july_2007.jpg

ஆங்கிலேயக் காலனிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் நிறுவிய எத்தனையோ அடிமைச் சின்னங்களில் ஒன்றுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கிலாந்து நாட்டின் அரசி / அரசனைப் போன்ற ஒரு அலங்காரப் பதவிதான் இந்தியாவின் அரசுத் தலைவர். மத்திய, மாநில அரசு நிர்வாகங்களெல்லாம் முறையே அரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநரின் பெயரால்தான் நடைபெறுகின்றன;

 ஆனால், அரசு நிர்வாக இயந்திரத்துக்குத் தேவையானதெல்லாம் அப்பதவிகளில் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் மனிதர்கள் அல்ல; கோடிட்ட இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு கையொப்பங்கள் போடும் இயந்திரங்கள்தாம். மற்ற நேரங்களில் அரசு விழாக்கள் விருந்துகளில் அலங்காரச் சின்னங்களாக நிறுத்தப்படுவார்கள். ஆகவே, இந்திய அரசுத் தலைவர் பதவிக்குத் தேவையான தகுதி, தலையாட்டி வேலை செய்யும் கைப்பொம்மைதான்.

 

இத்தகைய அதிகாரமில்லாத பதவிக்கு பிரதிபா பட்டீல் என்பவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இந்த நாட்டின் பெண்ணினத்தையே கௌரவப்படுத்துவதாகும் என்ற கருத்து உருவாக்கப்படுகிறது. அறிவுகல்வி, நேர்மை, அனுபவம், சேவை, நடத்தை போன்றவற்றைக் கருதியோ, இத்தகைய பண்புகளைக் கொண்ட பெண்களை ஒப்பு நோக்கியோ, பிரதிபா பட்டீல் அரசு தலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்படவில்லை. ஓய்வு பெறும் பிழைப்புவாதியும் "அரச'வைக் கோமாளியுமான அப்துல் கலாமைப் போலவே கூட்டணி அரசியல் நிர்பந்தங்களின் உந்துதல் காரணமாகவே பிரதிபா பட்டீல் தெரிவு செய்யப்பட்டார்.

 

ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் "இடது' கூட்டணி, தான் வலுவாக உள்ள மேற்கு வங்கத்தவரே அரசுத் தலைவராக வரவேண்டும் என்ற பிராந்திய உணர்வோடு ஆசைப்பட்டது. முதலில், பிரபல அரசியல் தரகரான சோமநாத் சாட்டர்ஜியையும், பிறகு பிரணவ முகர்ஜியையும் முன்மொழிந்தது. இவர்களை நிராகரித்து சோனியாவின் விசுவாசிகளான அர்ஜுன் சிங், சிவராஜ் பட்டீல், சுசில்குமார் ஷிண்டே, கரண்சிங் ஆகியோரை காங்கிரசு முன்மொழிந்தது. இருதரப்பும் ஒப்புக் கொள்ளாத நிலையில், சோமநாத் சட்டர்ஜிக்கு அரசுத் துணைத் தலைவர் பதவி என்ற நிபந்தனையின் பேரில் பிரதிபா பட்டீல் ஆளும் கூட்டணியின் வேட்பாளராக்கப்பட்டார். அதுவும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவத்துக்குப் போட்டியாக இன்னொரு செகாவத் என்ற முறையில் பிரதிபா பட்டீல் தேவ்சிங் செகாவத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

 

சுயேட்சை வேட்பாளர் என்ற பெயரில் பைரோன்சிங் செகாவத்தை அரசுத் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ்பா.ஜ.க. அணி நிறுத்தியிருந்தபோதும், பிரதிபா பட்டீலை ஏற்பதில் இந்த அணிக்கு மறுப்பு ஏதும் இல்லை; உண்மையில் நடப்பது இரு பங்காளிகளுக்கிடையிலான நட்புப் போட்டிதான். எனவேதான், ""மரபுகளை மீறி'' தேர்தலுக்கு முன்பு இரண்டு செகாவத்துகளும் சந்தித்துக் குலாவுகின்றனர். இப்போதைய அரசியல் வாழ்க்கைப்படி, மாநில ஆளுங்கட்சி விரும்பி ஏற்பவரையே மாநில ஆளுநராக நியமிக்கிறார்கள்; அந்த வகையில் இந்துமதவெறி பாசிசத்தின் இன்னொரு சோதனைச் சாலையாகக் கருதப்படும் பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானின் ஆளுநராக ஆர்.எஸ்.எஸ். கும்பலால் தெரிவு செய்யப்பட்டவர்தான் பிரதிபா பட்டீல். அந்தத் தெரிவுக்கு விசுவாசமாக நடந்து வந்தவர்தான் பிரதிபா பட்டீல். அதனால்தான் ""மகாராணா பிரதாப் சிங்'' என்ற தனது சாதியின் ராஜபுத்திர அரசரின் பிறந்தநாளில், ""மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவே இந்துப் பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்'' என்று இசுலாமியர் எதிர்ப்பு இந்துவெறிக் கருத்தை வாந்தியெடுத்துள்ளார். ""வரலாற்றறிவு அறவே இல்லாதவர்'' என்று அரசுத் தலைவராவதற்கு முன்பே வரலாற்று அறிஞர்களால் "பாராட்டும்' பெற்றுவிட்டார்.

 

கே.ஆர். நாராயணனோ, ஜெகஜீவன் ராமோ அரசுத் தலைவர்களானதும், ஜாகீர் உசேனும், பக்ருதீன் அலி அகமதுவும் அரசுத் தலைவர்களானதும் எப்படி ""தலித்'' மற்றும் இசுலாமியர் ஏற்றத்துக்கு வழிவகுக்கவில்லையோ அதுபோலவே, இந்தியப் பெண்ணினத்தின் பிரதிநிதியாக பிரதிபா பட்டீல் அரசுத் தலைவராகவில்லை. இந்திரா, ஜெயலலிதா போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள் பதவிக்கு வருவது எப்படிப் பெருமை சேர்க்காதோ அதைப் போலவே, பிரதிபா பட்டீல் அரசுத் தலைவராவதும் இருக்கிறது. பார்ப்பனபனியசத்திரிய குடும்ப வாரிசுகளான பெண்களுக்கு உயர் பதவிகள் வழங்கும் காங்கிரசுஆர்.எஸ்.எஸ். வழக்கப்படிதான் பிரதிபா பட்டீலும் அரசுத் தலைவராக்கப்படுகிறார்.