அந்த இனப்படுகொலையில் வழிந்தோடிய இரத்தத்தின் சுவடுகள் இன்னும் உலரவில்லை. புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகள் சின்னமழைத் தூறலிற்கும் முளை கொண்டு எழுகின்றன. இலங்கை அரசின் இராணுவத்தால் கசக்கப்பட்ட பெண்களின் கதறல்கள் வன்னிக்காடுகளில் கத்துகின்ற பறவைகளின் ஒலிகளை மேவி இன்றைக்கும் எழுகின்றன.
மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான இலங்கையின் பேரினவாத அரசு தமிழ்மக்களின் மீதான இனப்படுகொலையையும், அடக்குமுறையையும் நடத்தியது. இன்றும் தொடர்ந்து நடத்துகிறது. மகிந்த ராஜபக்சவின் குடும்பம் என்னும் மாபியாக்கள் தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறையில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.
அந்த மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச என்னும் ரவுடியிடம் ஒரு தமிழ்ப்பெண்ணை மணந்து இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு விஜயகலா மகேஸ்வரன் என்னும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனை சொல்கிறார். "நாமல் ராஜபக்ச என்றாலே வடக்கில், யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகள் அதீத அபிமானம் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் எங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் யுவதியை மணமுடித்தால் இந்த இனப்பிரச்சினை விவகாரமும் முடிந்துவிடும். தேசிய நல்லிணக்கமும் உறுதிப்படுத்தப்படும். அவ்வாறு எண்ணம் இருந்தால் சொல்லுங்கள், நான் நல்ல மணப்பெண் பார்த்துத் தருகிறேன்" என்று விஜயகலா தெரிவித்துள்ளார். யாரும் யாரையும் மணந்து கொள்ளலாம். ஆனால் நாமல் ராஜபக்ச போன்ற ஒரு ரவுடியை, அரசியல் மாபியாவை தன்மானமுள்ள எந்தப் பெண்ணும் மணந்து கொள்ள மாட்டாள்.
கடும் காற்றில் கலைந்து போன வாழ்க்கையை நடத்தும் தமிழ்மக்களை இவர்கள் போன்றவர்கள் தங்களினுடைய வியாபாரத்திற்காக மேலும் காயப்படுத்துகிறார்கள். கேவலப்படுத்துகிறார்கள். இவருடைய கணவர் மகேஸ்வரன் சிங்களப் பெருந்தேசிய அரசுகளின் காலைக் கழுவி தனது வியாபாரத்தை நடத்தி வந்தவர். அத்தியாவசிய பொருட்கள் வடபகுதிக்கு அனுப்பி வைப்பதில் இருந்த அரசின் கெடுபிடிகளை சாதககமாக பயன்படுத்தி தமிழ் மக்களிடம் கொள்ளை இலாபம் அடித்து பணக்காரன் ஆனவர். இலங்கைத் தமிழ் மக்களின் மீது தொடர்ச்சியாக ஒடுக்குமுறை இனவாத அரசியல் செய்து வந்த அய்க்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். எண்பத்துமூன்றாம் ஆண்டு ஆடிக்கலவரத்தில் தமிழ் மக்களைப் படுகொலை செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் கட்சியில் ஒரு தமிழர் சேர்ந்தார் என்றால் சுயநலம், பணவெறி என்பவற்றின் உச்சம் அது என்பதனை ஒரு சின்னக்குழந்தை கூட சொல்லி விடும். ஆனால் மகேஸ்வரன் எந்தவிதமான வெட்கமும், கூச்சமும் இன்றி அய்க்கிய தேசியக்கட்சிக்காக வாக்கு கேட்டார். காரைநகர் மண்ணின் மைந்தன், சாதி என்ற காரணங்களால் வெற்றியும் பெற்று பாராளுமன்ற உறுப்பினரும் ஆனார்.
தியாகராஜா மகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட பின்பு விஜயகலா மகேஸ்வரன் அரசியலிற்கு வந்தார். மகேஸ்வரன் மண்ணெண்ணெயை கொள்ளை விலைக்கு விற்று வந்த பணத்தில் அரசியலிற்கு வந்தார் என்றால் விஜயகலா மகேஸ்வரனின் மனைவி என்ற தனிப்பெரும் தகுதியுடன் அரசியலிற்கு வந்தார். கணவன் வழியே தன்வழி என்று பணவெறியில், பதவிவெறியில் தமிழ்ப்பெண்களைக் பற்றி ஒரு துளி அளவு கூட சிந்திக்காமல் நாமல் ராஜபக்சவை, தமிழ் இனப்படுகொலையாளிகளில் ஒருவரை தமிழ்பெண்ணை மணந்து கொள்ளுங்கள் என்று கேட்டு துதிபாடுகிறார்.
"பதுளை, கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக்குடியிருப்பு பகுதியில் மண் சரிவு அபாயம் இருந்ததை யாரும் தனது கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், அப்படியிருக்கும் போது நான் எவ்வாறு அறிவேன், ஜோதிடம் பார்த்தா அறிவது? என நேற்று பிபிசி தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியிலே மேற்கண்டவாறு திருவாய் மலர்ந்திருக்கிறார். முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டு போய் விட்டது. ஆனால் அந்த மக்களின் சந்தாப்பணத்தில் பணக்காரனான, அந்த மக்களின் வாக்குகளின் மூலம் அமைச்சரான இந்த பொறுக்கித்தின்னி இப்படிப் பேசுகிறது.
லயன்கள் எனப்படும் சிறு கூடுகளில் வசித்துக் கொண்டு வறுமையில் பசியும் பட்டினியுமாக மலையகத் தமிழ்மக்கள் வாழ்வு தேய்ந்து கொண்டு போகும் போது தாத்தன் தொண்டைமானில் இருந்து பேரன் ஆறுமுகம் தொண்டைமான் வரை போலி வாக்குறுதிகளை சொல்லி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொண்டார்கள். அந்த மக்கள் இந்தியாவில் இருந்து வந்த காலம் முதல் இந்த அவலவாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் மண்சரிவிற்குப் பின் தான் மக்கள் வீடில்லாமல் தவிக்கிறார்கள் என்பது போலவும் தான் அரசிடம் பேசி குறைகளைத் தீர்ப்பேன் என்றும் இந்த சந்தாப்பிச்சைக்காரன் கதை அளக்கிறார்.
மக்களிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பல போராளிகள் போராட்டக்களங்களில் உயிர்துறந்தார்கள், முடிவற்று தெரியும் வறுமையின் இருண்ட குகைகளில் வாடுகிறார்கள், எல்லைக்கோடுகள் தெரியாத இருள் வெளிகளிற்குள் குடும்பங்களை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கிறார்கள். டேவிட் அய்யா போன்று மக்களிற்காக வாழ்வை சமர்ப்பணம் செய்தவர்கள் நாடு திரும்ப முடியாமல் தனிமையிலும், முதுமையிலும் தவிக்கிறார்கள். ஆனால் எந்தவிதமான போராட்டங்களிலும் பங்கு கொள்ளாதவர்கள், மக்கள் அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத வேதாளங்கள் எல்லாம் தலைவர்கள் என்று வீதிவலம் வருகிறார்கள். பணம், பரம்பரை, அதிகாரம் என்பவற்றை பயன்படுத்தி தலைவர்களான இந்த வெருளிகள் இலங்கையின் ஆட்சியாளர்கள் போடும் எலும்புத்துண்டுகளிற்காக ஆட்சியாளர்களின் கால்களை கழுவிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மக்கள் ஒன்றிணைந்து வானத்தை முட்டும் முழக்கங்களுடன் வீதிக்கு வரும் நாள் ஒன்று விரைவில் வரும். அன்று இவர்களது திமிர்ப்பேச்சுக்களும்.ஏமாற்று வித்தைகளும் முடிவுக்கு வரும். அப்போது எந்தப்பக்கம் ஓடினால் தப்பலாம் என்று அமைச்சர் சாத்திரம் பார்க்க வேண்டி வரும். யாரோடு சேர்ந்து ஓடினால் தப்பலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கணக்கு போட வேண்டி இருக்கும்.