையகத் தொழிலாளர்களின் குடும்பத்தில் இருந்து வந்த போராளி. மிக வறிய குடும்பச் சூழலிலும் பேராதனை பல்கலைக்கழகத்தில் கிடைத்த வேலையை உதறி எறிந்து விட்டு காணாமல் போன தமிழ்மக்களிற்காக போராடுவதற்காக யாழ்ப்பாணம் சென்றவர். புதிய திசைகள் அமைப்பு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று வழி கேட்ட தமிழ்க் கூட்டமைப்பு போன்றவர்கள் போரின் முடிவிற்கு பிறகு வாயே திறக்காமல் இருந்த போது முதன் முதலாக குரல் கொடுத்தவர். தங்கள் பிள்ளைகளை, அன்புக்குரியவர்களை பறி கொடுத்து விட்டு இலங்கை அரசின் சர்வாதிகார காட்டாட்சிக்கு முன் வாய் திறக்க முடியாமல் அழுது கொண்டிருந்தவர்களிற்கு ஆறுதல் சொல்லி, துணிவு கொடுத்து கொழும்பிற்கு கூட்டி வந்து அரசிற்கெதிராக போராட வைத்த லலித்தையும், குகனையும் மக்களிற்கான அரசியல் செய்யவில்லை என்று சொல்கிறார்கள் இந்த அரசியல் அனாதைகள்.
லலித் காணாமல் போன பின்பு ஆறுதல் சொல்ல பேசிய தோழர்களிடம் லலித்தின் தந்தை சொன்னார் "எனக்கு ஒரு மகன் காணாமல் போய் விட்டான், ஆனால் இப்போது பல பிள்ளைகள் கிடைத்திருக்கிறார்கள்" என்று தோழர்களை தமது பிள்ளைகளாக அன்பு காட்டினார் அந்த ஏழைத்தந்தை. ஒரு வருடமோ, இரண்டு வருடமோ ஒரு இயக்கத்தில் இருந்து விட்டு பிறகு வெளிநாட்டிற்கு ஓடி வந்து அப்பன், பாட்டன், குஞ்சியப்பன் என்று சுற்றம் சூழ வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் "லலித்தின் அரசியல் காணாமல் போனவர்களிற்கானது அல்ல என்று எழுதியிருக்கிறார்கள் என்பதைச் சொன்னால் அந்த வீரக்கிழவன் இவர்களின் முகத்தில் காறித்துப்பாமல் இருக்க மாட்டான். இரப்பர் தோட்டத்தில் உடல் நோக உழைத்து விட்டு இரவில் மகன் தொலைந்து போன துக்கத்தை மறக்க மதுவின் கருணையை நாடும் அந்த மனிதனின் நாக்கில் இருந்து இவர்களைப் பற்றி வரும் வசைச்சொற்கள் அந்த தொழிலாளியின் இரப்பர் வெட்டும் கத்தியை விடக் கூர்மையானதாக இருக்கும்.
மிக இளம் வயதில் காதல் கணவனை இழந்து தவிக்கிறார் குகனின் மனைவி. அன்பு முத்தங்களை ஆரத்தழுவி தந்த அப்பாவை ஆறு வயதிலேயே இழந்து விட்டு அழுது கொண்டிருக்கிறாள் குகனின் அன்பு மகள் சாரங்கா. கொழும்பில் நடந்த ஒரு கூட்டத்தில் அப்பாவை பற்றிக் கேட்ட போது அடக்கமாட்டாத அழுகையைத் தான் மறுமொழியாக தந்தாள் குகனின் சின்ன மகள். ஒரு சிறு மண் குடிசையில் தான் சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம் நடந்தது. இப்போது முன்னிலை சோசலிசக் கட்சி மக்களிடம் நிதி பெற்று தமது உடலுழைப்பின் மூலம் ஒரு சிறு வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. தோட்டங்களிற்கு வெங்காயம் கிண்டப் போவது, தூள், மா இடித்துக் கொடுப்பது என்று கடும் உடல் உழைப்புடன் வறுமை தின்ற வாழ்க்கை நகர்கிறது.
காதல் கணவனை இழந்த கையறு நிலையிலும்,வறுமை எரிக்கும் வாழ்விலும் குகனின் அரசியல் தோழர்களை இன்முகத்துடன் தான் வரவேற்கிறது அந்த வீடு. தின்று விட்டு தினவெடுக்கும் புதிய திசைகள் "குகன் மக்களிற்காக போராடவில்லை" என்று சொல்கிறது என்பதைக் கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்?. குகனைக் கடத்திய பிறகும் தொடர்ந்து அச்சுறுத்தும் அரசபடைகளிற்கும் குகனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் இவர்களிற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்று தான் நினைப்பார்.
கடத்தப்பட்ட, காணாமல் போன தமிழ்மக்களிற்கு நியாயம் கேட்டு முன்னிலை சோசலிசக் கட்சி கொழும்பில் போராட்டம் நடத்தியது. யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் செய்ய ஒழுங்குகள் செய்து கொண்டிருந்த போதே குகனும், லலித்தும் கடத்தப்பட்டனர். கல்வியை தனியாருக்கு விற்காதே என்று கட்சியின் மாணவர் அமைப்பு போராடிக் கொண்டு இருக்கிறது. கடல் தொழிலாளர்களிற்கு எரிபொருள் மலிவு விலையில் கொடுக்க வேண்டும் என்று நடக்கின்ற போராட்டங்களிலும் கடல் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர். முன்னிலை சோசலிசக் கட்சி அங்கம் வகிக்கும் சமவுரிமை இயக்கமே முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்ட போது முதன் முதலில் எதிர்ப்பு போராட்டம் நடத்தியது. "மீண்டும் ஒரு ஜூலைக்கலவரம் வேண்டாம்" என்று 1983 ஆடிக்கலவரத்தை நினைவுபடுத்தி நாடு முழுவதும் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது.
இவை எதுவும் மக்கள் போராட்டமாக இந்த உலகமகா போராட்டக்காரர்களிற்கு தெரியவில்லையாம். தமிழ்மக்களை இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்ற ஏகாதிபத்திய நாடுகள் தமிழ்மக்களிற்கு தீர்வு பெற்று தரும் என்று பொய்யுரைக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை போன்றவர்களுடன் கூடிக் கும்மாளம் இடுவார்கள். தமிழ்மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுடன் மக்களின் குருதி காய முதல் தேர்தல் கூட்டு வைத்த தமிழ்க் கூட்டமைப்பை இவர்களது கூட்டத்தில் கூட்டி வைத்து தமிழ்மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று விஞ்ஞான விளக்கம் கேட்கிறார்கள். இது தான் இவர்களின் யோக்கியதை, இந்த லட்சணத்தில் இவர்கள் மக்களிற்கான அரசியல் பற்றி கதையளக்கிறார்கள்.
மக்களது பிரச்சனைகளிற்காக ஒரே ஒரு துண்டுப்பிரசுரத்தை இவர்கள் இலங்கையிலே ஒட்டிக் காட்டட்டும், அல்லது ஒரே ஒரு ஆளை என்றாலும் வைத்து ஒரு கூட்டமோ, ஒரு போராட்டமோ நடத்திக் காட்டட்டும் என்று முன்பு தத்துவமேதை ஒருவரை கேட்டு எழுதிய போலத்தான் இவர்களையும் கேட்கிறேன். அதற்கு மறுமொழி சொல்லி விட்டு மக்கள் போராட்டம் பற்றி மயிர் பிளக்கட்டும்.
ஊரிலே ஒரு மரணம் நிகழ்ந்தால் எல்லோரும் கூடி ஆறுதல் சொல்வர். ஒரு இழப்பு வந்த வீட்டிற்கு கோபக்காரன் கூட போய் துக்கத்தை பகிர்ந்து கொள்ளுவான். அந்த அடிப்படை மனிதநேயம் கூட இல்லாத இவர்களை, இரு போராளிகள் காணாமல் போனதை கொச்சைப்படுத்தும் இவர்களை மனித இனத்திலேயே சேர்க்க முடியாது. "இவர்கள் செய்யும் அரசியல் உண்மையில் காணமல் போனவர்களிற்காக அல்ல என்பது வெட்ட வெளிச்சம். அதனால் தான் காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போய் காணமல் போனார்களோ?" என்று சொல்வதன் மூலம் கொடுங்கோலன் மகிந்தா தோழர்கள் லலித், குகனை கடத்தியதை இந்த புதிய திசைகள் என்னும் வக்கிரம் பிடித்த குழு நியாயப்படுத்கிறது. இவர்களின் இந்த துரோகத்தை, அற்பத்தனத்தை, யாழ்ப்பாண சைவ வெள்ளாள வெறியினை மனச்சாட்சி உள்ள மனிதர்கள் கண்டிக்க வேண்டும்.