ஆண்டவராகிய இயேசு கிறீஸ்துவே, எங்களுடைய பாவங்களை கழுவிக் கொள்ளும் என்று கிறீஸ்தவ பிரச்சாரக் கூட்டங்களில் ஒலிபெருக்கியில் கத்துவார்கள். யேசுவை தெரியாதவன் யேசுவும் மில்க்வைட் நீலச்சவர்க்காரம் மாதிரி ஒரு சவர்க்காரம் என்று நினைத்துக் கொள்ளுவான். போப்பு பிரான்சிஸ் மகிந்தவின் பாவங்களை, இரத்தக்கறைகளை கழுவி விட இலங்கை வரவிருக்கின்றார்.
மகிந்தவின் இனவெறி அரசினால் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். ராஜபக்ச குடும்பத்தின் அடக்குமுறைகளினால், அராஜகங்களால் முழு இலங்கை மக்களுமே அச்சத்துடன் வாழுகின்றனர். நாட்டை வல்லரசுகளிற்கு அடகு வைத்தும், ஏழை மக்களது உழைப்பை முதலாளிகளிற்கு மலிவு விலைக்கு விற்றும், மக்களின் பொதுப்பணத்தை திருடி ஊழல் செய்தும் மக்களை வறுமைக்குள் பசியுடனும், பட்டினியுடனும் வாழுமாறு மகிந்த கும்பல் நிர்ப்பந்திக்கிறது.
தமிழ் மக்களது மரண ஓலங்கள் இயேசுவின் காதுகளிற்கும் கேட்கவில்லை. கத்தோலிக்க திருச்சபைக்கும் கேட்கவில்லை. வன்முறை சுமத்தப்பட்ட மனிதர்களின் வலிகள் சிலுவை சுமந்தவனின் வாரிசுகள் என்று சொல்பவர்களிற்கு ஏன் தெரியவில்லை. பரலோகத்தில் இருக்கும் பிதாவின் ராச்சியத்தில் பசியும், பட்டினியும் இருக்காது என்று சொல்லும் போப்பிற்கு மகிந்த ராச்சியத்தின் மனிதர்கள் படும் பாடுகள் தெரியவில்லை. ஆனால் இன்றல்ல, என்றுமே ஏழைகளின் குரல் இவர்களிற்கு கேட்டதில்லை. அது மட்டுமல்லாமல் இவர்கள் அன்றைய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மன்னர்களுடனும், இன்றைய முதலாளிகளின் ஆட்சிக்காலத்தில் முதலாளிகளுடனும் சேர்ந்து மக்களை ஒடுக்குகிறார்கள்.
மன்னர்கள் கடவுளின் பிரதிநிதிகள் என்றும் கடவுளின் கவர்னர்களாக இருந்து ஆட்சியை நடத்துகிறார்கள் என்றும் ஆட்சியாளர்களிற்கு இவர்கள் தத்துவ விளக்கம் சொன்னார்கள். அதற்காக மன்னர்கள் தாம் வரி என்றும், கட்டாய உழைப்பு என்றும் மக்களை கசக்கிப் பிழிந்து அடித்த கொள்ளையில் ஒரு பங்கை கத்தோலிக்க திருச்சபையிற்கு கொடுத்தார்கள். கிட்லர் தொடக்கம் மகிந்த ராஜபக்ச வரையான இன்றைய கொலைகாரர்களுடன், கொள்ளைக்காரர்களுடன் எதுவிதமான கூச்சமும் இன்றி கூடிக் குலாவி முதலாளித்துவத்தையும், சர்வாதிகாரத்தையும் கட்டிக் காக்கிறார்கள்.
உலகத்தலை இப்படி இருக்கும் போது உள்ளூர் தலை வேறுமாதிரியாகவா இருக்கும். போப்புவின் இலங்கை ஏஜென்ட் கார்டினல் மல்கம் ரஞ்சித் உதிர்த்த பொன்மொழிகளில் ஒன்று "மகிந்த ராஜபக்ச இலங்கை நாட்டிற்கு கிடைத்த ஒரு கெளரவம், கத்தோலிக்க சமுதாயம் மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கு எப்பொழுதும் ஆதரவு வழங்கும். வெளிநாடுகளில் இருந்து சிலர் பிரிவினைகளை ஏற்படுத்த பார்க்கிறார்கள்" என்று விடியற்காலை அய்ந்து மணிக்கு நல்ல நித்திரையில் இருக்கும் போது கத்தோலிக்க கோயில்களில் இருந்து பயங்கர சத்தத்துடன் அடிக்கும் திருந்தாதி மணியை விட பயங்கரமான சத்தமாக ஒரு எச்சரிக்கை மணியை அடித்தார். "நாடு பயங்கரவாதிகளிற்கு எதிராகப் போராடிய போது கத்தோலிக்க சமுதாயம் அரசுடன் இணைந்து நின்றது அதற்கான எல்லாப் புகழும் பிசப்பு ரஞ்சித் மல்கமிற்கே சேரும்" என்று பதிலுக்கு மகிந்து பிசப்பின் முதுகைச் சொறிந்து விட்டது
போப்பு இலங்கை வரும்போது ஒல்லாந்தரின் "பயங்கரமான புரட்டஸ்தாந்து சமய" ஆட்சி நடந்த காலத்தில் இந்தியாவின் கோவாவில் இருந்து கத்தோலிக்க சமயத்தை பரப்ப வந்த ஜோசப் வாஸ் என்பவரை புனிதர் என்று பிரகடனப்படுத்துவாராம். இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்த சைவக்கோயில்களையும் பெளத்த விகாரங்களையும் இடித்து கத்தோலிக்க சமயத்தை பரப்பியவர்கள் ஒல்லாந்தரின் புரட்டஸ்தாந்து சமயப் பயங்கரவாதத்தைப் பற்றி சொல்கிறார்கள். ஜோசப் வாஸ் மதம் மாறிய காலத்தில் இருந்த போர்த்துக்கேயரின் கொள்ளைகள் அவரின் கண்களிற்கு தெரியவில்லை. அதற்குப் பிறகு வந்த ஒல்லாந்தரின் கொடுமைகளும் அவரின் கண்களிற்கு தெரியவில்லை. கத்தோலிக்க மதத்தை பின்பற்றவிடவில்லை என்பதே அவரின் பிரச்சனை. கத்தோலிக்கமும் புரட்டஸ்தாந்தும் கிறீஸ்தவத்தின் இரு பிரிவுகள். அதற்குள்ளே இவ்வளவு பயங்கரப் பிரச்சனைகள்.
போப்பு இலங்கை வரும்போது மடுக்கோயிலிற்கும் போகப் போகிறார். மடுவிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் பசியிலும், பட்டினியிலும் வாடுகின்றனர். அந்த மக்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. பலர் இன்னும் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இத்தாலியில் இருந்து கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட ஒரு கோவிலை பார்க்க வரும் போப்பிற்கு வலியுடன் வாழும் மக்களை பார்க்க தோன்றவில்லை. மண்ணோடு மண்ணாக மடிந்த மக்களின் புதைகுழிகளின் மீது நின்று கொண்டு மகிந்தாவை ஆசிர்வாதிக்கப் போகிறார் "உன்னைப் போல் உன் அயலானை நேசி" என்று சொன்னவனின் மண்ணுலகப் பிரதிநிதி. மதவாதிகளும் அதிகாரவர்க்கத்தினரும் என்றும் ஒன்று சேர்ந்து மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதை போப்பின் இலங்கைப் பயணம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது.