Language Selection

july_2007.jpg

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் டார்ஜலிங் தேயிலை, அலாதியான மணத்தாலும் சுவையாலும் உலகப்புகழ் பெற்றது. மே.வங்கத்தின் வடக்கே டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பிகார் மாவட்டங்களில் உள்ள இச்சிறப்பு மிக்க தேயிலைத் தோட்டங்களிலிருந்து வீசும் காற்றில் இப்போது தேயிலை மணம் வீசுவதில்லை. பிணவாடை வீசிக்கொண்டிருக்கிறது.

 

ஒருவரல்ல; இருவரல்ல. கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி என்ற விகிதத்தில் கொத்துக்கொத்தாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினியால் மாண்டு போயுள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினருமாக சேர்த்து ஏறத்தாழ 3000 பேருக்கு மேல் மாண்டு போயிருக்கலாம் என்று பத்திரிகைகள் மதிப்பிடுகின்றன. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் 496 பேர் இவ்வட்டாரத்தில் பட்டினியாலும் சத்துணவின்றி நோய்கள் தாக்கியும் மாண்டு போயுள்ளனர். இவர்கள் மூப்படைந்த முதியவர்கள் அல்ல; அனைவருமே 50 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை மட்டும் 112 பேராகும்.
தாராளமயமாக்கலின் பின்னே தேயிலை இறக்குமதியால் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக, 1998இலிருந்தே அடுத்தடுத்து பல தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட் டன. 2002 ஆம் ஆண்டில் இது இன்னும் தீவிரமாகி, இவ்வட்டாரத்தில் 18 தேயிலை எஸ்டேட்டுகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதன் விளைவாக, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரையும் சேர்த்து ஏறத்தாழ 17000 பேர் வேலையிழந்து வாழ்விழந்து பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

""30 ஆண்டுகளாக பாட்டாளிகளின் பொற்கால ஆட்சி நடக்கும் மாநிலம்; தொழிலாளர்கள் உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட மாநிலம்; பொது விநியோகமுறை (ரேஷன்) எவ்விதக் குறையுமின்றி செயல்படுத்தப்படும் மாநிலம். பட்டினியோ, பட்டினிச் சாவுகளோ இல்லாத மாநிலம்'' என்றெல்லாம் பீற்றிக் கொள்ளப்படும் போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 26 தொழிலாளர்கள் பட்டினியால் மாண்டு போயுள்ளனர். ""இவை பட்டினிச் சாவுகள் அல்ல; காசநோய், மாரடைப்பு, மஞ்சள் காமாலை, புற்றுநோய் முதலான தீராத கொடிய நோய்களாலேயே இச்சாவுகள் நிகழ்ந்துள்ளன'' என்கிறார், ஜல்பைகுரி மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி.

 

ஆனால்,""பட்டினியும் சத்துணவின்மையும்தான் இந்நோய்களுக்குக் காரணம். பட்டினியால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, அதுவே பல நோய்கள் தாக்குவதற்குக் காரணமாகி விடுகிறது. பட்டினி தீவிரமாகியதும் நோய்களும் தீவிரமாகி மரணத்தை விரைவுபடுத்துகிறது'' என்கிறார்கள் இப்பகுதியிலுள்ள மருத்துவர்களும் சுகாதார ஆய்வாளர்களும்.

 

""எனது தந்தை பல நாட்கள் உண்ண உணவின்றி பட்டினியால் பரிதவித்தார். காசநோய் தாக்கி படுக்கையில் வீழ்ந்தார். சுட்ட பலாக்கொட்டையும் செவ்வெறும்பு சூப்பும் பச்சைத் தேநீரும் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. நோய் வாய்ப்பட்ட அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்கவும் எங்களுக்கு வசதியில்லை. மரணத்தோடு போராடிய அவரை மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் கிடைக்காததால், கட்டிலில் வைத்துத் தூக்கிச் சென்றோம். வழியிலேயே அவர் இறந்து விட்டார்'' என்று விம்முகிறார்,சுபாஷ் மகடோ. ஆனாலும் இது பட்டினிச்சாவு அல்ல என்கின்றனர், போலி கம்யூனிஸ்டு ஆட்சியாளர்கள்.

 

தனியார் தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு, வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்கள் இத்தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்துமாறு கோரி போராடினார்கள். ஆனால், தாராளமயத்தை எதிர்ப்பதாகச் சவடால் அடிக்கும் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கி, சேமநல நிதி, போனசு, காப்பீடு நிதி மற்றும் பிறவற்றைக் கொடுக்கச் சொல்லி அரசிடம் முறையிட்டார்கள். தொழிலாளர்களின் தோழனாகப் பீற்றிக் கொள்ளும் இடது முன்னணி அரசோ, ""விலை வீழ்ச்சியால் நட்டப்பட்டு முதலாளிகளே தேயிலைத் தோட்டங்களை மூடிவிட்ட நிலையில், அவர்களிடமிருந்து எப்படி பாக்கியை வசூலிக்க முடியும்?'' என்று எதிர்வாதம் செய்து தொழிலாளர்களை எவ்வித நிவாரணமுமின்றி வீதியில் வீசியெறிந்தது.

 

""மூடப்பட்டுள்ள ஒவ்வொரு தேயிலைத்தோட்ட முதலாளியும் தொழிலாளிகளுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியும் இதர பாக்கியும் சேர்த்து ஏறத்தாழ 56 கோடி ரூபாய்க்கும் மேலிருக்கும். ஜல்பைகுரி, டார்ஜிலிங் மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு அவற்றின் முதலாளிகள் பல நூறு கோடிகளைச் சுருட்டி விட்டனர். இத்தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் அரசாங்க நிலத்தில் குத்தகைக்கு நடத்தப்படுகின்றன. இடதுசாரி அரசாங்கமோ இம்முதலாளிகளிடமிருந்து குத்தகை பாக்கியைக் கூட வசூலிக்காமல், அவர்களைத் தப்பவிட்டு தனது வர்க்கப் பாசத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது'' என்கின்றனர், இப்பகுதியிலுள்ள வேலையிழந்த தொழிலாளர்கள்.

 

வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டதால், கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் குடும்பப் பெண்கள்; காசநோய் தாக்கி எலும்பும் தோலுமாக படுக்கையில் வீழ்த்தப்பட்ட தொழிலாளர்கள்; சத்துணவின்றி நோஞ்சான்களாக உழலும் குழந்தைகள்; அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவல நிலையில் தொழிலாளர் குடியிருப்புகள் — என ஜல்பைகுரி, டார்ஜிலிங், கூச்பிகார் மாவட்டங்களை வறுமையும் நோயும் பட்டினியும் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது.

 

வாழ்விழந்த தோட்டத் தொழிலாளர்களில் சிலர், குடும்பத்தோடு சிக்கிம்பூடõனுக்குச் சென்று கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக உழல்கின்றனர். ""கல்குவாரிகளில் நிகழும் விபத்துகளில் படுகாயமடைந்தால் அங்கு சிகிச்சை பெறக்கூட முதலாளிகள் உதவுவதில்லை'' என்கிறார் ஒரு தொழிலாளி. வறுமை காரணமாக சிக்கிம்பூடானில் வீட்டு வேலைக்காகச் செல்லும் இளஞ்சிறுமிகள் கொடும் சித்திரவதைக்குள்ளாகின்றனர். வீட்டு வேலைக்காக இளஞ்சிறுமிகள் புரோக்கர்களால் கடத்தப்படுவதும், பாலியல் வன்முறைக்கு ஆளாவதும் இவ்வட்டாரமெங்கும் அதிகரித்து வருகிறது. சிலிகுரியைச் சேர்ந்த மீனா தேவி என்ற இளம்பெண், தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை வறுமை காரணமாக தலா ரூ. 3000க்கு விற்க முயன்று, அப்பகுதியிலுள்ள மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவருக்கு அடைக்கலம் அளித்த செய்தி வங்க நாளேடுகளில் வெளிவந்து போலி கம்யூனிச ஆட்சியின் யோக்கியதை நாடெங்கும் நாறியது. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வட மாவட்டங்கள் மட்டுமின்றி,தெற்கே ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களை ஒட்டியுள்ள புருலியா, மித்னாபூர் மாவட்டங்களின் பழங்குடி மக்களும் பட்டினியால் மாண்டு போயுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.


தேசிய குற்றவியல் பதிவுத்துறையானது.""கடந்த 200506 ஆண்டில் மகாராஷ்டிர மாநில பருத்தி விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை விஞ்சும் வண்ணம், மே. வங்கத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன'' என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த தற்கொலைச் சாவுகளில் 98.4% சாவுகள் கிராமப்புறங்களில் நடந்துள்ளன என்றும், இவர்களில் பெரும்பாலோர் விவசாயக் கூலிகள் என்றும், கிராமப்புற பெண்களே அதிகமாக தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர் என்றும் இத்துறை குறிப்பிடுகிறது. ""அனைத்திந்திய அளவில் தற்கொலைச் சாவுகளில் முதலிடம் வகிக்குமளவுக்கு இடதுசாரிகள் ஆளும் மே.வங்க மாநிலம் முன்னேறிக் கொண்டிருக்கிறது; காலனிய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பஞ்சத்தின்போது நடந்த பட்டினிச் சாவுகளை விஞ்சிவிடும் அளவுக்கு, இப்போது அடுத்தடுத்து தற்கொலைகளும் பட்டினிச் சாவுகளும் பெருகிவிட்டன'' என்று வங்க நாளேடுகளே குற்றம் சாட்டுகின்றன.

 

போலி கம்யூனிச ஆட்சியின் மெத்தனத்தைக் கண்டித்து சில பத்திரிகையாளர்களும் மனித உரிமை அமைப்பினரும் ஆளுநரிடம் முறையிட்ட பிறகு, கடந்த மார்ச் மாதத்தில் மே.வங்க ஆளுநரான கோபால கிருஷ்ண காந்தி டார்ஜிலிங், ஜல்பைகுரி மாவட்டங்களில் பட்டினியால் மக்கள் பரிதவிக்கும் பகுதிகளைப் பார்வையிட்டு, உடனடியாக உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளனர். 10 கிலோ அரிசியும் 10 கிலோ கோதுமையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக வழங்கப்பட்ட போதிலும், ரேஷன் கடையிலிருந்து வெளியே வரும் எந்தப் பையிலும் 10 கிலோ எடைக்கு அரிசியோ கோதுமையோ இருப்பதில்லை. பெரும்பாலான மக்களால் இந்த நிவாரணத்தைக் கூட வாங்க முடியவில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே தமது ரேஷன் அட்டைகளை அடகு வைத்துவிட்டனர். இப்படி ரேஷன் அட்டைகளை அடகு பிடித்துள்ளவர்கள் இப்பகுதியின் சி.பி.எம். பிரமுகர்களான கந்து வட்டிக்காரர்கள்தான் என்பதை பத்திரிகைகள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்துகின்றன.

 

இவ்வளவுக்குப் பிறகும் மே.வங்க இடது,வலது போலி கம்யூனிச அமைச்சர்களோ, கட்சித்தலைவர்களோ பட்டினியால் பரிதவிக்கும் இப்பகுதி மக்களை இன்றுவரை ஏறிட்டும் பார்க்கவில்லை. மே.வங்க பாசிச முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மகிந்திரா நிறுவனம் மே.வங்கத்தில் ஆலையை தொடங்குவதற்காக பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய பம்பரமாகச் சுழல்கிறார். டி.எல்.எப். எனும் வீட்டுமனைக் கட்டுமானக் கழகத்துக்கு 5000 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஒப்பந்தம் போடுவதற்காக நில அமைச்சர் அப்துர்ரஜாக் மொல்லா இரவு பகலாக அலைந்து கொண்டிருக்கிறார். அன்னிய முதலீடுகளைக் கவர்ந்திழுக்க தொழிலமைச்சர் வெளிநாடுகளுக்குப் பறக்கிறார். மற்ற அமைச்சர்களோ நந்திகிராமத்தில் தொடரும் மக்கள் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்பதற்காக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கே நேரம் போதவில்லை. இப்படி மாநிலத்தைத் தொழில்மயமாக்கி "வளர்ச்சி'யை சாதிக்க உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக சேவை செய்யவே அவர்களுக்கு நேரமில்லாத போது, பட்டினியால் தவிக்கும் உழைக்கும் மக்களைப் பார்க்க அவர்களுக்கு நேரமேது?

 

கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியானது, உழைக்கும் மக்களின் நலனுக்கான ஆட்சி என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால் அதுவும் மூட நம்பிக்கைதான்!